வியாழன், 6 பிப்ரவரி, 2014

அமானுஷ்யம் : ஒரு பார்வை




இறந்தவர்கள் இவ்வுலகில் மீண்டும் வருவர் என்றும், மனிதர்களிடமும் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு என்றும் பலரும் நம்பியிருப்பதை காண்கிறோம்.
இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் ஒரு பக்கமெனில், இதை உண்மை என நம்பி அதனால் அச்சப்பட்டு வாழ்க்கையையே தொலைக்கின்றவர்களும் இருக்கின்றனர்.

இதை இரு கோணங்களில் பார்க்கலாம்.

அமானுஷ்யம் உள்ளது என்பதை நம்பி அதை கண்டு பயப்படுவது ஒரு வகை.
பயந்து பயந்தே ஒன்றை அமான்ஷ்யமாக நம்பி விடுவது இன்னொரு வகை.

அமானுஷ்யம் உள்ளது என்று நம்பி ஒருவன் பயந்தானேயானால், அவன் நம்பியது போல் அமானுஷ்யம் இருக்கிறதா என்பதை ஆராய சொல்லலாம்.

ஒருவன் பயந்து பயந்து அதன் காரணமாய் அமானுஷ்யத்தை நம்பினானேயானால், அவனது பயத்தை தான் போக்க வேண்டும்.

நம்பிக்கையில் இரு வகை உள்ளது. ஒரு சித்தாந்தத்தையோ கொள்கையையோ நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்கிற காரணத்தால் அதன் பரிணாமங்கள், விளக்கங்கள் அனைத்தையும் நம்புவது ஒரு வகை.

இன்னொரு வகையானது, நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கை என்றாலும் கூட, அதிலுள்ள சித்தாந்தங்கள் அனைத்தும் நம்புவதற்கு ஏற்றவை தான் என்பதை புறக்காரணங்களின் துணையோடு நம்புவது.

இரண்டில், இரண்டாம் வகை தான் அறிவுக்கும் ஏற்றது, பகுத்தறிவுக்கும் உகந்தது.

எனது வேத வசனங்களைக் கொண்டு உங்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் கூட அவற்றில் குருட்டுத்தனமாகவோ செவிட்டுத்தனமாகவோ விழுந்து விடாமல் அதை ஆராய்ந்து, புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாமியர்கள் நம்புகிற வேதமான திருக் குர்ஆனும் இதை தான் சொல்கிறது.

இந்த அறிவுரையை ஒரு சித்தாந்தம் கூறுகிறது என்றால் அதன் பரிணாமங்களில் எதனையும் நாம் சிந்தித்து ஏற்க முடியும் என்று பொருள். சிந்திக்காமல் அல்லது சிந்தனைக்கு எட்டாத வகையில் எந்த ஒன்றும் குர் ஆனில் இல்லை என்பதால் தான் அது தனக்கு தானே இந்த பெருமையை சூட்டிக் கொள்கிறது.

இறைவன் இருக்கிறான் என்கின்ற நம்பிக்கையை ஏற்பதை பொறுத்தவரை மற்ற மற்ற மதத்தவர்கள், மேலே நாம் குறிப்பிட்ட முதலாம் வகையின் கீழ் வருவர். ஆனால், முஸ்லிம்களை பொறுத்தவரை, அதை வெறும் சடங்காக ஏற்காமல் காரண காரியங்களுடன் உள்ளத்தில் உரசிப்பார்த்து நம்புகின்றனர்.

அதனால் தான், இறைவனை என் கண் முன்னே காட்டு, என ஒரு நாஸ்த்திகன் கேட்கும் போது, அந்த கேள்வி ஒரு ஹிந்து, கிறித்தவனை திணறடிக்கக்கூடிய கேள்வியாகவும் ஒரு முஸ்லிமுக்கு அது கேலிக்குரிய வாதமாகவும் தெரிகிறது.

இறைவன் இருக்கிறான் என்பதை சான்றுகளுடன் நம்பி விட்ட பிறகு,
அந்த இறைவனின் வார்த்தை தான் குர் ஆன் என்பதை பல்வேறு காரண காரியங்களுடன் நிரூபிக்கும் வகையில் ஏற்றுக் கொண்ட பிறகு,

அந்த குர் ஆன் சொல்கின்ற எந்த அமானுஷ்யமானாலும் அவற்றை நம்பலாம். ஏனெனில், அதை சொல்வது இறைவன் !

எதைக் குறித்து இறைவன் சொல்லவில்லையோ, அதையும் நாம் நம்பலாம், எப்போது?
அதை நேரடியாய் நம் கண்ணால் கண்ட பிறகு,
அல்லது அதை குறித்த அறிவை நாம் செலுத்தும் போது,
அது நம் சிந்தனைக்கும் நடைமுறைக்கும் உகந்ததாய் தென்படும் போது..

ஒரு முஸ்லிமை பொறுத்தவரை மேலே உள்ள அளவுகோலில் ஒரு நம்பிக்கையானது வரையறுக்கப்படவில்லையெனில், அந்த நம்பிக்கை போலியானது என்று அவன் உதறி விட வேண்டும்.

நம் பார்வைக்கு எட்டாத, சிந்தனைக்கு புலப்படாத, இறை வார்த்தைகளான‌ குர் ஆன், ஹதீஸ்களிலும் சொல்லப்படாத ஒரு அமானுஷ்ய‌ நம்பிக்கை பற்றி இவ்வுலகம் பேசுமானால் அது பொய் என அடித்துக் கூறி விடலாம்.

ஆனால், வேடிக்கை என்னவெனில், இன்று, இறைவனை கண்ணால் காட்டினால் தான் நம்புவேன் என பகுத்தறிவை அடமானம் வைத்து வாதம் புரிவோர் கூட, கண்ணாலோ கருத்தாலோ அறிந்திடாத அமானுஷ்ய சக்தி மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

மனிதனுக்கு மனித தன்மை தான் இருக்கும். அதை தாண்டிய ஒரு ஆற்றல் அவனுக்கு இருக்காது என்பதே பொதுவான விதி. இஸ்லாம் கூறும் வரலாறுகளில் இதில் விதிவிலக்கு பெற்றவர்களாக நபிமார்களையும் வேறு சிலரையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தால் கூட அவை குறித்து இறைவனே சொல்லி விட்ட காரணத்தால், மேற்கூறப்பட்ட பொது விதிக்கு இவை முரணாகாது.

மனிதனுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் இருப்பதாய் நம்புவது பெருங்குற்றம் என அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்பது இதிலிருந்து புரிகின்ற சாதாரண உண்மை. அல்லாஹ்வின் ஆற்றலை பெற்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்றால், இருக்கின்ற ஒன்றை நம்புவது குறித்து அல்லாஹ் குற்றம் பிடிப்பதிலோ, நிரந்தர நரகத்தில் தள்ளுவதிலோ அர்த்தமிருக்காது !

அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்றால் அல்லாஹ்வுக்கு இணையாக எவரும் இல்லை

என்கிற சாதாரண உண்மை பலருக்கும் புரியாத காரணத்தால் தான் சில மனிதர்களுக்கு, அவர்களது இயல்பான ஆற்றலை மீறீய ஒரு அமானுஷ்யம் நிலவுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

இத்தகைய நம்பிக்கைக்கு நாம் ஏற்கனவே கூறியது போல், அவர்கள் அது குறித்து கொண்டிருக்கும் அச்சமே காரணம். அல்லாமல், இறைவன் இருப்பதை எப்படி உணர்வால் புரிந்து, பகுத்தறிவால் சிந்தித்து, உள்ளத்தால் ஏற்று வாழ்கிறோமோ அப்படி எவரும் அமானுஷ்ய சக்திகள் குறித்து ஏற்றுக்கொண்டது கிடையாது.

நாம் இதை நம்புகிறேன், அதனால் இது உண்மை என்று நிலைனாட்டும்படியாய் எந்த ஒன்றும் உலகில் கிடையாது. ஒன்றை உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், அதை ஏற்பதற்குரிய புறக் காரணங்கள் இருக்க வேண்டும். தான் நம்புவது ஒன்றே ஆதாரமாகி விடாது என்பதை புரிகிற தருணத்தில், இது போன்ற அமானுஷ்ய நம்பிக்கை போலியானது என்று விளங்கிக் கொள்ள முடியும்.

இறைவன் இருக்கிறான் என்பதை நாம் நம்புவதோடு அல்லாமல் இந்த நம்பிக்கைக்கான புறச் சான்றை நான் காட்டுவேன்.

இன்னும், இறை வேதம், இறை தூதர்கள், மறுமை வாழ்க்கை என எதை நம்புவதாக இருந்தாலும், அதை நம்புவது என்பது வெறும் சம்பிரதாய ரீதியிலான நம்பிக்கையல்ல, மாறாக, அதை நம்புவது தான் அறிவுசார் சித்தாந்தங்களுக்கு ஒத்தது என்பதை எவராலும் விளக்கி சொல்ல‌ முடியும்.

ஆனால்,மனிதனே இறந்து பின் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவான் என்றோ
அல்லது,
மனிதனுக்கு, அவனது இயற்கை ஆற்றலை தாண்டிய ஆற்றல்களும் வெளிப்படும் என நம்புவதோ வெறும் நம்பிக்கை தானே தவிர, அது ஒரு காலும் நிரூபணமாகாது.

முஸ்லிம்களை பொறுத்தவரை, இஸ்லாமிய கோட்பாடுகள் எதை அமானுஷ்யமாக சொல்கிறதோ அதை நம்பலாம். அதை கூட, எவருடன் தொடர்புபடுத்தி சொல்கிறதோ அதோடு மட்டுமே தொடர்புபடுத்தி நம்பலாம். அதை தாண்டிய நம்பிக்கை என்பது இல்லை.

மூஸா நபி தமது கைத்தடியை பாம்பாக மாற்றிக் காட்டும் அமானுஷ்ய சக்தியை கொண்டிருந்தார்கள் என்றால் ஈசா நபிக்கும் அந்த சக்தி உண்டு என நம்பக்கூடாது.
நிலவை பிளக்கும் ஆற்றலை இறைவன் முஹம்மது நபிக்கு கொடுத்தான் என்றால் அது போல் தாவூது நபிக்கும் செய்ய முடியும் என்று நம்பக்கூடாது.

எந்த சக்தி, யாருக்கு, எப்போது இருந்ததாக குர் ஆன் சொல்கிறதோ, அவர் அந்த சக்தியை அந்த நேரத்தில் மட்டும் வெளிக்காட்டுவார் என்று தான் குர் ஆன் கூறும் அமானுஷ்யம் அல்லது மனித சக்தியை தாண்டிய அற்புதத்தை குறித்த நமது நம்பிக்கை இருக்க வேண்டும்.

இந்த அடிப்படை நம் உள்ளங்களில் ஆழமாய் பதிந்து விடுமானால், குர் ஆன் கூறாத, நம் அறிவுக்கும் எட்டாத, எந்த நம்பிக்கையும் நமது உள்ளத்தை அசைக்காது !

மனிதன் என்றைக்கும் மனிதன் தான் !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக