சூனியம் என்பது வெறும் தந்திர வித்தை தானே தவிர அது புற சாதனங்கள் ஏதும் இன்றி நிகழ்த்தப்படும் அற்புதம் கிடையாது என்கிற உண்மையை நாம் பிரசாரம் செய்து வருகிறோம். சில ஹதீஸ்கள் இந்த கருத்துக்கு மாற்றமாக இருந்தாலும் குர் ஆனின் உறுதியான நிலை இது தான் என்பதால் அத்தகைய ஹதீஸ்களை நிறுத்தி வைத்து, குர் ஆனுக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி வருகிறோம்.
இந்நிலையில், சூனியம் தொடர்பாக குர்ஆன் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை சுருக்கமாக தொகுப்பது அனைவருக்கும் பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.
முதலில், சூனியம் என்பது அற்புதம் தான் என்று சொல்பவர்கள் குர் ஆனில் இருந்தே எடுத்து காட்டும் ஆதாரம் 2:102 வசனம் தான்.
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றி னார்கள். (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்பட வில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். 'நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததை யும் கற்றுக் கொண்டார்கள். 'இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (2:102)
மேற்கண்ட வசனத்தில் அவர்கள் முதலில் எடுத்து வைக்கும் வாதமானது, ஹாரூத் மாரூத் என்பவர்கள் ஷைத்தான்கள் அல்ல, அவர்கள் மலக்குகள் தான் என்பதாகும்.
இது அந்த வசனத்தின் இலக்கண நடைபடியும் தவறு என்றாலும் அதை விட, இந்த வாதம் இஸ்லாத்தின் நம்பிக்கையையே ஆட்டம் காண செய்வதாகும்.
மலக்குகள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுபவர்கள், அல்லாஹ்வுக்கு பொருத்தமில்லாத எந்த காரியங்களிலும் ஈடு பட மாட்டார்கள் என்று அல்லாஹ் வேறு பல வசனங்களில் சொல்கிறான். (பார்க்க 66:6 , 21:26)
இல்லை, இதை அல்லாஹ்வே மலக்குகளிடம் கட்டளையிட்டிருக்கலாம் அல்லவா? என்று சிலருக்கு கேள்வி எழும். அதவும் தவறான வாதம் தான்.
அல்லாஹ் ஒருவன் தான், அவனுக்கு நிகராக எவருமே உலகில் இல்லை என்பதையே தனது முக்கிய அறிவுரையாக அல்லாஹ் குர்ஆன் நெடுகிலும் கூறி வருகிறான், இணை வைப்புக்கு எதிரிகளிடம் எந்த ஆதாரமும் இருக்காது என்றும் அல்லாஹ் சொல்கிறான். அப்படி குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ்வே சொல்லி விட்டு, அதற்கு மாற்றமாக மலக்கை விட்டு ஷிர்க்கையே அல்லாஹ் ஏவுவானா?? என்கிற ரீதியில் சிந்தித்தால், அல்லாஹ் ஏவியிருப்பான் என்று கூறுவதும் அல்லாஹ்வுக்கு எதிரான யுத்தம் தான் என்பதை விளங்கலாம்.
இனியும் அல்லாஹ் தான் ஏவினான் என்று இவர்கள் கூற வருவார்கள் என்றால், அந்த வசனத்தின் மொழி அமைப்பே இவர்களுக்கு அடுத்த பதிலை சொல்கிறது.
அந்த வசனத்தில் அல்லாஹ் சொல்வது என்ன? இவர்கள் மொழியாக்கத்தின் படியே அல்லாஹ் சொல்வது என்ன?? சுலைமான் நபி அல்லாஹ்வை மறுக்கவில்லை..சூனியத்தை கொண்டு வந்த மலக்குமார்கள் தான் மறுத்தார்கள்.. என்று பொருளாகிறது. இது சரியான அர்த்தமாக வருமா??
சுலைமான் நபி எப்படி அல்லாஹ்வுக்கு கட்டுப்படுபவர்களோ அதை விடவும் அதிகமாக மலக்குமார்கள் கட்டுப்படுபவர்கள். ஆனால் இவர்களின் மொழியாக்கத்தின் படி மலக்குமார்கள் என்றால் சுலைமான் நபிக்கு எதிரானவர்கள் என்கிற கருத்து தான் மிஞ்சுகிறது.
ஹாரூத் மாரூத் என்பது மலக்குகள் அல்ல, அவர்கள் மனித உருவில் வந்த ஷைத்தான்கள் தான் என்பதை இன்னும் ஏராளமான சான்றுகளுடனும், இலக்கண ரீதியிலும், வேறு வேறு இறை வசனங்களின் நடையுடன் ஒப்பீடு செய்தும் தெளிவாக அறிந்து கொள்ள இந்த ஆக்கத்தின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள கட்டுரையை வாசிக்கவும் .
அடுத்ததாக, இந்த வசனத்தில் இருந்து இவர்கள் வைக்கும் வாதம், கணவன் மனைவியை பிரிப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அதற்கு மிகப்பெரிய அற்புதங்கள் செய்ய வேண்டும் அதை தான் இந்த வசனம் சொல்கிறது என்கிறார்கள்.
இந்த வாதம் இவர்களது கொள்கைக்கே முரணாக தான் நிற்கிறது. கணவன் மனைவியை பிரிப்பதற்கு என்ன வேலையை செய்ய வேண்டுமோ அதை செய்வது தான் சூனியம் என்பதில் இருந்தே சூனியம் என்பது, மாய மந்திரங்கள், என்றோ அல்லது இங்கிருந்தே கொண்டே வெளியூரில் உள்ளவனின் கை கால்களை முடக்கி விடும் சக்தி கொண்டது, இங்கிருந்து கொண்டே வேறு நபரை எந்த தொடர்பும் இல்லாமல் இயக்கவல்லது, என்றெல்லாம் சொல்லப்படும் வாதங்கள் இவர்கள் வாயாலேயே நொறுங்கி விட்டன.
இவர்களே ஒப்புக்கொண்டுள்ள படி, சூனியம் என்பதினுடைய அதிகபட்ச ஆற்றல் என்பது கணவன் மனைவியை பிரிப்பது தான். சாதாரண கோள் மூட்டி இருவரிடையே மனக்கசப்பை உண்டாக்கலாம்..
இன்னும் கொஞ்சம் தேர்ந்த நபர் நமக்கு சொல்லி தரும் போது நிரந்தரமாகவே பிரித்து விடலாம்.
இது ஒரு ஷைத்தானிய செயல். நமது மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்கள் ஷைத்தானின் தூண்டுதல். எப்படி செய்தால் சரியான முறையில் பேசி கணவனையும் மனைவியையும் ஏமாற்றலாம் என்கிற வித்தை ஷைத்தானால் நமக்கு உள்ளத்தில் போடப்படுகிறது.. இதை தான் இந்த வசனம் சொல்கிறது, இதற்கும், எந்த புற சாதனங்களும் இல்லாமல் இங்கிருந்து கொண்டே ஒருவனது கைகளை முடக்கலாம் என்பதற்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா??
அடுத்ததாக, இவர்கள் இந்த வசனத்தில் இருந்து வைக்கும் வாதம், இதை கற்று இறைவனை மறுத்து விடாதே என்று அல்லாஹ் சொல்கிறான். சூனியம் என்பது அல்லாஹ்வுக்கு இணையான காரியம் என்பதால் தான் இதை அல்லாஹ் சொல்கிறான்
கணவன் மனைவி இடையே கோள் மொத்துவது தான் சூனியம் என்றால் கோள் மூட்டுவது அந்த அளவிற்கு பாரதூரமான காரியமா? என்று கேட்கிறார்கள்.
இது இவர்களது முந்தைய வாதத்திற்கே முரணாக உள்ளது.
அல்லாஹ் தான் சூனியத்தை ஏவினான் என்று முதலில் சொன்னார்கள்.. அதுவும் பரிசுத்த மலக்குமார்கள் மூலமாக அதை ஏவி, அந்த மலக்குமார்களே அல்லாஹ்வை மறுத்து விட்டனர் என்றார்கள்..
அப்படி சூனியத்தை அல்லாஹ்வே ஏவி விட்டு, இதை நம்பி விடாதே என்று அல்லாஹ் சொல்வானா? என்று சிந்திக்கையில் இதுவும் தவறான வாதம் என்று புரிகிறது.
ஒரு விஷயத்தை நம்பாதே, நம்பினால் அது இறை நிராகரிப்பு என்று அல்லாஹ் சொன்னால் அதற்கு அது தான் பொருள். அது எந்த விஷயமானாலும் அல்லாஹ் சொல்லி விட்டால் அது இறை நிராகரிப்பு தான். இப்படி நம்புவது தான் நமது ஈமானுக்கு பாதுகாப்பானது.
வெறும் கோள் மூட்டுவதால் அதை இறை நிராகரிப்பு என்று அல்லாஹ் சொல்லவில்லை, நன்றாக விளங்கி கொள்ளுங்கள். அல்லாஹ் இதை இறை நிராகரிப்பு என்று சொல்வதற்கு காரணம், கணவன் மனைவி இடையே கோள் மூட்டும் இந்த காரியத்தை ஷைத்தான்களிடம் இருந்து கற்று, ஷைத்தானின் வார்த்தையை சரி என்று நம்பியதால் இறை நிராகரிப்பு என்கிறான்.
சுலைமான் நபி அல்லாஹ்வை மறுக்கவில்லை. அதற்கு மாற்றமாக, அல்லாஹ்வை யார் மறுத்தார்களோ அவர்களின் கூற்றை நம்பி செயல்பட்டதால் அதை இறை நிராகரிப்பு என்று அல்லாஹ் சொல்கிறான்.
இன்னும் சொல்லப்போனால் ஷைத்தானின் காரியங்களிலேயே மிகவும் பெருமைக்குரிய காரியமாக அவன் கருதுவது கணவன் மனைவி இடையே பிரிவினையை உருவாக்குவது தான். இதற்கு பல ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.
(பார்க்க முஸ்லிம் 5419)
அந்த வகையில் சிந்தித்தாலும், எந்த காரியம் ஷைத்தானுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றோ, அதை அவன் ஒருவனிடத்தில் ஏவி, ஏவப்பட்டவன் அதை நம்பிக்கை கொண்டு விட்டால் அவன் ஷைத்தானை நம்பி அல்லாஹ்வை நிரகாரித்தவன் ஆகிறான்.
ஆகவே வெறுமானே கோள் மூட்டுவது இறை நிராகரிப்பு ஆகி விடுமா? என்கிற இவர்களது கேள்வியும் அர்த்தமற்றது ஆகி விட்டது.
அடுத்ததாக இந்த வசனத்திலிருந்து இவர்கள் வைக்கும் இன்னொரு வாதம், அல்லாஹ் நாடாமல் இந்த சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான்.
இதன் மூலம், சூனியம் என்பது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும் என்று நம்ப வேண்டும் என்கிறார்கள்.
இதுவும் நுனிப்போல் மேய்வதால் வெளிப்படக்கூடிய சிந்தனை தான்.
அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றால் சூனியம் என்கிற ஒன்றே இல்லை என்பதற்கு தான் அது சான்று !!!
சூனியம் என்பதே பொய், அது ஒரு கற்பனை, அதனால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது என்கிற செய்தியை சொல்வதற்கு அல்லாஹ் அருளிய வசனத்தை எப்படி அல்லாஹ்விடமே திருப்பி விடுகிறார்கள் பாருங்கள் இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக யுத்தம் செய்பவர்கள் அல்லாமல் வேறு யார்???
ஒரு உதாரணத்தை பார்ப்போமே. பூனை குறிக்கே சென்றால் சகுனம் சரியில்லை, அன்று உனக்கு ஏதேனும் துர்பாக்கியம் நிகழும் என்று ஒருவர் சொல்கிறார். அவருக்கு பதில் சொல்கிற நாம், அட முட்டாளே இப்படி எல்லாம் நம்பாதே, உனக்கு அல்லாஹ் நாடியதை தவிர வேறு எதுவும் யாராலும் செய்ய முடியாது என்று நம்பு.. என்று சொன்னால் இதன் பொருள் என்ன?
பூனை குறுக்கே செல்வதற்கும் உனக்கு துர்பாக்கியங்கள் நிகழ்வதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பொருளாகுமா?? அல்லது அல்லாஹ் நாடினால் பூனை குறிக்கே செல்வதன் மூலம் உனக்கு துர்பாக்கியம் ஏற்படும் என்று பொருளாகுமா???
அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் வாதம் வைப்பவர்கள் தான இந்த சூனியத்தை நம்பிய முஷ்ரிக்குகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
சரி, இது தான் இவர்கள் வாதம் என்றால், குர் ஆனில் வரக்கூடிய இன்னொரு வசனத்தை இதே போல இவர்கள் பொருள் செய்வார்களா??
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். 'அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?' (6:80)
இந்த வசனத்தில், சிலை வணங்கிகள் இப்ராஹீம் நபியிடத்தில் தங்கள் சிலைகளை அவர்கள் உடைத்ததால் ஆத்திரப்பட்டு இந்த சிலை உமக்கு தீங்கு செய்யும் என்று கூறினார்கள். அதற்கு மறுப்பு சொன்ன இப்ராஹிம் நபி, இந்த சிலை ஒன்றும் எனக்கு தீங்கு செய்யாது, என் இறைவன் நாடினாலே தவிர எதுவும் எனக்கு தீங்கீழைக்காது என்று சொன்னார்கள்.
இந்த வசனத்தின் படி, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அதனால் இப்ராகிம் நபிக்கு தீங்கிழைக்க முடியாது என்று இவர்கள் சொல்வார்களா? அல்லது அல்லாஹ் நாடினால் சிலைகள் தீங்கு செய்யும் என்கிற கருத்து வரும் என்று கூறுவார்களா??
ஆக, எந்த வகையிலும் சூனியம் என்பது மாய மந்திரங்கள் தான் என்பதற்கு இவர்கள் வைக்கும் வாதங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்பதை விளங்கலாம்.
அப்படியானால் அந்த வசனத்தின் உண்மையான பொருள் தான் என்ன?
2:102 வசனம் சொல்வது சூனியம் என்கிற ஒன்று உள்ளது, அதன் மூலம் கணவன் மனைவியை பிரிக்கலாம். அதாவது, கணவன் மனைவியை பிரிப்பதற்கு பொய்யை கூட உண்மை போல அழகாக பேசும் தந்திர வித்தை தான் இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிற சூனியம் என்பது.
பேச்சில் கூட சூனியம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புஹாரி 5146 இல் பதிவாகியுள்ளது.
பேச்சின் நளினத்தை கொண்டு யாரையும் ஏமாற்றலாம், பொய்களை உண்மையை போல் சொல்லி அவரை வென்றெடுக்கலாம்.. இந்த வகை சூனியத்தை தான் உச்சபட்சமாக ஒருவனால் செய்ய முடியும்.இவ்வாறு பொய்யை உண்மை போல காட்டி கணவன் மனைவியை பிரித்தால் அது அல்லாஹ்விடம் கடும் குற்றம்..
இது அல்லாமல், சூனியம் என்றால் எந்த புற சாதனங்களும் இன்றி இன்னொருவரை செயல் இழக்க வைக்கலாம் என்று நம்புவதையோ, எந்த துணையும் இல்லாமல் மந்திரத்தில் ஒருவரை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்படைய செய்ய முடியும் என்று சொல்வதையோ இந்த வசனம் திட்ட வட்டமாக மறுக்கிறது.
சூனியம் என்று இவர்கள் சொல்கிற ஒன்றை தெளிவாக மறுக்கும் வசனத்தை தங்களுக்கு சாதகமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் இந்த நுனிப்புல் ஆய்வாளர்கள்.
அடுத்ததாக சூனியம் தொடர்பாக இவர்கள் இன்னொரு அற்புத (?) கேள்வியையும் கேட்கின்றனர். அதாவது, சூனியம் என்பதே கிடையாது என்று சொன்னால், சூனியம் பெரும்பாவம் என்றெல்லாம் ஹதீஸ்களில் வருகின்றதே, அவற்றுக்கு என்ன பொருள்?? இல்லாத ஒரு விஷயம் எப்படி பெரும்பாவம் ஆகும்?? என்று கேள்வி எழுப்புகிறார்கள்..
இதுவும் அடிப்படையற்ற ஒரு வாதமாகும். சூனியம் என்கிற ஒன்றே கிடையாது என்று யாரும் சொல்லவில்லை. சூனியம் என்பது உண்டு, அது ஒரு தந்திர வித்தை தானே தவிர மாய மந்திரங்கள் இல்லை என்பது தான் நமது வாதம். பேச்சு கூட சூனியம் என்று நபி சொல்லித்தான் இருக்கிறார்கள், கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுத்துவதற்கு கூட சூனியம் பயன்படும் என்று அல்லாஹ்வே சொல்கிறான். எனும் போது சூனியம் என்கிற ஒன்றே கிடையாது என்று எந்த முஸ்லிமாவது சொல்வானா???
சூனியம் என்பது உண்டு ஆனால் இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் உள்ள சூனியம் அல்ல. மாய மந்திரங்கள், அற்புதங்கள் என்கிற அர்த்தத்தில் சூனியம் என்பது உலகில் இல்லை, கியாமத் நாள் வரை அதை காட்ட இயலாது.
அதே சமயம், தந்திரங்கள் செய்து ஒருவரை ஏமாற்றுகிறோமே, அத்தகைய வித்தைகள் உண்டா? என்றால் உண்டு. அப்படிப்பட்ட வித்தைகளை வெறும் தந்திரம் என்று சொல்லி செய்யாமல் அற்புதங்கள் என்று சொல்லி ஒருவன் செய்தால் அது மிகப்பெரிய பாவம் என்று தான் ஹதீஸ்களில் சொல்லப்படுகின்றன.
சூனியம் தொடர்பாக குர் ஆனில் இன்னும் ஏராளமான இடங்களில் அல்லாஹ் பேசுகிறான்.. அந்த வசனங்களின் பொருள் என்பதையும் நாம் தெரிந்து கொண்டால் மேலே நாம் விளக்கியவைகள் இன்னும் தெளிவாகும்.
மூஸா நபியின் வரலாற்றை அல்லாஹ் குர் ஆன் நெடுகிலும் விளக்கியுள்ளான்.. அதில் மூசா நபிக்கு பல அற்புதங்களை அல்லாஹ் வழங்கியிருந்ததையும் அவர்களை எதிர்த்த பிர்அவ்ன் கூட்டத்தார் அதை முறியடிப்பதற்கு சூனியம் செய்ததாகவும் அல்லாஹ் பல்வேறு வசனங்களில் கூறுகிறான்.
ஆனால், சூனியம் என்று அல்லாஹ் பயன்படுத்திய எல்லா வசனங்களிலும் அது ஒரு கண் கட்டி வித்தை என்கிற அர்த்தத்தில் தான் அல்லாஹ் பேசுகிறான்.
மூஸா நபி அற்புதங்கள் செய்ததை பற்றி அல்லாஹ் சொல்வதையும் அவருக்கு எதிரான சூனியக்காரர்கள் செய்ததை பற்றி அல்லாஹ் சொல்வதையும் ஒப்பீடு செய்து பார்த்தாலே சூனியம் என்பதன் பொருள் என்ன என்பதை விளங்கி கொள்ளலாம்.
மூஸா நபி கைதடியை கீழே போட்டார்கள்.. அது பாம்பாக மாறியது என்று அல்லாஹ் 7:107 வசனத்தில் சொல்கிறான்.
மூஸா நபிக்கு போட்டியாக களம் இறங்கிய எதிரிகள் செய்த சூனியத்தை பற்றி அல்லாஹ் சொல்லும் போது
அவர்கள் கைதடியை இட்டது பாம்பு போல தோற்றமளித்தது என்று 20:66 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
மூஸா நபியின் எதிரிகள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று 7:116 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
அதாவது, மூஸா நபி செய்தது, உண்மையில் நடந்ததாக சொன்ன அல்லாஹ், அவர்களது எதிரிகள் செய்ததை பற்றி சொல்கிற போது அது அவ்வாறு தோற்றமளித்தது, கண்களை ஏமாற்றியது என்கிற வார்த்தைகளை தான் உபயோகிக்கிறான்.. இதிலிருந்தே, சூனியக்காரர்கள் கண் கட்டி வித்தை தான் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
மேலும், மூசா நபி அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்கு எதிரிகள் பயன்படுத்தியதும் இதே சூனியம் என்கிற வாசகத்தை தான்.
பார்க்க 28:36
சூனியம் என்பது உண்மையிலேயே மிகப்பெரிய அற்புத காரியம் என்று இருக்குமானால் ஒரு நபி செய்த அற்புதத்தை மறுப்பதற்கு சூனியம் என்கிற வார்த்தையை எதிரிகள் பயன்படுத்தியிருப்பார்களா?? நிச்சயம் மாட்டார்கள். காரணம், அற்புதத்தை அற்புதமில்லை என்று நிரூபிப்பது தான் அவர்களது நோக்கம். சூனியம் என்றாலே அற்புத செயல் என்பது தான் பொருள் என்றால் அதை சொல்லி மூஸா நபியின் செயலை விமர்சிப்பது அவர்கள் செய்ததை மறுப்பது போல் ஆகாது, மாறாக அற்புதம் தான் என்று ஒப்புக்கொள்வது போல தான ஆகும்.
இன்னும் தெளிவாக, இறைவான் புறத்தில் இருந்து தரப்பட்ட இந்த அற்புதத்தை எதிரிகள் சூனியம் என்று கூறி மறுத்த போது மூசா நபி அவர்களுக்கு சொன்ன பதில், இந்த கருத்தை இன்னும் உறுதி செய்கிறது.
மூஸா நபி அவர்களுக்கு பதில் சொல்லும் போது உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதை சிஹ்ர் (சூனியம்) என்கிறீர்களா?? என்று கேட்கிறார்கள். பார்க்க 10:77
இந்த வசனம் நமக்கு எதை உணர்த்துகிறது? மூஸா நபி செய்தது உண்மையான அற்புதம். அதை மறுக்க எதிரிகள் அதை சூனியம் என்றார்கள்.. அதற்கு தான் மூசா நபி கேட்கிறார்கள், நான் உண்மையை காட்டுகிறேன் நீங்கள் சூனியம் என்கிறீர்களா?? என்று. அதாவது, இந்த இடத்தில உண்மைக்கு எதிர்பதம் சூனியம்.
அல்லாஹ்வின் புறத்தில் நிகழ்த்தப்பட்ட அற்புதம் உண்மை ! அதை மறுத்து, அது வெறும் சூனியம் என்று சொல்வது பொய்!
அதற்கு போட்டியாக எதிரிகள் செய்த சூனியமும் பொய் !!
இன்னும் சொல்லப்போனால், எல்லா நபிமார்களையும் எதிரிகள் சூனியக்காரர்கள் என்று கூறியே விமர்சனம் செய்தார்கள்.
மூஸா நபியை சூனியக்காரர் என்று சொன்னார்கள் 48:24
ஈசா நபியை சூனியக்காரர் என்று சொன்னார்கள் 61:6
முஹம்மது நபியை சூனியக்காரர் என்று சொன்னார்கள் 10:2
இன்னும் ஏராளமான வசனங்களில் நபிமார்களை எதிரிகள் சூனியக்காரர் என்றே விமர்சனம் செய்தனர். சூனியம் என்பது உண்மையில் செய்ய இயன்ற மிகப்பெரிய அற்புத காரியம் என்று இருக்குமானால் இந்த வார்த்தையை பயன்படுத்தி நபிமார்களை அவர்கள் விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள்.
குர் ஆனை கொண்டு அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்ட போதும் கூட, இவர் சூனியக்காரர் என்று தான் அவர்கள் கூறினார்கள் என்றால், நீ குர்ஆனை மிகப்பெரிய அற்புதமாக காட்டுகிறாய், அது அற்புதமெல்லாம் இல்லை, ஏதோ தந்திர வித்தை தான் செய்கிறாய் நீ, என்று அவர்கள் சொல்லி குர் ஆனை நிராகரித்தார்கள் என்பது தான் இதன் மூலம் நாம் புரிய வேண்டிய விஷயம்.
சிலர், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்களை ஏற்கலாமா? என்று கேட்கிறார்கள்.
நிச்சயமாக ஏற்க கூடாது. சூனியத்தை நம்புவது என்பது மிகப்பெரிய பாவம் என்றும் அது எந்த வகையிலும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் , நன்மையையும் தீங்கும் அல்லாஹ்வின் புறத்தில் இருந்தே மட்டும் தான் வரும் என்றும் அல்லாஹ் குர் ஆனில் தெளிவாக சொல்லியுள்ள போது அதற்கு முரணான செய்திகள் ஒரு சில ஹதீஸ்களில் வருமானால் அந்த ஹதீஸ்களில் ஏதேனும் தவறுகள் நடந்திருக்கும் என்று கருதி அவற்றை நிறுத்தி வைத்து குர் ஆனை தான் நாம் மேன்மைப்படுத்த வேண்டும்.
சூனியத்தால் (புற சாதனங்கள் இன்றி செய்யப்படும் மாய மந்திரங்கள் மூலம் ) மனிதனுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது என்று அல்லாஹ் பல்வேறு இடங்களில் கூறுகிறான்.
அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. 2:102
என்று அல்லாஹ் சொல்வதில் இருந்தே, சூனியத்தால் யாருக்கும் எந்த தீங்கையும் ஏற்படுத்த இயலாது என்று புரியலாம்.
யாருக்குமே சூனியம் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, நபிக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்வது எந்த வகையிலாவது சரியா? என்பதை சிந்தித்து பார்கையில் இது அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்யும் போக்கு தான் என்பதை புரியலாம்.
இன்னும் சொல்லப்போனால், முகமது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவேயில்லை என்று தெள்ள தெளிவான வார்த்தைகளை கொண்டு அல்லாஹ் குர் ஆனில் அறிவிப்பும் செய்து விட்டான்.
முகமது நபி சூனியம் செய்பவர் தான் என்று எதிரிகள் கூறியது போல அவர்களுக்கு வேறு யாரோ சூனியம் செய்திருக்க வேண்டும் எனவும் எதிரிகள் கூறினார்கள்.
நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்' என்று அவர்கள் கூறினர். 26:153
அதாவது, புஹாரியில் வரக்கூடிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று இன்றைக்கு சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் சொல்கிறார்களே, குர் ஆனை மறுத்து, நபி (ஸல்) அவர்கள் இழிவுப்படுத்தப்பட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு புஹாரி இமாம் தான் முக்கியம் என்று கூறுகிறார்களே, அதே போன்று, நபி (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைக்கத்தான் செய்தார், அவர் (முகமது நபி) சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் தான் என்று அன்றைய இஸ்லாமிய எதிரிகளும் சொன்னார்கள் என்று அல்லாஹ் மேலே உள்ள வசனத்தில் சொல்லி காட்டுகிறான்.
இதற்கு பதிலை அல்லாஹ் வேறு வசனங்களில் விளக்கியும் விடுகிறான்.
அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?' என்றும் 'சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது. (25:8, 9)
என்று அல்லாஹ் சொல்லி, முகமது நபிக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் அனைவருமே வழிகேடர்கள் என்று தெளிவாக அறிவித்து விட்டான்.
வேறொரு வசனத்தை பாருங்கள்.
சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.
உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள்' என்று கவனிப்பீராக! இதனால் அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.
(17:47,48)
அதாவது, நபி (ஸல்) அவர்களை பொய்யர், ஏமாற்றுபவர் என்றெல்லாம் சொன்ன போது அதற்கு பதில் அளிக்காத இறைவன்,, நபிக்கு சூனியம் செய்யப்பட்டது என்று சொன்ன போது கோபம் கொள்கிறான். உம்மை எத்தகைய உதாரணத்தை கொண்டு இவர்கள் பேசுகிறார்கள் பார்த்தீர்களா?? இவர்கள் தான் வழி கெட்ட கூட்டத்தார். இதை மாற்றிக்கொள்ளாதவரை இவர்களால் நேர்வழியை அடையவே முடியாது என்று மிக தெளிவான முறையில் அல்லாஹ் பிரகடனப்படுதுகிறான்.
மேலே தரப்பட்ட விளக்கங்கள் அனைத்துமே மிகவும் குறைவான சுருக்கமான விளக்கங்கள் தான்.
சூனியம் தொடர்பான அனைத்து செய்திகளையும் விரிவாக அறியவும், நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்களை பற்றி அறியவும், குர் ஆனுக்கு முரணாக இருக்க கூடிய ஹதீஸ்களை மறுப்பது பற்றிய நிலைபாடுகளை தெளிவாக அறிந்து கொள்ளவும் கீழ்காணும் ஆய்வு கட்டுரைகளை படிக்கவும்.
சூனியத்தால் என்ன செய்ய முடியும்?
http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/suniyathal_enna_seyya_mudiyum/
இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
http://onlinepj.com/books/billi-soonoyam/
சூனியம் ஒரு ஆய்வு
http://onlinepj.com/aayvukal/sihr_9/
நபிகள் நாயகத்திற்கு சூனியம் செய்யபட்டது உண்மையா?
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/
சூனியம் என்று இவர்கள் சொல்வது வெறும் கற்பனையே
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/182-sooniyam-karpanaiye/
சூனியம் என்பது வெறும் தந்திரம் தான்
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/285/
சூனியம் வதமும் எதிர்வாதமும் (கேள்வி பதில்)
http://onlinepj.com/bayan-video/vivathangal/soonoyam_vathamum_ethirvathamum/
சூனியம் மறுப்புக்கு மறுப்பு
http://onlinepj.com/aayvukal/suniyam_marupuku_maruppu/
ஹாரூத் மாரூத் மலக்குகளா அல்லது ஷைத்தான்களா?
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/395/
ஹதீஸ்கள் குர் ஆணுக்கு முரண்படுமா? - ஆய்வு நூல்
http://onlinepj.com/books/hadith_kuranirku_muranpaduma/