வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஷஃபாஅத் - மறுமையில் பரிந்துரைஅல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ”அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். ”வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்­க் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ”அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)


மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன.


1. அறவே பரிந்துரை கிடையாது
2. நல்லடியார்கள், நபிமார்கள் தாம் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்
3. நிபந்தனையுடன் கூடிய பரிந்துரை உண்டு


இம்மூன்று கருத்துக்களில் முதலிரண்டு கருத்துக்களும் குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதவர்களின் கருத்தாகும்.
அறவே பரிந்துரை இல்லை என்ற கருத்தில் உள்ள வசனங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பரிந்துரையை அடியோடு மறுப்பவர்கள், பரிந்துரை பற்றிய அனைத்து வசனங்களையும் பார்ப்பதில்லை. பரிந்துரை பற்றிக் கூறும் சில வசனங்களை ஆழமான பார்வையில்லாமல் பார்ப்பதால் இரண்டாம் கருத்துக்கு சிலர் வந்துள்ளனர். இரண்டும் தவறாகும்.

ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:48)

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றி­ருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன 2:254)


”தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ இல்லை” என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர். (அல்குர்ஆன் 6:51)


இதே கருத்தில் அமைந்துள்ள (திருக்குர்ஆன் 2:123, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43,44, 74:48,) ஆகிய இவ்வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.

அவன் அனுமதியின்றி யார் பரிந்துரைக்க முடியும்
(அல்குர்ஆன் 2:255)

அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை
(அல்குர்ஆன் 10:3)
ஆகிய வசனங்களில் இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை அறியலாம். இறைவன் இதற்கு அனுமதியளிக்க மாட்டான் என்றால் இவ்வாறு கூற மாட்டான்.

அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள் (அல்குர்ஆன் 21:28)

ரஹ்மானிடம் உடன்படிக்கை எடுத்தவர் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளர் அல்லர் (அல்குர்ஆன் 19:87)

அவன் யாருக்கு அனுமதியளிக்கின்றானோ அவருக்கே தவிர மற்றவர் களுக்குப் பரிந்துரை பயன் தராது (அல்குர்ஆன் 20:109)

அவன் யாருக்கு அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது (அல்குர்ஆன் 34:23)

அவனன்றி அவர்கள் பிரார்த்திப்போர் பரிந்துரைக்கு உரிமையாளர்களாக மாட்டார்கள். அறிந்து, உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர. (அல்குர்ஆன் 43:86)

அல்லாஹ் தான் நாடியவருக்கு அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது (அல்குர்ஆன் 53:26)


சிலருக்குப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கப்படும் என்பதையும், அந்தப் பரிந்துரை பயன் தரும் என்பதையும் இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.


குர்ஆனைப் பற்றிய போதிய அறிவு இல்லாத ஒரு சிறு கூட்டத்தினர் மறுமையில் பரிந்துரை இல்லை எனக் கூறுகின்றனர். அது தவறு என்பதற்கு இவ்வசனங்கள் போதிய சான்றாகும்.


எவரது பரிந்துரையும் இன்றி நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத்தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத் தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.


‘இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையைத் தா!’ என்று கேட்பது தவறாகும்.
என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.


மறுமையில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எனவே ”மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்” என்று இங்கே வாழும் போது கேட்கக் கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.
மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணை வைப்போர் ஆனார்கள்.


யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.


அல்லாஹ்வே நம்மை மன்னிக்க முடிவெடுக்கும் போது ஒருவரை அழைத்து ”இவருக்குப் பரிந்துரை செய்” என்பான். பெயரளவில் தான் இது பரிந்துரையே தவிர தீர்மானம் அவனிடத்தில் மட்டுமே உள்ளது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக