ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 4
09/09/2012


அஸ்ஸலாமு அலைக்கும்..

எனது கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள். பதில் என்று நீங்கள் சொன்னதில் எனது கேள்விக்கான பதில் இல்லை.

ஈசா நபி விஷயமாக இரண்டு நிலைகளை நீங்கள் கொண்டுள்ளீர்கள்.

ஒன்று, ஈசா நபி மரணித்து விட்டார்கள்.
இரண்டு, அவர்கள் மீண்டும் வர மாட்டார்கள்.

ஈசா நபியின் மீள் வருகையை பற்றி சொல்லும் ஹதீஸ்களை குறித்த உங்களின் நிலையை நான் கேட்டதற்கு காரணம், இரண்டு நிலைபாடுகளில் ஒன்றையாவது நீங்கள் ஒப்புக்கொண்டு விட்டீர்களா என்பதை அறிய தான்.

இதற்கு முன்னர் விவாதிக்கப்பட்ட போதும் மேலே உள்ள இரண்டு நிலைகளை வைத்து தான் கருத்து பதிந்தீர்கள்.
அந்த வகையில், தற்போது இந்த இரண்டு கொள்கையிலும் நீங்கள் இன்னமும் இருக்கிறீர்களா? அல்லது இரண்டாவது நிலையை விட்டு மாறி விட்டீர்களா என்பதை அறிவது, இந்த விவாதத்தின் போக்கினை தீர்மானிக்கும் பொருட்டு அவசியமாகிறது.

அந்த அடிப்படையில், ஒரு வாதத்திற்கு ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று தான் குர் ஆன் சொல்கிறது என வைத்துக்கொண்டாலும், அவ்வாறு சொல்வது , அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள எந்த வகையிலும் தடையாக இருக்காது என்பதால், ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து ஈசா நபி மீண்டும் இந்த உலகிற்கு வருவார்கள் என்பதை நீங்கள் நம்பதான் வேண்டும்.
இதை குறித்து நீங்கள் வெளிப்படையாகவே சொல்ல வேண்டும் என்பதால் தான் தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டு வருகிறேன்.

ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று ஒரு வாதத்திற்கு நம்பினாலும் கூட, மரணித்தவர் கூட மீண்டும் இந்த உலகத்திற்கு வரலாம், அல்லாஹ்வால் இது சாத்தியமே ! ஆக, ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று நம்பி விட்டே அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதையும் சேர்த்தே நம்பலாம்.

இதற்கு நீங்கள் சொல்லியுள்ள பதில்களை ஒவ்வொன்றாக அலசும்போது, இதற்கு நீங்கள் இன்னும் நேரடியான பதிலே சொல்லவில்லை என்பது தான் உறுதியாகிறது!!

நான் சொல்லும் காரணம் அது குரானோடு முரண் படுகிறது என்பதற்கு தான். இதற்கு எதற்க்காக ஹதிஷை பதிய வேண்டும் ? என் நிலையில்  ஈஸா நபியின் வருகை குறித்து வருகின்ற ஹதீஸ் அனைத்தையும் தான் மறுக்க வேண்டும். இது உங்களுக்கு தெரியாதா ? 


என்கிறீர்கள்.

உங்கள் நிலைப்படி குர் ஆனுக்கு முரணான ஹதீஸை ஏற்றுக்கொள்ள கூடாது என்கிற பதில், மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் ஆகாது!!

குர் ஆனில் ஈசா நபி மீண்டும் வர மாட்டார்கள் என்று ஏதேனும் வசனம் இருந்தால் தான், மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ் சொல்வது முரணாகும்.
குர் ஆனில் ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று தான் உங்கள் கருத்துப்படி வசனம் உள்ளது. மரணித்து விட்டார்கள் என்று குர் ஆன் சொல்வதும், மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல! மரணித்தவர் கூட மீண்டும் வரலாம்!
அதை தான் நாம் துவக்கம் முதலே கேட்கிறேன். நீங்கள் இப்போதும் குர் ஆனுக்கு முரணான ஹதீஸை ஏற்க மாட்டேன் என்று மட்டும் பதில் சொல்கிறீர்கள். இது எனது கேள்விக்கு பதிலல்ல!!


சனத் குறித்து சில கருத்து வேறுபாடுகளை நான் படித்திர்க்கிறேன் அதற்கு பதில் வேண்டுமானால் அந்த ஹதிஷை பதிந்து உங்களிடம் கேள்வியாக எனது அடுத்தடுத்த வாய்ப்புகளில் வைக்கிறேன். 

என்று சொல்கிறீர்கள். தாராளமாக சொல்லுங்கள். அதை தான் நானும் எதிர்ப்பார்க்கிறேன்.
எனது கேள்விக்கு இப்படி பொதுவாக சொல்வது பதிலாகாது. நான் எடுத்து வைத்துள்ள நான்கு ஹதீஸ்களையும் நீங்கள் சனது மூலம் மறுத்து விட்டு, நீங்கள் சொன்ன எல்லா ஹதீஸ்களும் பலகீனமானது, ஆகவே அந்த ஹதீஸ்களை மறுக்கிறேன் என்று விளக்க வேண்டும்.
நான் நான்கு ஹதீஸ்களை தந்துள்ளேன். அவை பல சனது தொடர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஹதீஸின் எந்த சனது தொடர், என்ன வகையில் தவறு என்பதை ஆதாரத்துடன் விளக்கி சொல்லுங்கள்.


தவிர அதுவல்ல நான் ஈஸா நபி வருகையை குறித்த ஹதிஷை மறுப்பதற்கு காரணம்.
என்று தொடர்ந்து சொல்லி, ஹதீஸ்களை மறுப்பதற்கு இந்த சனது பிரச்சனை காரணமல்ல, குர் ஆனுக்கு முரணாக இருப்பது தான் காரணம் என்று மீண்டும் தெளிவாகவே அறிவிப்பு செய்து விட்டீர்கள்.

நான் ஏற்கனவே சொன்னது போல, குர் ஆனுக்கு நான் எடுத்து வைத்த ஹதீஸ்கள் எந்த வகையிலும் முரணானது அல்ல. குர் ஆன், ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று சொல்லவில்லை, ஒரு வாதத்திற்கு மரணித்து விட்டார்கள் என்று தான் சொல்கிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட அதனால் இந்த ஹதீஸ் குர் ஆனுக்கு முரணாகாது. இதை பல முறை விளக்கி விட்டேன்.
தொடர்ந்து இதே கருத்தை நீங்கள் சொல்வதாக இருந்தால் நான் வைத்துள்ள ஹதீஸ்கள் எந்த இறை வசனத்திற்கு முரண், எப்படி முரண் என்பதை விளக்குங்கள்.

கடலில் செத்து மிதந்தாலும் அது ஹலால் என்றால் , எண்ணை கலந்து பல மீன்கள் கடலில் செத்து மிதந்ததே அது ஹலாலா ? அதை நீங்கள் உண்பீர்களா ? இதை எப்படி புரிகிறீர்கள் ?
இது போன்ற சட்டத்தில் விதி விலக்குக்கும் , நம்பிக்கையில் விதி விலக்குக்கும் புரிவதில் வேறு பாடுகள் நிறைய உள்ளன. அது மட்டுமே தனியாக விவாதிக்க பட வேண்டியது. அதனால் அதை இங்கே விவாதிக்க விரும்பவில்லை.

என்று சொல்கிறீர்கள். 
மேலே உள்ள உதாரணத்தை நான் எதற்காக சொன்னேன் என்பதை நீங்கள் புரியவில்லை.

எதற்காக சொன்னேன் என்றால், ஹதீஸ்களில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்படுவது, எல்லா நபிமார்களும் சென்று விட்டார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லும் குர் ஆனின் கருத்துக்கு முரண் என்று நீங்கள் சொல்வீர்கள் என்பதை முன்கூட்டியே யூகித்து, அந்த வசனத்திற்கு இந்த ஹதீஸ் முரண் என்று புரியக்கூடாது, கூடுதல் விளக்கம் என்று தான் புரிய வேண்டும் என்பதை விளக்கத்தான்!

தாமாக செத்தவை அனைத்தும் ஹராம் என்று குர் ஆன் சொல்கிறது. 
எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று குர் ஆன் சொல்கிறது.


கடல் பிராணிகளில் தாமாக செதவையும் ஹலால் என்று ஹதீஸ் சொல்கிறது.
ஈசா நபி இறுதி நாளின் போது இந்த உலகிற்கு வருவார்கள் என்று ஹதீஸ் சொல்கிறது.


இப்போது, தாமாக செத்தவை குறித்து நாம் என்ன நிலை எடுப்போம்? பொதுவாக தாமாக செத்தவை அனைத்தும் ஹராம் என்று குர் ஆன் சொல்லி விட்ட காரணத்தால், தாமாக செத்த கடல் பிராணிகள் ஹலால் என்று ஹதீஸ் சொல்வது குர் ஆனுக்கு முரண் என்று புரிவோமா? 
அல்லது குர் ஆனில் தாமாக செத்தவை அனைத்தும் ஹராம் என்று சொல்லப்பட்டாலும், கடல் பிராணிகளில் தாமாக செத்தவை ஹலால் என்று ஹதீஸ் சொல்வது குர் ஆனில் சொல்லப்பட்ட பொதுவான தடையில் இருந்து விதிவிலக்கு பெறப்பட்டது என்று புரிவோமா?

விதிவிலக்கு என்று தானே புரிகிறோம்?

அப்படி என்றால், நபிமார்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று குர் ஆன் சொல்லியிருந்தால் கூட, ஈசா நபி இந்த உலகிற்கு வருவார்கள் என்று ஹதீஸ் சொல்வதை மட்டும் ஏன் குர் ஆனுக்கு முரண் என்கிறீர்கள்? குர் ஆனில் நபிமார்கள் குறித்து பொதுவாக சொல்லப்பட்ட செய்தியிலிருந்து இந்த ஹதீஸ் ஈசா நபிக்கு மட்டும் விதி விலக்கு தருகிறது என்று தானே புரிய வேண்டும்?

கடல் பிராணிகள் விஷயத்தில் ஒரு நிலையும், ஈசா நபி விஷயத்தில் வேறொரு நிலையும் எடுப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றல்ல! இதை புரிய வைக்கவே இந்த உதாரணம் !

இதற்கு உங்களின் மறுப்பில் பதில் உள்ளதா?

கடலில் செத்து மிதந்தாலும் அது ஹலால் என்றால் , எண்ணை கலந்து பல மீன்கள் கடலில் செத்து மிதந்ததே அது ஹலாலா ? அதை நீங்கள் உண்பீர்களா ? இதை எப்படி புரிகிறீர்கள் ?


என்று கேட்கிறீர்கள். இந்த கேள்விக்கும் மேலே நான் எழுப்பிய கேள்விக்கும் என்ன சம்மந்தம்?  கடலில் எண்ணெய் கலந்து செத்த மீன்களை சாப்பிட கூடாது என்பது, உடல் நலத்திற்கு கேடான எதையும் நாம் செய்ய கூடாது என்கிற பொது சட்டத்தில் அடங்கும்.
ஆனால் நான் கேட்பது, எண்ணெய் கலந்து செத்த மீன்களை விடுவோம், தாமாக செத்த நல்ல மீன்களை சாப்பிடுவதற்கு குர் ஆன் தடை சொல்கிறதே, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்பது தான்!
நல்ல மீன்களை சாப்பிடுவதற்கும் குர் ஆன் தடை சொல்லத்தான் செய்கிறது, ஆகவே ஹதீஸ் குர் ஆனுக்கு முரண் என்று நீங்கள் சொல்வீர்களா? என்கிற எனது கேள்விக்கு, எண்ணெய் கலந்த மீன்கள் செத்தால் அதை சாப்பிடலாமா என்று நீங்கள் கேட்கும் மறு கேள்வி எந்த வகையிலும் பொருத்தமானதாக இல்லை!

ஆக, எனது கேள்வி இன்னும் மிச்சமகவே உள்ளது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

அடுத்ததாக, 3 :75 வசனம் எப்படி ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்று சொல்கிறது என்பதை விளக்கியிருந்தேன். எதிர்பார்த்தபடியே தான் உங்கள் பதிலும் அமைந்துள்ளது.

ஈசா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லியுள்ளதன் மூலம் ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்று பொருளாகிறது என்று முந்தைய வாய்ப்பின் போது சொல்லியிருந்தேன்.

எனவே ஈஸா நபி இறந்து போனதை சொல்லி அவரை எப்படி இறைவனின் குமாரராக முடியும் என்று சொல்வது பொறுத்த மற்றது அது கிருத்துவர்களை சிந்திக்க தூண்டாது.


ஈசா நபி மரணித்து விட்டாலும் அவரை கடவுளாக நம்புவதற்கு அது தடையாக இருக்காது என்பதால் தான் ஈசா நபியின் மரணத்தை பற்றி அந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லவில்லை என்று பதில் சொல்கிறீர்கள். 
ஈசா நபியின் மரணம், அவரை கடவுளாக ஏற்பதை விட்டும் அந்த கூட்டத்தை தடுக்காது என்பது சரி தான், நான் மறுக்கவில்லை. 
ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்கவில்லை. 
ஈசா நபியை அந்த கூட்டம் கடவுளாக நம்புவது அவர் இறந்து விட்டார் என்பதை வைத்தல்ல! இறந்த பின் மீண்டும் உயிர் பெற்று விட்டார் என்பதை வைத்து தான்!!

இதை நீங்களும் சொல்லியுள்ளீர்கள். அவர் இறந்தார் பின்னர் உயிர்தெழுந்தார் என்பது தான் அவர்களது கொள்கையின் அடிப்படையே.

இந்த வசனம் இறங்கும் போது ஈசா நபி இறந்திருந்தால், இறந்தவர் மீண்டும் எழுந்தாரா? என்று கேள்வி எழுப்பி அதன் மூலம் தான் அல்லாஹ் அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில், ஈசா நபி இறந்து விட்டார் என்று அவர்கள் நம்பியது போல, அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதும் தான் அவர்களது நம்பிக்கை ! பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஈசா நபி இறந்து விட்டது உண்மையெனில், அதை காரணம் காட்டி அவரது கடவுள் தன்மையை மறுக்க முடியாது என்றாலும், அவர் மீண்டும் எழுந்து வரவில்லை   என்பதை காரணம் காட்டி அவரது கடவுள் தன்மையை மறுக்கலாம்!

அதற்கு இந்த வசனம் பொருத்தமான இடம் தான்!

அவர் மரணித்து விட்டார், மீண்டும் எழவுமில்லை என்று சொல்வதன் மூலம், மரணித்தவர் மீண்டும் வருவதால் அவர் கடவுள் தான் என்று ஈசா நபியை அந்த காரணத்தை வைத்து கடவுளாக நம்பியவர்களுக்கு அது மறுப்பாக தான் அமையும். அப்படி அல்லாஹ் இங்கு சொல்லவில்லை.
மாறாக, ஈசா நபிக்கு முன்பு எல்லா நபிமார்களும் இறந்து விட்டதை தான் சொல்கிறான்.

ஈசா நபிக்கு முன் எப்படி எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்களோ அதே போல இவரும் இறந்து போவார் ! என்பது தான் இதன் பொருளே தவிர, முன் சென்ற நம்பிமார்கள் மீண்டும் உயிர்தெழாதது போல இவரும் மீண்டும் உயிர்த்தெழவில்லை என்று சொல்கிற வசனமல்ல.
அப்படி சொல்வதற்கு பதில் நேரடியாக, ஈசா நபி இறந்து விட்டார் ஆனால் இன்று வரை உயிர்த்தெழவில்லை என்று அல்லாஹ் சொல்லியிருக்கலாம் , நேரடியாக ஒன்றை சொல்வதற்கு இடமிருக்கும் போது இங்கு அவசியமில்லாமல் முன் சென்ற நபிமார்களை அல்லாஹ் இங்கு சொல்லியிருக்க தேவையில்லை.

அதாவது, மரணத்தை சொல்வது அவர்களை பொறுத்தவரை கடவுள் தன்மையை பின்பற்றுவதிலிருந்து தடுக்காது, ஆனால், மீண்டும் உயிர்த்தெழவில்லை என்று சொல்வது தடுக்கும் என்பதால் முன் சென்ற நபிமார்களை பற்றி அல்லாஹ் சொல்வதாக நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் உங்களுக்கே எதிராக தான் உள்ளது. முன் சென்ற நம்பிமார்கள் எப்படி இறந்த பின்னர் மீண்டும் வரவில்லையோ அதே போல இறந்து போன ஈசாவும் வரவில்லை என்று சொல்வதற்கு பதில், நேரடியாக, நீங்கள் கடவுளாக நம்புகிற இந்த ஈசா இறந்து விட்டார், ஆனால் மீண்டும் வரவேயில்லை என்று சொல்லலாம். இது தான் எளிமையான வாதமாக இருக்கும்.

இதே போன்று வரக்கூடிய இறை வசனங்களை எப்படி புரிய வேண்டும் என்பதற்கு நான் ஆதாரம் தருவதற்கு முன்னர் நீங்களே தந்து விட்டீர்கள்.

அல்லா இதே போன்று ஒரு வசனத்தை இறக்குகிறான். அதில் இவரை போன்று பல தூதர்கள் வந்து சென்று விட்டனர் எனவே இவர் இறந்து போனால் இவரது கூற்று பொய்யாகி விடுமா என்று சிந்திக்க சொல்கிறான்.

ஈசா நபிக்கு முன் வந்த நபிமார்கள் இறந்து விட்டார்கள் என்று வரும் வசனம் போல, முஹம்மது நபிக்கு முன் வந்த நம்பிமார்கள் இறந்து விட்டார்கள் என்று வேறொரு வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
ஈசா நபி பற்றி சொல்லப்படும் வசனத்தில் ஈசா நபி இறந்து விட்டார்கள் என்று புரிவதாக இருந்தால், முஹம்மது நபி  பற்றி வரக்கூடிய வசனத்தில் முஹம்மது நபியும் இறந்து விட்டார்கள் என்று சொல்வதாகவே புரிய வேண்டும்.

மற்ற நபி மார்கள் இறந்து போனது போலவே முஹம்மது நபி ஸல் அவர்களும் மரணிப்பவர்கள் தான். இரண்டுமே மற்ற நபி மார்களை போன்று தான் இருவரும் என்ற ஒரு கருத்தின் நோக்கத்திற்கே சொல்லபடுகிறது.

என்று நீங்களே சொல்லி விட்டதை போல, முஹம்மது நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்வது , எல்லா நபிமார்களும் போல இந்த முஹம்மதும் இறந்து போவார் என்பதை சொல்லத்தான். 
இனிமேல் தான் இறந்து போவார்.!!! அது போல, எல்லா நபிமார்களும் இறந்தது போல ஈசாவும் இனிமேல் இறந்து போவார். !!

இதை மறுப்பதற்கு கீழ்காணும் வேறொரு உதாரணத்தை சொல்கிறீர்கள்.

வார்த்தைக்கு வார்த்தை என்றால் யஹ்யா அலை அவர்களுக்கு ஈஸா அலை அவர்களுக்கும் குர்ஆனில் ஒரே மாதிரியான வார்த்தை பிரயோகத்துடன் வரும் வசனத்தின் பொருள் படி  யஹ்யா அலை அவர்களை போன்றே ஈஸா அலை அவர்களும் மரணித்தார் என்று தான் சொல்ல வேண்டும். 

அவரது பிறப்பின் போதும் இறப்பின் போது அவருக்கு நன்மாராயம் உள்ளது என்று ஈசா நபி பற்றி தனியாகவும் யஹ்யா நபி பற்றி தனியாகவும் அல்லாஹ் சொல்கிறான். இதை வைத்து,  யஹ்யா நபி இறந்து விட்டதை போல ஈசா நபியும் இறந்து விட்டார் என்று தான் புரிய வேண்டும் என்று வாதம் வைக்கிறீர்கள்.

இதுவும் தவறான புரிதல்.

அந்த வசனம் யஹ்யா நபியின் மரணத்தை பற்றி பேசுகிற வசனமல்ல. யஹ்யா நபி இறந்து விட்டார் என்று சொல்கிற வசனமல்ல. அவரது மரணத்தின் போது அவருக்கு நன்மாராயம் இருக்கும் என்று சொல்கிற வசனம். அவ்வளவு தான்.

ஆனால் முஹம்மது நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று வருகிற வசனம், எல்லா நபிமார்களை போல முஹம்மது நபியும் இறந்து போவார் என்கிற செய்தியை சொல்வதற்க்காகவே இறக்கப்பட்ட வசனம்.  இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது !!

முஹம்மது நபி இறந்து போவார் என்கிற செய்தியை சொல்வதற்கு இறக்கப்பட்ட இந்த வசனத்தின் வார்த்தை அமைப்பை போன்று இன்னொரு இடத்தில் ஈசா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து போனார்கள் என்கிற அதே வார்த்தை அமைப்பு இருக்கும் போது, முஹம்மது நபி விஷயமாக என்ன நிலையை எடுத்தோமோ  அதே நிலையை தான் ஈசா நபி விஷயமாகவும் எடுக்க வேண்டும்.

இந்த வாதத்தை மறுப்பதற்கு நீங்கள் சொல்கிற யஹ்யா - ஈசா நபி வசனங்களின் வார்த்தை அமைப்பு பொருந்தாது. ஏனெனில், யஹ்யா நபி மரணித்து விட்டார்கள் என்கிற செய்தியை சொல்வதற்கு இறக்கப்பட்ட்ட வசனமல்ல அது. அந்த வசனம் அந்த கருத்தை தரவும் செய்யாது. அது, அவரது மரணத்தின் போது அவருக்கு அல்லாஹ்வின் அருள் இருக்கும் என்கிற செய்தியை சொல்ல வந்த வசனம். அதே போல ஈசா நபியின் மரணத்தின் போதும் அல்லாஹ்வின் அருள் ஈசா நபிக்கு இருக்கும். இது தான் அந்த வசனங்களின் கருத்து. ஈசா நபி இனி மரணிக்கும் போது அல்லாஹ்வின் அருள் இருக்கும் என்று புரிவதற்கு அந்த வசனம் தடையாக இல்லை!

அடுத்து, ஈசா நபி உயர்த்தப்பட்டார் என்று வரக்கூடிய வசனத்தை காட்டி, அங்கே அந்தஸ்து உயர்வு என்றோ தகுதி உயர்வோ என்றோ பொருள் செய்யவே இயலாது, மாறாக அவரையே உயர்த்தியதை தான் அல்லாஹ் இங்கு சொல்கிறான் என்பதை பல காரணங்களை எடுத்து வைத்து விளக்கியிருந்தேன்.

இதை மறுக்க நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்களை பார்ப்போம்.

"நான் என்னளவில் உன்னை நல்லவனாக நம்புகிறேன்."
"என்னளவில் நீ உயர்ந்து நிற்கிறாய்."
என்ற வாக்கியங்கள் எல்லாம்,  சொல்பவரின் சம நிலையை சொல்லுமா அல்லது தன்னை பொறுத்த மட்டில் என்ற கருத்தை சொல்லுமா ?
தன்னை பொறுத்த மட்டில் என்ற கருத்தை தான் சொல்லும்.  எனவே இது ஏற்று கொள்ள முடியாத ஒரு வாதம்.

என்பது உங்கள் முதல் மறுப்பு. ஆனால், மூன்று காரணங்களாக நான் சொன்னவைகளில் முதல் காரணத்தை கண்டுகொள்ளாமல் எனது இரண்டாவது காரணத்திற்கு தான் இந்த மறுப்பை சொல்லியுள்ளீர்கள்.

தன்னளவில் அல்லாஹ் உயர்த்தினான் என்பதற்கு, என்னளவில் அவரை நல்லவனாக கருதுகிறேன் என்று சாதாரணமாக நாம் பேசுவது போல , அந்த அர்த்தத்தில் பொருள் செய்ய வேண்டும் என்கிறீர்கள். இது எந்த வகையிலும் அர்த்தமில்லாத வாதம்.

என்னளவில் நான் அவரை நல்லவனாக கருதுகிறேன் என்று சொல்வது மனிதனின் பலகீனமான வார்த்தை. மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் என்னை பொறுத்தவரை நீ நல்லவன் தான் என்று சொல்வதெல்லாம், எனது அறிவுக்கு உட்பட்டு நீ நல்லவன் என்கிற கருத்தை தரும். அப்படி அல்லாஹ் சொல்வானா? என்பது தான் கேள்வி. ஒரு வாதத்திற்கு அப்படி அல்லாஹ் கருதினான் என்று வைத்தாலும் இந்த இடத்திற்கு இந்த வாதமும் பொருந்தாது.
ரபாஹுல்லாஹ் - என்றால் தன்னளவுக்கு உயர்த்தினான் என்று படர்க்கையான சொல்லாகும். மேலும் உயர்வாக கருதினான் என்கிற வாசகமும் அங்கு இல்லை. உயர்த்தினான் என்று தான் உள்ளது.
முன்னிலையாக சொல்லும் போது தான் என்னளவில் அவரை நல்லவனாக கருதினேன் என்று சொல்வது பொருந்தும். படர்க்கையாக பேசும் போது, தன்னளவில் அவரை நல்லவனாக கருதினான் என்று சொல்லலாமே தவிர தன்னளவில் அவரை நல்லவனாக்கினான் என்பது வார்த்தை அமைப்பின் படியும் பொருந்தாது.

தன்னளவில் என்பதை தன்னை பொறுத்தவரை என்று பொருள் செய்ய இடமிருந்தாலும் அதை விட நெருக்கமான அர்த்தம் தன் கட்டுப்பாட்டில், என்பது தான். இதை தான் எனது மற்ற இரண்டு காரணங்களும் விளக்குகின்றன. அவைகளுக்கு நீங்கள் எந்த மறுப்பும் சொல்லவில்லை  .

எனது முதல் காரணத்தில் சொன்னது போல, ஒருவரது அந்தஸ்தை உயர்த்தியதாக சொல்வது என்பது ஒரு வகையான வார்த்தை பிரயோகம், ஒருவரை வெறுமனே உயர்த்தியதாக சொல்வது வேறொரு வார்த்தை பிரயோகம்.
அந்தஸ்தை உயர்த்துவதற்கு அல்லாஹ் உபயோகிக்கும் வார்த்தை பிரயோகமானது, குர் ஆனின் வேறு வசனத்தில் உள்ளது. அங்கே இத்ரீஸ் நபியை உயர்த்தியதாக அல்லாஹ் சொல்கிறான்.
அந்த இடத்தில் அந்தஸ்து உயர்வு என்று பொருள் செய்கிறோம், காரணம் அந்தஸ்து என்கிற வார்த்தை அங்கே உள்ளது. ரபாஹுல்லாஹு மகான.. உயர்ந்த இடத்திற்கு அல்லாஹ் உயர்த்தினான். மகான என்றால் இடம்.

உயர்த்தினான் என்பதுடன் சேர்த்து இடம், தகுதி,அந்தஸ்து, பதவி, நிலை என்கிற பொருள் பட ஏதேனும் வார்த்தை அமைப்பு இருந்தால் தான் அதில் உயர்த்தினான் என்று பொருள் செய்ய முடியும். எதையும் சொல்லாமல் வெறுமனே உயர்த்தினான் என்றால் , அந்தஸ்தில் உயர்த்தினான் தகுதியில் உயர்த்தினான் என்று நாமாக வெறுமனே சொல்லிக்கொள்ள முடியாது. அந்தஸ்தில் உயர்த்தினான் என்று வேறு வசனங்களில் அல்லாஹ் சொல்வதற்கும், வெறுமனே உயர்த்தினான் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் வேறுபடுத்தி சொல்வதற்கும் நாமும் மொழியாக்கத்தில் வேறுபாட்டை காட்ட வேண்டும். 
இரண்டு வெவ்வேறு வார்த்தை பிரயோகங்களுக்கு ஒரே மாதிரியான மொழியாக்கத்தை செய்ய கூடாது.

இதற்கு பதில் சொல்லும் போது 

ஈஸா நபி வசனத்தில் எந்த துணை சொல்லும் இல்லை என்று சொல்கிறீர்கள். நான் உள்ளது என்று சொல்கிறேன்.
அல்லா தன்னளவில் என்ற வார்த்தையை போடுகிறான். 

என்று மேலே உள்ள எனது கேள்விக்கு ஒரு பதிலை சொல்லியுள்ளீர்கள்.

அதாவது, உயர்த்தினான் என்பதுடன் சேர்த்து அந்தஸ்து, பதவி போன்ற துணையெழுத்து இதில் இல்லை என்பதால் அந்தஸ்தில் உயர்த்தினான் என்று பொருள் செய்ய முடியாது என்று நான் சொன்ன வாதத்திற்கு பதிலாக, "ஏன் இல்லை, இதோ "தன்னளவில்" என்று இருக்கிறதே, என்று சொல்கிறீர்கள்.

தன்னளவில் உயர்த்தினான் என்பதற்கு உங்கள் விளக்கம், தன்னை பொறுத்தவரை உயர்த்தினான் என்பது தான்..
ஒரு வாதத்திற்கு தன்னை பொறுத்தவரை உயர்த்தியதாக அல்லாஹ் சொல்கிறான் என்றே வைத்துக்கொண்டாலும் அந்தஸ்தில் உயர்வு என்று எங்கே உள்ளது?
தன்னை பொறுத்தவரை உடலுடன் மேலே உயர்த்தினான் என்று தான் இப்போதும் உங்கள் மொழியாக்கத்தின் படி கருத்தாகிறதே தவிர, அந்தஸ்தில் உயர்வு என்று இப்போதும் வராது!

அந்தஸ்து என்றால் அந்தஸ்து என்கிற வார்த்தை வர வேண்டும். வெறுமனே உயர்த்தினான் என்றால் உயர்த்தினான் என்று நேரடியாக தான் புரிய வேண்டும். தன்னளவில் என்கிற வார்த்தைக்கு அல்லாஹ்வை பொறுத்தவரை, என்று பொருள் செய்தால் கூட, அல்லாஹ்வை பொறுத்தவரை ஈசா நபி மேலே உயர்த்தப்பட்டார் என்கிற பொருள் தான் கிடைக்குமே தவிர அந்தஸ்து என்பதற்கு எள்ளளவும் இடமில்லை.

மேலும், வெறுமனே உயர்த்தினான் என்று சொல்லப்பட்டால் உயர்த்தினான் என்று நேரடியாக தான் புரிய வேண்டும் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் தொழுகையின் போது தக்பீர் சொல்லி கைகளை உயர்த்துவது பற்றி வரக்கூடிய ஹதீஸ்.

தொழுகையை துவக்கும் போது தக்பீர் சொல்லி கைகளை உயர்த்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிற இடத்தில் இதே "ரபா" என்கிற வார்த்தையை தான் பயன்படுதியுள்ளார்கள். இங்கே கைகளின் அந்தஸ்தை உயர்த்துதல் என்று புரிய வேண்டுமா அல்லது கைகளையே மேலே தூக்க வேண்டும் என்று புரிவோமா? கைகளை மேலே உயர்த்துதல் என்று தான் புரிவோம். இங்கே ரபா என்பதுடன் சேர்த்து அந்தஸ்தில் உயர்த்துதல் என்று இல்லை.
ஆக, வெறுமனே உயர்த்துதல் என்று சொல்லப்பட்டால் அதையே உயர்த்துதல் என்று தான் பொருள், அந்தஸ்து, பதவி போன்றவற்றில் உயர்த்துவதாக சொல்ல நினைத்தால் அப்படி கூடுதல் வாசகங்கள் இடம்பெற வேண்டும்.

ஈசா நபி பற்றிய இந்த வசனத்தில் அத்தகைய கூடுதல் வாசகங்கள் இல்லை. தன்னளவில் என்று சொல்வதில் கூட, ஒரு வாதத்திற்கு உங்கள் கருத்தை ஒப்புக்கொண்டாலும், தன்னை பொறுத்தவரை மேலே உயர்த்தினான் என்று தான் பொருளாகுமே தவிர அந்தஸ்தில் உயர்த்தியதாக பொருள் செய்ய இயலாது என்பதை கடுகளவும் சந்தேகமின்றி மீண்டும் தெளிவாகவே பதிவு செய்கிறேன்.

மேலும், எனது மூன்றாம் காரணத்தின் படி, தொடர்ந்து அல்லாஹ் தன்னை வல்லமைமிகவன் எனவும் மிக்க அறிவுடையவன் எனவும் சொல்வது, ஈசா நபியை உடலுடனேயே தூக்கியதை மேலும் உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதை மறுத்த நீங்கள், 

ஒரு விசயத்தில்  இருந்து காப்பாற்றி விட்டு இது போன்ற வார்த்தைகளை அல்லா சொல்லும் போது அது  நம் இருவரின் கருத்துக்கும் பொருந்தும் வாசகம் தான். எனவே இது பெரு பெரும் காரணமாக எல்லாம் சொல்ல முடியாது.

இதை எல்லாம் பெரிய காரணமாக சொல்ல முடியாது என்று பொதுவான ஒரு பதிலோடு நிறுத்துகிறீர்கள்.

எப்படி பெரிய காரணமாகாது என்பதை விளக்கி விட்டு இப்படி சொன்னால் தான் யாருமே ஏற்றுகொள்வார்கள். நான் அதை பல வகையில் விளக்கமாக, அந்த வசனம் எப்படி கச்சிதமாக பொருந்துகிறது என்பதை தெளிவாக்கி விட்டு இதை சொல்லியிருக்கும் போது நீங்கள் ஒற்றை வரியில், இதுவெல்லாம் பெரிய காரணம் கிடையாது என்று பதில் சொன்னால் எப்படி?

அவர்கள் ஈஸா நபியை கொன்று விட்டதாக நினைக்கின்றனர்.
அது தவறு, உண்மையில் அவர்கள் அவரை கொல்லவில்லை.
சிலுவையில் அறையவுமில்லை.
அவ்வாறு அவர்கள் தவறாக நம்புகின்றனர். அவர்கள் செய்வது வெறும் யூகம் தான்.
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை.
ஆனால் அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான்.
அல்லாஹ் வல்லமைமிக்கவன்  , மற்றும் ஞானமுடையவன்


தனன்ளவில் என்பதை, உங்கள் கருத்துப்படி தன்னை பொறுத்தவரை என்று கூட மாற்றிக்கொள்ளுங்கள், இப்போதும் எனது கேள்வி மிச்சமகவே இருக்கிறது. இந்த இடத்தில் அல்லாஹ் தமது ஆற்றல், வல்லமை பற்றியும் தமது அறிவு ஞானத்தை பற்றியும் எதற்காக பேச வேண்டும்?
அல்லாஹ்வின் வேதத்தை கொண்டு அறிவுரை கூறப்பட்டால் கூட செவிடர்களாக விழாமல் இந்த இடத்தில் எதற்க்காக இந்த வசனம், என்று சிந்திக்க தூண்டுகிற மார்க்கத்தை பெற்றிருக்கிற நாம், இதை சிந்திக்க வேண்டாமா?

அவர்கள் ஈஸாவை கொலை செய்து விட்டதாக எண்ணுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் கொலை செய்யவில்லை, தன்னளவில் அல்லாஹ் அவரை உயர்த்தினான். அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்று வரக்கூடிய வசனத்தில், அல்லாஹ் ஈசா நபியின் அந்தஸ்தை உயர்த்தினான் என்று வைத்தால், அந்தஸ்தில் உயர்த்துவதற்கு அல்லாஹ்வின் வல்லமை பற்றி எதற்காக இங்கே பேச வேண்டும் என்கிற எனது கேள்வி மிச்சமகவே உள்ளது. அந்தஸ்தை உயர்த்த அல்லாஹ்வுக்கு அறிவும் வல்லமையும் அவசியமில்லை.

சாதாரண மனித பேச்சு வழக்கில் கூட இப்படி பேச மாட்டோம் என்னை பொறுத்தவரை அவர் நல்லவர் என்று ஒருவரை பற்றி நான் சொல்கிறேன் என்றால் இப்படி சொல்வதற்கு எனக்கு மிகப்பெரிய அறிவும், சக்தியும் தேவையும் இல்லை.
அப்படி ஒருவரை நல்லவராக கருதுவதற்கும் நான் அறிவாளியாக இருப்பதற்கும் சம்மந்தமில்லை.
ஆனால், ஒருவரை யாருக்கும் தெரியாமல் உடலுடன் வானத்தில் தூக்கி விடுவதற்கு அறிவும் ஆற்றலும் தேவை! அதை தான் அல்லாஹ் இங்கு சொல்கிறேன். அது தான் பொருத்தமாகவும் உள்ளது!

தொடர்ந்து, 

கைப்பற்றுவேன் என்பதே உடலோடு தூக்கி கொள்வேன் என்று இருக்குமானால், உன்னை என்னளவில் உயர்த்தி கொள்வேன் என்ற சொல் எதை முக்கியபடுதுகிறது ? அவரை அல்லா உடலோடு தூக்கி பின்னர் அவனது உயரத்திற்கு உயர்த்துவதா ? அதாவது,வபாத் என்றாலும் ரபா என்றாலும் ஈஸா நபி விசயத்தில் உங்களை பொறுத்த மட்டில் ஒரே அர்த்தம் தான். உடலோடு உயர்த்துவது. இதற்கு ஏன் வபாத் என்றும் ரபா என்றும்  சொல்ல படுகிறது என்பது சிந்தித்தால் விளங்க போதுமானது.

என்று 3 :55 வசனத்தை எடுத்து வைத்து வாதம் வைத்துள்ளீர்கள்.
அந்த வசனத்தில் ஈசா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்று முதலில் சொல்லி விட்டு அடுத்து உயர்த்தினான் என்று சொல்கிறான்.
இரண்டுமே ஒரே பொருள் அல்ல, இரண்டும் இரண்டு கருத்தை சொல்கிற வசனம் தான் என்பதை எனது முந்தைய வாய்ப்பின் போது தெளிவாகவே விளக்கியிருந்தேன். 

மேலும் வபாத் என்பதற்கு நீங்கள் வைக்கும் வாதங்களும் "உள்ளம் புண்படும்" உதாரணங்களும் எந்த வகையிலும் எனது வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் பொருத்தமானதாக இல்லை.

வபாத் குறித்த உங்கள் வாதங்களில் ஒரு வரி கூட விடாமல் அடுத்தடுத்த வாய்ப்புகளில் மறுப்பு தரப்படும் இன்ஷா அல்லாஹ்.
நேர்வழிக்கு அல்லாஹ் போதுமானவன்.

வஸ்ஸலாம்.
-- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக