செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 511/09/2012

அஸ்ஸலாமு அலைக்கும்..

வபாத் குறித்த விவாதத்தின் தொடர்ச்சியாக மேலதிகமான சில விளக்கங்களை தர வேண்டியுள்ளது. வபாத் குறித்த தங்களின் வாதம் மிகவும் பலகீனமாகவே உள்ளது. ஏனெனில், நான் என்ன வகையில் கேள்வி வைக்கிறேனோ அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் அதை சுற்றி சுற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உதாரணமாக, இந்த பொருளின் விலை என்ன என்று கேட்டால் இந்த பொருள் மிகவும் தரமானது, இந்த பொருளில் இந்த வசதி உள்ளது, இதை இந்த இடத்தில் வாங்கலாம் என்று பதில் சொல்வது போல பதில் சொல்கிறீர்கள்.

வபாத் என்பதற்கு கைப்பற்றுதல் என்று பொதுவான அர்த்தம் இருந்தாலும் ஒரு உயிரை தொடர்புப்படுத்தி அல்லாஹ் பேசும் போது அதற்கு உயிரை கைப்பற்றுகிற ஒரு அர்த்தம் தான் உள்ளது என்று சொன்னீர்கள்.
மேலும், உயிரை கைப்பற்றுதல் என்று வந்து விட்டாலேயே மரணம், தூக்கம் ஆகிய இரண்டு நேரத்தில் தான் என்று சொல்கிறீர்கள்  .

நான் கேட்டது எப்போதெல்லாம் உயிரை கைப்பற்றுதல் என்பது வரும் என்பதல்ல.
நான் கேட்டது, உயிரை கைப்பற்றுதல் என்பதற்கு என்ன பொருளை எல்லாம் கொடுக்க முடியும் என்பதை தான்.

இதன் நுணுக்கமான வேறுபாட்டை புரிய வேண்டும்.

இதற்கு பதில் சொல்லாமல், கைப்பற்றுதல் என்று எந்த சந்தர்ப்பத்தில் எல்லாம் சொல்ல முடியும் என்பதை வரிசையாக விளக்குகிறீர்கள், அது குறித்து நான் கேட்கவேயில்லை.

கைப்பற்றுதல் என்று ஒரு நபரை தொடர்புப்படுத்தி சொன்னால், இரண்டு சந்தர்ப்பம் தான் அதற்கு உள்ளது - ஒன்று மரணம் இன்னொன்று தூக்கம் . இது உங்கள் நிலை.

இவ்வாறு இரண்டாக பிரிப்பதை நான் உட்பிரிவு கொண்டு இன்னும் மூன்றாக பிரிக்கிறேன்.

கைப்பற்றுதல் என்று ஒரு நபரை பார்த்து சொன்னால் அது நிரந்தர மரணமாகவும் இருக்கலாம், தூக்கம் மாதிரியான தற்காலிக மரணமாகவும் இருக்கலாம் என்கிறேன்.. !

கைப்பற்றுதல் என்பது இரண்டு நேரத்தில் நடக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால், 
மரணம் என்று நீங்கள் பொதுப்படையாக சொன்னால் ஈசா நபி பற்றிய வசனம் புரியாது. அதையும் பொதுப்படையாகவே விளக்குவதற்கு அது உங்களுக்கு சாதகமாக அமையும். மேலே நான் பிரிப்பது போல அந்த மரணத்தையே உட்பிரிவு கொண்டு பிரித்து விட்டால் அந்த வசனத்திற்கு கைப்பற்றுதல் என்பதற்கான மூன்றாவது விளக்கம் கிடைக்கும்.

கைப்பற்றுதல் என்பதற்கு உயிரை நிரந்தரமாக கைப்பற்றுதல் என்கிற ஒரு பொருள் மட்டும் தான் உண்டு என்று நீங்கள் வாதம் செய்தால் தான் மூன்றாவதாக பொருள் செய்வது தவறு என்று ஆகும். 
கைப்பற்றுதல் என்பதற்கு நீங்களே நிரந்தர மரணம் என்கிற ஒரு பொருள் மட்டும் இல்லை என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

உயிர் அல்லாஹ்வால் கைபற்றடுகிறது என்று சொன்னால் அது எப்போது நேரும் என்று இதன் மூலம் தெரிகிறது. ஒருவரின் மரணத்தின் போதும் அவரது தூக்கத்தின் போதும்.


உயிர் கைப்பற்றப்படுதல் என்றால் மரணம் அல்லது தூக்கம் என்கிற இரு நேரம் தான் உண்டு என்று பொத்தாம் பொதுவாக சொல்லகூடாது, காரணம், மரணத்தின் போது உயிர் கைப்பற்றுதல் என்பது வேறு, தூக்கத்தில் உயிர் கைப்பற்றுதல் என்பது வேறு.
இரண்டு நேரங்களிலும் உயிரை ஒரே மாதிரியாக கைப்பற்றினால் தான் இரண்டு நேரத்தில் உயிரை கைப்பற்றுதல் வரும் என்று வாதம் வைக்க முடியும். 

ஒரு நேரத்தில் கைப்பற்றுதல் என்பதற்கு வேறு பொருள்.
இன்னொரு நேரத்தில் அதற்கு இன்னொரு பொருள் என்றால் கைப்பற்றுதல் என்பதை இடத்திற்கு தகுந்தவாறு எப்படி வேண்டுமானாலும் பொருள் செய்யலாம் என்பது தான் இதிலிருந்து கிடைக்கும் விடை!

ஆக கைப்பற்றுதல் என்கிற பொருளுக்கு, அது எந்த காலகட்டத்தில் நடந்தது என்று சிந்தனையை செலுத்துவதை விட, அந்த கைப்பற்றுதல் எப்படிப்பட்ட நிலைகளுக்கு எல்லாம் சொல்லப்படும் என்பதை சிந்திப்பது தான் பொருத்தமானது.

நிரந்தரமாக ஒருவரது உயிர் இந்த உலகை விட்டு பிரிவதையும் கைப்பற்றுதல் என்கிற சொல் குறிக்கும்.
அல்லாஹ் அவனது ஒரு சில செயல்பாடுகளை தற்காலிகமாக கையில் எடுத்துக்கொள்வதையும் கைப்பற்றுதல் என்கிற சொல் குறிக்கும்.
அப்படியானால் ஈசா நபியை அல்லாஹ் கைப்பற்றியதாக சொல்லும் போதும் மேலே உள்ள இரண்டில் எதையும் பொருத்தலாம். 
மரணம் அல்லது தூக்கம் இரண்டில் ஒன்று தான், என்று வாதம் வைக்க கூடாது!

இப்படி தான் புரிய வேண்டும். இப்படி புரிந்தால் எளிமையாக உள்ளது. 

நீங்கள் சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் உள்ள வேறுபாடு இது தான். நீங்கள் அந்த சம்பவத்தை பொதுவாக சொல்கிறீர்கள். மரணம் அல்லது தூக்கம் என்று.
நானோ, மரணம் என்றால் அதில் கைப்பற்றுதல் என்பதன் பொருள் என்ன? அதே போல தூக்கம் என்றால் அதில் கைப்பற்றுதல் என்பதன் பொருள் என்ன என்று நீங்கள் சொன்னவைகளுக்கு உள்ளே சென்று பார்க்கிறேன்.

தூக்கத்தில் உயிரை கைப்பற்றுவதையும் மரணம் என்று அல்லாஹ் சொன்னாலும் அதன் பொருளை சிந்திப்பது என்றால் இப்படி தான். அல்லாமல் பொத்தாம் பொதுவாக, கைப்பற்றுதல் என்றாலே அது மரணம் அல்லது தூக்கம் என்று பொருள் செய்வது தான் பாமரத்தனம்,

மரணத்திலும் தூக்கத்திலும் உயிர் கைப்பற்றப்பட்டாலும் இரண்டில் மரணத்தின் போது கைப்பற்றுதல் என்பது உயிரை நிரந்தரமாக கைப்பற்றுவதை குறிக்கும், இன்னொன்றில் உயிரை கைப்பற்றுவதை குறிக்காது, ஒரு சில செயல்பாட்டை மட்டும் கட்டுப்படுத்துவதை குறிக்கும்.
ஆக, உயிருடன் சேர்த்து வபாத் என்று வந்தால், அது மரணம் அல்லது தூக்கம் என்று பொருள் செய்வதை விட, நிரந்தரமாக உயிர் பிரிதல், தற்காலிகமாக செயல்பாடுகள் முடக்கப்படுதல் என்கிற இரு பொருளை கொள்வது தான் மேலே உள்ள விளக்கத்தின் முடிவு.

ஈசா நபியை பொறுத்தவரை அல்லாஹ் கைப்பற்றினான் என்றால் நிரந்தரமாக உயிரை பிரித்தான் என்றும் சொல்லலாம், அவரது செயல்பாடுகளில் ஒரு சிலவற்றை கட்டுக்குள் எடுத்துக்கொண்டான் எனவும் பொருள் செய்யலாம். உயிரை பற்றி வந்தால் கூட இரண்டு பொருளுமே செய்யலாம்.! 

உதாரணம் என்கிற பெயரில் நான் சொல்லாததை எடுத்து வைத்து விளக்குகிறீர்கள்.

உயிர்கள் மரணத்தின் போதும் அது அல்லாத போது அதன் தூக்கத்தின் போதும் கைபற்றபடுகிறது. என்ற வசனத்தை காட்டி,
உயிர்கள் மரணத்தின் போதும் அது அல்லாத போது அதன் தூக்கத்தின் போதும் மரணமடைகிறது. என்று பொருள் கொடுத்து பார்க்கிறீர்கள்.
அதாவது 
மனம் துக்கப்படும் போது , அது புண்படுகிறது.  என்ற வசனத்தை காட்டி , 
மனம்  துக்கப்படும் போது , அது துக்கபடுகிறது.  என்று வருவது பொருளற்றது என்று கூறுகிறீர்கள்.
இது தான் தவறான புரிதல் மற்றும் குழப்பம் அடைய செய்யும்.

தூக்கத்தின் போது மரணமடைகிறது என்று நான் பொருள் செய்யவில்லை. வபாத் என்பதற்கு மரணம் என்கிற ஒரு பொருள் தான் உண்டு என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் இங்கு இப்படி தான் பொருள் செய்ய வேண்டி வரும் என்பதை விளக்கினேன்.
ஆக மனம் புண்படும் என்பதற்கு மனம் துக்கப்படும் போது துக்கப்படும் என்று நான் சொல்லவில்லை, புண்படும் என்பதற்கு துக்கம் என்பது தான் ஒரே பொருள் என்றால் இப்படி தான் நீங்கள் செய்தாக வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

மரணத்தை பற்றி பேசுகிற ஏராளமான வசனங்கள் மவுத் என்கிற வாசகத்தை தான் கொண்டுள்ளன. அதற்கு மரணம் என்பதை தவிர வேறு பொருளை கொடுக்க இயலாது. வேறு சில இடங்களில் வபாத் என்பதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் சில இடங்களில் மரணம் என்று பொருள் செய்ய முடியாத வண்ணம் தூக்கத்தில் அல்லாஹ் நம்மை அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை பற்றி பேசும் போது வபாத் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆக, வபாத் என்பதற்கு, முழுமையாக உயிரை எடுத்து விடுதல் என்கிற அர்த்தம் இருப்பது போல, முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் அவரை கொண்டு வருதல் என்கிற பொருளும் இருக்கத்தான் செய்கிறது. 
தூக்கம் அல்லாத நேரத்திலும், அந்த வார்த்தைக்கு அந்த அர்த்தத்தை தான் கொடுக்க வேண்டும்.

மேலும், நான் அவர்களோடு இருப்பது வரை அவர்களை கண்காணித்தேன் என்று ஈஸா நபி சொல்வதும் இதை தான் உறுதி செய்கிறது. 

கைப்பற்றுதல் என்பது ஈசா நபியின் நிரந்தர மரணத்தை தான் சொல்கிறது என்று புரிவதாக இருந்தால், இந்த இடத்தில் நான் உயிருடன் இருப்பது வரை என்கிற வாசகத்தை ஈசா நபி பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், வபாத் என்பதற்கு மரணம் என்கிற பொருளுக்கு பதிலாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் சென்று விடுவதை தான் குறிக்கிறது என்பதை இன்னும் தெளிவாக்கும் விதமாக ஈசா நபி, "நான் அவர்களுடன் இருக்கும் வரை" என்று சொல்கிறார்கள்.
அதாவது, உயிருடன் இருக்கும் போது கூட அவர்களுடன் இருப்பது ஒரு நிலை  - அவர்களுடன் இருக்காத இன்னொரு நிலை என்கிற இரண்டு நிலை ஈசா நபிக்கு உள்ளது என்பது இதன் பொருள்.
தொடர்ந்து, நீ என்னை கைப்பற்றிய பிறகு (தவப்பைதனி) என்று சொல்கிற போது, இங்கு அல்லாஹ் தமது கட்டுபாட்டில் அவரை எடுத்துக்கொண்டதை உறுதி செய்கிறது.


அடுத்ததாக, ஈசா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் சென்று விட்டார்கள் என்கிற வசனமும் ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பதை உறுதி செய்வதாக எனது முந்தைய வாய்ப்பில் நான் சொன்னதற்கு மறுப்பாக, இந்த வசனம் இறங்கும் போது ஈசா நபி மரணித்து விட்டார்கள் தான், இருந்தாலும் அதை ஏன் அல்லாஹ் இங்கு சொல்லவில்லை என்றால், ஈசா நபி மரணித்து விட்டார் என்று சொல்வது, அவரை கடவுளாக நம்பும் மக்களிடையே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், என்று பதில் சொன்னீர்கள்.
மேலும், அவர்கள் ஈசா நபி இறந்து விட்டு மீண்டும் உயிர்தேழுந்தார்கள் என்று தான் நம்புகிறார்கள் என்றும் சொன்னீர்கள்.

இதற்கு தான் நான் கேட்டேன், அவர் மரணித்தது பற்றி சொல்வது அவரது கடவுள் தன்மையை மறுப்பதாக இவர்களை பொறுத்தவரை ஆகாது என்பது சரி தான் என்றாலும், இங்கே அதை சொல்லாமல் இருப்பதற்காக மீண்டும் உயிர்த்தெழவும் இல்லை என்பதையும் சொல்ல தேவையில்லை என்று எப்படி ஆகும்? என்று கேட்டேன்.

அதாவது, அந்த கூட்டம் ஏற்கனவே ஈசா நபி மரணித்து விட்டார் என்று நம்பும் கூட்டம் தான். மரணித்தாலும் ஒருவர் கடவுளாக ஆக முடியும் என்று நம்புகிற கூட்டத்தினரிடம் சென்று, அவர் மரணித்து விட்டார், மரணிப்பவர் எப்படி கடவுளாக ஆக முடியும்? என்று கேட்பது பொருந்தாது என்றாலும், ஈசா நபியை கடவுளாக நம்புகிறவர்கள் என்ன காரணத்தை சொல்லி அவரை கடவுளாக நம்புகிறார்களோ அந்த காரணத்தை இங்கே மறுக் வேண்டுமல்லவா?
என்ன காரணத்தை சொல்லி கடவுளாக நம்புகிறார்கள்? அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்கிற காரணத்தை சொல்லி..

அப்படியானால், ஈசா நபி கடவுள் இல்லை, என்று சொல்வதற்காகவே இறக்கப்படும் ஒரு வசனத்தில் அல்லாஹ் எதை சொல்ல வேண்டும்,? அவர் இறந்து விட்டார் தான், ஆனால் மீண்டும் உயிர்த்தெழவில்லை! என்று சொல்ல வேண்டும். இதை சொன்னால், அதுவே அவர்களுக்கு மறுப்பாக போய் விடும்.

ஆனால் அல்லாஹ்வோ, அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டதை சொல்கிறான். 

இதற்கு முன் சென்ற நபிமார்களை பற்றி சொல்லக்காரணம், அவர்களை போல சாப்பிட்டார்கள் , அவர்களை போல குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்கள் அவர்களை போல மரணித்தார்கள் என்று அனைத்தையும் சொல்வதற்கு தான் என்று பதில் சொல்கிறீர்கள்.

இதுவும் பொருத்தமான பதில் இல்லை. காரணம், முந்தைய நபிமார்களை பற்றி சொல்வதற்கு காரணம் , மனிதனின் எல்லா பலகீனங்களை பற்றியும் ஒப்பிடுவதற்கு தான் என்றால், அடுத்த வசனத்தில் ஈசா நபி உணவருந்தினார் என்று தனியாக அல்லாஹ் சொல்ல மாட்டான். அதை தான் உங்கள் கருத்துப்படி ஏற்கனவே சொல்லி விட்டானே ! 
முதல் வசனத்திலேயே, முன் சென்ற நபிமார்கள் எப்படி எல்லா பலகீனங்களையும் கொண்டிருந்தார்களோ அதே போல ஈசா நபியும் கொண்டிருந்தார் என்று சொல்லி விட்டால், இதிலேயே உணவும் அடங்கி விடும்.
பிறகு தனியாக அவர் உணவருந்தக்கூடியவர் என்று சொல்வதில் அர்த்தம் இருக்குமா? என்றால் இல்லை.
பிறகு இதற்கு என்ன பொருள்?

ஒரு வசனம் என்ன நோக்கத்திற்காக இறக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் கருத்து இருக்க வேண்டும். நானோ நீங்களோ பேசும் போதே இப்படி தான் சிந்திப்போம் எனும் போது அல்லாஹ் நம்மையே படைத்தவன்.!

ஈசா நபி கடவுள் கிடையாது என்று சொல்லும் நோக்கில் இந்த வசனத்தை அல்லாஹ் இறக்குகிறான்! அந்த மக்கள் ஈசா நபியை கடவுள் என்று நம்பிக்கொண்டிருகிறார்கள், உங்கள் கருத்துப்படி ஈசா இறந்து விட்டார், இருப்பினும், அவர் மீண்டும் உயிர் பெற்று வந்தார் என்று அவர்களே மீண்டும் நம்பி மீண்டும் அவர்களது கடவுள் நம்பிக்கையை தொடர்கிறார்கள்.
இப்போது அவர்களுக்கு மறுப்பு சொல்வதானால், ஈசா வெறும் தூதர் தான், அவர் மரணித்தார், மீண்டும் எழவில்லை என்று சொல்வதே போதுமானது!

இன்னும் சொல்லப்போனால், அவர் மரணித்து விட்டார் என்று சொல்வது அவர்களது கடவுள் நம்பிக்கையை பாதிக்காது என்று வாதம் வைத்தால் அதே போல தொடர்ந்து வரக்கூடிய "அவர் உணவருந்தினார்" என்கிற வசனமும் அவர்களது கடவுள் நம்பிக்கையை பாதிக்காது!
ஈசா நபி அவர்கள் மத்தியில் வாழும் போதும் அவரை கடவுளாக தான் அந்த மக்களில் ஒரு கூட்டத்தார்  நம்பினார்கள், அப்போதும் ஈசா நபி உணவருந்திக்கொண்டு தான் இருந்தார்.

அந்த கூட்டத்தாரின் நம்பிக்கையின் படி இறந்தவர் கூட கடவுளாகலாம் எனும் போது, உணவருந்துபவரும் கடவுளாகலாம் என்பதும் தான் அவர்களது நம்பிக்கை. பிறகு ஏன் இங்கு ஈசா நபி உணவருந்தியத்தை அல்லாஹ் சொல்ல வேண்டும்? உங்கள் கருத்துப்படி இதுவும் உங்களுக்கு முரணாகவே உள்ளது.

எது சரியான புரிதல்? அவர் முன்னரே இறந்திருந்தால் அவரது மரணத்தையும் அவர் மீண்டும் எழுந்து வராததையும் இங்கு சொல்லியே அவரது கடவுள் தன்மையை மறுக்கலாம். ஆனால் முன் சென்றவர்கள் மரணித்து விட்டார்கள் என்று சொல்வது இவர் இன்னும் மரணிக்கவில்லை என்கிற பொருளை தான் தரும். அவர்கள் மரணித்தது போல இவரும் மரணிப்பார், அவர்கள் எப்படி மீண்டும் உயிர் பெறவில்லையோ அது போல இவரும் உயிர் பெற மாட்டார். இது தான் இந்த வசனத்தின் கருத்து. 
ஈசா நபி முன்னரே இறந்திருந்தால் ஈசா இறந்து விட்டார், மீண்டும் உயிர் பெறவில்லை, பெற மாட்டார் என்று மட்டும் சொல்லியிருக்க வேண்டும். 
அதை சொல்ல வேண்டிய வசனத்தில் அதை சொல்லாமல் முன் சென்றவர்களை அல்லாஹ் சொல்வதற்கு காரணம், ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை !!!
நீங்கள் மேலோட்டமாக சிந்தித்து, உங்கள் கருத்துக்கு வாதங்களை வளைக்கிறீர்கள். ஆழமாக சிந்திக்க மறுக்கிறீர்கள்.

அடுத்து, உயர்த்துதல் என்பதற்கு உடலுடன் உயர்த்துதல் என்கிற பொருள் தான் உண்டு என்று நான் கூறியதை மறுத்த நீங்கள், அதற்கு அந்தஸ்து உயர்வு என்று தான் பொருள் செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள்.

குரானிலோ அல்லது இலக்கணத்திலோ அல்லாஹ்வால் ஒரு மனிதர் உயர்த்தபடுவதை கண்ணியத்தில் என்ற அர்த்தம் கொண்டே தவிர வேறு ஒரு கருத்தை பார்க்க முடியாது.

ஒரு வசனத்தை காட்டி இந்த வசனம் இந்த கருத்தை சொல்கிறது என்றால், இதே கருத்தை வேறெந்த குர் ஆன் வசனமும் சொல்லவில்லை ஆகவே இதை ஏற்க மாட்டேன் என்று சொல்வது பொருந்தாத பதிலாகும்.

ஒரு மனிதர் உயர்த்தப்பட்டார் என்றால் இந்த வசனத்தின் படி அந்த மனிதரை உடலுடன் உயர்த்தியது தான் பொருளாகிறது. வேறு வசனங்களில் அந்தஸ்தை உயர்த்துதல் என்று பொருள் வந்தால் அந்த வசனத்திற்கு அப்படி பொருள் செய்ய வேண்டும். அந்த வசனத்திற்கு அப்படி பொருள் என்பதால் இதற்கும் அப்படி தான் பொருள் செய்ய வேண்டும் என்று வாதிக்க கூடாது.

இத்ரிஸ் அலை அவர்களை பற்றி பேசும் போது இடம் என்ற ஒரு துணை சொல் உள்ளது என்று சொல்கிறீர்கள். ஒரு உயரிய இடத்திற்கு உயர்த்தினான் என்று சொல்வது எப்படி அந்தஸ்த்து என்று பொருள் படும் ? ஒரு இடத்தில் அவரை உயர்த்தினான் என்று தான் நேரடியாக பொருள் செய்ய வேண்டியிருக்கும். 

என்று அடுத்து கேட்கிறீர்கள். இடம் என்கிற ஒரு அடை மொழி அங்கு வந்துள்ளதா இல்லையா என்பது தான் எனது கேள்வி. அவரை ஒரு இடத்திற்கு உயர்த்தினான் என்று ஒரு வசனத்திலும், அவரை உயர்த்தினான் என்று இன்னொரு வசனத்திலும் சொல்லப்பட்டால் இரண்டுக்கும் ஒரே பொருளை தான் செய்வேன் என்கிற வாதம் ஏற்கத்தக்க வாதமே அல்ல.
அப்படியானால் அந்த வசனத்திற்கு கூடுதலாக இடம் என்கிற வார்த்தையை அல்லாஹ் அவசியமில்லாமல் சொன்னானா?
இடம் என்கிற சொல் இல்லாமலேயே அதே கருத்தை சொல்ல முடியும் என்றால் இடம் என்று கூடுதலாக அல்லாஹ் சொல்லவேண்டியதில்லை.

அப்படியானால் இடம் என்பதற்கு இங்கே என்ன அர்த்தம்? உயரமான இடம் என்று பொருள் கொண்டால் நாம் சிந்தனையை செலுத்தவில்லை என்று ஆகும். அவரை சிறப்பித்து கூறும் வசனத்தில் ஒரு சிறந்த இடத்திற்கு உயர்த்தினான் என்றால் அந்தஸ்து, தகுதி என்கிற பொருள் தான் கொள்ள முடியும். இடத்தை இடம் என்றே வைத்துக்கொண்டாலும் அதுவும் இதே கருத்தை தான் தரும்.

ஆனால், இடம் என்றோ அந்தஸ்து என்றோ எதையுமே சொல்லவில்லை என்றால் அப்போது அந்தஸ்து என்று ஏன் பொருள் செய்ய வேண்டும் ? என்பது தான் எனது கேள்வி.

இந்த இடம், ஈசா நபியின் சிறப்பை பற்றி பேசுகிற வசனமல்ல. அவர் யூதர்களின் சதியில் இருந்து காப்பாற்றப்பட்டதை சொல்லும் வசனமாகும்.
அப்படி சொல்கிற தொடரில், அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்றால் அவர்கள் கொலை சதியில் சிக்க விடாமல் அல்லாஹ் ஈசா நபியை காப்பாற்றியதை தான் இப்படி சொல்ல முடியும்.
அந்த வசனத்தை தொடராக படித்தால் அது புரியும்.

அவர்கள் அவரை கொன்று விட்டதாக நினைக்கிறார்கள். 
ஆனால் அவரை அவர்கள் கொலை செய்யவில்லை.
அவர்கள் தவறான நம்பிக்கையிலேயே இருக்கிறார்கள்.
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை.
மாறாக, அவரை அல்லாஹ் உயர்த்தினான்.

என்று சொன்னால், இங்கு அவர்களது கொலை சதியில் இருந்து எதை செய்தால் அவர் காப்பாற்றப்படுவாரோ அதை செய்ததாக அல்லாஹ் சொல்கிறான் என்று புரிவது தான் பொருத்தமாக உள்ளது.

உயர்த்தினான் என்று வருகிற வசனத்தில், அந்தஸ்து உயர்வு என்று வேறு வேறு இடங்களில் நாம் வைக்கும் மொழியாக்கத்தை போல இங்கு வைப்பதற்கு ஏதுவாக எந்த துணை சொல்லும் இல்லை. 
இத்ரீஸ் நபி பற்றி சொல்வது போல, உயர்ந்த ஈடதிற்கு உயர்த்தினான் என்று கூட இல்லை.
வெறுமனே உயர்த்தினான் என்று தான் உள்ளது.

வெறுமனே உயர்த்துதல் என்று வந்தால் நேரடியான பொருளான மேலே உயர்த்துதல் என்கிற ஒரு பொருளை தான் கொடுக்க வேண்டும் என்பதற்கு தொழுகையில் தக்பீர் சொல்லி கைகளை உயர்த்துவது பற்றி வரக்கூடிய ஹதீஸையும் சுட்டிக்காட்டினேன்.

இதற்கு பதில் சொல்லாமல் வேறொரு இறை வசனத்தை உங்கள் கருத்துக்கு சாதகமாக இருப்பதாக எண்ணி காட்டினீர்கள், ஆனால் அது எனது கருத்தை தான் உறுதி செய்கிறது.

அல்லா நாடியிருந்தால் அவனை தனது அத்தாட்சிகள் கொண்டு உயர்த்திருப்பான். இது தான் அந்த வசனம்.
உங்கள் கூற்று படி ஆளை உயர்த்தியிருப்பன் என்றா புறிந்து கொள்வது ?

என்று கேட்கிறீர்கள். நான் சொல்ல வேண்டிய ஆதாரத்தை எனக்கு எடுத்து தந்து உதவி செய்துள்ளீர்கள்.  இங்கும் அல்லாஹ் அவரை அத்தாட்சிகளை கொண்டு உயர்த்தியிருப்பான் என்று சொன்னால், எதை கொண்டு உயர்த்துவதாக சொல்கிறானோ அதில் உயர்த்தினான்.
அந்தஸ்தில் உயர்த்தினான் என்றாலும் அந்தஸ்தைக்கொண்டு உயர்த்தினான் என்றாலும் ஒரே பொருள் தான்.
அத்தாட்சிகளை கொண்டு உயர்த்தினான் என்றாலே அதன் பொருள் அத்தாட்சிகளை கொடுத்து அவரை சிறப்பித்தான் என்பது தான்.

அதே போல தான் ஈசா நபியை பற்றி அல்லாஹ் சொல்கிறானா? அவரை அவர்கள் கொல்லவில்லை, மாறாக, அவரை அத்தாட்சிகளின் மூலம் உயர்த்தினோம் என்றானா? வெறுமனே உயர்த்தினோம் என்பதற்கும் இதை கொண்டு உயர்த்தினோம் என்று சொல்வதற்கும் கருத்தின் படியே வேறுபாடு உள்ளது.

அப்துல் காதரின் அந்தஸ்தை உயர்த்தினேன் என்று சொன்னாலும், அப்துல் காதரை நல்ல தொழிலை கொண்டு உயர்த்தினேன் என்று சொன்னாலும் ஒரே அர்த்தம் தான்.
நல்ல தொழிலை கொண்டு உடலுடன் உயர்த்துவதாக இங்கே பொருள் வராது.
ஆனால் எதையும் சொல்லாமல் வெறுமனே உயர்த்தினேன் என்றால் அவரையே உயர்த்தினேன் என்று தான் பொருள் செய்ய முடியும்.


அல்லா அவரை தன்னளவில்(கண்ணியத்தில்) உயர்த்தினான்.
ஈஸா வே உம்மை கைப்பற்றுவேன். மேலும் உன்னை என்னளவில் உயர்த்தி கொள்வேன்.
இது தன்னிலையில் பேசவும் படுகிறது.
இரெண்டும் ஒரே இலக்கணப்படி தான் பார்க்கப்படுகிறது. அர்த்தத்தில் தான் மாறு படுகிறதே தவிர இலக்கணத்தில் அல்ல. 

எந்த துணை சொல்லும் இல்லை என்று நிரூபணம் ஆகிற போது, "என்னளவில்" என்று உள்ளதே, இது ஒரு துணை சொல் தானே என்கிறீர்கள்.
என்னளவில் என்றால் என்னை பொறுத்தவரை, என்று பொருள் செய்ய வேண்டும் என்கிறீர்கள். என்னை பொறுத்தவரை என்று அல்லாஹ் சொல்ல மாட்டான், இது பொருந்தாத வார்த்தை அமைப்பு.

நானோ நீங்களோ சொல்வோம், என்னை பொறுத்தவரை அவர் நல்லவன் என்று சொல்வோம். அதன் பொருள், அவரது பலகீனம் நமக்கு தெரியாது, மற்றவர்கள் சொல்லும் குறையை நான் ஏற்க மாட்டேன், என்று பொருளாகும்,

இப்படி மனிதன் பேசுவது போல அல்லாஹ் பேச மாட்டான். ஈசா நபி நல்லவர் என்று அல்லாஹ் சொல்லி விட்டாலேயே அவர் உண்மையாகவே நல்லவர் தான். அப்படி பொதுவாக சொன்னாலே போதும் எனும் போது என்னை பொறுத்தவரை அவர் நல்லவர் என்று அல்லாஹ் சொல்ல மாட்டான். சொல்ல தேவையில்லை.

அதிலும், இன்னொரு வசனத்தில், அவரை உயர்துபவனாகவும் என்னை பொறுத்தவரை அவரை (அந்தஸ்தில்) உயர்த்தியும்  அவரை தூய்மைப்படுத்தியும்  .... என்று மீண்டும் சொல்வது மீண்டும் பொருத்தமற்ற வார்த்தை பயன்பாடு,!!!

ஒரு வாதத்திற்கு அது தான் பொருள் என்றாலும், அப்போதும் அல்லாஹ்வை பொறுத்தவரை அவர் மேலே உயர்த்தப்பட்டார் என்கிற அர்த்தம் தான் மிஞ்சும். இதையும் நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

ஈஸா வே உன்னை உடலோடு தூக்கி கொள்வேன். பின்னர் என்னளவில் உம்மை உடலோடு உயர்த்தி கொள்வேன்.
இது பொருள் படாது. இது முற்றிலும் தவறென்பதை பளிச்சென்று சொல்லும் வசனம் இது.


இதற்கு நான் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கும் போது அதை பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் மீண்டும் இதே கேள்வியை தான் கேட்கிறீர்கள்.

அவரை அல்லாஹ் கைப்பற்றக்கூடியவனாகவும் தன்னளவில் உயர்துபவனாகவும் இருக்கிறான் என்று சொன்னால், இரண்டுமே உடலுடன் தூக்குதல் என்கிற பொருளை கொடுக்க முடியாது.

ஆனால் இதை எப்படி புரிய வேண்டும் என்பதை நான் விளக்கியுள்ளேன்.

கைப்பற்றுதல் என்பதற்கு ஒரு பொருள் - மரணம் - அதாவது நிரந்தரமாக உயிர் பிரிதல்.
இன்னொரு பொருள் - சில செயல்பாடுகளை முடக்குதல் - தூக்கத்தில் முடக்கப்படுவது போல!
அதாவது தூக்கத்தில் உயிரை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்றால் நமது செயல்பாடுகளில் சிலவற்றை தமது கட்டுப்பாட்டில் அல்லாஹ் கொண்டு வருகிறான் என்று பொருள்.

அதே போல, ஈசா நபியை கைப்பற்றியதாக அல்லாஹ் சொல்வது, ஈசா நபியை அல்லாஹ் தமது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டான். எப்படி என்பதை கற்பனை தான் நம்மால் செய்ய முடியும். அவர்களை யாராலும் பார்க்க முடியாதபடி கட்டுக்குள் கொண்டு வந்ததாக இருக்கலாம், இவர் பேசவது யாருக்கும் கேட்காதவாறு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். எப்படி வைத்தாலும், அல்லாஹ் அவரை தமது கட்டுப்பாட்டில் (control) எடுத்துக்கொண்டான்.
அடுத்து ,அவரை உடலுடனே தூக்கி விட்டான். ! இப்படி புரியும் போது அந்த வசனத்தில் எந்த குழப்பமும் இல்லை.


மேலும், அல்லாஹ் தமது வல்லமை பற்றி இங்கு பேசுவது அவர் உடலுடனேயே தூக்கப்பட்டிருந்தால் தான் பொருந்தும் என்பதற்கும் மறுப்பு சொல்கிறீர்கள்.

உடலோடு உயர்த்திருந்தால் மட்டுமே இங்கே இதை சொல்ல முடியும் என்று சொல்வதெல்லாம் வாதமாக முடியுமா ?
கொல்ல வந்த யூதர்களை விபத்தில் இறக்க செய்திருந்தாலும் கூட அல்லா வல்லமை மிக்கவன் , ஞானமிக்கவன் என்று சொல்லலாம்.
ஈஸா நபியை அந்த இடத்திலிருந்து அப்புறபடுத்தி வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றிருந்தாலும் இதை சொல்லலாம்.

ஆம், கொல்ல வந்த யூதர்களை ஏதாவது செயல் மூலம் அழித்தால் இதை இங்கு சொல்லலாம் தான், நானும் மறுக்கவேயில்லை.
அப்படி இங்கே அல்லாஹ் சொல்கிறானா? என்பது தான் கேள்வி.
அப்படி அழித்தால் இங்கு சொல்லலாம் தானே? என்று கேட்பதாக இருந்தால் உண்மையில் அப்படி சொல்லியிருக்க வேண்டும்.

யூகமாக ஒன்றை சொல்லி விட்டு, இப்படி நடந்தால் இப்படி சொல்வது பொருந்தும் தானே? என்று கேட்பது தவறு.

அந்த வசனத்தில் நீங்கள் சொன்ன யூகங்கள் இல்லை. அவரை கொன்றதாக அவர்கள் நினைத்தார்கள், ஆனால் நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை, மாறாக அல்லாஹ் அவரை உயர்த்தினான், அல்லாஹ் வல்லமைமிக்கவன், அறிவுடையவன்.

இவ்வளவு தான் உள்ளது. இவ்வளவை சொல்லி அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்றால் நான் ஏற்கனவே சொன்னது போல, எதை செய்தால் கொலையில் இருந்து ஈசா நபி காப்பற்றப்படுவாரோ அதை அல்லாஹ் செய்துள்ளான். அது எது என்பதை அல்லாஹ் சொல்லியும் விட்டான். அது தான் அவரை உடலுடன் உயர்த்துதல்.
அப்படி செய்வது சாதரணமாக யாருக்கும் முடியாது என்றாலும் அல்லாஹ்வுக்கு அந்த வல்லமை உண்டு !

இங்கே வல்லமை பற்றி அல்லாஹ் எதற்கு சொன்னான் என்பதை அந்த வசனமே சொல்லி விட்ட போது நாம் ஏன் நீங்கள் சொல்வது போல யூகம் மட்டும் செய்ய வேண்டும்? ஆக இந்த வாதமும் பொருந்தாது.

அகவே, ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பது தான் ஹதீஸ்களின் மூலமும், மேலே விளக்கப்பட்ட இறை வசனங்கள் மூலமும் மீண்டும் நிரூபணமாகிறது.

ஈசா நபி மீண்டும் வருவார் என்று சொல்கிற இறை வசனங்கள் பற்றி அடுத்தடுத்து பார்க்கலாம்.

வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக