புதன், 5 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 3
05/09/2012

அஸ்ஸலாமு அலைக்கும்..

எதை எளிமையாகவும் சுலபமாகவும் புரிய முடியுமோ அதில் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தி புரிகிறீர்கள். வபாத் என்பதற்கு எனது முந்தைய வாய்ப்பில் நான் என்ன விளக்கத்தை தந்துள்ளேன் என்பதை சரியாக படிக்காமல் பதில் அளித்துள்ளீர்கள் என்பது உங்கள் பதிலை படிக்கும் போது புரிகிறது.
இந்த வபாத் விஷயமாக நான் என்ன சொல்கிறேன், என்ன கேள்வி வைக்கிறேன், அதற்கு எப்படி உங்கள் பதில் பொருத்தமற்று இருக்கிறது என்பதை விளக்குவதற்கு முன்பு, வேறு சில ஆதாரங்களை இங்கு தருவது, இந்த வபாத் விஷயத்தை புரிவதற்கு ஏதுவாக இருக்கும்.

4 :158 வசனத்தில் ஈசா நபி உயர்த்தப்பட்டார்கள் என்று வருகிற இடத்தில, உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்று சொல்வது தவறு, அந்தஸ்து உயர்வு என்று தான் கூற வேண்டும் என்று உங்கள் முதல் வாய்ப்பின் போது சொல்லியிருந்தீர்கள்.

4 :158 வசனத்தில் அல்லாஹ் ஈஸா நபியை உயர்த்தியதாக சொல்கிறான். அந்த வசனத்தை துவக்கம் முதலே தெளிவாக வாசித்தால் இங்கு அந்தஸ்து உயர்வை அது குறிக்கிறதா அல்லது அவரையே உயர்த்துவதை குறிக்குமா என்பது எளிதில் விளங்கும்.

4 :157 வசனத்தை வாசிக்கிற போது அதில் ஈஸா நபியை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் சபிக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டு, தொடர்ச்சியாக அவர்கள் நம்புவது போல ஈஸாவை யாரும் கொலை செய்யவில்லை என்கிறான்.
சிலுவையில் அறையப்படவுமில்லை என்று சொல்கிறான்.
சொல்லி விட்டு, இந்த விஷயத்தில் சந்தேகம் கொள்பவர்கள் அல்லது கருத்து வேறுபாடு கொண்டுள்ளவர்கள் அனைவரும் தவறான வழியிலேயே இருக்கிறார்கள்  என்று சொல்கிறான்.
அத்துடன் நிறுத்தாமல், மீண்டும், ஈஸாவை அவர்கள் கொல்லவில்லை என்று அதே வசனத்தில் சொல்கிறான்.
சொல்லி விட்டு "ஆனால் அல்லாஹ் அவரை உயர்த்தினான்" என்று சொல்கிறான்.
இந்த இடத்தில "ஆனால்" என்பதற்கான அரபிப்பதம் "பல்" -   بَل
அவரை யாரும் கொல்லவில்லை ஆனால் அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்கிற போது இங்கே அந்தஸ்து உயர்வு எப்படி பொருத்தமாகும்?
அவரை கொன்று விட்டதாக நினைக்கிறார்கள் ஆனால் அவரை யாரும் கொல்லவில்லை என்று சொல்லி விட்டு , கொல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ததாக தான் அல்லாஹ் அடுத்த வசனத்தில் சொல்கிறான்.
அதாவது அவர்கள் அவரை கொல்ல நினைத்தனர் ஆனால் அல்லாஹ் அவரை உயர்த்திக்கொண்டான், அவர்கள் நிச்சயமாக அவரை கொல்லவில்லை !!!

இது தான் அந்த வசனத்தின் கருத்துப்படியும் மிகவும் நெருக்கமான நேரடி பொருளாக உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக மூன்று காரணங்களை நான் இங்கு தருகிறேன்.

முதல் காரணம், அந்த வசனத்தின் வாசகமும் அவரையே உயர்த்துவதாக பொருள் கொள்ளும்படி தான் அமைந்துள்ளது. அந்தஸ்தை உயர்த்தியதாக சொல்ல வேண்டுமானால் அந்தஸ்து, பதவி, தகுதி போன்ற வாசகங்கள் அங்கே வர வேண்டும்.

அப்படி ஏதேனும் வாசகங்களை சொல்லி உயர்த்தினேன் என்று சொன்னால் அந்தஸ்து உயர்வு எனலாம்.
இதற்கு உதாரணமாக 19 :57 வசனத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் இத்ரீஸ் நபியை பற்றி அல்லாஹ் இதே போன்ற வாசகத்தை சொல்கிறான், அவரை உயர்த்தினேன், என்று. 
ஆனால், அங்கே அந்தஸ்து உயர்வு தான் என்று நாம் மொழியாக்கம் செய்கிறோம் - காரணம், அந்தஸ்து, தகுதி என்கிற பொருள் பட வரபாநா மகானன் என்று அல்லாஹ் சொல்லி விட்டான்.
இதன் நேரடி பொருளே உயர்ந்த இடத்திற்கு உயர்த்துதல் என்பது தான்.

இப்படி ஈஸா நபி சம்மந்தமாக வரும் வசனத்தில் உள்ளதா என்று பார்க்கிற போது இல்லை !!!
அந்த வசனத்தில் அல்லாஹ் உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளது. ரபாஹு... என்று மட்டும் தான் உள்ளது.. இடத்திற்கு, அந்தஸ்திற்கு, பதவிக்கு என்கிற துணை எழுத்துக்கள் இந்த வசனத்தில் இல்லை. ஆகவே இத்ரீஸ் நபியை அல்லாஹ் அந்தஸ்தில் உயர்த்தியது போல ஈச நபியை அந்தஸ்தில் உயர்த்தியதாக இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லவில்லை, இரண்டு வசனத்திற்கும் வார்த்தை பயன்பாட்டில் வேறுபாடு இருக்கும் போது இரண்டிற்கும் ஒரே பொருளை தர முடியாது.

இரண்டாவது காரணம், அந்த வசனத்தில் தன்னளவில் அல்லாஹ் உயர்த்தியதாக சொல்கிறான்.  தன்னளவில் உயர்த்துவது அந்தஸ்து உயர்வு என்று சொல்ல முடியாது. அப்படி பொருள் வைத்தால் அல்லாஹ்வின் அந்தஸ்து என்னவோ அந்த அளவிற்கு ஈஸா நபியையும் உயர்த்தினான் என்கிற இணை வைப்பு கருத்து தான் கிடைக்கும். ஆகவே அந்த வகையிலும் இது பொருந்தாது.

மூன்றாவதாக, அந்த வசனத்திற்கு அடுத்தப்படியாக, அல்லாஹ் வல்லமைமிக்கவன்  , மற்றும் ஞானமுடையவன், என்று சொல்கிறான்.

துவக்கம் முதல் முழுவதுமாக படிப்பதாக இருந்தால்..

அவர்கள் ஈஸா நபியை கொன்று விட்டதாக நினைக்கின்றனர்.
அது தவறு, உண்மையில் அவர்கள் அவரை கொல்லவில்லை.
சிலுவையில் அறையவுமில்லை.
அவ்வாறு அவர்கள் தவறாக நம்புகின்றனர். அவர்கள் செய்வது வெறும் யூகம் தான்.
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை.
ஆனால் அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான்.
அல்லாஹ் வல்லமைமிக்கவன்  , மற்றும் ஞானமுடையவன்

இந்த இடத்தில ஈஸா நபியின் அந்தஸ்தை தான் அல்லாஹ் உயர்த்தினான் என்று இருந்தால் அல்லாஹ், தான் வல்லைமைமிக்கவன் என்று தொடர்ந்து சொல்ல தேவையே இல்லை.
ஞானமுடையவன் என்று இந்த இடத்தில சொல்ல வேண்டியதும் இல்லை.

காரணம், ஒருவரது அந்தஸ்தை உயர்த்துவதற்கு அல்லாஹ்வுக்கு ஞானமும் வல்லமையும் தேவையில்லை. அது அறிவுக்கு பொருந்தவும் செய்யாது.

எப்போது அல்லாஹ்வின் வல்லமை பற்றி பேச வேண்டும்?? நடக்க முடியாத ஒரு சம்பவம், நமது கற்பனைக்கே எட்டாத ஒரு சம்பவம் ஒன்று நிகழும் போது அதை நிகழ்த்தியது அனைத்தையும் நடத்தக்கூடிய வல்லமை மிக்க அல்லாஹ் தான் என்று சொல்வது தான் பொருந்தும்.
ஒரு மனிதரை கொலை செய்ய அழைத்து செல்கிறார்கள், இறுதி நிமிடம் வரை சென்று விடுகிறது, கடைசியாக யாருடைய கற்பனைக்கும்  எட்டாத வகையில், யாருமே அறியாத வகையில் அந்த மனிதர் உயர்த்தப்பட்டார் என்பது வல்லமை மிக்க ஒருவனால் மட்டுமே சாத்தியம்.
அறிவில் சிறந்த ஒருவனால் மட்டுமே இது சாத்தியம் !
அப்படிப்பட்ட வல்லமையும் ஞானமும் மிக்கவன் தான் அல்லாஹ் என்று சொல்வது பொருந்துகிறது.

அல்லாமல்,  அவரை நாம் கண்ணியப்படுத்தினோம், அவரது அந்தஸ்தை நாம் உயர்த்தினோம், அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்று சொல்வதில் எந்த அறிவும் இல்லை !

ஆக, உயர்த்தப்பட்டார் என்பது உடலுடன் தான் என்பது எள்ளளவும் சந்தேகமின்றி இங்கு புரிகிறது.


அடுத்து, ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கு இன்னொரு ஆதாரமாக, 5 :75 வசனம் உள்ளது.
அதில் ஈஸா நபியை கடவுளாக நம்புகிற மக்களுக்கு அல்லாஹ் மறுப்பு சொல்கிற போது அவருக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று சொல்கிறான்.

ஒரு மனிதனை கடவுள் என்று ஒரு கூட்டம் நம்புகிற போது, அதற்கு மறுப்பு சொல்வதாக இருந்தால் எப்படி சொல்ல வேண்டும்? அவர் இறந்து விட்டார், இறந்து விட்டவர் எப்படி கடவுளாக முடியும் என்று கேட்க வேண்டும்.
ஆனால் இங்கு அல்லாஹ் அப்படி சொல்லாமல் அவருக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டனர் என்கிறான்.
இதன் பொருள், அவர் இறக்கவில்லை என்பது தான்.

அவரே இறந்து போயிருந்தால் அதையே அல்லாஹ் இங்கு சொல்லியிருக்கலாம், ஆனால் அதை அல்லாஹ் சொல்லாததிலிருந்து அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

ஈஸா நபி உண்மையில் மரணித்திருந்தால் அதை சொல்ல வேண்டிய முக்கியமான இடம் இது தான். இந்த இடத்திலேயே அல்லாஹ் அதை சொல்லாமல் அவருக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொன்னதிலிருந்து என்ன புரிகிறது என்றால் 
 • அவருக்கு முன் வந்த நபிமார்களை போல இவரும் ஒரு நபி தான். 
 • அவருக்கு முன் வந்த நபிமார்கள் எப்படி சாதாரண மனிதர்களோ அதே போல இவரும் ஒரு மனிதர் தான், 
 • அவருக்கு முன் வந்த அந்த மனிதர்கள் எப்படி இறந்து விட்டார்களோ அதே போல இவரும் ஒரு நாள் இறந்து போகக்கூடியவர் தான் என்று அல்லாஹ் சொல்கிறான்.!!
மிக தெளிவாக, அவர் இன்னும் மரணிக்கவில்லை , ஆனால் இனி மரணிப்பார் என்று சொல்கிற வசனம் இது !!


இதற்கு என்ன மறுப்பு சொல்வீர்கள் என்பதெல்லாம் நான் ஏற்கனவே அறிந்தே உள்ளதால் அவற்றை நீங்கள் தரும் போது இதை குறித்து வேறு சில உதாரணங்களுடன் கூடுதலாக விளக்கலாம். 

ஆக மேலே உள்ள இரண்டு ஆதாரங்களையும், ஹதீஸ்களில் ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்பதையும் அடிப்படையாக வைத்து இப்போது வபாத் குறித்த செய்திகளை அலசுவோம்.

மரணம் - வபாத் வேறுபாடுகள் 

ஹதீஸ்களின் மூலம் அல்லாஹ் சொல்வது என்ன? ஈஸா நபி மீண்டும் வருவார்கள் ! இதை வைத்து நாம் இரண்டு நிலை எடுக்கலாம்.

 • ஒன்று - ஈஸா நபி ஏற்கனவே இறந்து விட்டார்கள் ஆனால் அல்லாஹ்வின் ஆற்றலால் மீண்டும் வருவார்கள்.
இப்படியும் புரியலாம்.
 • அல்லது, ஈஸா நபி இறக்கவேயில்லை, மீண்டும் இந்த உலகிற்கு வருவார்கள்.
இப்படியும் புரியலாம்.

இந்த இரண்டில், இயற்கை நியதிப்படி எது பொருத்தமானது?? மீண்டும் ஒருவர் உலகிற்கு வருவார் என்றால் அவர் இறக்காமல் இருந்தால் தான் வர இயலும். இது இயற்க்கை நியதி. இதற்கு மாற்றமாக, அவர் இறந்து விட்டார், அதன் பிறகு வருவார் என்று அல்லாஹ்வோ ரசூலோ சொல்லியிருந்தால் அது தான் விதிவிலக்கே தவிர, பொதுவான நியதியின் படி இறந்து போனவரால் மீண்டும் வர முடியாது!
ஆக, ஹதீஸில் ஈஸா நபி மீண்டும் வருவார் என்று சொன்னால் அல்லாஹ் படைத்துள்ள இயற்கை சட்டப்படி அவர் இதுவரை இறந்திருக்க கூடாது.
சரி, இது ஒரு அடிப்படைக்காக சொல்லப்பட்டது, இதில் சிந்திப்பவர்களுக்கு சான்றும் உள்ளது, அதற்குள் நாம் செல்ல வேண்டாம்.

அடுத்து என்ன? ஹதீஸில் ஈஸா நபி மீண்டும் வருவதாக சொலல்ப்பட்டுள்ளது. இப்போது, ஈஸா நபி முன்னர் இறந்து விட்டார்களா? அல்லது உயிருடன் தான் இருக்கிறார்களா? என்பதை நாம் அறிய வேண்டும்.

இதை அறிவதற்காக குர் ஆனையும் ஹதீசையும் நாம் புரட்டிப்பார்த்தால், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று சொல்கிற எந்த நேரடி ஆதாரமும் இல்லை.
ஆனால் மரணித்து விட்டார்கள் என்று சொல்கிற நீங்கள், இரண்டே இரண்டு ஆதாரத்தை முன் வைக்கிறீர்கள்.

ஒரு ஆதாரம், முஹம்மது நபிக்கு முன்னர் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்.

இதற்கு எனது முந்தைய வாய்ப்பின் போதே பதில் சொல்லி விட்டேன். இந்த வசனத்தின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று புரிய முடியாது,ஹதீஸில் அவர் மீண்டும் வருவார் என்று சொல்லப்பட்டு விட்டது, குர் ஆனுக்கு ஹதீஸில் விதிவிலக்கு உள்ளது, தாமாக செத்தவைகளை உண்ணலாம் என்று ஹதீஸில் விதிவிலக்கு இருப்பதை போல.
மேலும், முஹம்மது நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்வது போலவே, ஈஸா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் எனவும் அல்லாஹ் சொல்லி விட்டான்.

ஆக இந்த வசனம், அந்த வசனத்திற்கு விளக்கம். அந்த வசனத்தில் ஈஸா நபி விதிவிலக்கு என்று சொல்லப்படவில்லை, ஆனால் இந்த வசனம் அதை சொல்லி விடுகிறது ! ஆகவே உங்கள் முதல் சான்று தவறான சான்றாகி விட்டது.

அடுத்து நீங்கள் வைக்கிற ஆதாரம், அல்லாஹ் அவரை கைப்பற்றினான் என்று வரக்கூடிய இறை வசனம்.
இதை வைத்து நீங்கள் வைக்கும் வாதம் என்ன என்றால், ஒரு நபரை கைப்பற்றினேன் என்று அல்லாஹ் சொன்னால் அது மரணத்தை தான் குறிக்கும் என்கிறீர்கள்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். 

கைப்பற்றுதல் அதாவது வபாத் என்கிற சொல் பொதுவான, ஒரு விரிந்த அர்த்தத்தை கொண்ட ஒரு சொல். அந்த வார்த்தையை தனியாக எடுத்து வைத்து பார்த்தால் அதற்கு மரணம் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருள் கொள்ள இடமே கிடையாது.
வபாத் என்றால் கைப்பற்றுதல் - ஆங்கிலத்தில் capture , அல்லது sieze   !!

எப்போது இதற்கு மரணம் என்கிற பொருள் கொள்ளப்படும்? என்றால் 

உங்கள் நிலைப்பாடு              ----->   உயிரோடு தொடர்புப்படுத்தி இந்த வபாத் என்கிற வார்த்தை வர வேண்டும்.

ஒரு உயிரை அல்லா கைப்பற்றுகிறான் என்பதற்கு முதல் பொருளாக மரணம் என்பதை தான் கொடுக்க முடியும் மற்றவை அதற்கான கூடுதல் விளக்கம் 


ஆனால் எனது நிலைப்பாடு  ---->     உயிரோடு தொடர்புப்படுத்தி வர வேண்டும் என்பது மட்டுமல்ல, அது அந்த இடத்திற்கு பொருந்துகிற கருத்தை தரவும் செய்ய வேண்டும்.

இரண்டில் எந்த நிலைப்பாடு சரி? 

என்று சிந்திக்கிற போது எனது நிலைப்பாடு தான் சரி என்பதை உங்கள் வாயேலேயே சொல்லி விட்டீர்கள். 


உயிரோடு தொடர்புப்படுத்தி வபாத் என்று வந்து விட்டால் அதற்கு மரணம் என்கிற ஒரு அர்த்தத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்கிற நீங்கள், 39 :42 வசனத்தில் வருகிற வபாத் என்கிற வார்த்தைக்கு மரணம் என்கிற பொருளை தான் கொடுத்துள்ளீர்களா?
இல்லையே !!

மரணம் என்றால் மரணித்தவரை கபுரில் கொண்டு செல்ல வேண்டுமே? இந்த வசனத்தில் அல்லாஹ் கைப்பற்றியதாக சொல்கிற நபரை கபுரில் கொண்டு செல்ல முடியுமா? என்று கேட்டேன். இதற்கு நீங்கள் தெளிவான பதிலை சொல்லவில்லை.

நான் இவ்வாறு கேட்டதற்கு காரணம், மரணம் என்று நீங்கள் பொதுவாக சொன்னால் கூட, அந்த மரணம் என்பதன் அர்த்தத்தையே கூட பல வகைகளில் தான் பார்க்கிறீர்கள். அனைத்தும் ஒரே மாதிரியான மரணம் என்று நீங்களே நம்பவில்லை, ஒத்துக்கொள்ளவில்லை !!

அதாவது, நிரந்தரமாக உயிர் பிரிந்து, ரத்த ஓட்டம் நின்று, இதயத்துடிப்பு நின்று விடுமே அதையும் மரணம் என்று தான் சொல்கிறீர்கள், 
நிரந்தரமாக உயிர் பிரியாமல், சில மணி நேரம் மட்டும் பிரித்து மீண்டும் திரும்பி விடுகிற, உயிர் இல்லாமல் இருக்கும் அந்த சில மணி நேரங்களில் கூட இதயம் துடித்துக்கொண்டும், ரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிலையையும் கூட மரணம் என்று தான் சொல்கிறீர்கள்.
ஆனால், இரண்டும் ஒரே மாதிரியான மரணமா? என்பது தான் எனது கேள்வி.

இரண்டும் ஒரே மாதரியான மரணம் இல்லை என்கிற போது, கைப்பற்றுதல் என்று வரக்கூடிய வசனங்களில் நான் எந்த மரணத்தை பொருள் செய்ய வேண்டும்? நிரந்தர மரணத்தையா அல்லது தற்காலிக , ரத்தம் ஓட்டமும் இதய துடிப்பும் இயங்குகிற மரணத்தை மாதிரியான சம்பவதையா?

இந்த கேள்விக்கு நேரடி பதிலை தராமல்,

உயிர்கள் கைபற்றபடுகிறது. ஒன்று மரணம் அல்லது தூக்கம். இதை தவிர ஒரு உயிரை கைபற்றபடுகிறது  என்று அல்லா சொல்லும் போது இந்த இரெண்டை தவிர வேறு அர்த்தம் கொள்ள முடியாது. 


என்று பதில் சொல்கிறீர்கள்.

அதாவது, கைப்பற்றுதல் என்பது உயிருடன் தொடர்புப்படுத்தி வந்து விட்டால் அங்கே உயிர் கைப்பற்றப்பட்டு விட்டது என்கிற ஒரு பொருளை தான் தர வேண்டும் என்று. ஆகவே ஈஸா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்று சொல்லும் போது ஈஸா நபியின் உயிரை கைப்பற்றி விட்டான் என்று தான் பொருள் !!!! என்பது உங்கள் வாதம்.

இதற்கு தான் நான் முன்னரே கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி, சரி, கைப்பற்றி விட்டான் என்று வந்து விட்ட காரணத்தினாலேயே உயிரை தான் கைப்பற்றி விட்டான் என்று சொன்னால், 
அப்படி கைப்பற்றப்பட்ட உயிர் என்பது நிரந்தரமான கைப்பற்றுதலா அல்லது தற்காலிகமான கைப்பற்றுதலா?
அப்படி உயிரை கைப்பற்றிய பிறகு அந்த உடலில் ரத்த ஓட்டம் இருக்குமா அல்லது இருக்காதா?
அப்படி உயிரை கைப்பற்றிய பிறகு அந்த உடலில் இதயம் துடிக்குமா துடிக்காதா?
அப்படி உயிரை கைப்பற்றிய பிறகு மூளை செயல்பட்டுக்கொண்டிருக்குமா செயலிழந்து போகுமா?

எப்படிப்பட்ட உயிர் கைப்பற்றல் அது???????? இதற்கு உங்களிடம் பதில் கேட்டால் நீங்கள் சொல்லும் பதில், நிரந்தரமாக உயிர் பிரிவது தான் என்று.

அப்படியானால் 39 :42 வசனத்திற்கு மட்டும் ஏன் அப்படி நிரந்தரமான உயிர் கைப்பற்றல் என்று நீங்கள் பொருள் செய்யவில்லை?

ஈஸா நபி பற்றி வரக்கூடிய வசனத்தில் வபாத் என்று வந்து விட்ட காரணத்தால் அது நிரந்தரமாக உயிரை கைப்பற்றுதல் என்று நீங்கள் பொருள் செய்தது சரி என்றால் 39 :42 வசனத்திற்கும் தூங்கும் நபரின் உயிரை கைப்பற்றுவதாக அல்லாஹ் சொல்வதும் நிரந்தரமான உயிர் கைப்பற்றுதல் என்று தானே சொல்ல வேண்டும்????

அல்லது, 39 :42 வசனத்தில் உயிர் கைப்பற்றுதல் என்று வந்தால் கூட அங்கே நிரந்தரமான உயிர் கைப்பற்றுதல் இல்லை, தற்காலிகமான உயிர் கைப்பற்றுதல் தான் என்று பொருள் செய்வீர்கள் என்றால் ஈஸா நபி தொடர்பாக வாரும் வசனத்திற்கு நான் அப்படி பொருள் செய்ய கூடாதா?

இதற்கு பதிலை நீங்கள் இன்னும் சொல்லவேயில்லை..

நீங்கள் சொன்ன பதில் எல்லாமே, உயிர் என்று வந்து விட்டதே, உயிரை எடுத்தல் என்று வந்து விட்டால் அது மரணம் தானே..
என்கிற பதில் தான். இந்த பதில் மேலே உள்ள எனது கேள்விக்கு பதிலாகுமா? என்பதை சிந்திக்கவும்.

மேலும், 

இரண்டு சம்பவத்தில் தான் உயிர்கள் கைபற்றபடுகிறது. ஒன்று மரணம் அல்லது தூக்கம். இதை தவிர ஒரு உயிரை கைபற்றபடுகிறது  என்று அல்லா சொல்லும் போது இந்த இரெண்டை தவிர வேறு அர்த்தம் கொள்ள முடியாது. 


என்று சொல்லியுள்ளீர்கள்.
இதே வாசகத்தை வேறு வார்த்தைகளில் 

ஒரு உயிர் இந்த உலகத்திலிருந்து  அல்லாவால் கைப்பற்ற பட்டு  விட்டால் அது நிரந்தர மரணமோ அல்லது சிறு மரணமோ என்று தான் பொருள் கொள்ள முடியும். எனவே தான் சிறு மரணம் என்று தூக்கத்திற்கு ஒப்பிட்டு சொல்லபடுகிறது. உயிர் கைபற்றபடுவது தான் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. இதயம் துடிப்பது , கண்கள் அசைவது போன்றவை தூக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.


என்றும் சொல்லியுள்ளீர்கள்.


அதாவது மரணத்தின் போதும் உயிர் பிரிகிறது, தூக்கத்தின் போதும் உயிர் பிரிகிறது,
ஆனால் இவ்வாறு உயிர் பிரிகிற இரண்டு சம்பவங்களுக்கும் வேறுபாடு உள்ளது ! என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

இதயம் துடிப்பது , கண்கள் அசைவது போன்றவை தூக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.


அதாவது, இதயத்துடிப்பு நின்று விட்ட ஒரு நிலையையும் மரணம் என்று சொல்லலாம், இதயம் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிலையையும் மரணம் என்று சொல்லலாம்.

இரண்டுமே வபாத் என்கிற வார்த்தையை கொண்டு தான் சொல்லப்பட்டும் உள்ளது.

இரண்டிலுமே உயிர் தான் தொடர்புப்படுத்தப்படுகிறது.

ஆக, ஒரு உயிரை பற்றி சொன்னாலும் கூட,
வபாத் என்று சொன்னாலும் கூட, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான மரணத்தை அது சொல்வதாக பொருள் செய்ய முடியாது
என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு விட்டீர்கள். இதை தான் வெளிப்படையாக சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில், ஈஸா நபி என்கிற உயிர் பற்றி பேசப்பட்டு வந்தாலும் கூட , வபாத் என்கிற வார்த்தையே வந்தாலும் கூட, சாதாரணமாக நாம் பொருள் செய்கிற மரணத்தை அங்கே கொடுக்க வேண்டிய அவசியமில்லை, மரணத்தில் பல வகை உள்ளது என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

என்ன வகை? இதய துடிப்பு நின்று விடுகிற மரணம் - இதய துடிப்பு நின்று விடாத மரணம். இரண்டு வகை உள்ளது !

இந்த வேறுபாட்டில் என்ன கருத்து ஒளிந்துள்ளது?

தூங்கக்கூடிய ஒருவரது உயிரை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்றால் அங்கே உயிரை மட்டும் கைப்பற்றுகிறான், உயிரின்  எல்லா வேலைகளும் அல்லாஹ் நிறுத்தி விட்டு கைப்பற்றவில்லை! உயிர் இருந்தால் பத்து வேலைகளை அந்த மனிதன் செய்வான் என்றால் தூங்குகிற போது அந்த உயிரை எடுத்து விட்டால் ஐந்து வேலைகளை தான் அவனால் செய்ய முடியும், மீதி ஐந்து வேலைகளை செய்யும் உயிர் அவனிடமில்லை என்று பொருள் !!!
அதுவே தூங்காத நேரத்தில் நிரந்தரமாக உயிரை எடுப்பானே அப்போது, அந்த பத்து வேலையையுமே அவனால் செய்ய இயலாது.

ஆக, பத்து வேலைகளை செய்யும் ஆற்றலை பெற்றுள்ள ஒரு உயிர் பிரியும் போது, அந்த பத்தையும் அவனால் செய்ய இயலாமல் போனால் அதுவும் மரணம் என்று தான் சொல்கிறீர்கள், பத்தில் ஐந்தை அவன் செய்ய இயலும் என்ற போதும் அதையும் மரணம் என்று தான் சொல்கிறீர்கள்.

இதே அளவுகோலை ஈஸா நபி வசனத்திலும் வையுங்களேன்.
ஈஸா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் - அவர்களின் உயிரை கைப்பற்றினான் என்று வைத்தாலும் தவறில்லை, உயிர் இருக்கும் போது அவர்களால் பத்து வேலைகளை செய்ய முடியும் என்றால் அல்லாஹ் கைப்பற்றிய பிறகு அவர்களால் ஐந்து வேலைகளை தான் செய்ய முடியும். அவர்களால் செய்ய முடியாத வேலைகள், இந்த உலகில் வாழ்வது !!!

இப்படி புரிய என்ன கஷ்டம்?? 

இங்கே இன்னொரு கேள்வி சிலருக்கு வரலாம்.
இந்த வசனத்தில் உடலுடன் அல்லாஹ் கைப்பற்றினானா அல்லது உயிரை மட்டும் கைப்பற்றினானா என்று..

இதற்கு அல்லாஹ்வே பதிலும் சொல்லி விடுகிறான்.

ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும் இருக் கிறேன். 

என்று 3 :55 வசனத்தில் அல்லாஹ் சொல்கிற இடத்தில், முதலில் ஈஸா நபியை அல்லாஹ் கைப்பற்றியதாக சொல்லி விட்டு, பின்னர் என்னளவில் உயர்த்துபவனாக இருக்கிறேன் எனவும் சொல்லி விட்டான்.

அதாவது, கைப்பற்றுதல் என்பது ஈஸா நபியின் செயல்பாடுகளை நிர்ணயிக்கும் அவரது உயிரை அல்லாஹ் கைப்பற்றுகிறான், அதாவது முழுமையான மரணமல்ல, மாறாக, ஒரு சில காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கும் விதத்திலான கைப்பற்றுதல்.
பின்னர் அல்லாஹ் அவரை உயர்த்தி விட்டதாகவும் சொல்கிறான், அதாவது உடலோடும் உயர்த்திக்கொண்டான் !!

இதன் தெளிவான விளக்கம் - அல்லாஹ் அவரை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டான் என்பது தான் !

இறைவன் ஒன்றை முழுமையாக அடைந்த பின்னர் அவரது உடலை தன்னளவில் உய்ர்த்தி கொள்வேன் என்று சொல்வது பொருத்தமற்றது. 

என்று உங்கள் முதல் வாய்ப்பின் போது சொன்னீர்களே , அதற்கு இதுவே பதில் !!


சுருக்கமாக,  ஈஸா நபி தொடர்பான இந்த வபாத் பற்றி வரக்கூடிய வசனத்தை புரிய வேண்டிய முறை இதோ..

 • ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.
 • இந்த வசனத்தில் ஈச நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்று வருகிறது.
 • கைப்பற்றினான் என்பதற்கு அரபியில் மரணம் என்று பொருளா என்று சிந்திக்கிறோம், இல்லை, கைப்பற்றினான் என்பது தான் அதன் வேர்ச்சொல்.
 • ஒரு மனிதரை அல்லாஹ் கைப்பற்றினான் என்றால் அங்கே மரணத்தை தவிர வேறு பொருள் உள்ளதா என்று பார்க்கிறோம்.
 • ஆம், தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரின் உயிரை எடுப்பதாக அல்லாஹ் சொல்லும் போதும் இதே போன்று கைப்பற்றினேன் என்று தான் சொல்கிறான். ஆனால் தூங்கி கொண்டிருப்பவர் இறந்து விடவில்லை, ஏதோ ஒரு வகையில் அல்லாஹ் அவரது செயல்பாட்டை முடக்கினான், சிறிது காலத்திற்கு முடக்கினான் என்று தான் புரிவோம்.
 • அது போல இந்த வசனத்தை புரிய முடியுமா? என்றால் முடியும்.
 • ஈஸா நபியின் செயல்பாட்டை அல்லாஹ் ஒரு சில வகைகளில் முடக்கினான், தற்காலிகமாக முடக்கினான், தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டான் என்று புரியலாம்.
 • தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரது உயிர் எப்படி மீண்டும் பூமிக்கு அனுப்பப்படுமோ அப்படி ஈஸா நபியும் மீண்டும் அனுப்படுவார்.
 • இதை தான் அந்த ஹதீஸ்கள் சொல்கின்றன !!  
 • இப்படி புரிய எந்த தடையும் இல்லை. மாறாக, இப்படி புரிவது தான் ஹதீஸ்களை அர்த்தமுள்ளதாக்குகிறது, குர் ஆன் வசனமும் புரிகிறது. அவரது அந்தஸ்தை பற்றி பேசாமல் அவரையே தன்னளவில் உயர்த்தியதாக அல்லாஹ் சொல்வதன் அர்த்தமும் தெளிவடைகிறது !

இது எனது தெளிவான நிலை. இது குறித்து தொடர்ந்து நீங்கள் பேசுவீர்களானால், மேலும் விளக்கங்கள் அளிக்கிறேன்.. 


இறுதியாக, நான் ஏற்கனவே கேட்டிருந்த ஒரு கேள்வியை மீண்டும் நினைவூட்டுகிறேன்..

ஒரு வாதத்திற்கு ஈச நபி மரணித்து விட்டார்கள் என்பது தான் இறை வசனத்தின் கருத்து என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதை ஹதீஸ்களின் மூலம் ஒப்புக்கொள்கிறீர்களா??

இதை நான் எனது இரண்டு வாய்ப்பிலும் கேட்டிருந்தேன், இன்னும் நீங்கள் பதில் அளிக்கவில்லை.


ஈஸா நபி வருகையை குறித்து பேசும் ஹதிஷை குரானுக்கு முரண் என்பதால் ஏற்று கொள்ளவில்லை என்பது தான்  என் கொள்கை .


என்கிற ஒரு பதிலை தந்துள்ளீர்கள். ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்பது எந்த குர் ஆன் வசனத்திற்கு முரண் என்பதை வசன எண்ணுடன் காட்டி விட்டு தான் நீங்கள் இந்த பதிலை சொல்ல வேண்டும்.
எந்த வசனம், ஈஸா நபி மீண்டும் வருவதாக சொல்கிற ஹதீசுக்கு முரணாக இருக்கிறது? என்பதை விளக்குங்கள்.


ஒரு வாதத்திற்கு (ஒரு வாதத்திற்கு மட்டும் தான்  ) நான் ஈஸா நபி நம்மை போல மரணித்து விட்டார் என்றும் சொல்லி அவர் மீண்டும் வருவதையும் ஏற்று கொள்கிறேன் என்று சொன்னால் அதில் ஏதேனும் முரண் உள்ளதா ? முரண் என்றால் எப்படி முரண் என்று சொல்லுங்கள் 


என்று இன்னொரு பதிலை சொல்லியுள்ளீர்கள். இது எனது கேள்விக்கான விடை ஆகாது. அப்படி ஏற்றுக்கொண்டால் அது தவறா? என்று என்னிடம் மறு கேள்வி தான் கேட்கிறீர்கள்.
முதலில் அப்படி ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பதை சொல்லுங்கள். மறு கேள்வியை அதன் பிறகு கேளுங்கள். அது தான் சரியாக இருக்கும்.


ஆக, என் தரப்பில் இதுவரை, ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கும், மீண்டும் வருவார்கள் என்பதற்கும் கீழ்காணும் ஆதாரங்களை தந்துள்ளேன்.

ஈஸா நபிக்கு முன் வந்த எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்கிற வசனம்.
ஈச நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்று வரக்கூடிய வசனம்.
ஈஸா நபியை அல்லாஹ் உயர்த்தினான் என்று வரக்கூடிய வசனம்.
மேலும் ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்களின் நான்கு ஹதீஸ்கள்.

மேலும் பல ஆதாரங்களை அடுத்தடுத்து பார்க்கலாம், இன்ஷா அலாஹ்.

வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக