வியாழன், 20 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : தக்லீத்


இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்றால் பிஜேவின் விளக்கம் எதற்கு???

பாமரருக்கும் இஸ்லாம் புரியும் என்று ஒரு பக்கம் சொல்லி இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்று பிரசாரம் செய்து விட்டு, இன்னொரு பக்கம் பிஜே பயானை கேட்டு விளக்கம் பெற ஏன் செல்கிறீர்கள்? இது முரண்பாடில்லையா? என்கிற இந்த கேள்வி, சமீபத்தில் எனது இன்பாக்ஸை நிரப்புகிறது.

மடத்தனமான கேள்வியை கேட்பதை விடவும் கொடுமையானது, அதை கேட்டு விட்டு, தான் அறிவுப்பூர்வமாக கேட்டு விட்டதாக பெருமிதம் கொள்வதாகும் !
இந்த கேள்வியே இஸ்லாத்திற்கு வெளியே நின்று கொண்டு கேட்கப்படும் கேள்வி என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரியாததால் தான் ஏதோ அதி பயங்கர கேள்வியை கேட்டு விட்டதாக எண்ணுகிறார்கள்.

ஏன் இது இஸ்லாத்தின் வரம்புகளை விட்டும் வெளியே நின்று கேட்கப்படும் கேள்வி??

எந்த இஸ்லாம், இந்த மார்க்கத்தை எளிமை என்று சொல்லியுள்ளதோ அதே இஸ்லாம் தான் நன்மையை ஏவுங்கள் என்றும் சொல்லியுள்ளது, அதே இஸ்லாம் தான் தீமையை தடுக்கவும் சொல்லியுள்ளது.

நன்மையை இன்னொருவருக்கு ஏவுதல் என்பதே அந்த நபர் எளிமையான இந்த மார்க்கத்தை புரியவில்லை என்கிற போது தான் வரும்.

எந்த மார்க்கம் பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக்கப்பட்டிருக்கிறதோ அந்த மார்க்கத்தில் இருந்து கொண்டே சிந்தனையை செலுத்தாதவர்கள் இருப்பார்கள், எது நன்மை,எது தீமை என்பதை அறியாதவர்கள் இருப்பார்கள். ஆக. எளிமையான மார்க்கம் என்பதனுடைய அர்த்தம் முழுமையாவதே நாம் நமது சிந்தனையை செலுத்துகிற போது தான் !

குர் ஆனில், அறிந்தவர்கள் அறியாதவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் அனுமதிக்கிறான்.
இங்கு வந்திருபவர்கள் வராத மக்களிடம் இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள் என்று தனது இறுதி உரையில் நபி (ஸல்) கூறினார்கள்.

வெள்ளை வெளீர் என்கிற மார்க்கம், பாமரருக்கும் புரிகிற வேதம் என்று சொல்லப்படுபவைகளுக்கெல்லாம் இவை முரண் இல்லை !

அறியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டு தங்களை சரி செய்து கொள்ள முடிவதால் தான் இந்த மார்க்கம் வெள்ளை வெளீர் என்கிற மார்க்கம்.
ஒரு போதனையை கேட்டவர்கள் அதை கேட்காத பிற மக்களுக்கு எடுத்து சொல்கிற காரணத்தால் தான் இந்த மார்க்கம் எளிமையான மார்க்கம் !

ஆக, இது போன்ற கேள்வி மிகவும் அபத்தமானது மட்டுமல்ல, குர் ஆனிலேயே முரண்பாட்டை கற்பிக்கும் கேள்வியாகும். !

அடுத்ததாக, பிஜேவை விமர்சனம் செய்து ஏதேனும் பதிவுகள் இட்டால் உடனே ததஜவினர் மத்ஹப் இமாம்களை பற்றி எதையாவது போட்டு விடுவார்கள், உங்க இமாம் பெருசா எங்க இமாம் பெருசா என்பது தான் இவர்களது எண்ணமாக இருக்கிறது என்று கப்ர் வணங்கி கூட்டம் நம்மை விமர்சிக்கிறது.

ஏகத்துவத்தை போதிக்கிற, தனி மனித போற்றல், தனி மனித வழிபாடு போன்றவைகளுக்கு கூட அவ்வளவு அழகான விளக்கத்தை வைத்திருக்கிற நம்மை நோக்கி, மார்க்கத்தின் பெயரால் எவன் என்ன சொன்னாலும் நம்புகிற கூட்டம் ஒன்று விமர்சனம் செய்வது ஈயத்தை பார்த்து பித்தளை கேலி செய்ததற்கு சமமாகும்.

இமாம்களை இவர்கள் ஈமான் கொண்டிருப்பதற்கும் சகோ பிஜேவின் ஆய்வுகளை நாம் மேற்கோள் காட்டுவதற்கும் இடையே மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது, இந்த வேறுபாட்டினை புதிதாக இந்த ஏகத்துவ கொள்கையை ஏற்ற ஒரு சகோதரன் கூட மிக துல்லியமாக விளக்குவான்.

உன் இமாம் பெருசா என் இமாம் பெருசா என்று போட்டி இடுவது ஒரு தவ்ஹீத்வாதியை பொறுத்தவரை சிரிப்பை வரவழைக்க கூடிய ஒரு காரியமாகும்.

தவ்ஹீத்வாதிகளுக்கு எந்த இமாமும் தேவையில்லை. அல்லாஹ்வை கேலி செய்கிற நபியின் பெயராலேயே புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிற, தொழுகை, நோன்பு என அனைத்து மார்க்க சட்டங்களையும் இழிவுப்படுத்துகிற வேலையை மத்ஹப் இமாம்கள் செய்துள்ள போது அவற்றுக்கும் முட்டுக்கொடுத்து நியாயப்படுத்தும் இழி நிலையை இவர்கள் அடைந்தது போல ஒரு தவ்ஹீத்வாதி அடையவே மாட்டான்.

பிஜெவாக இருந்தாலும் அவர் மார்க்கத்தை தப்பும் தவறுமாக போதிப்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்த நொடியே பிஜே இந்த சமுதாயத்தால் தூக்கி வீசப்படுவார், எட்டி உதைக்கப்படுவார்.

குர் ஆன் ஹதீஸுக்கு ஒத்ததாக பேசுகிற வரை தான் யாருக்கும் மதிப்பு ! அதை விட்டு தடம் புரண்டு விட்டால் எங்களுக்கு ஜமாலியும் ஒன்று தான் பிஜேவும் ஒன்று தான்.
இதை உரக்க சொல்வதால் தான் நாம் தவ்ஹீத்வாதிகள் எனப்படுகிறோம் என்பதை இமாம்களுக்கு ஜால்ரா தட்டும் கூட்டத்தினர் உணர வேண்டும்.

இது பற்றி, அனைத்து கோணங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆய்வு கட்டுரை விரைவில் தயாராகி வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக