திங்கள், 17 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 7
17/09/2012அஸ்ஸலாமு அலைக்கும்..

உயர்த்தினான் என்று வரக்கூடிய வசனம் பற்றியோ, தன்னளவில் உயர்த்தினான் என்பதன் கருத்து பற்றியோ நான் என்ன சொன்னாலும் அதை மறுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டு வாதிக்கிறீர்கள் என்பது இதை படிப்பவர்களுக்கு புலனாகி வருகிறது.
அதற்கு சான்றாக, எனது வாதங்களை மறுப்பதற்கு நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்களும் உதாரணங்களும் உங்கள் வாதங்களுக்கே முரணாக தான் உள்ளது என்பதை எனது முந்தைய வாய்ப்பில் ஒவ்வொன்றாக விளக்கியிருந்தேன்.
இதற்கு பல சான்றுகளை நான் காட்டியிருந்தும், ஒன்றுக்கு மட்டும் இப்போது பதில் சொல்லியுள்ளீர்கள். 

மேலும், உங்கள் வாதங்களை மேலும் வலு சேர்க்கும் என்று நம்பி, இந்த வாய்ப்பிலும் கூட ஒரு வாதத்தை வைக்கிறீர்கள். வேடிக்கை என்னவென்றால், இந்த வாய்ப்பில் நீங்கள் வைத்துள்ள வாதமும் எனக்கு தான் சான்றாக உள்ளது !! உங்களுக்கு எதிராக தான் உள்ளது !!!
உங்களுக்கு எதிரான கருத்தை நீங்களே அடுக்கடுக்காக எடுத்து வைத்து வாதம் செய்து வருகிறீர்கள்.
இதை குறித்து விளக்கமாகவே அறிவோம்.

அடிப்படையாக, உயர்த்தினான் என்று வெறுமனே சொல்வதற்கும், அந்தஸ்து, தகுதி, இடம் போன்ற அடை மொழிகளுடன் சேர்த்து உயர்த்தினான் என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. அந்தஸ்தை உயர்த்தினான் என்றால் அந்தஸ்தில் உயர்த்தினான் என்று தான் பொருள். இதற்கு அது தான் பொருள் என்பதால் வெறுமனே உயர்த்தினான் என்று சொன்னாலும் அந்தஸ்தை உயர்த்தினான் என்று தான் பொருள் செய்வேன் என்று சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை. 
அப்படியானால் எல்லா இடங்களிலும் உயர்த்தினான் என்று மட்டுமே சொன்னால் போதுமானது. தகுதியில் உயர்த்தினான், அந்தஸ்தில் உயர்த்தினான் என்று அவசியமில்லாமல் அல்லாஹ் கூடுதல் வார்த்தையை சேர்த்து சொல்ல தேவையில்லை.

இத்ரீஸ் நபியை பற்றி சொல்கிற வசனத்தில் உயர்ந்த இடத்தில் உயர்த்தினான் என்று அல்லாஹ் சொல்கிறான். இது, அவரது தகுதியை உயர்த்துவதை தான் குறிக்கிறது என்பது எளிதில் புரிகிறது.

இதற்கு ஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள், 

இதிர்ஸ் நபிக்கு அல்லா எந்த துணை சொல்லை பயன்படுத்துகிறான் ? ஒரு உயரிய இடம் என்பதை தானே ?
இதற்கு நீங்கள் அந்தஸ்த்து என்று எப்படி முடிவெடுத்தீர்கள் ?
ஒரு உயரிய இடம் என்பது ஒரு உயர்ந்த அந்தஸ்த்து என்றால், தன்னளவில் உயர்த்தி கொண்டான் என்று சொல்லும் போது அது அவரது கண்ணியத்தை அல்லா உயர்த்தியிருக்கிறான் என்று ஏன் பொருள் கொள்ள முடியாது ?


நான் பல முறை பதில் சொல்லியிருந்தும், அதையே மீண்டும் கேட்டுள்ளீர்கள்  .

உயரிய இடம் என்று அல்லாஹ் சொன்னால் அதற்கு எப்படி அந்தஸ்து என்று பொருள் ஆகும்? என்பது உங்கள் கேள்வி.
அது அந்தஸ்து தான் என்று என்னால் தெளிவாகவே வாதிக்க முடியும். ஆனால் அது இங்கு தேவையில்லை. 
ஏன் தேவையில்லை என்றால் அங்கே என்ன துணை சொல் இருக்கிறதோ அதை நேரடியாகவே பொருள் செய்யுங்கள் என்று நான் பொதுவாகவே பதில் சொல்கிறேன்.
இத்ரீஸ் நபியை உயர்ந்த இடத்தில் அல்லாஹ் உயர்த்தினான்.
இடத்தை இடம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அல்லது அந்தஸ்து என்று வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு பிரச்சனையில்லை.
இதில் எனது வாதம் ஒன்றே ஒன்று தான் - இத்ரீஸ் நபியை உயர்ந்த்த இடத்தில் அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்ல வேண்டும் !! அவ்வளவு தான்.
காரணம், உயர்ந்த இடம் என்று வந்து விட்டது. (அந்த உயர்ந்த இடம் என்பதற்கு என்ன பொருள் என்பதை பற்றி சிந்திக்க தேவையில்லை, எப்படி சிந்தித்தாலும், உயர்ந்த இடம், உயர்ந்த இடம் தான்.

இப்போது இதே போல ஈசா நபி பற்றிய வசனத்தில் அல்லாஹ் இப்படி தான் சொல்கிறானா? ஈசா நபியை பற்றி அல்லாஹ் சொல்லும் போது அல்லாஹ் உயர்த்தினான் என்று மட்டும் தான் சொல்கிறான். 

உயர்ந்த இடத்திற்கு இத்ரீஸ் நபியை உயர்த்தியதாக அல்லாஹ் சொல்வதால் அங்கே நேரடியாக உயர்ந்த இடம் என்று நான் சொன்னது போல இங்கே உயர்த்தினான் என்று மட்டும் சொல்வதால் நேரடியாக, அவரை உயர்த்தினான் என்று மட்டும் பொருள் செய்கிறேன்.

இடம் என்பதற்கு தகுதி, அந்தஸ்து, நிலை என்கிற பல அர்த்தங்கள் இருக்கிறது என்பதாலும், இத்ரீஸ் நபி பற்றிய வசனத்தில் இந்த அர்த்தங்கள் தான் அதற்கு பொருந்தும் என்பதாலும் தகுதியில் உயர்த்தினான் என்று கூடுதல் விளக்கத்தை இத்ரீஸ் நபி வசனத்திற்கு தரலாம்.
அப்படி கூடுதல் விளக்கம் தர ஈசா நபி பற்றிய வசனத்தில் என்ன வாசகம் இருக்கிறது என்பது தான் பல வாய்ப்புகளில் நான் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி.
மீண்டும், இத்ரீஸ் நபி பற்றிய வசனத்தில் இடம் என்று வந்து விட்டதல்லவா? என்று வாதம் செய்வது எனது கேள்விக்கு எப்படி பதில் ஆகும்?

இத்ரீஸ் நபி வசனத்தில் இடம் என்கிற கூடுதல் வார்த்தை உள்ளது. அதை நேரடியாக பொருள் செய்யுங்கள், அல்லது அதற்கு அகராதியில் இருக்கும் பல அர்த்தங்களில் ஒன்றை எடுத்து அதற்கு பொருத்துங்கள், பிரச்சனையில்லை.

அந்த வசனத்தில் அப்படி செய்கிறோம் என்பதால் எந்த கூடுதல் வார்த்தையும் இல்லாமல் வருகிற வசனத்திற்கும் அதையே செய்வேன் என்று சொல்வது எந்த அறிவுக்கும் பொருந்தாது.

அடுத்து, இதை மறுப்பதற்கு, 7 :176 வசனத்தில் அத்தாட்சிகளை கொண்டு உயர்த்தியிருப்போம் என்று குர் ஆனில் வேறொரு வசனத்தை உதாரணத்திற்கு காட்டினீர்கள், அதுவும் எனது கருத்துக்கு தான் ஆதரவாக உள்ளது.

அத்தாட்சிகளை கொண்டு அவனை உயர்த்தியிருப்போம் என்று சொன்னால் எதன் மூலம் அவன் உயர்த்தபடுவான் என்று வேண்டுமானால் சொல்லலாம். எதனை உயர்த்துவான் என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள் ?
தனது அத்தாட்சி மூலம் அவனை உடலோடு உயர்த்தினான் என்று பொருள் வராமல் எப்படி
தனது அத்தாட்சி மூலம் அவனை அந்தஸ்த்தில் உயர்த்தினான் என்று எப்படி பொருள் வந்தது ?

என்று கேட்கிறீர்கள். மிகவும் சாதாரணமான கேள்வி இது.

எதன் மூலம் உயர்த்தப்படுவான் என்று சொல்லலாம், எதனை உயர்த்துவான் என்று சொல்ல முடியாது என்று சொல்கிறீர்கள்.
ஏன் சொல்ல முடியாது? 
அத்தாட்சிகளை கொண்டு உயர்த்துவான் என்றால் அத்தாட்சிகளை கொண்டு உயர்த்துவான், அவனை உயர்த்துவான்!

எதனை உயர்த்துவான் - அவனை உயர்த்துவான். !!

இதை அறிய என்ன சிரமம்?
தனது அத்தாட்சி மூலம் உடலோடு உயர்த்தினான் என்று ஏன் சொல்ல முடியாது என்று கேட்கிறீர்கள். சொல்லவே முடியாது ! 

அத்தாட்சிகளை கொண்டு அவரது அந்தஸ்தை உயர்த்தினான் என்பது தான் இந்த வாசக அமைப்பின் பொருள்.

அத்தாட்சிகளில் உயர்த்தினான் என்று சொன்னாலும் அத்தாட்சிகளை கொண்டு உயர்த்தினான் என்று சொன்னாலும் ஒரே அர்த்தம் தான்.

அவனை நல்ல சம்பளத்தில் உயர்த்தினேன் என்று ஒரு முதலாளி சொல்வதற்கும், அவனை நல்ல சம்பளத்தை கொண்டு உயர்த்தினேன் என்று சொல்வதற்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா?

அதுவே, அவனை உயர்த்தினேன் என்று பொதுவாக சொன்னால் அதுவும் மேலே உள்ளதும் ஒன்றாகுமா? ஒன்றாகும் என்றால் சம்பளத்தில் என்கிற கூடுதல் வாசகம் எதற்காக?

அந்தஸ்தில் உயர்த்தினான் என்றாலும், அத்தாட்சியை கொண்டு உயர்த்தினான் என்றாலும், உயர்ந்த இடத்தில் உயர்த்தினான் என்று சொன்னாலும் ஒரே பொருள் தான்.

மேலே உள்ளவைகளுக்கு ஒரே அர்த்தம் தான் என்று சொல்லி விட்டதால், வெறுமனே "உயர்த்தினான்" என்று சொல்வதற்கும் அதே அர்த்தத்தை கொடு என்று அடம்பிடித்தால் என்ன நியாயம்? 
அப்படியானால், மேலே உள்ள வசனங்களிலும் வெறுமனே உயர்த்தினேன் உயர்த்தினேன் என்று மட்டும் அல்லாஹ் சொல்லியிருப்பானே !

ஆக, எனது கருத்துக்கு தான் உங்கள் உதாரணம் வலு சேர்க்கிறது.


இப்போது, இன்னொரு உதாரணத்தை சொல்லி பார்க்கிறீர்கள்.

கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து புறிந்து கொள்ளவில்லை என்றால் உங்களது வாதப்படி,
வசனம் 2 :63 ,
இன்னும் உங்களிடம் வாக்குறுதி வாங்கி , "தூர்" மலையை உங்கள் மேல் உயர்த்தி , நான் உங்களுக்கு கொடுத்ததை உறுதியுடன் பற்றி கொள்ளுங்கள்.
இங்கே தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி என்றால் மலையை அவர்களுக்கு மேலாக தூக்கினான் என்று பொருள் பட வேண்டும். இப்படி தான் பொருள் கொள்கிறீர்களா ? 

என்று அடுத்த வாதத்தை வைக்கிறீர்கள்.

இது மேலும் எனது கருத்தை உறுதி செய்வதுடன், உங்கள் வாதம் தவறு தான் என்பதை இன்னும் சந்தேகமற நிரூபிக்கிறது !!!

அடை மொழி எதுவும் இல்லாமல் வெறுமனே உயர்த்தினான் என்று சொன்னால் அவரையே உயர்த்தினான் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று சொன்னதற்கு, அப்படியானால் 2 :63 வசனத்திற்கு அப்படியே உயர்த்தினான் என்று பொருள் கொள்ள முடியவில்லையே என்று கேட்கிறீர்கள்.

தவறு ! அதற்கும் அப்படியே உயர்த்தினான் என்று தான் பொருள் !!!!!

தூர் மலையை அவர்கள் தலை மேல் உயர்த்திப்பிடித்து அவர்களிடம் ஒப்பந்தம் வாங்கியதை தான் இங்கே அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். 
  • ஈசா நபி பற்றிய வசனத்தில் உள்ளது போல இங்கும் "ரபா" என்கிற வார்த்தை வருகிறது. 
  • ஈசா நபி பற்றிய வசனத்தில் உள்ளது போல  இங்கும் வேறெந்த அடை மொழியும் வரவில்லை.
  • ஆகவே ஈசா நபி பற்றிய வசனத்தில் உள்ளது போல இங்கும் அப்படியே உயர்த்தினான் என்று தான் பொருள் !!

இந்த உதாரணத்தையும் எடுத்து தந்து எனக்கு உதவி புரிந்தமைக்கு எனது நன்றி !

ஆக, உங்கள் கருத்தை நிறுவ எந்த வசனமாவது உதவியாக இருக்குமா என்று தேடிப்பார்த்து சொல்லும் எந்த வசனமும் உங்கள் கருத்தை எதிர்க்க தான் செய்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக,
ஈசா நபியை உயர்த்தினான் என்று சொல்லி விட்டு அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொல்கிறானே, இங்கு அவரை உடலுடன் உயர்த்தியிருந்தால் தான் இதை அல்லாஹ் சொல்ல வேண்டும் என்று சொன்னதற்கும் சில மறுப்புகளை தந்தீர்கள்.

அப்படியானால் குர் ஆனில், இத்தா இருக்கும் பெண்களுக்கான சட்டத்தை சொல்லி விட்டு அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொல்கிறானே, இதற்கு மட்டும் என்ன பொருள் ? என்று கேட்டீர்கள்.

அதே போல், குர் ஆனில், உயில் எழுதி வைத்தல் பற்றிய ஒரு சட்டத்தை சொல்லி விட்டு அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொல்கிறானே, இதற்கு மட்டும் என்ன பொருள் ? என்று கேட்டீர்கள்.

இந்த வேதமும் ஞானமும் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் துவா செய்ய சொல்கிற வசனத்திலும் அதை சொல்லி விட்டு அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொல்கிறானே, இது ஏன் என்று கேட்கிறீர்கள்.

இன்னொரு வசனத்தில் ஸாலிஹ் நபியை காபிர்களிடம் இருந்து அல்லாஹ் எப்படி காப்பாற்றினான் என்பதை சொல்கிறான், சொல்லி விட்டு அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொல்கிறானே, இது ஏன் என்று கேட்கிறீர்கள்.

மேலே உங்கள் வாதத்திற்கு சாதகமாக இருக்கும் என்று நம்பி எடுத்து வைத்த நான்கு உதாரணங்களும் உங்கள் வாதத்தை ஆதரிக்கவேயில்லை. இதை எனது முந்தைய வாய்ப்பின் போதே விளக்கியிருந்தேன். அந்தந்த வசனங்களில் வரக்கூடிய "அசீசுல் ஹகீம்" - அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்பது, அந்தந்த வசனங்கள் சொல்கிற கருத்துடன் கச்சிதமாக பொருந்தக்கூடிய பொருந்தமான வாசக அமைப்பு தான். எங்கே பொருந்துகிறதோ அங்கே அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன்  என்று சொல்வதை காரணம் காட்டி பொருந்தாத வசனத்திலும் பொருத்துவேன் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

மேலே உள்ள எனது மறுப்புகளில் ஒரு மறுப்புக்கு மட்டும் பதிலை சொல்லியுள்ளீர்கள்.

11:66. நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

எனவே கேவலத்தை கொடுக்க நினைத்து சதி திட்டம் தீட்டிய யூதர்களின் சதியில் இருந்து அல்லாஹ் அவரை காப்பற்றி அந்த இழிவிலிருந்து அவரை தடுத்ததன் மூலம் அல்லா வல்லமை மிக்கவன் ஞானமிக்கவன் என்று சொல்வது தான் அதன் கருத்தாக இருக்கையில் இதில் எந்த முரணும் இல்லை.

என்கிறீர்கள்.

இழிவிலிருந்து காப்பாற்றியதாக சொல்வதற்கு தான் அசீசுல் ஹகீம் என்று அல்லாஹ் சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்கள். 
அவரை காப்பாற்றியதாக அல்லாஹ் சொல்வதற்கு தான் அசீசுல் ஹகீம் என்று சொல்வதாக நான் சொல்கிறேன்.

ஏனெனில் அந்த வசனத்தில் இரண்டுமே தான் உள்ளது. நான் சொல்வது தான் அதிகம் நெருக்கமாக உள்ளது.


நான் அவனை அந்த தீ விபத்தில் இருந்து போராடி காப்பாற்றினேன், அவனது குடும்பம் மகிழ்ச்சியடைந்தது , நான் ஆற்றல்மிக்கவன்.

என்று ஒருவன் சொன்னால், இங்கு "நான் ஆற்றல் மிக்கவன்" என்பது, அவன் குடும்பம்  மகிழ்ச்சியடைந்தது என்கிற வாசகத்திற்கு விளக்கமாக சொல்லப்பட்டதா அல்லது அவனை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியதற்கு சொல்லப்பட்டதா?
அவனை விபத்தில் இருந்து காற்றினேன் என்று சொல்லி, அவனது குடும்பம் அதனால் மகிழ்ச்சி அடைந்தது என்று சொல்லி அதன் பிறகும் நான் ஆற்றல் மிக்கவன் என்று சொல்லலாம்! வார்த்தை அமைப்பு பொருந்தாமல் ஒன்றும் போய் விடாது !!
ஆகவே இதிலும் உங்கள் வாதம் தவறு தான் !

சாலிஹை பாற்றினேன், அவரை இழிவிலிருந்து மீட்டெடுத்தேன், அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்று சொன்னாலும், மேலே நான் உதாரணத்தில் சொன்னது போல புரியலாம். வல்லமை என்பது, அதற்கு பொருத்தமாக எதையாவது சொல்லியிருந்தால் தான் பொருந்தும்.
சாலிஹை காப்பாற்றியது அல்லாஹ்வின் வல்லமை ! அதை இங்கு சொல்வது பொருத்தமானது தான்.

அதே சமயம், ஈசா நபியை பற்றி பேசும் போது உங்கள் கருத்துப்படி, ஈசா நபியின் அந்தஸ்தை உயர்த்தினேன் அல்லாஹ் வல்லமைமிக்கவன், ஞானமுடையவன் என்று வருகிறது.

இது பொருந்தாது ! எது பொருந்துமோ அதில் பொருத்துங்கள். பொருந்தாத இடங்களை நியாயப்படுத்துவதற்காக பொருந்துகிற இடங்களை காரணமாக காட்டுகிறீர்கள், அது உங்கள் வாதத்திற்கு பொருந்தாமலேயே இருக்கின்றது !!

தொடர்ந்து, 
ஈசா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருப்பார் என்று வருகிற வசனத்தில், அது ஈசா நபியை குறிக்கவில்லை , குர் ஆனை தான் குறிக்கிறது என்று அடுத்து சொல்கிறீர்கள்.

இதுவும் பொருந்தாத மொழியாக்கம். 

இதற்கு சான்றாக, 

இந்த சூரா ஆர்ம்பம்பிக்கும் போதே அது குரானை பற்றி தான் ஆரம்பிக்கும். 

என்று சொல்கிறீர்கள்.

ஒரு அத்தியாயம், ஒரு விஷயத்தை பற்றி சொல்லி துவங்குகிறது என்பதால் அந்த அத்தியாயத்தின் 61 ஆம் வசனம் அந்த விஷயத்தை தான் குறிக்கும் என்று புரிவது சரியான புரிதல் அல்ல.

அந்த அத்தியாயம் குர் ஆனை பற்றி சொல்ல துவங்குவது இடையில் உள்ள வசனம் என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்காது, மாறாக, அந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்கள் என்ன விஷயத்தை சொல்லி வந்ததோ அதை தான் இந்த வசனமும் சொல்கிறது என்று முடிவு செய்வது தான் அறிவுபூர்வமானது.
அந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில் ஈசா நபியை பற்றி அல்லாஹ் சொல்லிக்கொண்டே வருகிற தொடர் அது.

மரியமின் மகனை அவர்கள் பரிகாசம் செய்தார்கள், அவர் அல்லாஹ்வின் தூதராவார். அதை அவர்கள் மறுக்கிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுக்கு பதில் மலக்குகளை கொண்டு வந்திருப்பான்.    ------------ கியாமத் நாளின் அடியாளம். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னையே பின்பற்றுங்கள், இது தான் நேர்வழி.
ஷைத்தான் இது விஷயமாக உங்களை வழி கெடுக்க வேண்டாம்.

இப்படி சொன்னால் கோடிட்ட இடத்தில் குர் ஆன் என்று எப்படி வரும்???

இன்னும் சொல்லப்போனால், இந்த வசனத்தில் கியாமத் நாள் பற்றி அல்லாஹ் பேசி விட்டு அத்துடன் நிறுத்தவில்லை..
தொடர்ந்து, அல்லாஹ்வையே வணங்குங்கள் என்று ஈசா சொன்னார், அது தான் நேர்வழி என்றார். ஈசா நபியை பற்றி முஹம்மது நபி என்ன சொன்னார்களோ அதே போல ஈசா நபியும் சொன்னார்கள்.

மேலும், ஈசா நபியை பற்றியே பேசிக்கொண்டு அடுத்ததாக, கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்லி, கியாமத் நாளை பற்றியும் சொல்லி விட்டு, தொடர்ந்து அவர்களுக்கு (ஈசா நபியை மறுத்தவர்களுக்கு ) கியாமத் நாளின் போது கடும் தண்டனை இருக்கிறது என்று 43 :65 வசனத்தில் சொல்கிறான்.
கியாமத் நாள் திடீரென வரும் என்று அடுத்த வசனத்தில் சொல்கிறான் !!

ஆக, சம்மந்தப்பட்ட வசனத்திற்கு முன்னும் பின்னும் ஈசா நபி பற்றியே பேசி வருகிறது என்பதும், அந்த வசனத்தில் கியாமத் நாளின் அடையாளம் என்றும் அதற்கு பிறகுள்ள வசனங்களிலும் ஈசா நபியை மறுத்த கூட்டத்தார் கியாமத் நாளில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருப்பதும், ஈசா நபி தான் கியாமத் நாளின் அடையாளம் என்பதை தெளிவாக்குகிறது !

அதே சமயம், குர் அன் தான் கியாமத் நாளின் அடையாளம் என்று நீங்கள் சொல்வதற்கு, அந்த அத்தியாயம் குர் ஆனை பற்றி சொல்லித்தான் துவங்குகிறது என்கிற ஒரு காரணத்தை தவிர வேறெந்த காரணமும் இல்லை.

மொழியின் நடை படியும் இது தான் பொருந்த கூடியதாக இருக்கிறது.
ஈஸா நபி மறுமை நாளின் அத்தாட்சியாவார். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். என்று சொல்லி விட்டு எனவே என்னை பினபற்றுங்கள் என்று யாரும் சொல்வார்களா ?


என்று நியாயப்படுத்துகிறீர்கள். 

அப்படியும் சொல்லலாம். ஈசா நபி அந்த நாளின் அடையாளம், இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
இந்த விஷயத்தில் நான் சொல்வதையே பின்பற்றுங்கள் - இது தான் அதன் அர்த்தம்.
என்னை பின்பற்றுங்கள் என்று சொன்னால், அதை சொல்வதற்கு முன் எதை பற்றி அந்த மனிதர் சொன்னாரோ அதில் என்னை பின்பற்றுங்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இது சாதாரண மொழியறிவு.

அவன் தான் திருடன், இதில் சந்தேகமில்லை. என்னை பின்பற்று.

இப்படி சொன்னால் என்ன பொருள்? அவன் தான் திருடன் என்று நான் சொல்கிற இந்த விஷயத்தில் என்னை பின்பற்று என்று தான் பொருள்.
இப்படி சொல்வதில் எந்த பொருள் சேதமும் இல்லை.

மேலும், 4 :159 வசனத்தில், ஈசா நபியின் மரணத்திற்கு முன் எல்லா வேதக்காரர்களும் அவரை நம்பிக்கை கொண்டு விடுவார்கள் என்று அல்லாஹ் சொல்லியிருப்பதும், ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை, இன்னொரு நாளில் இந்த உலகிற்கு வர இருக்கிறார்கள் என்கிற கருத்தை தான் சொல்கிறது.
ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ்கள் சொல்வதாக நான் ஏற்கனவே எடுத்துக்காட்டியிருப்பது இந்த வசனத்தையும் மெய்ப்பிக்கிறது. இந்த வசனம் குறித்து ஏற்கனவே தனி தலைப்பில் விவாதித்திருப்பதால் இதற்கு கூடுதல் விளக்கம் தேவையில்லை.

இந்த வசனம் ஈசா நபி உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதையும் மீண்டும் வருவார்கள் என்பதையும் தான் சொல்கிறது என்பதையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது குர் ஆன் தப்சீரில் விளக்கியுள்ளார்கள்.
இப்னு சரி பாகம் 4 , பக்கம் 14 இல் இது பதிவாகியுள்ளது. இது கூடுதல் தகவலுக்காக..

தொடர்ந்து, கைப்பற்றுபவனகவும், உயர்த்துபவனாகவும், தூய்மைப்படுத்துபவனாகவும் இருக்கிறான் என்று ஈசா நபி பற்றி வருகிற வசனம் குறித்து நீங்கள் வைத்துள்ள விளக்கங்கள் குறித்தும், 
ஈசா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் சென்று விட்டார்கள் என்கிற வசனம் பற்றி நீங்கள் தொடர்ந்து வைக்கும் தவறான விளக்கங்கள் பற்றியும் 
இன்னும் வேறு ஆதாரங்களையும் 
அடுத்தடுத்த வாய்ப்புகளில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

இத்துடன் இருவரும் ஏழாவது வாய்ப்பை நிறைவு செய்துள்ளோம் 

வஸ்ஸலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக