வியாழன், 18 ஜூலை, 2013

மூஸா நபி சூனியத்தால் பாதிக்கப்பட்டார்களா? குர்ஆனுடன் விளையாடும் சலபி கூட்டம்




சூனியக்காரர்களின் வாதம் :

மூஸா நபி சூனியம் செய்யப்பட்டவர் என்று பிர்அவ்ன் கூறுவதை குர்ஆன் பல இடங்களில் மறுக்கிறது, அவ்வாறு அவன் கூறியதால் அவன் அழிவுக்குள்ளாக்கப்படுபவன்என்று 17:102 வசனத்தில் மூஸா நபி சொல்வதாக அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். 
இது ஒரு பக்கம் இருக்க, பிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் மூஸா நபிக்கும் இடையே நடந்த போட்டியில் பிர்அவ்ன் கூட்டத்தார் செய்து காட்டிய சூனியத்தை பார்த்து மூஸா நபி பயந்தார்கள் என்று 20:67 வசனத்தில் வருகிறது. 
இப்போது 17:102 வசனமும் 20:67 வசனமும் ஒன்றுக்கொன்று முரண் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுமா? இரண்டும் வேறு வேறு அர்த்தம் என்று தானே சொல்லும்? 
அது போல 17:48 வசனத்தில் முஹமது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று அல்லாஹ் சொல்வதும், புஹாரி ஹதீஸில் நபிக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாக வரும் ஹதீசும் முரண் என்று கூற கூடாது.


நமது பதில் :

பல நாள் யோசித்து, இவர்களது இணை வைப்பு சித்தாந்தமான சூனிய கொள்கையை நியாயப்படுத்த எந்த சான்றும் கிடைக்காது போனதும் மிரண்டு போன இந்த சலபி கூட்டம் எதையாவது சொல்லி தங்கள் இணை வைப்பு கொள்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்கண்ட அர்த்தமற்ற வாதம் ஒன்றை வைத்துள்ளது. 

இது ஏன் அர்த்தமற்றது என்பதை பார்ப்பதற்கு முன்னால், இது போன்ற வாதம் புரிகிறவர்கள் தங்களது வறட்டு கொள்கையை நியாயப்படுத்த எத்தகைய கீழ்நிலைக்கெல்லாம் செல்கிறார்கள் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். எத்தகைய கீழ் நிலை என்றால், மூஸா நபியை கூட பிர்அவ்ன் தமது சூனியத்தால் வென்று விட்டானாம், அவனது சூனியத்திற்கு மூஸா நபி கூட ஆட்கொள்ளப்பட்டுவிட்டார்களாம். அடப்பாவிகளா ! ஒரு பொய்யான ஹதீஸை தூக்கி கடாசுவதை விட்டு விட்டு அதை நியாயப்படுத்த வேண்டி இப்படியுமா இட்டு கட்ட வேண்டும்?

மூஸா நபி விஷயம் எப்படி முரண்பாடில்லையோ அது போல முஹமது நபி விஷயமும் முரண்பாடில்லையாம், இப்படி நாம் புரிய வேண்டுமாம்.

மூஸா நபி தொடர்பான இந்த விஷயம் முரண்பாடில்லை என்றால் தானே முகமது நபி குறித்தும் அதே போல புரிய வேண்டும் ?? 
இவர்கள் கூறுவது போல மூஸா நபி தொடர்பான அந்த வசனங்களுக்கு அர்த்தம் செய்வதாக இருந்தால் அந்த இரு வசனங்களும் முரண்பாடு தான், சந்தேகமேயில்லை.

ஆனால், அந்த வசனம் (20:67), இவர்கள் சொல்லும் அர்த்தத்தை தருமா? உண்மையில் மூஸா நபி பிர்அவ்னின் சூனியத்திற்கு ஆட்கொண்டார்கள் என்று தான் அந்த வசனம் சொல்கிறதா ?? நிச்சயமாக இல்லை. 

இவர்களது வறட்டு கொள்கையை நிலைநாட்டுவதற்காக இவர்களாக கற்பிக்கும் போலி அர்த்தம் தான் இது. 
இதை குறித்து விளக்கமாக காண்பதற்கு முன், நுனிப்புல் மேயும் இந்த சலபு கூட்டத்தின் மற்றுமொரு அறியாமையையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இவர்கள் வாதம் என்ன? எப்படி மூஸா நபிக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று வரக்கூடிய 17:102 வசனமும், மூஸா நபி பிர்அவ்னால் சூனியம் செய்யப்பட்டார்கள் என்று வரக்கூடிய 20:67 வசனமும் முரண் என்று சொல்ல மாட்டோமோ (??), அது போல 17:48 வசனத்தில் முஹமது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று அல்லாஹ் சொல்வதும், புஹாரி ஹதீஸில் நபிக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாக வரும் ஹதீசும் முரண் என்று கூற கூடாது என்கிறார்கள்.

அதாவது முரணான இரு செய்திகள் குர்ஆனில் இருக்கிறதாம். ஆனால் நாம் அதை முரண் என்று சொல்ல மாட்டோமாம். முரணாக இரு செய்தி குர்ஆனில் இருக்கிறது என்று இவர்கள் ஒப்புக்கொண்டால், அதை எப்படி முரணில்லாமல் புரிய வேண்டும் என்பதை விளக்கி விட்டு தானே, இதை எப்படி இவ்வாறு முரணில்லாமல் புரிகிறோமோ அது போல முகமது நபி பற்றிய செய்தியையும் முரணில்லாமல் புரிய வேண்டும் என்று கூற வேண்டும்?

முரண் என்று இவர்களே ஒத்துக்கொண்ட விஷயத்தை முரணில்லாமல் புரிவது எப்படி என்று சொல்லாமல், "மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தான்"  கதையாக, அது முரண் என்றாலும் முரணில்லை என்று எப்படி நாம் சொல்கிறோமோ அது போல.... என்று கூறி, தாங்கள் நிஜமான ஞான சூனியங்கள் தான் என்பதை பறைசாற்றியுள்ளனர்.

இந்த அறியாமை கூட்டம் விளக்காவிட்டாலும், அந்த இரு வசனங்களும் ஏன் முரணில்லை என்பதை இங்கே நாம் விளக்குவோம். 
இந்த விளக்கத்தின் மூலம் மூஸா நபி சூனியத்தால் பாதிக்கப்படவில்லை என்கிற உண்மை அனைவர்க்கும் புரியும்.

முதலில் சம்மந்தப்பட்ட ஒரு வசனங்களையும் எடுத்துக்கொள்வோம்.


தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீ லின் மக்களிடம் கேட்பீராக! 'மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான். 'வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே இவற்றைச் சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்' என்று அவர் கூறினார். (17:101,102)


இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்வது என்ன? மூஸா நபிக்கு சூனியம் செய்யப்படவில்லை, அவ்வாறு சூனியம் செய்யப்பட்டதாக கூறுபவன் அழிவிற்குரியவன்.

இப்போது இவர்கள், மூஸா நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக சொல்லும் வசனம் என்று எடுத்துக்காட்டும் வசனத்தை பார்ப்போம்.

அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார் (20:66,67)

இதில், சூனியக்காரர்கள் செய்த சூனியத்தை கண்டு மூஸா நபி அச்சமுற்றார் என்று வருகிறது, ஆகவே மூஸா நபி அந்த சூனியக்காரர்களால் சூனியம் செய்யப்பட்டு விட்டார் என்கிறார்கள்.

இரு விஷயங்கள் முரண்பாடானவை என்று எப்போது வரும்? ஒன்றை ஒரு இடத்தில் சொல்லி அதையே இன்னொரு இடத்தில மறுத்தால் தான் முரண்பாடு என்று வரும்.

அந்த கூட்டத்தால் அப்துல்காதரை அடிக்க முடியாது என்று ஒரு பக்கம் சொல்லி விட்டு, இன்னொரு இடத்தில் அந்த கூட்டம் அப்துல்காதரை அடித்தது என்று சொன்னால் இது முரண்பாடு.

அந்த கூட்டத்தால் அப்துல்காதரை அடிக்க முடியாது என்று ஒரு பக்கம் சொல்லி விட்டு, இன்னொரு பக்கம், அந்த கூட்டம் அடிப்பதற்கு கையை ஓங்கியது என்று சொன்னால் இது முரண்பாடா?
அல்லது அந்த கூட்டம் அடிக்க வரும் போது அப்துல் காதர் ஓடினார் என்று சொன்னால் இது முரண்பாடா? நிச்சயமாக முரண்பாடில்லை. 
கையை ஓங்கியது என்று சொன்னாலும் அப்துல் காதர் ஓடினார் என்று சொன்னாலும், அந்த கூட்டம் அடிக்கவில்லை என்று ஏற்கனவே சொன்னது பொய்ப்பிக்கப்படவில்லை ! 

ஏனெனில், அந்த கூட்டத்தில் இலக்கு, அப்துல் காதரை அடிக்க வேண்டும் என்பது, அவர்கள் கையை ஓங்கினாலும், அப்துல் காதர் அதை பார்த்து ஓடினாலும், அவர்களது அடிப்படை இலக்கான அப்துல் காதரை அடிப்பது என்பது அங்கே நிறைவேறவில்லை.

அது போல, மூஸா நபிக்கு சூனியம் செய்ய முடியாது என்று குர்ஆன் சொல்வது அடிப்படை செய்தி.

இதற்கு முரணாக குர்ஆன் பேச வேண்டுமானால், மூஸா நபிக்கு பிர்அவ்னின் கூட்டம் சூனியம் செய்தது, அதனால் அவர் பாதிக்கப்பட்டார் என்று வர வேண்டும். அப்படி வந்தால் தான் முரண்பாடு. 
மூஸா நபிக்கு சூனியம் செய்வது தான் அவர்களது இலக்காக இருந்து, அந்த இலக்கை அடைந்தார்கள் என்றால், அப்போது சூனியத்தால் மூஸா நபி பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்லலாம், அப்போது முதல் வசனத்திற்கு இது முரண் என்று ஒப்புக்கொள்ளலாம்.

ஆனால், பிர்அவ்னின் நோக்கமாக குர்ஆன் கூறுவது, மூஸா நபிக்கு சூனியம் செய்ய வேண்டும் என்பதல்ல, மாறாக, தன்னை கடவுளாக அந்த மக்கள் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும். அது தான் அவனது ஒரே குறிக்கோள்.
இந்த குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு, சூனியம் என்கிற தந்திர வித்தை மூலம் மக்களின் கண்களை ஏமாற்றி, தன்னிடம் இறை சக்தி இருப்பது போல காட்டி அதன் மூலம் அந்த மக்களை அல்லாஹ்வை மறுப்போராக ஆக்க வேண்டும் என்பதற்காக தான் சூனியக்காரர்களை அழைக்கிறான், மூஸா நபியுடன் போட்டிக்கு வருகிறான்.

ஆக, அவனது நோக்கம், சூனியம் செய்து மக்கள் தன்னை வணங்கும் படி செய்ய வேண்டும், தான் இறை சக்தி பெற்றவன் என்று நம்பும்படி செய்ய வேண்டும்.

இந்த நோக்கம் நிறைவேறினால் தான் மக்கள் அவனது சூனியத்தால் பாதிக்கப்பட்டனர் என்று கூற வேண்டும். 

ஆனால் இந்த வசனங்களின் தொடர்ச்சியாக அல்லாஹ் சொல்லும் போது அவனது நோக்கம் நிறைவேறவில்லை என்கிறான் !


உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்' (என்றும் கூறினோம்.)
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தா வில் விழுந்து, 'மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்' என்றனர் (20:69, 70)


மேற்கண்ட வசனங்களில், எந்த நோக்கத்திற்காக பிர்அவ்னின் கூட்டம் சூனியம் செய்ததோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றும், பிர்அவ்னின் கூட்டத்தாரே தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர் என்றும் அல்லாஹ் சொல்கிறான். 
சூனியம் செய்வதற்காக வந்து அந்த சூனியத்தின் மூலம் கொண்ட நோக்கம் நிறைவேறவில்லை என்றால், பிர்அவன் காட்டிய சூனியத்தை யாரும் நம்பவில்லை என்று பொருள், அந்த சூனியம் யாரையும் பாதிக்கவில்லை என்று அர்த்தம்.  

சூனியம் செய்ய வந்தவர்களே தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்று குர்ஆன் சொல்கிற போது அந்த கூட்டத்தாரால் மூஸா நபி சூனியத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்  என்று கூறுவது இறை வசனத்திற்கு எதிரானது !

அவர்களது செயலை பார்த்து அச்சமடைவது, சூனியத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்கிற பொருளை தராது. அப்படியானால், நாம் ஏற்கனவே சொன்னது போல, மூஸா நபிக்கு அச்சமூட்ட வேண்டும் என்பதற்காகவே அந்த கூட்டம் சூனியம் செய்து, இறுதியில் மூஸா நபி அச்சப்பட்டார் என்றால், பார்த்தீர்களா, அந்த நோக்கத்திற்காக தான் சூனியம் செய்தார்கள், அந்த நோக்கம் நிறைவேறியது, ஆகவே சூனியத்தால் பாதிக்கப்பட்டார் என்று கூறலாம். 

ஆனால், இங்கு மூஸா நபி, உண்மை போல் அவர்கள் காட்டும் சூனியத்தை பார்த்து பயந்தார் அவ்வளவுதான்., எதையும் பார்த்து பயப்படுவது மனித இயல்பு. அந்த பலகீனத்திற்கு மூஸா நபியும் விதிவிலக்கல்ல என்கிற செய்தியை தான் இந்த வசனம் தருகிறதே தவிர, அவர்கள் செய்த சூனியத்தால் இவர் பாதிக்கப்பட்டார் என்று ஆகாது. 

அப்படி இந்த சலபு கூட்டம் சொல்லுமானால், மூஸா நபி அந்த கூட்டம் செய்து காட்டிய சூனியத்தை உண்மை என்று நம்பி விட்டார் என்று கூறுவதாக பொருள் வரும், பிர்அவ்ன் கடவுள் தான் என்று மூஸா நபியே நம்பி விட்டதாக (நவூதுபில்லாஹ்) பாரதூரமான அர்த்தத்தை தான் கொடுக்க வேண்டி வரும்.

வெறுமனே பயப்படுவது, சூனியத்திற்கு உள்ளாக்கப்படும் காரியம் என்று இவர்கள் சொன்னால், மேலே உள்ளவைகளும் அந்த அர்த்தத்தில் அடங்கும். இதை இவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், இவர்கள் வாதப்படியான அர்த்தம் இது தான்.

அதாவது, சூனியத்தை கண்டு மூஸா நபி பயந்ததன் மூலம் சூனியத்தால் பாதிக்கப்பட்டு விட்டார் என்று இவர்கள் சொல்வார்கள் என்றால்,

அந்த சூனியம் அற்புதம் என்று மூஸா நபி ஒப்புக்கொண்டு விட்டார் என்று ஆகும்,
அல்லாஹ்வுக்கு இணையாக பிர்அவ்னுக்கும் ஆற்றலுண்டு என்று ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்றும் அர்த்தமாகும்.

இந்த பாரதூரமான அர்த்தம் வராமல் நாம் பொருள் செய்யும் போது, பொய்யான காரியத்தை நிஜம் போல காட்டும் போது எந்த மனிதனாக இருந்தாலும் அவன் உள்ளத்தில் அச்சம் ஏற்படும். அவர் அச்சப்பட்டு விட்டதே தோல்விக்கான அர்த்தமல்ல.

மேலும், நபிமார்களையும் சூனியக்காரர்களையும் தொடர்புபடுத்தி குர்ஆன் கூறும் எல்லா வசனங்களுமே, நபி சூனியத்திற்கு உள்ளாவது, நபித்துவத்திற்கு தடையாக இருக்கும் என்கிற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த மனிதர் சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் கூறுவதும் கூட, இதன் காரணமாக இவர் நபியில்லை என்று நிரூபிப்பதற்கு தான். 
அதை மறுத்து, இவர் சூனியம் செய்யப்பட்டவரில்லை என்று அல்லாஹ் சொல்வதும் கூட, இவர் நபி தான் என்று நிரூபிப்பதற்கு தான்.

எதிரிகள் நபிமார்களை பார்த்து பொய்யர், ஏமாற்றுகாரர், பைத்தியக்காரர் என்றெல்லாம் வசை பாடினார்கள் என்றால் அதற்கு காரணம் பொய் பேசுவதும் ஏமாற்றுவதும், பைத்தியக்காரராக இருப்பதும் நபித்துவத்திற்கு இழுக்கு. ஆகவே தான் இந்த விமர்சனங்களை செய்தனர், 

அந்த வரிசையில் தான் சூனியக்காரர் என்றும் சூனியம் செய்யப்பட்டவர் என்றும் சொன்னார்கள்.

ஆக, இவர்கள் வாதப்படி எதிரிகள் நபிமார்களுக்கு சூனியம் செய்தனர் என்றால், அந்த சூனியத்தின் மூலம் நபிக்குரிய அந்தஸ்தையே அந்த நபி இழக்க வேண்டும், அப்போது தான் சூனியத்தால் அந்த நபியை இவர்கள் பாதிப்படைய செய்தார்கள் என்று ஆகும். 

இந்த அளவுகோலை கொண்டு பார்க்கும் போது, வெறுமனே அவர்களது செயலை பார்த்து அச்சப்படுவது, மூஸா நபியின் நபித்துவத்தை கேள்விக்குறியாக்குமா? என்றால் ஆக்காது. அவர்களது நபித்துவ அந்தஸ்து கேள்விக்குறியாக்கப்படவில்லை என்றால் அவர்களை எந்த சூனியமும் பாதிக்கவில்லை என்று பொருள் !

அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது நிலை இப்படியா? எந்த பலகீனம் நபிக்கு இருப்பதாக எதிரிகள் விமர்சனம் செய்து வந்தார்களோ, எந்த பலகீனம் இருந்தால் அது நபித்துவ அந்தஸ்துக்கு இழுக்கோ, அந்த பலகீனத்தை நபி அவர்கள் கொண்டிருந்ததாகவே புஹாரி ஹதீஸ் சொல்கிறது.

ஆக, 
  • அந்த இறை வசனத்தில், மூஸா நபி சூனியத்தால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படவில்லை, 
  • அதனால் அவர்களது நபித்துவத்திற்கு களங்கமோ இழுக்கோ இல்லை.
  • ஆகவே, அந்த வசனம் மற்ற மூஸா நபிக்கு சூனியம் செய்ய இயலாது என்று சொல்கிற இறை வசனங்களுக்கு முரணில்லை.

அதே சமயம், 
  • புஹாரி ஹதீஸில்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று நேரடியாகவே சொல்லப்பட்டுள்ளது.
  • இதனால் அவர்களது நபித்துவம் களங்கப்படுகிறது.
  • ஆகவே, நபிக்கு சூனியம் செய்ய இயலாது என்று சொல்கிற இறை வசனங்களுக்கு இது தெளிவான முரண் !!

மேலும்,சூனியம் என்றாலே அது ஷைத்தானின் தீண்டல் தான் என்கிறார்கள். 
ஆனால், ஷைத்தானால் நபிமார்களை தீண்ட முடியுமா? என்றால் முடியாது என்று குர்ஆன் திட்டவட்டமாக கூறுகிறது.


நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. 16:99

அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்' என்று கூறினான். 15:40

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். 26:221,222
.

அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் நபிமார்கள். அத்தகையவர்கள் மீது ஷைத்தானுக்கு எந்த அதிகாரமுமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக கூறி இருப்பதும், மூஸா நபி, முஹமது நபி ஆகியோர் சூனியத்தால் பாதிக்கப்பட்டனர் என்கிற இவர்களது கொள்கையை தவிடு பொடியாக்குகிறது.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். 
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : அஹ்மது (26212)

செவ்வாய், 16 ஜூலை, 2013

சூரியனை கண்ணால் கண்டு தான் நோன்பு திறக்க வேண்டுமா?



இரவு முன்னோக்கி வருவதை "கண்டால்" நோன்பை முறியுங்கள் என்று வரக்கூடிய ஹதீஸின் அடிப்படையில், சூரியனையும் கண்ணால் கண்டு தானே நோன்பு துறக்கும் நேரத்தை முடிவு செய்ய வேண்டும்? நீங்கள் ஏன் அதை கணிக்கிறீர்கள்? என்கிற கேள்வி தற்போது முகநூலில் பரவலாக எழுப்பப்படுகிறது.

இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால்,இது போன்ற கேள்விகளை எழுப்புவோருக்கென்று எந்த நிலைபாடாவது இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர விரும்புகிறோம். 
ஹதீஸில் சூரியனையும் கணிக்காமல் கண்ணால் பார்க்க தானே சொல்லி இருக்கிறது, நீங்கள் ஏன் கணிக்கிறீர்கள் என்று கேட்பதன் மூலம் இவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்ன? தாங்கள் சூரியனை கணிக்கதான் செய்கிறார்கள் என்பதாகும்.

அதாவது, ஹதீஸில் கணிக்க கூடாது என்று தான் உள்ளதாம், ஆனால் நாங்கள் கணிப்போம் என்று, ஹதீஸுக்கு முரணாக நாங்கள் நடப்போம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். 
ஆனால், நம்மை நோக்கி, நீங்கள் மட்டும் ஹதீஸுக்கு முரணாக நடக்கலாமா? என்கிற கேள்வியை கேட்க வேண்டும் என்பது தான் இவர்களது ஒரே குறிக்கோள் என்பதால் தாங்கள் இந்த ஹதீஸை மறுத்து செயல்படுவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு கூட சங்கூஜம் அடையகிறார்களல்லர்.

எப்போதுமே ஒரேயொரு இறை வசனத்தை அல்லது ஹதீஸை வைத்து எந்த சட்டமும் எடுக்க கூடாது. ஒரு செய்திக்கு துணையாக அல்லது விளக்கமாக வேறு ஏதேனும் செய்திகள் இருக்குமானால் இரண்டையும் இணைத்து தான் பொருள் செய்ய வேண்டும், இரண்டுக்கும் அர்த்தம் கொடுக்கின்ற வகையில் தான் சட்டம் எடுக்க வேண்டும். இது மார்க்கத்தை அணுக வேண்டிய சாதாரண முறை.

மது அருந்தி விட்டு தொழாதீர்கள் என்று ஒரு இறை வசனம் உள்ளது. அதை எடுத்து வைத்துக்கொண்டு, பார்த்தீர்களா, அல்லாஹ் தொழும் பொது மட்டும் தான் மது அருந்தாதீர்கள் என்கிறான், இதன் மூலம் தொழுகை அல்லாத நேரங்களில் மது அருந்துவது கூடும் என்று ,இந்த ஒரு வசனத்தை வைத்து மட்டும் சட்டம் இயற்றக்கூடாது. காரணம், இந்த சட்டம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இறங்கியது. இதன் பிறகு, பொதுவாக எல்லா நேரங்களிலும் மது அருந்துவது தடை என்கிற வசனமும் வந்து விட்ட காரணத்தால் முந்தைய வசனம் தற்காலிகமான சட்டமாக இருந்தது என்று கருத வேண்டும்.

அது போல, சூரியனை கண்டு நோன்பு திறக்கும் நேரத்தை முடிவு செய்யுங்கள் என்கிற ஒரேயொரு செய்தி மட்டும் தான் ஒட்டு மொத்த குர்ஆன் ஹதீஸில் இருக்கிறது என்றால், இன்றைக்கு நாம் சூரியனை கண்ணால் கண்டு தான் முடிவு செய்தாக வேண்டும். ஆனால், சூரியன் விஷயமாக இந்த ஒரு செய்தி மட்டும் இல்லை, இன்னும் ஏராளமான சட்டங்கள் உள்ளன.

தொழுகை நேரங்களை பற்றியும் குறிப்பாக நோன்பு திறக்கும் நேரமான மக்ரிப் நேரம் பற்றியும் பல்வேறு வார்த்தை அமைப்புகளை கொண்டு ஹதீஸ்கள் உள்ளன.

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1076

இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1074

அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1076

ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: திர்மிதீ 138

லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1075

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை உண்டு. 'சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1075

இது போன்ற எல்லா செய்திகளிலும் சூரியனை அடிப்படையாக கொண்டு நேரத்தை முடிவு செய்வது பற்றி தான் பேசுகிறது. ஆனால் இவற்றில் கண்ணால் கண்டு முடிவு செய்யுங்கள் என்று சொல்லப்படவில்லை, மாறாக, "அந்த நேரம் வந்தால்" என்று பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த நேரம் வந்ததை எப்படி வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம் என்பது பொருள்.

நோன்பு திறக்கும் நேரமான மக்ரிப் நேரத்தை அறிவது பற்றி ஒரு இடத்தில "இரவு வருவதை கண்டால்", என்றும் இன்னொரு இடத்தில் சூரியன் மறைந்த நேரம் என்றும் கூறப்பட்டால், சூரியன் மறைந்ததை கண்ணால் கண்டும் முடிவு செய்யலாம், கண்ணால் காணாமல் வேறு வழிகளிலும் முடிவு செய்யலாம் என்று அர்த்தம்.

மேலும், நோன்பு திறக்கும் நேரத்தை பற்றி சொல்கிற மற்றொரு செய்தியில் "சூரியன் மறைந்து விட்டால்" என்றே இருக்கிறது, மறைந்ததை கண்டால் என்று சொல்லப்படவில்லை.

இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2006

அதே சமயம், இது போல பிறை குறித்து, பிறையை கண்டு நோன்பு வையுங்கள் என்று ஒரு பக்கமும், பிறை உதித்தால் நோன்பு வையுங்கள் என்று இன்னொரு பக்கமும் என  பல்வேறு வாசக அமைப்புடன் ஹதீஸ்களில் இருக்குமானால் அப்போது, சூரியனுக்கு என்ன நிலைபாட்டை சொல்கிறோமோ அதையே தான் பிறைக்கும் எடுத்திருப்போம். 
ஆனால் பிறை பற்றி சொல்லப்படும் எந்த செய்தியிலும் "பிறை உதித்தால் இதை செய்யுங்கள்" என்று  சொல்லப்படவில்லை, பிறையை கண்டால் இதை செய்யுங்கள் என்று மட்டும் தான் உள்ளது.

ஒன்றை பற்றி ஒரேயொரு விதமாகவும் இன்னொன்றை பற்றி பல்வேறு விதங்களாகவும் சட்டம் சொல்லப்படுமானால் முதலாவது விஷயத்தை அந்த ஒரு விதமாக தான் செய்ய வேண்டும், இரண்டாவதை பல்வேறு வழிகளில் செய்யலாம் என்பது சாதாரண சிந்தனை.

இன்னும் சொல்லப்போனால், இவர்கள் வாதப்படியே பார்ப்பதாக இருந்தாலும் மக்ரிப் நேரத்தை கண்ணால் கண்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்றால், நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ கண்ணால் கண்டு முடிவு செய்யாமல் குச்சிகளின் நிழலை பார்த்து தான் அறிந்து கொண்டார்கள். ஹதீஸில் சூரியனை கண்டு அல்லது இரவு முன்னோக்கி வருவதை கண்டு முடிவு செய்ய சொல்லி இருக்கும் போது அவர்கள் குச்சியின் நிழலை பார்த்து முடிவு செய்தது மார்க்க முரண் என்று இவர்கள் சொல்வார்களா? 

மேலும், சூரியன் கண்களுக்கு புலப்படாத மேக மூட்டமான காலகட்டத்தில், சூரியனை கண்ணாலும் காணாமல், நிழல் வைத்தும் தீர்மானிக்காமல் அவர்களே சுயமாக கணித்து முடிவு செய்திருக்கிறார்கள் . இதற்கும் ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.
இது நிர்பந்தமான நிலை தானே என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் அதுவும் அடிப்படையற்ற கேள்வி. காரணம், இந்த நிர்பந்தமான நிலையில் அவர்கள் சூரியனை கணித்து போல பிறை தென்படாத நிர்பந்தமான சூழலில் அவ்வாறு பிறையை கணிக்கவில்லை. நாட்களை முழுமைப்படுத்தி கொள்ளவே செய்தார்கள்.

நிர்பந்தமான இரு சூழல்களில் சூரியனுக்கு  ஒரு விதமாகவும் பிறைக்கு இன்னொரு விதமாகவும் அவர்கள் செயல்பட்டது, சூரியன் விஷயத்தில் வரம்புகளின்றி செயல்படுவதற்கும், பிறை விஷயத்தில் வரம்புக்கு உட்பட்டு செயல்படுவதற்கும் நபி அவர்கள் காட்டிய முன் மாதிரியாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே அல்லாமல், இது நிர்பந்தத்திற்கு மட்டும் உரியது என்று தனியாக பார்க்க கூடாது, நிர்பந்தம் என்பது காரணம் என்றல் பிறை பற்றிய நிர்பந்தம் வந்த பொழுதும் இதையே அவர்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.

இவை ஹதீஸ்கள் குறித்த நிலைபாடு. இப்போது குர்ஆன் இது பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

சூரியன் விஷயமாக பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்று ஹதீஸ்கள் இருந்தாலும், குர்ஆனில் சூரியனை கணிப்பது கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.

(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன் றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவை யும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர் கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான்.  73:20

இந்த வசனத்தில் நேரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள இயலாத நிலையில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் எனவும், அது தவறு எனவும், அதை துல்லியமாக கணிக்க அவர்களால் இயலாது என்பதால் அவர்களை தான் மன்னித்ததாகவும் அல்லாஹ் சொல்கிறான். 

துல்லியமாக கணிக்காமல் இருப்பது தவறு என்றும், அது இயலாது என்பதால் அல்லாஹ் மன்னித்தான் எனவும் அல்லாஹ் சொன்னால், அதை துல்லியமாக அறிவதற்குரிய ஆற்றலை பெற்றவர்கள் அவ்வாறு கட்டாயம் செய்ய வேண்டும் என்று பொருள்.

ஆக, இறை வசனங்களின் அடிப்படையில் நாம் சிந்திக்கையில், சூரியனை இன்றைய காலகட்டத்தில் கணித்து, துல்லியமான முறையில் நேரத்தை கணிக்க வேண்டும் என்று புரிகிறோம். 
இத்தகைய விதி எதுவும் பிறை விஷயமாக குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை எனும் போது, இப்போதும், சூரியனை ஏன் கணிக்கிறீர்கள், அது போல பிறையை ஏன் கணிப்பதில்லை என்கிற பாமரத்தனமான கேள்விகள் அர்த்தமற்றதாகின்றன.

குர்ஆன், சூரியனை கணித்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு விட்ட பிறகு, இந்த கட்டளைக்கு முரணில்லாத வகையிலும், இது தொடர்பாக மேலே நாம் சுட்டிக்காட்டிய இன்னபிற ஹதீஸ்களுக்கு அர்த்தம் கொடுக்கின்ற வகையிலும் தான், இவர்கள் சுட்டிக்காட்டும் நோன்பு திறத்தல் பற்றிய ஹதீஸை புரிய வேண்டும்.

மேலும், ஹதீஸில் இரவு வருவதை கண்டால் நோன்பை விடுங்கள் என்று சொல்லப்பட்டாலும், இந்த நோன்பை விடுதல் தொடர்பாக குர்ஆனிலும் சட்டம் உள்ளது. 

ஆனால், அதில், ஹதீஸில் சொல்லப்பட்டது போல இரவு முன்னோக்கி வருவதை கண்ணால் கண்டு முடிவு செய்யுமாறு சொல்லப்படவில்லை.

இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!  2:187
இரவு வரை முழுமைப்படுத்த வேண்டும், என்று தான் குர்ஆன் சொல்கிறதே தவிர இரவு வருவதை காண்பது வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள் என்று சொல்லப்படவில்லை. இரவு வருவதை எந்த வகையிலும் தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருள்.

ஆக, எந்த அடிப்படையிலும் சூரியனுக்குரிய பார்வை வேறு சந்திரனுக்குரிய பார்வை வேறு என்பது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் நிரூபணம் ஆகின்றது.

வெள்ளி, 12 ஜூலை, 2013

திருமணமும் பிற மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் !


சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறையில் சென்று விட்டு திரும்பிய மாற்று மத நண்பரிடம் இன்று பேசினேன்... திருமணத்திற்கான செலவுகள் பற்றி பேசிய போது உள்ளக்குமுறலுடன் (நிஜமாகவே இனம் புரியா வேதனை அவரது பேச்சில் தெரிந்தது) அவர் பேச துவங்கினார்.

எல்லா செலவுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், மாப்பிள்ளைக்கு கார், அவர் அணிவதற்கு 6 செட் ஆடை, கோட், சூட், பெல்ட் ஷு, மாப்பிள்ளையின் சகோதரனுக்கு ஆடை, சகோதரிக்கு பட்டு சேலை.. மாப்பிள்ளை பெற்றோருக்கு நகை. (இது என்ன புது வழக்கமோ?)
எல்லாம் போக, தமது தங்கைக்கு (அதான் மாப்பிள்ளைக்கு..) 78 சவரன் நகை..!!

இதுவும் போக, திருமணத்திற்கான மொத்த செலவு, மண்டபம், போக்குவரத்து, விளக்கு அலங்காரம், கச்சேரி சபா என அந்த செலவு..

போதாக்குறைக்கு தமது சொந்தக்காரர்களான சின்ன தாயார், பெரிய தாயார், அவர்களது பிள்ளைகள் என இவர்களுக்கு ஆடைகள்.. என அவர் மூச்சு விடாமல் பேச, மூச்சு என்னவோ எனக்கு தான் வாங்கியது..

தோராயமாக எவ்வளவு ஆகியிருக்கும்? என்று கேட்டதற்கு ஒரு 20.. என்று இழுத்தார்..

சுப்ஹானல்லாஹ்.. இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கிடைத்திருப்பதற்கு நான் பெருமைப்பட்ட பல்வேறு தருணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது!!

எங்கள் மதத்தில் ஆண்கள் 5000 ரூபாயிலும் பெண்கள் அதை விடவும் குறைவாகவும் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று சொன்னேன். கொஞ்சம் அதிக செலவுடன் செய்யலாம் என்றால் கூட 20 ஆயிரத்தை தாண்டாமல் செய்து கொள்ளலாம், இங்கே பெண்ணை பெற்றவருக்கு லாபம், ஒரு செலவு இல்லை என்றெல்லாம் நான் பேச, அவர் மௌனமானார்..

விரக்தியால் மௌனமானாரா அல்லது சிந்தித்தாரா என்று தெரியவில்லை..!!

தமுமுக நடத்தும் போராட்டத்தை ஆதரிக்கலாமா?



சமூக பிரச்சனைக்காக பிற இயக்கங்களுடன் ஒரே மேடையில் கை கோர்க்க முடியாது என்பது போல, அந்த இயக்கங்கள் என்ன நோக்கத்திற்காக அந்த சமூக பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பதை சிந்திக்காமல் கண் மூடித்தனமாக அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் முடியாது.

குறிப்பாக, தமுமுக போன்ற அமைப்புகள், இந்த சமூகம் பல வருடங்களாக ஏங்கி தவிக்கும் தனி இட ஒதிக்கீடு என்கிற பிரச்னையை தங்கள் சுய இலாபத்திற்காக பயன்படுத்தி இந்த சமுதாயத்தையே விற்ற சமுதாய துரோகிகள் என்பது பட்டவர்த்தனமாகி விட்ட இந்த காலகட்டத்தில், அவர்கள் இட இதிக்கீடு கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினாலும் நல்ல விஷயம் தானே செய்கிறார்கள் என்று கூறி நாம் ஆதரவு கூட தெரிவிக்க முடியாது.

அப்பாவி முஸ்லிம்களை ஊடகங்கள் முன் விலை பேசி தங்களது இரண்டு தொகுதி செல்வாக்கை (?) நான்காக உயர்த்தும் பொருட்டு, போயஸ் தோட்ட வாசலிலும் கோபாலபுர வாசலிலும் காவல் கிடக்கத்தான் இது போராட்டங்கள் பயன்படும் எனும் போது, இத்தகைய போராட்டங்கள் நடைபெறாமல் போவது தான் சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்பது எனது உறுதியான கருத்து !

குருட்டுத்தனமாகவும் செவிட்டுத்தனமாகவும் விழக்கூடாது


இன்று சிலர், இன்னின்ன மனிதர்கள் அறிவித்து விட்டார்களா? அப்படியானால் இந்த செய்தி சரியாக தான் இருக்கும், அவர்களெல்லாம் நம்பகமானவர்கள், ஆகவே அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை குறித்து நம் சிந்தனையை செலுத்த தேவையில்லை என்ற வாதத்தை வைக்கிறார்கள்.

மத்ஹபை நம்புபவர்கள் துவங்கி, சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் துவங்கி, குர்ஆனுக்கு முரணான செய்திகளை அறிவிக்கும் அறிவிப்பாளர்களை நம்புபவர்கள் வரை, அனைவருமே தனி நபர் ஒன்றை கூறி விட்டால் அதன் பிறகு சிந்திக்க கூடாது, அப்படியே நம்பி விட வேண்டும் என்கிற கொள்கையில் இருக்கிறார்கள்.

ஆனால், நம்பகமானவர்களுக்கெல்லாம் நம்பகமானவன் அல்லாஹ் ! மனிதர்களில் நம்பகமானவர்கள் கூட தவறிழைத்து விடுவார்கள், ஆனால் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவன் அல்லாஹ் !!

அப்படிப்பட்ட அந்த ஏக இறைவன், ஒரு செய்தியை சொன்னால், அதை கூட கண்ணை மூடி நம்ப கூடாதாம், அதில் கூட நம் சிந்தனையை செலுத்தி அதன் பிறகு தான் நம்ப வேண்டுமாம் !

இதை யார் சொல்கிறார்?? அந்த ஏக இறைவனே சொல்கிறான் !

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். 25:73

அல்லாஹ்வின் வஹீ என்று ஒரு செய்தி கூறப்படுமேயானால் கூட, அதை சிந்தித்து பார்த்து அதன் பிறகு தான் நம்ப வேண்டும் என்பது எத்தனை அழகிய, ஆழமான வார்த்தை !!!

மனிதர்களின் பேச்சை சிந்திக்காமல் நம்ப வேண்டும் என்று கூறுவோர் இறை வசனத்தை மறுக்கும் பொய்யர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வசனம் இது.

அனைவர்க்கும் இதை எடுத்து செல்லுங்கள்.

இஸ்லாத்தில் எளிமையான சட்டம்


பிறை சட்டம் ஒன்றில் தான் அடிப்படை அளவுகோலை மார்க்கம் கட்டளையிட்டு விட்டு , அந்த அளவுகோலில் இருந்து புரண்டு விடாதவாறு, அந்த சட்டத்தை செயல்படுத்தும் உரிமையையும் அவரவர் கைகளில் தந்துள்ளது.

இது தவிர மார்க்கத்தின் வேறெந்த சட்டமாக இருந்தாலும் அளவுகோலையும் மார்க்கம் தான் தீர்மானிக்கும், சட்டத்தை செயல்படுத்தும் சவுகரியங்களையும் மார்க்கம் தான் சொல்லி தரும்.

இந்த வகையில், மார்க்க மசாயில்களிலேயே மிக மிக எளிமையான ஒரு மஸாயில் இந்த பிறை சட்டம் தான் !

எதை பற்றி மிக குறைவாக விவாதிக்க வேண்டுமோ, எதை பற்றி மிக குறைவாக கவலைப்பட வேண்டுமோ, அதை குறித்து தான் இந்த சமுதாயம் அதிக அளவில் விவாதிக்கிறது.

பிஜேவை பின்பற்றியவர்களின் நிலை


யாரெல்லாம் என்னை பின்பற்றிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் இந்த இயக்கத்தை விட்டு சென்று விட்டார்கள், யாரெல்லாம் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுகிறார்களோ அவர்கள் தான் இந்த இயக்கத்தில் இருப்பார்கள், இன்றும் இருக்கிறார்கள், என்றைக்கும் இருப்பார்கள்.
இது சகோ. பிஜே பல இடங்களில் சொல்லி வருவது.

இதற்கு சான்றாக, சமீபத்திய பொய்யன் ஜமாஅத்தின் பிறை அறிக்கை அமைந்துள்ளதை பார்க்கலாம்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பது வரை பிறையை கணிக்க கூடாது என்று கூறி வருவது. , தவ்ஹீத் ஜமாஅத் எட்டி உதைத்து விட்ட பிறகு, பிறையை கணிக்காமல் இருக்கலாமா என்று கேள்வி கேட்பது..

தனி நபர் மீது கொண்டுள்ள வெறுப்பு, சிலரை எந்த நிலைக்கும் தள்ளும் என்பதற்கு இது சான்றாக நிற்கிறது.
பிஜேவுக்காக இந்த கொள்கையை நேசிப்பவன், பிரசாரம் செய்பவன் யாராக இருந்தாலும் அவர்கள் நேர்வழியில் நீடிக்க முடியாது என்பதற்கும் இது சான்றாக விளங்குகிறது !!

காலணா பெறுமாணம்  இல்லா அறிக்கை அது என்பது தனி விஷயம் !!

அல்லாஹ்வின் ஆற்றல் : இப்ராஹிம் நபியின் வழிமுறை


சூனியம் உண்டு என்று சொல்கிற உங்களால் எனக்கு சூனியம் வைக்க முடியுமா? என்று நாம் கேள்வி எழுப்புகிற போது சூனியம் என்பது பாவமான காரியம், ஆகவே அதை செய்து காட்டும் படி கேட்க கூடாது என்கிற ஒரு சமாளிப்பு பதிலை கூறி தப்பிக்கின்றனர்.

ஆனால், இது போன்ற கேள்விகள் கேட்பது தான் மார்க்கத்திற்கு உட்பட்டது, பொய்யர்களை அடையாளம் காட்டவல்லது ! குர்ஆன் காட்டும் வழிமுறையே இது தான் !

இப்ராஹிம் நபியுடன், உன் இறைவன் உயிர் கொடுப்பதை போல எங்களாலும் கொடுக்க முடியும் என்றெல்லாம் விதண்டாவாதம் செய்து வந்த அந்த இணை வைப்பாளர்களை நோக்கி, அத்தகைய இணை வைப்பு செயல் ஒன்றை செய்து காட்டி தங்களுக்கும் இறை சக்தி இருக்கிறது என்று நிரூபிக்குமாறு இப்ராஹிம் நபி அவர்களை நோக்கி சவால் விடுக்கிறார்கள்.

இதை அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் சொல்கிறான்

'அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (2:258)

சூரியனை மேற்கில் உதிக்க செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு தான் உண்டு. அதை உளப்பூர்வமாக நம்பிய இப்ராஹிம் நபி, அல்லாஹ்வை போல் தனக்கும் ஆற்றல்கள் உள்ளதாக பிதற்றியவனை நோக்கி, அப்படியானால் அல்லாஹ்வின் இந்த ஆற்றலை நீ வெளிகாட்டு பார்க்கலாம் என்று கேட்கிறார்கள்.
இவ்வாறு கேட்பதை அல்லாஹ் அங்கீகரிக்கிறான் !

இதே போல, எந்த சாதனமுமின்றி இன்னொருவனது கை கால்களை முடமாக்க முடியும் என்று நம்புவதும் அல்லாஹ்வின் ஆற்றலில் சொந்தம் கொண்டாடுவது தான் என்கிற வகையில், இப்ராஹிம் நபி பாணியில், நீ உண்மையாளன் என்றால் அதை செய்து காட்டு பார்ப்போம் என்று கேட்கலாம் !

மேலும், இப்ராஹிம் நபி அவ்வாறு கேட்ட உடன், அதை செய்து காட்டி நிரூபிக்க வக்கற்ற அந்த எதிரிகள் வாயடைத்து போனதாக அல்லாஹ் அதே வசனத்தில் சொல்கிறான்.
அதாவது, இப்ராஹிம் நபி கேட்டதை போல அவர்கள் செய்து காட்டவில்லை என்பதால் அவர்கள் நேர்வழி பெறாதவர்கள் என்கிறான்.

அது போல, சூனியம் உண்மை என்று சொல்கிற நீ, அது போல் எனக்கு செய்து காட்டு என்று அவனை நோக்கி சொல்லப்படும் போது அதை செய்து காட்டாமல் சால்ஜாப்பு சொல்லி ஒடுவானேயானால் அவன் தான் அல்லாஹ் சொல்கிற பொய்யன், அவன் தான் நேர்வழி பெறாதவன், அவன் தான் வாயடைத்து போனவன் !

முகநூல் பதிவுகள் : பிறப்பால் வேற்றுமையில்லை


பிறப்பால் தாழ்ந்த (?) ஜாதிக்காரர்கள், தாங்கள் தாழ்ந்த ஜாதி தான் என்று ஒப்புக்கொண்டு அரசாங்க சலுகைகள் பெறும் காலமெல்லாம் உங்கள் மேலுள்ள ஜாதி உங்களை அடக்கி ஆளத்தான் செய்யும்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங் களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(அல்குர்ஆன் 49:13)

கீழ்ஜாதி என்று உன்னையே நீ நம்பிக்கொண்டிருக்கிறாயே, உனது தாய் தந்தையும், மேல் ஜாதி என்று இறுமாப்புடன் இருக்கிறானே அவனது தாய் தந்தையும் ஒன்று தான் !

இறைவனை அஞ்சி நடப்பதில் தான் உங்களில் மேலானவர் கீழானவர் என்கிற பாகுபாடு உருவாகுமே தவிர, பிறப்பால் ஐயரும் ஒன்று தான், தலித்தும் ஒன்று தான்.

முகநூல் பதிவுகள் : பிறப்பால் வேற்றுமையில்லை


பிறப்பால் தாழ்ந்த (?) ஜாதிக்காரர்கள், தாங்கள் தாழ்ந்த ஜாதி தான் என்று ஒப்புக்கொண்டு அரசாங்க சலுகைகள் பெறும் காலமெல்லாம் உங்கள் மேலுள்ள ஜாதி உங்களை அடக்கி ஆளத்தான் செய்யும்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங் களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(அல்குர்ஆன் 49:13)

கீழ்ஜாதி என்று உன்னையே நீ நம்பிக்கொண்டிருக்கிறாயே, உனது தாய் தந்தையும், மேல் ஜாதி என்று இறுமாப்புடன் இருக்கிறானே அவனது தாய் தந்தையும் ஒன்று தான் !

இறைவனை அஞ்சி நடப்பதில் தான் உங்களில் மேலானவர் கீழானவர் என்கிற பாகுபாடு உருவாகுமே தவிர, பிறப்பால் ஐயரும் ஒன்று தான், தலித்தும் ஒன்று தான்.

சூனியம் ஹதீஸ் எந்த இறை வசனத்திற்கு முரண்?


ஒருவன் இன்னொருவனை பார்த்து நீ ஒரு பிச்சைக்காரன், தினம் தினம் பிச்சை எடுத்தே உண்கிறாய் என்று குற்றம் சுமத்துகிறான் என்று வைப்போம்.
அதை பார்த்த மூன்றாமவன், அந்த இரண்டாவது நபரை பார்த்து, பார்த்தாயா, உன்னை பற்றி என்ன சொல்கிறான் என்று.. இதனால் அவன் முட்டாள் ஆகி விட்டான், என்கிறான்.

இப்படி சொன்னால் இதன் பொருள் என்ன? யாரெல்லாம் அந்த நபரை பிச்சைக்காரன் என்று சொல்கிறார்களோ அவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று பொருள்.
அப்படி சொன்னவர்கள் முட்டாள்கள் என்றால், அப்படி சொல்வது தவறு, சொல்லப்பட்ட நபர் உண்மையில் பிச்சைக்காரன் இல்லை என்று பொருள் !

ஒருவன் இன்னொருவனை பார்த்து, நீ ஒரு திருடன் என்று சொல்கிறான் என வைப்போம்.
அதை பார்த்த மூன்றாமவன், அந்த இரண்டாவது நபரை பார்த்து, பார்த்தாயா, உன்னை பற்றி என்ன சொல்கிறான் என்று.. இதனால் அவன் மிகப்பெரிய பொய்யன் ஆகி விட்டான், என்கிறான்.

இப்படி சொன்னால் இதன் பொருள் என்ன? யாரெல்லாம் அந்த நபரை திருடன் என்று சொல்கிறார்களோ அவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று பொருள்.
அப்படி சொன்னவர்கள் பொய்யர்கள் என்றால், அப்படி சொல்வது தவறு, சொல்லப்பட்ட நபர் உண்மையில் திருடன் இல்லை என்று பொருள் !

இப்போது 17:47 இல் ஒருவன் நபியை பார்த்து நீர் சூனியம் செய்யப்பட்டவர் என்கிறான். இதை பற்றி அல்லாஹ், நபியை பார்த்து சொல்லும் போது, பார்த்தாயா, உம்மை பார்த்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று? இதனால் அவர்கள் வழி கெட்டவர்கள் ஆகி விட்டார்கள் என்கிறான்.

இப்படி சொன்னால் இதன் பொருள் என்ன? யாரெல்லாம் அந்த மனிதரை சூனியம் செய்யப்பட்டவர் என்று சொல்கிறார்களோ அவர்கள் எல்லாம் வழி கெட்டவர்கள் என்று பொருள்.
அப்படி சொன்னவர்கள் வழி கெட்டவர்கள் என்றால், அப்படி சொல்வது தவறு, சொல்லப்பட்ட நபர் உண்மையில் சூனியம் செய்யப்பட்டவர் இல்லை என்று பொருள் !

பள்ளிக்கூட மாணவன் கூட எளிமையாக புரியும் வண்ணம் அல்லாஹ்வின் வேத வசனம் உள்ளது. எப்பாடுபட்டாவது அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைத்தே தீருவோம் என்று வீம்பு பிடிப்பவர்கள் தவிர, அனைவர்க்கும் இது எளிதில் புரியும்.

மேற்கண்ட ஒரு வசனமே, நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய புஹாரி ஹதீஸை குப்பை கூடைக்கு தள்ள போதுமானதாகும் !

நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டவர்களும் தவறு செய்வார்கள்




இமாம் அஹ்மத் பின் ஹம்பல்

ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளிலும் நுட்பமாக ஆராய்ந்தார்கள். அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கிறார்களே என்பதை மட்டும் அறிஞர்கள் சார்ந்திருக்கவில்லை. நல்ல அறிவிப்பாளர்களையும் கூட ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடவில்லை. ஏனென்றால் நம்பகமானவர் சிலவேளை தவறிழைப்பார். அல்லாஹ் மக்களை இந்த இயற்கையான அடிப்படையில் தான் படைத்திருக்கிறான். எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள், அறிவிப்பாளர்கள் எந்த அறிவிப்புகளில் தவறு செய்தார்களோ அந்த அறிவிப்புகளை ஆராய்ந்தார்கள். இல்மு இலலில் ஹதீஸ் (ஹதீஸில் உள்ள குறைகளைப் பற்றிய கல்வி) என்று இதற்குச் சொல்லப்படும்.
நூல்: அல்இலல், பாகம்: 1, பக்கம்: 20

இமாம் தஹபீ

நம்பகமானவர் சில வேளை சில விஷயங்களில் தவறு செய்வார்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 7, பக்கம்: 208

இமாம் சுயூத்தி

இது சஹீஹான செய்தி என்று சொல்லப்பட்டால் இதன் பொருள் என்னவென்றால் (முன்பு) கூறப்பட்ட தன்மைகளுடன் இதன் தொடர் முழுமை பெற்றுள்ளது என்று தான் அர்த்தம். எனவே அறிவிப்பாளர் தொடரின் வெளிப்படையை வைத்து அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வோம். நல்லவர் கூட மறந்து தவறு செய்ய வாய்ப்புள்ளதால் உண்மையில் இது உறுதி செய்யப்பட்ட விஷயம் தான் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 75

திங்கள், 1 ஜூலை, 2013

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பது விதிவிலக்கா முரணா?





ஈஸா நபி மரணிக்கவில்லை என்பது விதிவிலக்கல்ல, அது குர் ஆனுக்கு முரண் என்று சிலர் வாதம் வைக்கின்றனர்.குர் ஆனில், ஈசா ந பி மரணிக்கவில்லை என்கிற ஆதாரம் எதுவும் இல்லை என்றும்  குர் ஆன் சொல்லாததை ஹதீஸ் சொல்வதால், அந்த ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்கின்றனர்.
மேலும், முஹம்மது நபிக்கு முன் சென்ற எல்லா நபிமார்களும் மரணித்து விட்டனர் என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான். ஆகவே, ஈஸா நபி மரணிக்கவில்லை என்று ஹதீஸ்கள் சொல்வது விதிவிலக்கு என்று கருதக்கூடாது, குர்ஆனுக்கு முரண் என்று தான் கருத வேண்டும் என்று சொல்கின்றனர்.
  
இதே வாதத்தை இவர்கள் உணவு விஷயத்திற்கும் பொருத்துவார்களா?  

தாமாக செத்தவை அனைத்தும் உண்பதற்கு ஹராம் என்பது குர் ஆனின் கட்டளை. (பார்க்க 5:3)

அதே நேரம், 

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)  நூல்கள்: திர்மிதீ 64,
என்கிற ஹதீசானது, கடல் பிராணிகளில் தாமாக செத்தவைகள் கூட ஹலால் என்கிறது.

ஈஸா நபி தொடர்பாக இவர்கள் வைக்கும் வாதத்தை இங்கும் தொடர்புபடுத்தி பார்த்தோமேயானால், குர்ஆன், தாமாக செத்த எந்த பிராணியாக இருந்தாலும் அதற்கு பொதுவான தடையை விதித்திருப்பதால் கடல் பிராணிகள் பற்றி ஹதீஸ் சொல்வது விதிவிலக்கு என்று சொல்லகூடாது, அது குர்ஆனுக்கு முரண் என்று தான் இவர்களும் சொல்ல வேண்டும். 
ஆனால் இவர்கள் கடலில் தாமாக செத்து போகும் மீன்களையும் நண்டுகளையும் தினமும் சாப்பிடத்தான் செய்கிறார்கள். அவ்வாறு சாப்பிடுவதன் மூலம், குர்ஆன் தாமாக செத்தவை பற்றி சொல்லும் கட்டளை பொதுவானது என்றும், கடல் பிராணிகள் பற்றி ஹதீஸ் சொல்வது அந்த குர்ஆன் வசனத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றது என்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆக, எப்படி கடல் பிராணிகளில் தாமாக செத்தவை ஹலால் என்பது குர்ஆனுக்கு முரணில்லையொ அது போல ஈசா நபி மரணிக்கவில்லை, அவர் மீண்டும் வருவார் என்று ஹதீஸ்கள் கூறுவதும் குர்ஆனுக்கு முரணில்லை !
ஈசா நபி மரணிக்கவில்லை என்பதை குர்ஆன் வசனங்களில் இருந்தே நிரூபிக்க முடியும் என்பது தனி விஷயம்.