சனி, 18 ஜனவரி, 2014

சுய நலனே பிரதானம்


அரசியலில் நுழைந்து விட்டவர்கள் தங்கள் சுய நலனையே பிரதானமாய் கருதுவர் என்பதை கூட நம்மில் சிலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வியப்பை தருகிறது.

மற்ற மற்ற அரசியல் கட்சிகள் விஷயத்தில் இதை ஒப்புக் கொள்பவர்கள் கூட, முஸ்லிம் இயக்கங்கள் விஷயத்தில் இதற்கு மாற்றமாக விவாதம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்பை பொறுத்தவரை, அதில் போட்டியிடுவது என்பது படித்து முடித்த ஒரு பட்டதாரி தரமான வேலை நிறுவனங்களில் வேலைக்கான விண்ணப்பம் இடுவதை போன்றதாகும். அவன் செய்யும் வேலை மூலம் சமுதாயம் பயன்பெறும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதன் இலக்கு என்பது தனி நபர் நலன் சார்ந்தது தான்.

அது போன்றது தான், ஒரு தனி நபரோ ஒரு அமைப்போ அரசியலில் ஈடுபடுவது என்பதும். தன்னளவில் உயர்வும் புகழும், செல்வாக்கும் மேம்படும் என்பது தான் இதன் இறுதி இலக்கு அதாவது ஆங்கிலத்தில் End Product.
இதன் மூலம் சமூகத்திற்கு நன்மை செய்யலாம் என்பது துணை பயன்களே (By Product).

இது தான் இந்திய அரசியல் சூழல். இதற்கு ஒரு ஹிந்து அமைப்பும் விதிவிலக்கல்ல, முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக் கொள்வோரும் விதிவிலக்கல்ல..!

இதன் காரணமாகத் தான் அரசியல் கட்சிகள் பெருகிக் கொண்டே போகின்றன. ஒரே இலக்கை மையமாகக் கொண்ட இரு கட்சிகள் கூட இரு கட்சிகளாகவே இறுதி வரை செயல்படுகின்றன, இலக்கை ஒருமுகப்படுத்தும் பொருட்டு கட்சிகளை ஒன்றாக்குவதில் இவர்கள் சமரசம் காண்பதில்லை.

முஸ்லிம் நலன் என்பதை இலக்காக கொண்டவர்களானாலும் இதே நிலையை தான் நாம் காண்கிறோம்.

இஸ்லாமிய சமூகத்தின் நலன் தான் குறிக்கோள் எனில், இதை End Product என்கிற இலக்காக‌ கொண்டிருக்கும் ஆயிரம் கட்சிகள் என்றாலும் அவை தேர்தலில் ஓரணியில் ஒரே கட்சியில், ஒரே தலைமையின் கீழ், ஒரே கூட்டணியில் தான் போட்டியிட வேண்டும்.
ஆனால், இத்தகைய நிலையை நாம் காண்பதில்லை. இந்த பொது நலனை அவர்கள் கொண்டிருக்கும் சுய நலமானது, மிகைத்து விட்டதே இதற்கு காரணம்.

அதனால் தான் தாங்கள் பங்கு கொள்ளும் கூட்டணி தர்மத்திற்காக (?) எதிர்த்து போட்டியிடுவது முஸ்லிம் என்றாலும் கூட அவரை தோற்கடிக்க முயல்கின்றனர். இங்கே தங்கள் இறுதி இலக்கான‌ முஸ்லிம் சமுதாய நலன் என்பது அர்த்தமற்றதாகிறது.

இந்த நிலை மாறாதவரை, சமூக நலன் என்பது ஒன்றுமில்லை.
ஒற்றுமை என்பது நமக்கிடையே பேசிக் கொள்ளும் நகைச்சுவை !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக