சனி, 18 ஜனவரி, 2014

நடுநிலை வேஷம்


நடுநிலையாக செயல்படுவதாய் தங்களை காட்டிக்கொள்ளும் சிலரை நாம் எதிர்க்கவும் விமர்சனம் செய்யவும் முற்படுகிற போது, நம்மை தீவிரவாத எண்ணம் கொண்டவர்களாகவும், நடுநிலையான எண்ணங்களுக்கு நாம் எதிரிகள் போலவும் நம்மை சித்தரிக்கின்றனர் சிலர்.

ஏகத்துவவாதிகளாக இருக்கக்கூடிய நாம் நடுநிலையான கொள்கைக்கு எதிரிகள் கிடையாது.
இஸ்லாமிய சட்ட திட்டங்களும் கொள்கை கோட்பாடுகளும் தீவிர எண்ணங்களைக் கொண்டவர்களை கூட கட்டுப்படுத்தி, அவனது சிந்தனைக்கு வரையறை இடுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்கலாம் என்கிற நம்பிக்கை தீவிரவாத எண்ணத்தின் வெளிப்பாடு.
கடவுளே இல்லை என்பது அதன் மற்றொரு எல்லை.
இரண்டுக்கும் நடுவில் நிற்க சொல்லி நடுநிலை பேண சொல்லும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

ஒட்டு மொத்த மனித குலத்திலேயே சஹாபாக்கள் தான் சிறந்தவர்கள் என்று போற்றி புகழ்வதோடு நிறுத்திக் கொள்வோம். அவர்களை பின்பற்றுவது கூடாது என்று அப்போதும் துல்லியமாய் புரிந்து வைத்துள்ளோம்.
காரணம், அல்லாஹ் அருளியதையே பின்பற்ற வேண்டும். அது தான் நடுநிலை கொள்கை.
அதை தாண்டி, சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்களையெல்லாம் பின்பற்றப்பட வேண்டியவர்கள் என்கிற ஸ்தானத்தில் வைப்பது தீவிரவாதம் !

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றை கட்டளையிட்டால் நம்பிக்கை கொண்ட மனிதனுக்கு அதில் சுய விருப்பம் கொள்ளும் அதிகாரம் இல்லை என்பது இறை வசனம். இதை பேணி நடப்பது தான் நடுநிலை கொள்கை.

அல்லாமல், அல்லாஹ்வின் கட்டளை இது தான் என்று அறிந்தும் அதை மீறி, மகான்கள், பெரியார்களின் பின் செல்வது இறை செய்தியை அவமதிக்கும் காரியம். அதுவே தீவிரவாதம்.

தீமையை கண்டால் கையாலோ வாயாலோ தடுப்பதே நடுநிலை.
அல்லாமல், ஊரோடு ஒன்றி வாழ்கிறோம் என்கிற பெயரில் அவற்றை கண்டு கொள்ளாமலும், அவர்களால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாது இருத்தலுமே தீவிரவாதம்.

இன்று நடுநிலை பேசும் பலரும் இத்தகைய தீவிரவாத சிந்தனையையே கொண்டுள்ளனர்.

ஒரு தவ்ஹீத்வாதி தர்காவை எதிர்ப்பது போல் தப்லீக்வாதியும் எதிர்க்கிறான் என்பதால், தர்காவை எதிர்ப்பதில் இருவரும் ஒத்த கருத்தில் இருக்கின்றனர் என்பதை காட்டி, தர்க்காவை எதிர்ப்பதில் மட்டும் நாங்கள் இருவரும் ஒன்று சேருவோம் என்று சொல்வது தான் இவர்களது சமீபத்திய கொள்கை.

ஆனால், இதற்கு பெருமானார் (ஸல்) அவர்களிடம் இவர்களுக்கு முன்மாதிரி இல்லை.
நெருப்பு வணக்கத்தை யூதர்களும் எதிர்த்தார்கள் என்பதால் யூதர்களுடன் கை கோர்த்துக் கொண்டு நபிகளார் நெருப்பு வணக்கத்தை எதிர்க்கவில்லை. சிலை வணங்கிகளானாலும், யூத நசாராக்களானாலும், நெருப்பு வணங்கிகளானாலும் அனைவருமே அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களே !

அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்ட பிறகு, அவன் சிலையை வணங்கினாலும் ஒன்று தான், நெருப்பை வணங்கினாலும் ஒன்று தான் என்கிற பார்வையே நடுநிலை பார்வை !

இந்த அடிப்படையை புரிந்து கொண்டால், நடுநிலையாளர்களான ஏகத்துவாதிகளுக்கும், மார்க்க அடிப்படைகளை புரிவதில் வரம்பு மீறிக் கொண்டு, நடு நிலைவாதியாய் தங்களை காட்டிக் கொள்ளும் தீவிரவாதிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு புலப்படும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக