திங்கள், 7 பிப்ரவரி, 2011

நழுவும் சிராஜ்

அஸ்ஸலாமு அலைக்கும்..

உங்கள் கொள்கையில் எதை தவறு என்று பிஜே சொல்லி வருகிறாரோ, அதற்கு தான் மறுப்பு சொல்ல வேண்டுமே அல்லாமல், அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டதை, அவர் சரி காண்பதை நீங்கள் "வாக்குமூலம்", என்ற பெயரில் எடுத்துக்காட்ட தேவையில்லை..


பிறையை என்றைக்கு பார்க்க வேண்டும், எந்த திசையில் பார்க்க வேண்டும் என்பதை விஞ்ஞானம் உறுதியாக சொல்லும் என்பதில் மாற்றுக்கருத்து எவரும் கொண்டதில்லை!
அதை வைத்து, அந்த தேதியில், அந்த திசையில் பார்க்க வேண்டும்.. கண்ணால் பார்க்க வேண்டும்.. ஒவ்வொரு மாதமும் பார்க்க வேண்டும்.
உங்களது கொள்கை, 3000 வருடங்களை இன்றே கணிக்கிட்டு காலண்டர் அடிக்கலாம் என்பது!.
அதை தவறு என்று பிஜே சொல்கிறார்.

உங்கள் கடமை, பிஜே அதை ஒப்புக்கொண்டு விட்டார் என்று காட்டுங்கள்..
அல்லது, நீங்களே சவடால் விட்டதை போல், அவரை விவாத ஒப்பந்தத்திற்கு அழையுங்கள்..
அதற்கும் இயலாது என்றால் விவாதத்திற்கு நாங்கள் தயார் இல்லை என்று அறிவித்து விடுங்கள்..

ஏதோ, பிஜே இதுவரை ரகசியமாக வைத்திருந்ததை போலவும், அவரிடம் துருவி துருவி விசாரித்த நிலையில் அவர் வாக்குமூலம் அளித்து விட்டார் என்பதை போலவும் பேசுகிறீர்கள். இது வேடிக்கையிலும் வேடிக்கை..

அவர், விஞ்ஞானப்படி பிறையை முன்கூட்டியே கணக்கிட முடியாது என்று கூறியதில்லை. முன்கூட்டியே கணக்கிட கூடாது என்பதே அவரது வாதம்.. இதற்கு தான் நீங்கள் பதில் சொல்லும் நிலையில் இருக்கிறீர்கள். இதற்கு தான் நீங்கள் அவரை விவாதத்திற்கு அழைக்கும் நிலையில் இருக்கிறீர்கள்.

பிறையை கணக்கிட கூடாது, கண்ணால் பார்க்க தான் வேண்டும் என்று சொல்வது ஒரு கொள்கை என்றால், எந்த தினத்தில், எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்று விஞ்ஞானம் சொல்கிறதோ, அந்த நேரத்தில் தான் பார்க்க வேண்டும் என்று சொல்வதும் அதே கொள்கையில் அடங்கிய விஷயம் தான். .
இதனால் பிறை விஷயத்தில் முன்கூட்டியே கணக்கிடும் விஞ்ஞானத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக ஆகாது..

உதாரணமாக, பகல் 1 மணிக்கு பிறை பார்த்தேன் என்று ஒருவர் கூறினால், அவர் பிறை பார்த்து விட்டதாக சொல்லி விட்டார் என்பதற்காக அவரது அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.. அவரை நோக்கி, "பகலில் எப்படியப்பா பிறை பார்க்க முடியும்? என்று திருப்பிக்கேட்போம்..
இவ்வாறு கேட்பதில் என்ன அடங்கியுள்ளது என்றால், பகலில் முதல் பிறை தெரியாது என்று விஞ்ஞானம் சொல்கிறது, ஆகவே நீ பகலில் பாத்திருக்க முடியாது!
பகலில் பிறை தெரிவதை விஞ்ஞானம் மறுக்கிறது என்ற காரணத்திற்க்காக பகலில் பிறை பார்க்கப்பட்ட செய்தியை நாம் மறுத்தால், பிறை விஷயத்தில் முழுமையாக விஞ்ஞானத்தை நாம் ஏற்றுக்கொண்டதாக ஆகாது. மாறாக, பிறையை கண்ணால் தான் பார்க்க வேண்டும்.ஆனால், எங்கே பார்ப்பது, எப்போது பார்ப்பது என்ற அடிப்படை விபரத்தோடு பார்க்க வேண்டும், என்பது அதனுடிய பொருள்.

ஆகே, எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளதோ, அதை குறித்து விவாதத்திற்கு அழைத்தால், சம்மந்தமில்லாத செய்திகளை பேசுவது முறையல்ல!


விவாதத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு, அதை ஏற்றுக்கொண்ட பின்னர் செய்வதறியாது விழி பிதுங்கியுள்ள நீங்கள், பிஜேயின் எழுத்துக்களில் விமர்சனம் என்ற பெயரில் கட்டுரை மட்டும் எழுதுவது கேலிக்கும் நகைப்புக்கும் உரியது.

விவாதத்திற்கு நீங்கள் சவால் விட்டதை அவரும் ஏற்றுக்கொண்ட பின்னர், நீங்கள் விவாதத்திற்கு முன் வராமல் இவ்வாறு கோழைத்தனம் காட்டக்கூடாது.

பிறை குறித்த அவரது கொள்கை, உங்களது கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது என்பது தான் உங்களது நிலை. அவ்வாறு நிலை இருப்பதால் தான் அவரை விவாதத்திற்கு வருமாறு ஒளிந்து கொண்டு சவால் விட்டீர்கள்.
ஒளிந்து கொண்டு சவால் விட்டதை நேரடியாக விடுங்கள் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.
ஒன்று, அதை ஏற்று, அவரிடம் விவாத ஒப்புதலுக்கு தகுந்த பதிலை அளித்து, விவாதத்திற்கு முன் வர வேண்டும்.
அல்லது, நான் அறியாமல் பிஜேவை விவாதத்திற்கு அழைத்து விட்டேன் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

எதையும் செய்யாமல், இவ்வாறு கட்டுரைகள், மெயில்கள் மூலம் இன்னுமொரு மின்னஞ்சல் விவாதத்தோடு மட்டும் நிறுத்திக்கொண்டு, நாங்களும் விவாதம் செய்கிறோம் என்று காட்ட நினைப்பதை எந்த ஒரு நியாயவானும் ஏற்றுக்கொள்ள மாட்டான்..!2011/2/6 Aero Travels Eruvadi
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

கணக்கிடுவதை நபியவர்கள் தடுக்கவில்லை என்ற பி.ஜே அவர்கள் தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். பிறை ஹதீஸ்களை அறிவியல் உதவி கொண்டே பின்பற்ற வேண்டும். அவைகளை கண்மூடி பின்பற்ற தேவையில்லை என்று விளக்கமளித்துள்ளார். மேலும் குர்ஆனில், சூரியனும் சந்தினும் கணக்கின் அடிப்படையில் உள்ளது என்று கூறுவதால் சாட்சி சொல்பவர்களை முழுமையாக நம்பாமல், பிறை கணக்கை கொண்டு பிறை தேதிகளை சரிபார்த்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.

அதே போல் வருடங்களின் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்று அல்குர்ஆனின் 10:5 வசனம் கூறுவதால், நாம் வருடங்களின் கணக்கை அறிந்து செயல்பட முடியும் என்பதை பி.ஜே அவர்கள் கூடிய விரைவில் விளங்குவார்கள் என நம்புவோமாக.

விபரங்கள் அவருடைய தளத்திலிருந்தே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி


பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?

ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாமா?

எம். ஷபீர் - திருவனந்தபுரம்.

இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் பொருள் கொள்ளக் கூடாது.

இரவு பத்து மணிக்கு தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

நண்பகலில் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப்பிறையைப் பார்க்க முடியாது. மாலை நேரத்தில் கூட கிழக்கில் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால்
அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் கண்ணால் பார்க்கும் வகையில் தலைப்பிறை தோன்றுவது மேற்குப் பகுதியில்தான்.

பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப் பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல.

இது போன்று தான், சாதாரணக் கண்களுக்குப் பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் உறுதியாகக் கூறும் ஒரு நாளில் பிறை பார்த்ததாக நம்பத் தகுந்த சாட்சியங்கள் கூறினாலும் அதை ஏற்க வேண்டியதில்லை.

வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு. சிறிய மேகத் துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது.

நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. இந்த தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.

ஒருவரை விஷம் வைத்துக் கொடுத்துக் கொன்றதாக நம்பகமானவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையில் விஷம் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சாட்சிகள் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

இது போல் பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. காரணம், பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் கூறுவது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருப்பதால் அதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். பிறை தோன்றி விட்டது. என்று அறிவியல் உலகம் கூறினாலும் புறக்கண்ணால் பார்க்காமல் நோன்பைத் தீர்மானிக்கக் கூடாது என்று சொல்லும் நாம், பிறை தோன்றாது என்று அறிவியல் கூறுவதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பதே அந்த சந்தேகம்.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப்ப புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால்
கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த
மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்த பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.

வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப் பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. அதே சமயம் குறிப்பிட்ட நாளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவியல் உலகம் கூறும் போது அதை நாம்
ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

அல்குர்ஆன் 55:5

இந்த வசனத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் சந்திரன் தோன்றாது என்ற கணக்கிற்கு மாற்றமாக நம்பத்தகுந்த சாட்சிகள் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

21.01.2011 08:39

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக