வியாழன், 21 பிப்ரவரி, 2013

வட்டி கட்டாமல் க்ரெடிட் கார்ட் பயன்படுத்தலாமா??


காலக்கெடு முடிவதற்குள் பணத்தை அடைத்து விடுவோம் என்றால் கிரடிட் கார்ட் பயன்படுத்துவதில் என்ன தவறு என்று சிலர் கேட்கிறார்கள்.


காலக்கெடுவுக்குள் பணத்தை செலுத்தி விட்டால் வட்டி வராது என்பது உண்மை தான். 
ஆனால், க்ரெடிட் கார்ட் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு காரணம் வட்டி செலுத்த வேண்டியுள்ளது என்பதால் மட்டுமல்ல. வட்டி செலுத்தாமல் காலக்கெடுவுக்குள் பணத்தை செலுத்தி கொண்டே வருவதாக இருந்தாலும் கூட இது தடுக்கப்பட்டது தான்.

இதற்கு காரணம், இஸ்லாம் கடன் வாங்குவதை மிகவும் கடுமையான முறையில் பார்க்கிறது.. மிக நெருக்கடியான நிலை இருந்தாலே தவிர, நாம் கடன் வாங்க கூடாது.
அப்படியே கடன் வாங்கி விட்டால் அதை திருப்பி செலுத்துவதில் நாம் மிகவும் முனைப்பு காட்ட வேண்டும்.

ஒரு முறை ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறது, அவர் கடனாளியாக மரணித்திருக்கிறார் என்று அறிந்த உடன், இவர் நாளை பாவியாக எழுவார் என்பதால் நான் இவருக்கு பவ மன்னிப்பு கேட்கும் வகையில் ஜனாசா தொழுகை கூட தொழ மாட்டேன் என்று கூறி விட்டார்கள் நபி (ஸல்) அவர்கள். பார்க்க புஹாரி 2295

அதாவது, கடனாளியாக நாம்  மரணித்தால், நமது கடனை தள்ளுபடி செய்து நம்மை மன்னிப்பதற்கு கடன் தந்தவர் தயாராகவில்லை என்றால்  நாளை மறுமையில், நமது நல்லமல்கள் அனைத்தும் அந்த கடன் கொடுத்தவருக்கே தந்து விட வேண்டிய துர்பாக்கியமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.!

இதுவெல்லாம், உயிர் போகிற அவசரத்திற்கு கடன் வாங்குவோரின் நிலை பற்றிய செய்திகள்.
ஆனால் இன்றைக்கு க்ரெடிட் கார்ட் மூலம் உயிர் போகின்ற அவசரங்களுக்கா கடன் பெறுகிறோம்?? இல்லவே இல்லை. கோடீஸ்வரனும் கூட க்ரெடிட் கார்ட் பயன்படுத்துகிறான். தனது மணி பர்சில் கட்டுகட்டாக பணத்தை வைத்திருப்பவன் கூட, அதை கொடுத்து பொருளை வாங்காமல், நமக்கு தான் இந்த அட்டை இருக்கிறதே, என்று எண்ணி, அதை வைத்து பொருட்களை வாங்கி செல்கிறான். 

ஏழைகள் கடனை வாங்கி திருப்பி செலுத்தாமல் இறந்தால் அவர்களையே அல்லாஹ் மன்னிக்க மாட்டான் எனும் போது செல்வந்தர்கள் இந்த விஷயத்தில் எந்த அளவிற்கு அச்சத்துடன் செயல்பட வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், செல்வந்தர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தவணை கேட்டு இழுத்தடிப்பது அநியாயமாகும்.
புஹாரி 2287

ஆக, எந்த காரியத்தில் இஸ்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி நம்மை எவுகிறதோ, 
அதை மிகவும் சாதாரணமான ஒன்றாகவும், எந்த முக்கியத்துவமும் அற்றதாகவும் ஆக்கும் மாபாதக செயலை செய்யும்படி இந்த க்ரெடிட் கார்ட் மோகம் நம்மை தூண்டுகிறது. 

இன்னும் சொல்லப்போனால், நமது நண்பரிடமோ உறவினரிடமோ நாம் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் நாம் மரணித்து விட்டால், நம் மீது கொண்ட அன்பின் காரணமாக அந்த கடனை அவர் தள்ளுபடி செய்து விட வாய்ப்புள்ளது.  
அதுவே க்ரெடிட் கார்ட் மூலம் கடன் பெற்று அதை திருப்பி செலுத்துவதற்கு முன் நாம் மரணித்து விட்டோம் என்றால் கடன் தந்த வங்கி நம்மை மன்னித்து விடும் என்பதற்கு ஏதேனும் உத்திரவாதம் உள்ளதா??  நிச்சயம் இல்லை !!!

அந்த வங்கிக்காரன் காபிராகவே இருந்தாலும் கூட, நாளை மறுமையில், அவனுக்கும் அல்லாஹ் நீதி வழங்குவானே, அந்த நீதி, நமது நல்லமல்கள் எல்லாம் வீணாகி போகின்ற அளவிற்கு அமையுமே? என்பதையெல்லாம் நாம் சிந்தித்து பார்த்து இதிலிருந்து முற்றிலுமாக விலகி கொள்ள வேண்டும்.

மேலும், இன்னொரு கோணத்தில் சிந்தித்தாலும் இந்த க்ரெடிட் கார் என்பது தவிர்க்க பட வேண்டிய ஒன்று தான் என்பதை புரியலாம்.

க்ரெடிட் கார்ட் வியாபாரத்தை செய்கிற வங்கிகள், நுகர்வோரை கைவசம் வைத்துக்கொள்வதற்கு பல வகையான யுக்திகளை கையாண்டு வருகிறது. 

முன் பணம் ஏதும் அவசியமில்லை என்பார்கள், தங்கள் வங்கியில் கணக்குகள் ஏதும் நம் பெயரில் உருவாக்க வேண்டியதில்லை என்பார்கள்.
அந்த வரிசையில் தான், பணத்தை திருப்பி செலுத்துவதற்கு அவர்கள் தருகிற காலக்கெடுவும். ஒரு மாதம் கழித்து பணம் கட்டினால் போதும் என்று ஒரு வங்கி சொன்னால் இன்னொரு வங்கி, இரண்டு மாதம் என்று சலுகை தரும்.

இது போன்ற சலுகைகளை அவர்கள் தருவதினுடைய நோக்கம் என்ன என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காலக்கெடுவை நீட்டி தரும் போது ஒரு சராசரி மனிதனை இன்னும் அதிகமாக பொருட்கள் வாங்கிக்கொள்வதற்கு அதுவே ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும். 

அவர்கள் தந்துள்ள காலக்கெடுவிற்குள் நாம் பணத்தை திருப்பி செலுத்தி விட்டோமேயானால் நாம் செலவு செய்த பணத்தை மட்டும் கட்டினால் போதும். அதுவே கெடு முடிந்து கட்டுகிறோம் என்றால் நாம் செலவு செய்த பணத்துடன், கூடுதல் பணத்தை அபராதம் என்று கூறி செலுத்த வேண்டும். இந்த அபராதப்பணம் என்பது வட்டி.

இந்த வட்டியை நாம் கட்டினால் தான் க்ரெடிட் கார்ட் வியாபாரம் செய்கிற வங்கிக்கு இலாபம். அபராதம் இன்றி, குறித்த நேரத்திற்குள் நாம் பணத்தை கட்டிக்கொண்டே இருந்தால் வங்கிக்கு எந்த லாபமும் இல்லை. 

நாம் செலுத்தும் வட்டி தான் அவனுக்கு கிடைக்கும் லாபம் எனும் போது இத்தகைய வட்டியை லாபமாக எதிர்பார்க்கும் ஒரு வியாபாரத்திற்கு நாம் துணை நிற்கலாமா?? என்று சிந்தித்தாலும் இது அறவே தவிர்க்கப்பட வேண்டிய ஒரு காரியம் என்பதை விளங்கலாம்.

இது எனது புரிதல் மட்டுமே, தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக