செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

விஜயகாந்தை மிரள வைத்த சிறை நிரப்பும் போராட்டம்


கேப்டனின் தேர்தல் கூட்டணிக் கணக்கு - ஜனவரி 28 க்கு முன், ஜனவரி 28 க்குப் பின் !

ஜனவரி 28 க்கு முன், கூட்டணி குறித்த சிந்தனை. திமுகவா பாஜகவா அல்லது இரண்டையும் சேர்த்தா? என்கிற குழப்பம்..

மோடியின் திருச்சி பொதுக்கூட்டத்தை தமது தொலைகாட்சியில் நேரலை செய்து தமது பாஜக ஆதரவு சிந்தனையை மறைமுகமாய் வெளிக்காட்டிய கேப்டனின் தேர்தல் வியூகத்தை ஜனவரி 28 முஸ்லிம்களின் வரலாறு காணாத போராட்டமானது குழப்பிப் போட்டிருக்கிறது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

தனித்து போட்டி என்று சொல்லியிருந்தாலும், கூட்டணி பற்றி தலைவர் பின்னர் முடிவு செய்தாலும் அதை தொண்டர்கள் ஏற்பார்கள் என்று ஒரு காலியிடம் வைத்து தான் பேசியிருக்கிறார்.

வேகமாய் கூட்டணிக்கான காய் நகர்த்தல்களை திமுகவும் தேமுதிகவும் பரஸ்பரம் செய்து வந்த நிலையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஹிமாலய போராட்டமானது கேப்டனுக்கு வேகத்தடை இட்டிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

இஸ்லாமியர்களுக்கு அதிமுக இட ஒதுக்கீடு வழங்கி விட்டால், பாஜகவுடனோ திமுகவுடனோ கூட்டணி வைத்துக் கொள்ளலாம்.

அதிமுக இட ஒதுக்கீடு வழங்கவில்லையெனில், பாஜகவை கழற்றி விட்டு திமுகவுடன் கூட்டணி என்கிற நிலையை எடுத்து முஸ்லிம் ஆதரவை பெறலாம் என்கிற எதிர்ப்பார்ப்பை தேமுதிக கொண்டிருக்கக் கூடும்.

எது எப்படியோ, முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாய் எண்ணிக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளெல்லாம் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் மகத்தான சக்தியாய் இஸ்லாமியர்கள், குறிப்பாக தமிழக முஸ்லிம் சமுதாயத்தினர் மாறி வருவதை ஒப்புக் கொள்ளத் துவங்கி வருகின்றனர்.

இந்த நிலையை முஸ்லிம்கள் அடைவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பேரியக்கம் தமிழகத்தில் ஆற்றியுள்ள பங்கு அளப்பெரியது.

அரசியல் சதுரங்கம் எக்கேடு கெட்டுப் போனாலும், கொண்ட கொள்கையிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் எந்த தொய்வையும் காட்டாமல் வெற்றி நடை போடுவோம், அல்லாஹ் அருள் செய்வானாக..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக