வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 821/09/2012அஸ்ஸலாமு அலைக்கும்..

படிப்பதற்கு எளிதாக, ஒவ்வொரு வாதங்களையும் தனி தலைப்பிட்டு இங்கே தந்துள்ளேன்.

உயர்த்தினான் என்பதற்கும், தொடர்ந்து அல்லாஹ்வின் வல்லமை பற்றி சொன்னதற்கும், என்னளவில் உயர்த்தினான் என்று சொல்வதற்கும் இலக்கண ரீதியிலும் அந்த வசனத்திற்கு பொருந்துகிற வகையிலும் அடுக்கடுக்காக நான் பல காரணங்களை சொல்லி விளக்கியிருக்கிறேன். எனது விளக்கங்கள் அனைத்தையும் எப்படியாவது மறுத்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மறுத்து வருகிறீர்கள். இதை இரண்டு வாய்ப்புகளுக்கு முன்பு நானே சொல்லியிருந்தேன். வேடிக்கை , அதை இப்போது நீங்களே ஒப்புக்கொண்டும் விட்டீர்கள். 

உயர்த்தினான், கைப்பற்றினான் என்பவைகளை குறித்து நீங்கள் வைக்கும் வாதங்களை மறுக்க வேண்டும் என்று தான் மறுத்து கொண்டிருக்கிறேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 

என்று கூறியுள்ளதன் மூலம், எதையாவது சொல்லி மறுக்க வேண்டும் என்பதற்காகவும், எப்படியாவது பத்து வாய்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும் என்கிற நோக்கிலும் நீங்கள் பேசி வருகிறீர்கள் என்பது தெளிவாகியுள்ளது. இருப்பினும், அப்படி யாரும் சொல்லி விடக்கூடாது என்பதற்காக, நான் தவறாக பொருள் செய்வதால் தான் இப்படி வறட்டு வாதம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறீர்கள். 

சரி, நான் தவறாக பொருள் செய்கிறேனா என்பதை மேலும் தெளிவாகவே பார்த்து விடலாம்.


உயர்த்தினான் என்று வரக்கூடிய பதத்திற்கு எனது விளக்கங்கள் :


இது குறித்து நான் சொன்ன விளக்கம், உயர்த்தினான் என்று பொதுவாக சொன்னால் நேரடியாக மேலே உயர்த்தினான் என்று தான் பொருள். நீங்கள் பேசினாலும் அது தான் பொருள், நான் பேசினாலும் அது தான் பொருள். உயர்த்தினான் என்பதோடு சேர்த்து வேலையில் உயர்த்தினான், சம்பளத்தில் உயர்த்தினான், அந்தஸ்தில் உயர்த்தினான் என்று ஏதாவது சேர்த்து சொன்னால் தான் வேறு பொருள் செய்ய வேண்டும்.
ஈசா நபி பற்றி அல்லாஹ் சொல்கிற வசனத்தில் இப்படி துணை சொற்கள் எதுவும் இல்லை. அவரை உயர்த்தினேன் என்று மட்டும் தான் சொல்கிறான். அப்படி சொன்னால் நேரடியாகவே மேலே உயர்த்தினான் என்று தான் பொருள் செய்ய வேண்டும்.
இதற்கு உதாரணங்களையும் நான் தந்திருந்தேன். 

தொழுகையில் கைகளை உயர்த்துவதை சொல்வதற்கும் இதே வாசகம் தான் பயன்படுத்தப்படுகிறது. எந்த துணை சொற்களும் இல்லாமல் கைகளை உயர்த்தினார்கள் என்று தான் உள்ளது. ஆகவே கைகளை அந்தஸ்திலோ தகுதியிலோ உயர்த்தியதாக நாம் புரியாமல், கைகளை மேலே உயர்த்தினார்கள் என்று புரிகிறோம்.

குர் ஆனில், வானத்தை படைத்து அதை உயர்த்தினான் என்று அல்லாஹ் சொல்கிறான். இதிலும் உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளது. ஆகவே நேரடி பொருளான, அதை மேலே உயர்த்தினான் என்று பொருள் செய்கிறோம். வானத்தின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தினான் என்று யாரும் பொருள் செய்வது கிடையாது.

இது தவிர, உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பி, தூர் மலையை உயர்த்தி ஒப்பந்தம் செய்தான் என்று வரக்கூடிய வசனத்தை நீங்கள் எடுத்து காட்டி இங்கு எந்த துணை சொல்லும் வரவில்லை என்றாலும் தகுதியில் உயர்த்தினான் என்று தான் பொருள் செய்ய வேண்டும் என்று வாதம் வைத்தீர்கள்.

நீங்களே ஒப்புக்கொண்டதை போல வெறுமனே நாஷிதின் வாதங்களை சும்மா மருப்பதர்க்காக்கவே மறுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்திருப்பதாலும் நான் எதை சொன்னாலும் அதை மறுக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதாலும் உதாரணங்கள் எனக்கு சாதகமானவையா அல்லது உங்களுக்கு சாதகமானவையா என்பதை கூட சிந்திக்காமல் அவசர அவசரமாக எடுத்து வைக்கிறீர்கள், இறுதியில் அதுவும் எனது கருத்தை தான் உறுதி செய்கிறது.

தூர் மலையை அல்லாஹ் உயர்த்தினான் என்று வரக்கூடிய வசனத்தில் தூர் மலையை மேலே உயர்த்தினான் என்று தான் எல்லாரும் பொருள் செய்கிறோம், காரணம் அங்கே உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளதே தவிர வேறு துணை சொற்கள் எதுவும் வரவில்லை.

இவைகளுக்கு எந்த பதிலையும் சொல்லாத நீங்கள், இரண்டு உதாரணங்களை எடுத்து வைத்து வாதம் செய்கிறீர்கள். இத்ரீஸ் நபியை உயர்ந்த இடத்தில் உயர்த்தினான் என்று வரக்கூடிய வசனத்தில், உயர்ந்த இடத்தில் உடலுடன் உயர்த்தினான் என்று ஏன் புரிய கூடாது என்று கேட்கிறீர்கள்.
உங்களது நீண்ட விளக்கத்தின் சுருக்கம் இந்த கேள்வி தான்.

அதே போல, 7 :176 வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போதும் அத்தாட்சிகளை கொண்டு அவரை உயர்த்தியிருப்போம் என்று சொல்கிறான்.
இவற்றை எடுத்து நீங்கள் வைக்கும் வாதமானது,  எதைக்கொண்டு உயர்த்தினான் என்று புரிகிறது, அவரையே உயர்தினானா அல்லது அவரது தகுதியை உயர்தினானா என்பதற்கு இதில் விடை இல்லையே, எப்படி தகுதி என்று முடிவு செய்தீர்கள் என்று கேட்கிறீர்கள்.

ஒருவனது அந்தஸ்த்தை அத்தாசிகள் கொண்டு உயர்த்தினான் என்ற பொருளை தர வேண்டும். அதை தான் நீங்கள் தருகிறீர்கள் என்றால் யாரை உயர்த்தினான் என்று உள்ளது, எதனால் உயர்த்தினான் என்று உள்ளது , எதனை உயர்த்தினான் என்று எங்கே உள்ளது ? அது இல்லாத போது எப்படி அந்தஸ்த்து என்று முடிவு செய்தீர்கள் ?


இது மிகவும் பலகீனமான வாதம் என்பதை ஏற்கனவே நான் விளக்கியிருந்தாலும் இங்கும் விளக்குகிறேன்.

அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினேன் என்கிற வசனமானாலும், அத்தாட்சிகளை கொண்டு அவரை உயர்த்தியிருப்போம் என்று வரக்கூடிய வசனமானாலும், இங்கே அவரை உடலுடனேயே உயர்த்தினான் என்று பொருள் கொள்ள கூடாது, அந்தஸ்தில் உயர்த்தியதாக தான் பொருள் செய்ய வேண்டும். உயர்த்தினான் என்று தான் இங்கும் உள்ளது? என்று நீங்கள் கேட்பது இந்த முடிவுக்கு வருவதை தடுக்காது.

இந்த வசனத்தில் உயர்த்தினான் என்று வருவதும், ஈசா நபி பற்றிய வசனத்தில் உயர்த்தினான் என்று வருவதற்கும் வேறுபாடு உள்ளது.

வார்த்தையை பார்க்க கூடாது, கருத்தை தான் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டிய அறிவுரையாகும். நீங்கள் தான் உயர்த்தினான் என்று வந்தால் உடலுடன் என்று மட்டும் தான் முடிவு செய்வேன் என்கிறீர்கள்.

நீங்கள் தந்துள்ள உதாரணங்களில் உயர்த்தினான் என்கிற வார்த்தையின் அடிப்படையில் அந்த வசனத்திற்கு பொருள் செய்ய கூடாது. அந்த வார்த்தையுடன் சேர்த்து எதாவது துணை எழுத்து வந்துள்ளதா என்று பார்த்து அந்த துணை எழுத்திற்கு என்ன பொருளோ அதன் அடிப்படையில் உயர்த்தினான் என்பதற்கும் பொருள் செய்ய வேண்டும் என்று தெளிவாகவே விளக்கமளித்துள்ளேன்.

உயர்ந்த இடத்தில், என்று வரக்கூடிய வாசகத்தில் இடம் என்பதற்கு நீங்கள் கேட்பது போல physical area என்று பொருள் வராது. ஒரு மனிதரின் தகுதியை பற்றி தான் அல்லாஹ் பேசுகிறான் என்பது அந்த context இன் மூலம் நமக்கு புரிகிறது. ஆக, இடம் என்பதற்கு தகுதி என்பது தான் அந்த வசனத்தின் படி பொருள் என்று முடிவாகி விடும் போது தொடர்ந்து வரக்கூடிய "உயர்த்தினான்" என்பதும் அவரது நிலையை, தகுதியை மேம்பபட செய்தான் என்று பொருள் செய்கிறோம். உயரமான மேட்டுப்பாங்கான இடத்தில் அவரை உடலுடனேயே உயர்த்தினான் என்று ஏன் பொருள் செய்யவில்லை என்று என்னிடம் கேட்டீர்களே, அதற்கு பதில் இது தான்.

அத்தாட்சிகளை கொண்டு என்று வரக்கூடிய வசனத்திலும் இதே வழிமுறை தான். அத்தாட்சிகளை கொண்டு ஒரு மனிதரை உடலுடன் உயர்த்த முடியாது. அந்த வசனத்தில் அத்தாட்சிகளை கொண்டு என்று சொல்லி விடுவது ஒரு மனிதரின் தகுதியை தான் குறிக்கிறது என்பதால் உயர்த்தினான் என்று தொடர்ந்து சொல்வது, அவரது தகுதியை உயர்த்தினான் என்று தான் புரிய இடமளிக்கிறது.

ஆக, உயர்த்தினான் என்று எந்த வசனத்தில் சொல்லப்பட்டாலும்,அதற்கு முன் என்ன துணை சொல் உள்ளது என்பதை பார்த்து, அது என்ன கருத்தை தரும் என்பதை சிந்தித்து அதன் அடிப்படையில் அது உடலுடன் உயர்த்துவதை சொல்கிறதா அல்லது தகுதியை மேம்ப்படுதுவதை பற்றி பேசுகிறதா என்று முடிவு செய்ய வேண்டும்.

அதே சமயம், எந்த துணை சொல்லும் இல்லாமல் வெறுமனே உயர்த்தினான் என்று மட்டும் சொன்னால் உடலுடன் உயர்த்தியதாக தான் புரிய வேண்டும். இதற்கு உதாரணம் தான் தொழுகையில் கைகளை உயர்த்துதல், வானங்களை உயர்த்தியதாக அல்லாஹ் சொல்வது, மற்றும், மறுக்க வேண்டும் என்பதற்காகவே மறுத்துக்கொண்டிருந்த போது நீங்கள் சிந்திக்காமல் எடுத்து வைத்த உதாரணமான தூர்  மலையை அல்லாஹ் உயர்த்தினான் என்று வரக்கூடிய வசனமும்.


தூய்மைப்படுத்தினான் என்று அல்லாஹ் சொல்வது அந்தஸ்தில் உயர்த்தினான் என்று புரிய வைக்கிறதா?


3 :55  ஈஸா வே உம்மை கைப்பற்றுவேன் , இன்னும் உம்மை என்னளவில் உயர்த்தி நிராகரித்து கொண்டிருப்போர் கேவலத்திலிருந்தும் உன்னை தூய்மை படுத்துவேன்.
உங்கள் அனைத்து வாதங்களுக்கும் இந்த குரான் வசனம் பதில் சொல்லி கொண்டிருக்கிறது. இதை நீங்கள் ஏற்காமல் வாதாடி கொண்டிருக்கிறீர்கள்.

என்று சொல்லியுள்ளீர்கள். இதில் என்ன வாதம் வைக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.
அதாவது, நான்காவது அத்தியாயத்தில் ஈசா நபியை பற்றி அல்லாஹ் பேசி வரும் தொடரில், அவர் இறக்கவில்லை, அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்கிறான்.
இந்த வசனத்தில் வரக்கூடிய உயர்த்தினான் என்பதற்கு அந்தஸ்து உயர்வு தான் அர்த்தம் என்று சொல்கிற நீங்கள், இதை நியாயப்படுதுவதற்க்காக, பாருங்கள் 3 :55 வசனத்திலும் இதே போல அல்லாஹ் உயர்துபவனாகவும் அவரை தூய்மைப்படுதுபவனாகவும் இருக்கிறான் என்று சொல்கிறான். உயர்த்தினான் என்று சொல்லி விட்டு அவரை தூய்மைப்படுத்தினான் என்று சொன்னால் உயர்த்தினான் என்பதற்கு தகுதியில் உயர்த்தினான் என்று தான் பொருள் செய்ய வேண்டும் என்கிறீர்கள்.

அடிப்படையாக புரிய வேண்டிய விஷயம், தூய்மைப்படுத்துவதாக  சொல்வதற்கும் உயர்த்துவதாக சொல்வதற்கும் சம்மந்தப்படுத்த தேவையில்லை. அது தனி கருத்து, இது தனி கருத்து. 
அவரை தூய்மைப்படுத்தியதாக அல்லாஹ் சொன்னாலும், அந்த வசனத்தில் உயர்த்தினான் என்பதற்கு உடலுடன் உயர்த்தினான் என்று பொருள் செய்யலாம், அப்படி பொருள் செய்து விட்டு தொடர்ந்து அல்லாஹ் அவரை தூய்மைப்படுத்தினான் என்று சொன்னாலும் தகும். பொருளில் குழப்பமில்லை. 
ஆனால், இந்த வசனத்தில், தூய்ம்மைப்படுதினான் என்று அல்லாஹ் சொல்கிற வாசகத்தை வைத்து உயர்த்தினான் என்பதற்கு பொருள் செய்கிற நீங்கள், 4 :158 வசனத்தில் அதே உயர்த்தினான் என்பதற்கு என்ன வார்த்தையை வைத்து பொருள் செய்கிறீர்கள் என்கிற கேள்வி மிச்சமாகவே தான் உள்ளது. இந்த வசனத்தில் தூய்மைப்படுத்தினான் என்று எந்த விளக்கமும் இல்லையே.. 
இந்த வசனத்தில் அவர்கள் அவரை கொன்று விட்டதாக நினைக்கிறார்கள், அவரை அவர்கள் கொல்லவில்லை, அவர் மரணிக்க்கவுமில்லை, மாறாக அல்லாஹ் அவரை உயர்த்தினான் என்று தான் உள்ளது. 
மூன்றாவது அத்தியாயத்தில், தூமைப்படுதியதாக வந்து விட்டதால் உயர்த்தினான் என்பதற்கு அந்தஸ்து உயர்வு தான் என்று வாதிடுகிற நீங்கள், நான்காம் அத்தியாயத்தில் அதே போன்று தூய்மைப்படுத்தியதாக ஏதாவது வாசகத்தை காட்டி விட்டு, இங்குள்ள உயர்த்தினான் என்பதற்கும் உடலுடன் தான் என்று சொல்ல வேண்டும்.

அல்லாமல், உயர்த்தினான் என்பது அவரை காப்பாற்ற தான் என்று நாஷித் சொல்கிறார், அப்படியானால் அங்கே அவரை உயர்த்தினான் என்று சொல்லி விட்டு அவரை அல்லாஹ் காப்பாற்றினான் என்று தானே அல்லாஹ் சொல்ல வேண்டும், ஏன் தூய்மைப்படுத்தினான் என்று சொல்கிறான் என்று கேட்பது அர்த்தமற்றது.
ஏன் அர்த்தமற்றது என்றால், அவரை உயர்த்தியது அவரை அவர்களிடமிருந்து காப்பாற்றத்தான் என்றாலும் அதை நான்காவது அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்லி விட்டான். அது அந்த இடத்திற்கு பொருந்தவும் செய்கிறது. அவரை கொன்று விட்டதாக நினைக்கிறார்கள், அவரை அவர்கள் கொல்லவில்லை, அவர் மரணிக்கவுமில்லை, மாறாக அல்லாஹ் அவரை உயர்த்தினான் என்றால் உயர்த்துதல் என்பது அவரை காப்பாற்றுவதற்கு அல்லாஹ் செய்த செயல் !! கண்ணியத்தை உயர்த்துவது அவர்களிடம் இருந்து ஈசா நபியை காப்பாற்றாது, அவரையே உடலுடன் உயர்த்தினால் தான் அது சாத்தியமாகும். இதை இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லி விட்டான்.
நீங்கள் எடுத்து வைக்கும் மூன்றாம் அத்தியாயத்தின் வசனத்தில் காப்பாற்றியதை பற்றி அல்லாஹ் பேசவில்லை. 
அல்லாஹ் அவரை கைப்பற்றினான் என்பது தனி வாசகம், அவரை உயர்த்தினான் என்பது தனி வாசகம், அவரை தூய்மைப்படுத்தினான் என்பதும் தனி வாசகம்.
அவரை உடலுடன் உயர்த்திய அல்லாஹ், அவரை கலங்கத்தில் இருந்து தூய்மைப்படுத்தவும் செய்தான். இப்படி புரிவதற்கு எனது வாதம் எதுவும் தடையாக இல்லை.

கைப்பற்றினான் - உயர்த்தினான் 


கைப்பற்றினான் என்று அல்லாஹ் சொல்வதற்கும், உயர்த்தினான் என்று சொல்வதற்கும் ஒரே அர்த்தத்தை தான் நான் செய்கிறேன் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.
இது குறித்து இந்த விவாதத்தின் துவக்கங்களிலேயே நான் விளக்கமளித்து விட்டேன். இரண்டுக்கும் ஒரே அர்த்தத்தை நான் கொடுக்கவில்லை. 
கைப்பற்றினான் என்றால் அவரது ஆற்றல்களை அல்லாஹ் தமது கட்டுபாட்டில் எடுத்துக்கொண்டான், எப்படி தூங்குகிற ஒருவரது செயல்பாடுகளை அல்லாஹ் தமது கட்டுக்குள் எடுதுக்கொள்கிறானோ அதே போல. சாதாரணமான மரணத்திற்கும் கைப்பற்றுதல் என்கிற வாசகம் வந்தாலும், தூக்கத்தில் செயல்பாடுகள் முடக்கப்படுவதற்கும் அதே கைப்பற்றுதல் என்கிற வாசகம் தான் வருகிறது. அந்த அடிப்படையில் ஈசா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்றால் மரணம் என்கிற ஒரு பொருளை தான் கொடுக்க வேண்டும் என்றில்லை, அவரது செயல்பாடுகளை அல்லாஹ் முடுக்கினான், தமது கையில் எடுத்துக்கொண்டான் (taken control ) என்று புரியலாம்.
அதே சமயம், உயர்த்தினான் என்றால் அவரை உடலுடனேயே உயர்த்துவதை தான் குறிக்கும்.
ஆக இரண்டிற்கும் ஒரே பொருளை நான் செய்யவில்லை. தவறாக சொல்கிறீர்கள்.


தன்னளவில் உயர்த்தினான்.


ஈசா நபியை உயர்த்தினான் என்று அல்லாஹ் சொல்லும் வசனத்தில் தன்னளவில் உயர்த்தினான் என்று வருகிறது, தன்னளவில் என்றால் தன்னை பொறுத்தவரை (அல்லாஹ்வை பொறுத்தவரை) என்று பொருள் செய்ய வேண்டும், ஆகவே அல்லாஹ்வை பொறுத்தவரை அவர் சிறந்தவர், என்பது தான் இதன் கருத்து என்று அடுத்து ஒரு வாதத்தை வைத்துப்பார்த்தீர்கள். 
சும்மா மறுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு மறுத்ததாக நீங்களே ஒப்புக்கொண்ட பட்டியலில் இதுவும் அடக்கம்.

இதற்கு அந்த பொருளை தரவே முடியாது. ஒருவரை அந்தஸ்தில் அல்லாஹ் உயர்த்தினான் என்றால் அவரை உயர்த்தினேன் என்று மட்டும் சொல்வது தான் அல்லாஹ்வின் நிலைக்கு சரி.
என்னை பொறுத்தவரை அவர் நல்லவர் என்று அல்லாஹ் சொல்ல மாட்டான். இது தவறான வார்த்தை பிரயோகம். 
அதே வாசகத்தை நீங்களே எடுத்து தந்த 3 : 55 வசனத்திலும் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

அவரை கைப்பற்றுபவனாகவும் தன்னளவில் உயர்த்துபவனாகவும் அவரை தூய்மைப்படுத்துபவனாகவும் இருக்கிறேன் என்கிறான்.
இங்கே நீங்கள் சொல்வது போல மொழியாக்கம் செய்ய வேணடுமானால், 
அவரை கைப்பற்றுபவனாகவும் தன்னை பொறுத்தவரை உயர்த்துபவனாகவும் அவரை தூய்மைப்படுத்துபவனாகவும் இருக்கிறேன் 
என்று பொருள் செய்ய வேண்டும்.
அல்லது, அவரை கைப்பற்றுபவனாகவும் தன்னை பொறுத்தவரை அவரை உயர்ந்தவராகவும் அவரை தூய்மைப்படுத்துபவனாகவும் இருக்கிறேன்  என்று சொல்ல வேண்டும்.
இரண்டில் எதை சொன்னாலும் அந்த இடத்திற்கும் பொருந்தாது, அல்லாஹ்வின் தகுதிக்கும் பொருந்தாது.

நானும் நீங்களும் பேசுவது போல அல்லாஹ்வும் பேசுவதாக காட்ட முயற்சிக்கிறீர்கள். என்னை பொறுத்தவரை அவன் நல்லவன் என்றால் நான் பார்த்தவரை நல்லவன் என்று பொருள். இப்படி அல்லாஹ் சொல்ல மாட்டான். அப்படி அல்லாஹ் சொல்வான் என்று நீங்கள் சிரமப்பட்டு விளக்கினாலும், இரண்டு வசனங்களில் அதே போன்று சொல்வது அந்த இடத்தின் வார்த்தை அமைப்பிற்கு  பொருந்தாத ஒன்றாக இருக்கிறது.

மேலும் இதை உதாரணம் ஒன்றில் மூலமும் விளக்கியிருந்தேன். இதே போல 25 :46 வசனத்திலும் சூரியனையும் அதன் ஓட்டங்களையும் தன்னளவில் அல்லாஹ் கைப்பற்றுவான் என்று அல்லாஹ் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. உங்கள் கருத்துப்படி தன்னளவில் என்றால் தன்னை பொறுத்தவரை என்றால் இங்கு தன்னை பொறுத்தவரை சூரியனை அல்லாஹ் கைப்பற்றினான் என்று தான் பொருள் செய்வீர்களா? என்று கேட்டிருந்தேன்.
இதற்கு எந்த பதிலையும் நீங்கள் சொல்லாததிலிருந்து இந்த வாதம் மொத்தமும், வெறுமனே மறுப்பதற்காக மறுத்துக்கொண்டிருந்ததாக நீங்கள் ஒப்புக்கொண்ட பட்டியலில் தான் சேரும் என்பது உறுதியாகிறது.


அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன்.

ஈசா நபியை அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்லி விட்டு அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொன்னதிலிருந்து உடலுடன் உயர்த்துவதை இங்கு அல்லாஹ் சொல்கிறான் என்பது தெளிவாகிறது என்று நான் சொன்னதை மறுப்பதற்காக,
நான்கு உதாரணங்களை காட்டினீர்கள். அவைகளிலும் இதே போன்று அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று வருகிறது, ஆனால் அங்கெல்லாம் ஒருவரை உயர்த்தியதாகவோ, அல்லது அல்லாஹ்வின் ஆற்றலை காட்டும் விதத்திலோ எந்த சம்பவமும் இல்லையே என்று கேட்டீர்கள்.

ஆனால் நீங்கள் எடுத்து வைத்த நான்கு உதாரணங்களிலும், அல்லாஹ்வின் வல்லமையை பற்றி சொல்வது கச்சிதமாக பொருந்தக்கூடிய இடங்கள் தான்.
பொருத்தமான இடங்களில் அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொன்னால், பொருத்தமில்லாத இடத்திலும் அதையே சொல்லலாம் என்பது என்ன அளவுகோல்? 

இந்த நான்கு உதாரணங்களும் எப்படி எல்லாம் தவறு என்பதை எனது முந்தைய வாய்ப்புகளில் ஒவ்வொன்றாகவே விளக்கியுள்ளேன். 

அவைகளில் மூன்று உதாரணங்களை பற்றிய எனது விளக்கங்களை கண்டு கொள்ளாமல், சாலி நபி பற்றி நீங்கள் சொன்ன ஒரு உதாரணத்தை பற்றி மட்டும் இப்போது மறுப்பு சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

இதிலிருந்து, மற்ற மூன்று உதாரணங்களையும், நீங்களே ஒப்புக்கொண்டபடி, வெறுமனே வாதத்திற்காக, எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக நீங்கள் சொல்லியுள்ளீர்கள் என்பது உறுதியாகி உள்ளது.

ஸாலிஹ் நபி பற்றிய வசனத்தில் என்ன வருகிறது?

ஸாலிஹ் நபியையும் அவர்களது கூட்டத்தாரையும் அழிவிலிருந்து காப்பாற்றினான் என்றும் அவர்களை எதிரிகளின் இழிவிலிருந்து காப்பாற்றினான் என்றும் அல்லாஹ் சொல்கிறான். சொல்லி விட்டு அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்றால் இரண்டிற்கும் பொருந்தும் தானே என்று கேள்வி வைக்கிறீர்கள்.

அவர்களது இழிவில் இருந்து அவர்களை காப்பாற்றியதை எதற்கு அல்லாஹ் சொல்கிறான் என்றால் பெரும் சத்தத்துடன் தாக்கி அவர்களை அழித்தானே அதனால் தான். இரண்டுமே இணைந்து வருவதால் அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்கிறான். அவர்கள் அழிக்கப்பட்டது பற்றி இங்கு பேசப்படவில்லை என்றால் அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்பதும் பொருந்தாது என்பது தான் அப்போதும் எனது வாதம்.
ஆக வல்லமை குறித்து அல்லாஹ் சொல்கிற எல்லா வசனங்களிலும், அல்லாஹ்வின் வல்லமை பிரதிபலிக்ககூடிய வகையில் ஏதாவது ஒரு சம்பவமோ ஒரு செய்தியோ இருக்கும். அப்படி இருந்தால் தான் வல்லமைமிக்கவன் என்பதும் ஞானமுடையவன் என்பதும் பொருந்தும்.
ஈசா நபி பற்றிய வசனத்தில் அவரை உடலுடன் உயர்த்தியதாக பொருள் வைத்தால் தான் இது பொருந்தும்
மேலும் நீங்கள் எடுத்து வைத்த நான்கு வேறு வேறு உதாரணங்களிலும் இது பொருந்தும். !! ஆகவே அதிலும் தவறாகவே வாதம் செய்கிறீர்கள். வாதம் செய்வதற்காக வெறுமனே தான் வாதம் செய்து கொண்டிருப்பதாக நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள் என்பது இங்கும் நினைவுக்கூரதக்கது.


ஈசா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் சென்று விட்டார்கள் 

ஈசா நபி கடவுள் இல்லை என்பதை புரிய வைப்பதற்காக அல்லாஹ் இறக்கிய இந்த வசனத்தில், அவர் இறந்து விட்டார் என்று சொல்லாமல் அவருக்கு முன் எல்லாரும் இறந்து விட்டார்கள் என்று தான் சொல்கிறான். இதுவே அவர் இன்னும் இறக்காததற்கு ஆதாரம் என்று நான் சொன்னேன்.
இதை மறுக்க ஒரு நியாயத்தை முன் வைத்தீர்கள். அதாவது, அவர் இறந்து விட்டார் என்று சொன்னாலும் கூட, அவரை கடவுளாக நம்புகிறவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது, அவர் இறந்து மீண்டும் உயிர்ப்பெற்றார் என்று தான் அந்த மக்கள் நம்புகிறார்கள், அதனால் அவர் மரணித்து விட்டார் என்று சொல்வது இங்கே பொருந்தாது, அதனால் தான் அல்லாஹ் அதை சொல்லவில்லை என்று பதில் சொன்னீர்கள்.

இது தான் காரணம் என்றால், அதே வசனத்தில் அவர் உணவு உண்பவராக இருந்தார் என்று அல்லாஹ் சொல்கிறானே அது ஏன்?
அவர் இறந்து விட்டு பின்பு உயிர் பெற்றெழுந்தார் என்று அந்த மக்கள் நம்பியது போல அவர் உணவு உண்ணக்கூடிய மனித நிலையில் தான் இருந்தார் என்பதையும் சேர்த்து தானே அவர்கள் நம்புகிறார்கள்?
அவர் இறந்து விட்டார் என்று சொல்வது அவர்களை கடவுள் நம்பிக்கையை விட்டும் அகற்றாது என்றால், அவர் உணவு உண்ணக்கூடியவராக இருந்தார் என்று சொல்வதும் கூட அவர்களை கடவுள் நம்பிக்கையை விட்டும் அப்புறப்படுத்தாது தானே?

ஆகவே நீங்கள் சொல்லும் காரணம் பொருந்தாது ! என்று இதற்கு மறுப்பும் ஏற்கனவே சொல்லியுள்ளேன்.

எனது கேள்விக்கு பதில் சொல்லாமல்

உணவருந்துவதை தான் ஒரு முக்கிய அடையாளமாக சொல்லி காட்டும் போது அது தான் மனிதன் கடவுள் என்ற தன்மையிலிருந்து வேறுபடுகிறான் என்பதற்கு மிக முக்கிய சான்று என்பதை சொல்கிறது.
உணவருந்தாத உடல் மனிதர்களிடம் இல்லை என்று சொல்வதன் மூலம், அவர்கள் உணவருந்தாமல் இருந்து காட்ட முடிந்ததா என்பதை சிந்திக்க சொல்கிறான்.

என்று சொல்கிறீர்கள்.

ஈஸா நபி உயிர்தெழுந்து வந்ததாக நம்புபவர்கள் அவரை ஒரு பரிசுத்த ஆவியென நினைக்க தொடங்கினர். ஆனால் அவர்களது நம்பிக்கையின் படியே கூட ஈஸா நபி அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வந்து,
தனது சீடர்களிடம் உண்ண ஏதேனும் உணவு உள்ளதா என்பதை கேட்டு பின்னர் மீனும் தேனும் அருந்தினார். 

என்று சொல்கிறீர்கள்.

இவை மேலே உள்ள எனது கேள்வியை மறுக்கிறதா அல்லது மேலும் ஆதரிக்கிறதா?

அவர் உணவருந்திக்கொண்டிருந்தார், என்பதை அவரை கடவுளாக நம்புகிற கூட்டம் அறிந்து தான் வைத்துள்ளது. நான் எதை சொன்னேனோ அதை ஆதாரங்களுடன் நீங்களும் சொல்லி எனது வாதத்திற்கு ஆதாரம் தான் தந்துள்ளீர்கள்.
நான் என்ன கேள்வி கேட்டேனோ அதற்கு இதில் பதில் இல்லை.
அவர் மரணித்து விட்டார் என்று அவர்கள் நம்பிக்கொண்டே அவரை கடவுள் எனவும் நம்புகிறார்கள் என்பதால் அவரது மரணத்தை பற்றி பேசுவது இந்த இடத்தில் பொருந்தாது  என்றால் அவர் உணவு உண்ணக்கூடியவர் என்று சொல்வதும் இந்த இடத்திற்கு பொருந்தாது !


அவர் கியாமத் நாளுக்கு சமீபமாக மீண்டும் உலகிற்கு வருவார் 


அவர் கியாமத் நாளின் அடையாளம் என்று வரக்கூடிய வசனத்திற்கு, குர் ஆன் தான் கியாமத் நாளுக்கு அடையாளம் என்று அல்லாஹ் அங்கே சொல்கிறான் என்று மறுப்பு சொல்கிறீர்கள். மறுப்பதற்காக தான் மறுக்கிறேன் என்று நீங்களே ஒப்புக்கொண்ட பட்டியலில் இதுவும் அடங்குமா என்பதையும் நீங்களே சொல்லி விட்டால் நல்லது.
இதற்கு சில காரணங்களை சொல்கிறீர்கள்.

இங்கே குல் என்றோ நபியே நீங்கள் கூறுங்கள் என்றோ வார்த்தை இல்லை. அல்லாஹ்வே நேரடியாக பேசி கொண்டு வருகிறான். எனவே அல்லா தன்னிலையாக பேசுவதாக எடுத்து கொள்ள வேண்டும்.

என்று சொல்லி, இந்த வசனம் நபியிடம் சொல்ல சொல்வதாக அல்லாஹ் சொல்லவில்லை , மாறாக அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான் என்று சொல்கிறீர்கள்.
குல் என்று சொல்லாமல் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் பேசுகிறான். ஆனால் அவைகளில் பல இடங்களில் அல்லாஹ் அதை சொல்லியிருக் முடியாது, நபியிடம் சொல்ல சொல்லியிருப்பது தான் அங்கே பொருந்தும் என்று முடிவு செய்கிறோம். நான் அல்லாஹ்வை வணங்குகிறேன் என்று கூட வசனங்கள் உண்டு , அதில் குல் என்று அல்லாஹ் சொல்லவில்லை என்றாலும் அங்கே நபியிடம் சொல்ல சொல்வதாக தான் பொருளாகும்.

மேலும், அந்த வசனத்தில், என்னை பின்பற்று என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வை யாரும் பின்பற்ற முடியாது. அல்லாஹ்வை நம்ப தான் முடியும். அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அல்லாஹ்வின் தூதரையும் தான் பின்பற்ற முடியும்.
ஆகவே, இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை பின்பற்றுவதாக சொல்லவில்லை, என்னை பின்பற்று - என்று நபியே நீ சொல் என்பது தான் அந்த வசனத்தின் அர்த்தம். நபியை தான் பின்பற்ற முடியும். !

ஒரு வாதத்திற்கு, இந்த வசனத்தில் அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான் என்று வைத்துக்கொண்டால் கூட அதனால் உங்கள் கருத்து சரி என்றோ எனது கருத்து தவறு என்றோ ஆகி விடாது.

வாதம் என்ன என்றால், அந்த வசனத்திற்கு முன்பு பல வசனங்களாக ஈசா நபியை பற்றியும் அவரை அந்த மக்கள் புறக்கணித்தது பற்றியும் பேசி விட்டு, நான் நாடினால் இந்த கூட்டத்தாருக்கு மாற்றமாக மலக்குகளை கொண்டு வந்திருப்பேன் என்று சொல்லி விட்டு அடுத்து சொல்வதாக இருந்தால் அது கியாமத் நாளின் அடையாளம் என்பது பொருந்தாது, அவர் கியாமத் நாள் என்பது தான் பொருந்தும்.
இதை உறுதி செய்யும் விதமாக, இதற்கு பிறகு வரக்கூடிய வசனங்களிலும் கூட ஈசா நபியை புறக்கணித்த மக்கள் கியாமத் நாளுக்கு அஞ்ச வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிரான தீர்ப்பு மறுமையில் உண்டு எனவும் அல்லாஹ் சொல்கிறான்.
ஆக, குர் ஆன் தான் அடையாளம் என்பதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் போதுமானதாக இல்லை.

இது பின்பற்ற கூடிய வாசகமா, நம்புவதற்கு உரிய வாசகமா ?
நம்பிக்கை குறித்து சொல்லபடுகிறது என்றால் இதில் சந்தேகம் இல்லை என்பது மட்டும் சொல்லியிருப்பது போதும்.என்னை பின்பற்று என்று சொல்வதால் இங்கே "அவர்" என்று ஒருவரை குறித்து மொழி பெயர்ப்பதை விட "இது"  என்று குரானை குறித்து தான் மொழி பெயர்ப்பது தகும்.

அவன் தான் திருடன். இதில் சந்தேகமில்லை. என்னை நம்பு.
இது சரி.
அவன் திருடன் இதில் சந்தேகம் இல்லை என்னை பின்பற்று. என்றால் என்ன நடை இது ? இது தவறான நடை தான்.

நான் ஏற்கனவே சொன்னது போல, அந்த வசனத்தில் என்னை பின்பற்று என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் இங்கே அல்லாஹ்வே நேரடியாக சொல்வதாக புரியாமல் நபியை சொல்ல சொல்கிறான் என்று தான் புரிய வேண்டும். நபி, தன்னை பின்பற்றுங்கள் என்று சொல்கிறார்கள். அவர் கியாமத் நாளின் அடையாளம் என்று சொன்னது மட்டும் நபியின் வார்த்தை அல்ல. அவர் மனிதர் தான், அவர் தூதர் தான், அவர் இன்னும் மரணிக்கவில்லை போன்ற எல்லா விஷயங்களிலும் நபியையே பின்பற்ற வேண்டும் என்பது அந்த வசனத்தின் கருத்து.

மறுமை நாளின் அடையாளமாக அது உள்ளது என்று சொல்வது தவறு, அடையாளங்களை கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதுவும் தவறு. 
குர் ஆனில் மறுமை நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பது நம்புவதற்கு சிரமமான காரியமல்ல. இந்த நூலில் இந்த விஷயம் உள்ளது, இதில் சந்தேகப்படாதே, என்று யாரும் சொல்ல மாட்டோம்.
ஏனெனில், அந்த நூலில் அது இருக்கிறது என்பது உண்மை என்றால் அதை படித்துப்பார்க்கிற யாருக்கும் தெரியும். அதை ஏற்பவர்களுக்கும்  தெரியும், ஏற்காதவர்களுக்கும் தெரியும்.
குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை, எதிரிகளுக்கும் சந்தேகமில்லை.
அதில் சொல்லப்பட்டபடி கியாமத் நாள் வருமா என்பது தான் சந்தேகம். ஆக, இதிலும் உங்கள் விளக்கம் தவறு.

அதே சமயம், இது குர் ஆனை சொல்வதற்கு எந்த நியாயமும் இல்லை, மாறாக இதற்கு முன்னும் பின்னும் ஈசா நபியை பற்றியே சொல்லப்பட்டு வருகிறது என்பதும், இதற்கு பின்னுள்ள வசனத்திலும் ஈசா நபியை மறுத்தவர்கள் கியாமத் நாளுக்கு அஞ்சட்டும் என்று கருத்துப்பட அல்லாஹ் சொல்வதில் இருந்தும் இந்த குறிப்பிட்ட வசனம், ஈசா நபி கியாமத் நாளுக்கான அடையாளமாக இருக்கிறார் என்று புரிவது தான் நியாயமானது !

அடுத்து, 4 :159 வசனமும் ஈசா நபியின் மரணத்திற்கு முன் அவரை வேதக்காரர்கள் அனைவரும் நம்புவார்கள் என்று அல்லாஹ் சொல்வது ஈசா நபி மீண்டும் வருகிறார் என்கிற கருத்தை தான் தருகிறது என்று நான் சொன்னதற்கு, அது வேதக்காரர்களின் மரணத்திற்கு முன்னால் சிலுவை மரணத்தை நம்புவார்கள் என்று புரிய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

கப்ல மவ்திஹி என்கிற பதத்தில் உள்ள ஹி என்பது ஒருமையை, குறிக்கும். வேதக்காரர்கள் தங்களது மரணத்திற்கு முன் என்றால் அது பன்மை. ஆக, அவரது மரணத்திற்கு முன் என்பது தான் சரி.

மேலும், தொடர்ந்து வரக்கூடிய வசனத்தில் அவர்களுக்கு ஈசா நபி மறுமையில் சாட்சியாக இருப்பார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். சிலுவை மரணத்தை நம்பியவர்களுக்கு ஈசா நபி சாட்சியாக இருக்க மாட்டார்கள். அதன் காரணமாகவும் இது சிலுவை மரணத்தை பற்றிய நம்பிக்கையை அல்லாஹ் சொல்லவில்லை என்று புரியலாம்.

மேலும், எல்லா வேதக்காரர்களையும் பார்த்து பொதுவாக அல்லாஹ் இங்கு சொல்கிறான் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், அப்படி எல்லா வேதக்காரனும் அப்படி நம்பிக்கொண்டு இறக்கவில்லை. வேதக்காரர்களில் உண்மை முஸ்லிம்களும் இருந்தனர். ஈசா நபியை நபியாக மட்டுமே நம்பி அல்லாஹ்வை மட்டுமே வணங்கியவர்களும் இருந்தார்கள். அப்படி இருக்கையில் அனைவருமே சிலுவை மரணத்தை தான் நம்புவார்கள் என்று சொல்வது அர்த்தமற்றது.

ஒரு வாதத்திற்கு, இது தங்களது மரணத்திற்கு முன் "அதை" நம்புவார்கள் என்பது தான் சரி என்று வைத்துக்கொண்டாலும் கூட, அதை என்றால் சிலுவை மரணம் தான் என்பது உங்கள் யூகம் தானே தவிர அந்த context இன் படி அப்படி பொருள் செய்ய முடியாது.

அவர்கள் அவரை கொலை செய்து விட்டதாக நினைகிறார்கள். உண்மையில் ஈசா நபி இறக்கவில்லை, யாரும் சிலுவையில் அறையவுமில்லை.
இந்த விஷயத்தில் இவர்கள் தவறான கொள்கையிலேயே இருக்கிறார்கள்.
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை,
மாறாக அல்லாஹ் அவரை உயர்த்திக்கொண்டான், அல்லாஹ் வல்லமைமிக்கவன், ...... மரணத்திற்கு முன்னால் அதை அவர்கள் நம்புவார்கள்.

என்று சொன்னால், இங்குள்ள "அதை" என்பது  (அதை அல்ல, அவரை என்பது தான் சரி என்பதை ஏற்கனவே விளக்கி விட்டேன்) சிலுவை மரணத்தை குறிக்கும் என்று நீங்கள் யூகிக்க முடிவது போல அவரை அவர்கள் கொல்லவில்லை என்பதை தான் இந்த "அதை" என்பது குறிக்கிறது என்று நானும் சொல்வேன்.
அல்லது, அவரை அல்லாஹ் உயர்த்தினானே, அதை தான் இந்த "அதை " என்பது குறிக்கிறது என்று கூட சொல்லலாம்.

உங்கள் யூகத்தை விட இந்த யூகம் இன்னும் பொருத்தமாக இருக்கிறது, காரணம், அதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ் இதை தான் சொல்லியுள்ளான் , சிலுவை மரணத்தை பற்றி பேசவில்லை.

ஆக, அந்த வகையிலும் உங்கள் வாதங்கள், நீங்களே ஒப்புக்கொண்டதை போல மறுக்க வேண்டும் என்பதற்கு மறுப்பதாகவே அனைவருக்கும் புரிகிறது .


ஹதீஸ்களின் நிலை என்ன ?

ஹதீஸ்களில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று தெளிவாக உள்ளதே என்று இந்த விவாதத்தின் துவக்கத்திலேயே நான் கேள்விகளை கேட்டிருந்தேன். அதற்கு இது வரை சரியான முறையில் நீங்கள் பதில் சொல்லவில்லை.

ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கங்கள் அனைத்தையுமே ஏற்றுக்கொள்வதாக கூட வைப்போமே..

கைப்பற்றினான் என்பது உயிரை கைப்பற்றுவது என்று வைப்போம்.
உயர்த்தினான் என்பது அந்தஸ்து உயர்வு என்று வைப்போம்.
தன்னளவில் என்பது தன்னை பொறுத்தவரை என்று வைப்போம்.
ஈசா நபிக்கு முன் சென்றவர்கள் மரணித்தார்கள் என்பது, அவரது மரணத்தை சொல்வது அங்கே பொருந்தாது என்கிற காரணத்தால் என்று கூட வைப்போம், 
வல்லமை மிக்கவன் என்பதை தூய்மைப்படுத்தும் இடத்திலும் சொல்லலாம் என்று கூட வைப்போம்.
வேதக்காரர்கள் நம்புவது சிலுவை மரணத்தை தான் என்று கூட வைப்போம்.
கியாமத் நாளின் அடையாளம் என்பது குர் ஆன் தான் என்று கூட வைப்போம்..

ஒரு வாதத்திற்கு இப்படி வைத்துக்கொண்டால் கூட ஹதீஸில் மீண்டும் ஈசா நபி வருவார்கள் என்று உள்ளதே இதற்கு உங்கள் பதில் என்ன? ஹதீஸ் மார்க்கத்தின் ஒரு பகுதியா இல்லையா?
இதற்கு இந்த நொடி வரை பதில் வந்ததா?

கைப்பற்றினான் என்பது மரணத்தை தான் குறிக்கிறது என்கிற உங்கள் கருத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தாலும் கூட அதை தவிர்த்து விட்டு பார்த்தால், குர் ஆனில் எந்த இடத்திலும் ஈசா நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லவேயில்லை. எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று பொதுப்படையாக சொல்கிறான். இதற்கு ஈசா நபிக்கு மட்டும் ஹதீஸ் விதி விலக்கு அளிக்கிறது என்று எளிதில் புரியலாம். 
தாமாக செத்த பிராணிகள் அனைத்துமே ஹராம் என்று குர் ஆன் சொல்கிறது.
கடலில் தாமாக செத்தவை ஹலால் என்று ஹதீஸ் சொல்கிறது.
இரண்டையும் இணைத்து எப்படி புரிகிறோமோ அதே போல, குர் ஆனில் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று சொல்லப்படுவதையும்,
ஈசா நபி மீண்டும் இந்த உலகிற்கு வருவார்கள் என்று ஹதீஸ் சொல்வதையும் இணைத்தே புரியலாம்.

கைப்பற்றினான் என்பதற்கு மரணிக்க செய்தான் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால் கூட ஹதீஸில் மீண்டும் வருவார் என்று உள்ளதை வைத்து, மரணித்த ஈசா நபி மீண்டும் உலகிற்கு வருவார்கள் என்றும் நம்பலாம்.
ஹதீஸில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று உள்ளதால் அவரை அல்லாஹ் கைப்பற்றினான் என்பதற்கு அதன் நேரடி பொருளான முழுமையாக எடுத்துக்கொண்டான் என்கிற ஒரு பொருளுடன் நிறுத்திக்கொள்ளலாம், மரணித்து விட்டார் என்று சொல்ல தேவையுமில்லை.
இதையெல்லாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன்.

ஆனால் ஈசா நபி மரணித்து விட்டார்கள், இந்த உலகத்திற்கு வரவே மாட்டார்கள் என்கிற உங்கள் கொள்கைக்கு இந்த கேள்விகள் எல்லாம் நேரடி மறுப்பாக உள்ளன என்பதை விளங்காமல் இருக்கிறீர்கள்.

மேலும் இவைகளுக்கு எந்த தெளிவான மறுப்பையும் சொல்லாமல், ஹதீஸ் குர் ஆனுக்கு முரண், ஹதீஸ் குர் ஆனுக்கு முரண், என்பதை மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.

முரணில்லாமல் எப்படி புரியலாம் என்பதை நான் இங்கு விளக்கி விட்ட பிறகு, ஹதீஸ்கள் பலகீனமானவை என்று அடுத்த வாதம் ஒன்றை வைத்தீர்கள்.
மறுப்பதற்காக சும்மா மறுத்துகொண்டிருந்ததாக நீங்களே ஒப்புக்கொண்டவைகளில் இதுவும் அடக்கமா என்று தெரியவில்லை.

சரி, என்ன பலகீனம் என்று கேட்டதற்கு, இப்னு அல் ஜுஹ்ரி என்பவர் அறிவிப்பாளராக வருகிறார், அவர் பலகீனமானவர், என்று பொத்தாம் பொதுவாக பதில் சொன்னீர்கள்.

இப்படி பொத்தாம் பொதுவாக பதில் சொன்னால் எப்படி? நான் நான்கு ஹதீஸ்களை தந்துள்ளேன். மேலும் ஒரு ஹதீஸை அடுத்த வாய்ப்பில் தந்தேன். மொத்தமான ஐந்து ஹதீஸ்களும் பல பல அறிவிப்பாளர் தொடர் வரிசையில் பல அறிவிப்புகளில் பதிவாகியுள்ளது.
இதில் நான் பார்த்தவரை எந்த ஹதீசையும் நீங்கள் சொல்லக்கூடிய அந்த நபர் வழியாக வருவதாக எனக்கு தெரியவில்லை, எனவே எந்த ஹதீஸ் என்று குறிப்பிட்டு எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

இதற்கு பதில் சொன்ன நீங்கள், 

ஈஸா நபி வருவார் , பன்றிகளை கொல்வார் , சிலுவைகளை முறிப்பர் என்ற புஹாரி 3 /45  ஹதித் அபு ஹுரைரா விடம் இருந்து சைத் பின் அல் முஸ்சய்ப் இடம் இருந்து இப்னு அல் ஜுஹ்ரி அறிவ்விக்கிறார். 

என்று சொல்கிறீர்கள். 

நான் ஐந்து ஹதீஸ்களை தானே தந்தேன். நான் தந்தவைகளில் இருந்தல்லவா நீங்கள் மறுப்பு சொல்ல வேண்டும்? புஹாரி 3 /45 ஹதீஸை நான் ஆதாரமாக தரவேயில்லையே..!!
நான் காட்டாத ஆதாரத்தை எடுத்து வைத்து மறுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
எதை நான் தந்துள்ளேனோ அதில் என்ன தவறு என்று சொல்லுங்கள் என்று மீண்டும் கேட்கிறேன்.

இருவருக்கும் இன்னும் தலா இரண்டு வாய்ப்புகளே மிச்சமிருப்பதால் அனைத்து ஆதாரங்களும் இதிலேயே தரப்பட வேண்டும் என்பதால் சற்று நீளமான பதிவாகி போய் உள்ளது. இருப்பினும் தனி தனியாக பிரித்து தந்துள்ளதால் படிப்பவர்களுக்கு சிரமமிருக்காது என்று நம்புகிறேன்.

வஸ்ஸலாம்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக