வெள்ளி, 7 ஜனவரி, 2011

பிறையை பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டும். ஆதாரம் : 7பிறையை ஒவ்வொரு மாதமும் பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டும். கணக்கிட்டு முடிவு செய்யக்கூடாது

ஆதாரம் : 7


அபு உமைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.:

மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலை பொழுதை அடைந்தோம்.
பகலின் கடைசிப்பகுதியில், ஒரு வாகனக்கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
நூற்கள் : நசயீ , திர்மிதி, அஹமத்.


அதாவது, தொலைவில் இருந்து பிறை பார்த்து விட்டு பயணம் செய்து மதினா வந்த ஒரு கூட்டத்தாரிடம், அவர்கள் பிறை பார்த்து விட்ட காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு அவர்களிடம் சொல்கிறார்கள்.
ஆனால், நோன்பு வைத்துக்கொண்டு மதினாவில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மற்ற சஹாபாக்களும் அந்த பிறை தகவலை ஏற்று நோன்பை விடவில்லை!
அதாவது, வெளியூரிலிருந்து பிறை பார்க்கப்பட்ட தகவலை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.!!
அவர்கள் பார்த்தது அவர்களுக்கு, நாம் பார்ப்பது நமக்கு என்று தான் செயல்பட்டிருக்கிறார்கள், என்பது இந்த ஹதீஸின் மூலம் தெளிவாக தெரிகிறது.

முன்கூட்டியே கணக்கிட்டு மாதங்களை முடிவு செய்து கொள்ளலாம் என்றிருந்தால் அந்த ஊருக்கும் ரசூல் (ஸல்) வாழும் பகுதிக்கும் ஒரே தினத்தில் தான் பெருநாள் முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம், தகவல் வந்த பிறகாவது, அனைவரும் ஒன்றாக செயல்படலாம் என்று முடிவு செய்திருக்க வேண்டும்,.
ஆனால், தகவல் கிடைத்த பிறகும் கூட, நோன்பை நபி (ஸல்) அவர்கள் விடவில்லை, மாறாக, பிறை பார்த்த அந்த வாகனக்கூட்டதார்களிடமே நோன்பை விட சொல்கிறார்கள்.!

பிறையை ஒவ்வொரு மாதமும் அந்தந்த பகுதிகளில் பார்த்து தான் நாம் மாதங்களை தீர்மானிக்க வேண்டுமே அல்லாமல், 300 வருடங்களையும் முன்கூட்டியே கணிப்பது மார்க்கத்திற்கு எதிரானது என்பதை வலியுறுத்தக்கூடிய ஆறு ஹதீஸ் ஆதாரங்களை நாம் ஏற்கனவே தந்திருந்தோம்.
அவைகளோடு சேர்த்து நாம் வைக்கும் ஏழாவது முக்கிய ஆதாரம் இது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக