வெள்ளி, 15 மார்ச், 2013

சூனியம் - மற்றொரு ஆதாரம்


சூனியம் என்றால் அற்புதம் என்றும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட காரியம் எனவும் பொருள் செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் கீழ்காணும் வசனத்திற்கு அவ்வாறே பொருள் செய்யட்டும் பார்க்கலாம்.

'மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்' என்று நீர் கூறினால் 'இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். (11:7)

இந்த வசனத்தில், மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை சிஹ்ர் என்று கூறி எதிரிகள் மறுக்கிறார்கள் !!

இவர்கள் வைக்கும் அர்த்தத்தின் படி பார்ப்பதாக இருந்தால், இரண்டு வகையில் பொருள் கொள்ளலாம்

ஒன்று - மறுமையில் ஒரு வாழ்க்கை உண்டு என்று சொல்வதே மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு வார்த்தையாகவும், நபி அவர்கள் ஏதோ அற்புத வாசகத்தை சொல்லி விட்டார்கள் என்பதாகவும் பொருள் வரும்.
இந்த பொருள் தவறு. காரணம், நபி (ஸல்) அவர்கள் அற்புத வாசகங்களை சொன்னதாக எதிரிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தவிர, அப்படி சொல்வதே ஒரு அற்புத வார்த்தையாக கருதப்படுவதிலும் அர்த்தமில்லை.

இரண்டு - மறுமை வாழ்க்கையையே ஒரு அற்புதமாக அவர்கள் சொன்னார்கள் என்று பொருள் செய்வது.

இதுவும் தவறு தான். மறுமை வாழ்க்கையை நம்பாத எதிரிகள், அதை மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஒரு அற்புதம் என்று அப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஆக, சூனியம் என்பது உண்டு, அதற்கு அற்புதம் என்று பொருள் செய்ய வேண்டும் என்று கூறுவோர் பொய் சொல்கிறார்கள் என்பதற்கு மேற்கண்ட வசனமே ஆதாரமாக உள்ளது.

சூனியம் என்பதற்கு நாம் கொடுக்கும் பொருள் என்ன? அது ஒரு வித்தை, அது ஒரு பொய், அது ஒரு ஏமாற்று தந்திரம்.

இந்த அர்த்தங்களை மேற்கண்ட வசனத்திற்கு வைத்து பாருங்கள்,பொருள் கச்சிதமாக பொருந்தும் !

இந்த வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடாது, இன்னொரு வாழ்க்கையும் உண்டு என்று கூறும் இந்த முஹம்மது பொய் சொல்கிறார், நம்மை அப்படி சொல்லி ஏமாற்றுகிறார், பொய்யை உண்மை போல எடுத்து கூறுகிறார் என்று எதிரிகள் விமர்சனம் செய்தனர் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக