செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மமக திமுகவுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?


முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, திருமணப்பதிவுச் சட்டம் ஆகிய இரண்டு காரணங்களைத்தான் அதன் தலைவர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காகவே கூட்டணி சேர்வார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தாலும், அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்களுக்காகவும் சமுதாய நன்மைக்காகவும்தான் இந்த கூட்டணி என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கானது அல்ல.

அதிமுகவில் நாற்பதிலும் தனித்து போட்டி என்று தெளிவுபடக் கூறி விட்டதால் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தாலும் நமக்கு சீட்டு கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதையே அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம். அல்லது பொருந்தக் கூடிய வேறு எதையாவது சொல்லி இருக்கலாம். கடுகளவும் நம்ப முடியாத ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் திமுக ஆட்சியில் 3.5 இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மமக கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. திமுகவுடன் இருந்த கூட்டணியைப் பயன்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக பல அடக்குமுறைகளையும் ஏவி விட்டது. திமுக ஆட்சி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஏவிவிட்ட அக்கிரமங்கள் அனைத்தையும் மறந்து விட்டு மறுநாளே திமுக தலைவரை தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி அறிவிப்புக் கடிதம் கொடுத்தோம். மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று எழுதிக் கொடுத்தோம். அதன்படி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுக கூட்டணியை ஆதரித்தோம்.

திமுக ஆட்சி இட ஒதுக்கீடு அளித்ததற்காக தமுமுகவும் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தியது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின்போது இவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை.
இட ஒதுக்கீட்டுக்காக ஒரு அணியை ஆதரிப்பதுதான் இவர்களின் கொள்கையாக இருந்தால் 3.5 இட ஒதுக்கீடு கிடைத்ததற்காக அந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து இருக்க வேண்டும். கிடைத்த இட ஒதுக்கீட்டுக்கு நன்றி செலுத்தாமல் என்ன செய்தார்கள்.? அதிமுகவில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இவர்கள் இதற்கு செய்த வாதப்படி அதிமுக இட ஒதுக்கீட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வாதிட்டு பிரச்சாரம் செய்து வந்ததை மறந்து விட்டு அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
நோட்டு எவ்வளவு சீட்டு எவ்வளவு என்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் இட ஒதுக்கீடெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல என்று அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் ஒரு எம்பி சீட் கொடுக்கும் அளவுக்கு பலமானவர்கள் அல்ல என்று அதிமுகவுக்கு தெரிந்ததால் அதிமுகவும் சீட் கொடுக்க மறுத்து விட்டது.
இதன் பின்னர் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்கள். பல முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகள் ஆதரவோடு போட்டியிட்டு அவர்கள் வாங்கிய ஓட்டுக்கள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டார்கள். அதுவும் நாற்பது தொகுதிகளில் முஸ்லிம்கள் பலமாக உள்ள நான்கு தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிட்டும் பல அமைப்புகள் ஆதரித்தும் சுயேட்சை வேட்பாளர் வாங்கும் ஓட்டைத்தான் வாங்கினார்கள்.
அப்போது அது பிரச்சனை இல்லை.

கருணாநிதி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு செய்த அடக்குமுறைகளையும், தமுமுக ஆளும் கூட்டணியில் இருப்பதையும் மறந்துவிட்டு திமுகவை நாம் ஆதரித்தோம் என்பதையும் இடஒதுக்கிடு கொடுத்து அந்த ஈரம் காய்வதற்குள் இட ஒதுக்கீடு கொடுத்த கட்சிக்கு எதிராக போட்டியிட்டதையும் நினைத்துப் பார்க்கும் மக்கள் மமக சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்வார்களா?

அடுத்து திருமணப் பதிவுச் சட்டத்தையும் காரணமாகக் கூறியுள்ளனர். திருமணப்பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களைப் பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் அதை அதிமுக அரசு சரி செய்யவில்லை என்ற காரணமும் பொய்யான காரணமே.

திமுக ஆட்சியில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் இது குறித்து பல முஸ்லிம் அமைப்புகள் முறையிட்டன. தமுமுகவும் அதில் அடங்கி இருந்தது. பல முறை சந்தித்து முறையிட்டும் திமுக ஆட்சி அதை சரி செய்யவில்லை. அதுபோல் அதிமுகவும் செய்யவில்லை. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து பல ஆண்டுகள் இவர்கள் கோரிக்கை வைத்தும் சந்திப்புகள் நடத்தியும் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்தக் காரணத்துக்காக திமுகவுக்கு போய்விட்டோம் என்று சொல்வதை மக்கள் எப்படி நம்புவார்கள் என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

எந்தப் பக்கம் சீட்டு கிடைக்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து கொள்ளும் உன்னதமான கொள்கைக்காகவே அணி மாற்றம் என்பதில் சந்தேகமில்லை.

Article Copied From: www.onlinepj.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக