வெள்ளி, 15 மார்ச், 2013

அஜ்வா - வினோதமான வாதம்

அஜ்வா ஹதீஸை நியாயப்படுத்தும் சிலர் கீழ்காணும் வாதத்தை (விநோதத்தை) வைக்கிறார்கள்.

அதாவது, ஏழு அஜ்வா பழங்களை சாப்பிட்டால் சூனியத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இருக்கிறது, தவ்ஹீத் ஜமாத்தினர் சூனியத்தை அற்புதம் என்று கூறுவதை மறுத்தாலும் கணவன் மனைவி இடையே கோள் மூட்டி பிரிக்கின்ற சூனியம் இருக்கிறது என்று தானே கூறுகிறார்கள், அத்தகைய சூனியத்தில் இருந்து அஜ்வா பாதுகாப்பு அளிக்கிறது என்று புரியலாம் அல்லவா? என்பது இவர்களது கேள்வி.

இது ஒரு அடிப்படையற்ற கேள்வி என்றாலும் அதற்கு பதில் சொல்வதற்கு முன் இவர்களின் நிலையற்ற தன்மையை நாம் விளக்க வேண்டியுள்ளது.

ஒரு வாதத்தை பிறருக்கு சொல்வதாக இருந்தால் அந்த வாதத்தில் தான் உண்மையாளராக இருக்க வேண்டும். ஒரு ஹதீஸுக்கு ஒரு கருத்து என்றால் அது எல்லாருக்கும் அதே கருத்து தான்.
உன் நிலைப்படி A என்று புரிந்து கொள் , எனது நிலைப்படி B என்று புரிந்து கொள்கிறேன் என்று சொல்து அறிவுக்கு எட்டாத வாதமாகும்.

அஜ்வா ஹதீஸ் சரி என்றே வைத்துக்கொள்வோம். இதை சரி என்று வைத்துக்கொள்ள இவர்கள் தரும் அறிவுரை என்ன?? சூனியம் என்பதை கணவன் மனைவி இடையே செய்யப்படும் கோள் என்று மட்டும் புரியுங்கள், பொதுவான அற்புத செயல் என்று புரிய வேண்டாம், அப்படி புரிவதால் தானே அஜ்வா ஹதீஸை மறுக்க வேண்டும்? என்று அறிவுரை கூறுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு அறிவுரை கூறுவதன் மூலம் எதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றால் கணவன் மனைவி இடையே கோள் மூட்டி பிரிவினை ஏற்படுத்துவதை தாண்டி சூனியத்தால் வேறு பல அமானுஷிய சக்திகளையும் செய்து காட்ட முடியும் என்று நாம் நம்பி விட்டால் இந்த அஜ்வா ஹதீஸை ஏற்க முடியாது என்பதை இவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டு விட்டார்கள் !!

அதே சமயம் சூனியம் பற்றிய இவர்கள் நிலைப்பாடு என்ன?? சூனியம் என்பது மனித சக்திக்கும் அப்பாற்ப்பட்ட ஓன்று தான், அதன் மூலம் சீப்பு முடி போன்றவைகளை கொண்டு நபியையே மூளை குழம்ப வைக்கலாம் என்பது தான் இவர்களது நம்பிக்கை.

இவர்களது நம்பிக்கை இப்படி என்றால் இவர்கள் அஜ்வா ஹதீஸை நம்ப முடியாதே !!! அதை இவர்களே ஒப்புக்கொண்டதால் தானே நம்மிடம் வேறு மாதிரி புரியுமாறு அறிவுரை கூறுகிறார்கள்??

ஆக தெள்ள தெளிவான முரண்பாடாகி விட்டது. இது போன்ற கேள்விகள் வைப்பவர்களுக்கென்று தனிப்பட்ட நிலைப்பாடு எதுவும் கிடையாது, கேள்வி கேட்பது மட்டும் தான் இவர்களது ஒரே கொள்கை என்பதற்கு இந்த முரண்பாடே சான்றாகவும் உள்ளது.

சரி, இவர்கள் சொல்வது போல கணவன் மனைவியை பிரிக்கின்ற சூனியத்தில் இருந்து அஜ்வா சாப்பிட்டால் பாதுகாப்பு கிடைக்கும் என்று புரிய முடியுமா? என்றால் இதிலும் அர்த்தமில்லை. ஒரு பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் நன்மைகள் ஏற்படும் என்று சொன்னால் நம்பலாம், கை கால்கள் சரியாக இயங்கும் என்றால் நம்பலாம், கிட்னி, இதயம் நன்றாக வேலை செய்யும் என்றால் நம்பலாம், அதே சமயம், தீய சிந்தனை உனது மூளையில் ஏற்படாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. !!

அதே சமயம் இதையும் கூட நிரூபிக்குமாறு நம்மால் கேட்க முடியும். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றிருக்கும் கணவன் மனைவியை அழைத்து ஏழு அஜ்வா பழங்கள் கொடுத்து, தாங்கள் விவாகரத்து செய்தது தவறு என்று இப்போது புரிந்து கொண்டோம் "தேங்க்ஸ் டு அஜ்வா? என்று அவர்கள் சொல்ல வேண்டும். அதாவது, தவறான சிந்தனை காரணமாக அவர்கள் கொண்ட கருத்து வேறுபாடு இந்த அஜ்வாவை உண்டதன் மூலம் நீங்கியிருக்க வேண்டும். அப்போதாவது அஜ்வா ஹதீஸ் உண்மை எனலாம்.

ஆக, எந்த வகையிலும் இதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை என்பதே உண்மை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக