திங்கள், 1 ஜூலை, 2013

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பது விதிவிலக்கா முரணா?

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பது விதிவிலக்கல்ல, அது குர் ஆனுக்கு முரண் என்று சிலர் வாதம் வைக்கின்றனர்.குர் ஆனில், ஈசா ந பி மரணிக்கவில்லை என்கிற ஆதாரம் எதுவும் இல்லை என்றும்  குர் ஆன் சொல்லாததை ஹதீஸ் சொல்வதால், அந்த ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்கின்றனர்.
மேலும், முஹம்மது நபிக்கு முன் சென்ற எல்லா நபிமார்களும் மரணித்து விட்டனர் என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான். ஆகவே, ஈஸா நபி மரணிக்கவில்லை என்று ஹதீஸ்கள் சொல்வது விதிவிலக்கு என்று கருதக்கூடாது, குர்ஆனுக்கு முரண் என்று தான் கருத வேண்டும் என்று சொல்கின்றனர்.
  
இதே வாதத்தை இவர்கள் உணவு விஷயத்திற்கும் பொருத்துவார்களா?  

தாமாக செத்தவை அனைத்தும் உண்பதற்கு ஹராம் என்பது குர் ஆனின் கட்டளை. (பார்க்க 5:3)

அதே நேரம், 

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)  நூல்கள்: திர்மிதீ 64,
என்கிற ஹதீசானது, கடல் பிராணிகளில் தாமாக செத்தவைகள் கூட ஹலால் என்கிறது.

ஈஸா நபி தொடர்பாக இவர்கள் வைக்கும் வாதத்தை இங்கும் தொடர்புபடுத்தி பார்த்தோமேயானால், குர்ஆன், தாமாக செத்த எந்த பிராணியாக இருந்தாலும் அதற்கு பொதுவான தடையை விதித்திருப்பதால் கடல் பிராணிகள் பற்றி ஹதீஸ் சொல்வது விதிவிலக்கு என்று சொல்லகூடாது, அது குர்ஆனுக்கு முரண் என்று தான் இவர்களும் சொல்ல வேண்டும். 
ஆனால் இவர்கள் கடலில் தாமாக செத்து போகும் மீன்களையும் நண்டுகளையும் தினமும் சாப்பிடத்தான் செய்கிறார்கள். அவ்வாறு சாப்பிடுவதன் மூலம், குர்ஆன் தாமாக செத்தவை பற்றி சொல்லும் கட்டளை பொதுவானது என்றும், கடல் பிராணிகள் பற்றி ஹதீஸ் சொல்வது அந்த குர்ஆன் வசனத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றது என்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆக, எப்படி கடல் பிராணிகளில் தாமாக செத்தவை ஹலால் என்பது குர்ஆனுக்கு முரணில்லையொ அது போல ஈசா நபி மரணிக்கவில்லை, அவர் மீண்டும் வருவார் என்று ஹதீஸ்கள் கூறுவதும் குர்ஆனுக்கு முரணில்லை !
ஈசா நபி மரணிக்கவில்லை என்பதை குர்ஆன் வசனங்களில் இருந்தே நிரூபிக்க முடியும் என்பது தனி விஷயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக