வெள்ளி, 15 மார்ச், 2013

ஷைத்தானின் தீண்டல் தான் சூனியமா ?


மாய மந்திரங்களும் அற்புதங்களும் செய்வது தான் சூனியம் என்று சொல்வது இணை வைப்பு கொள்கை எனவும், சூனியம் என்பதை வெறும் கண் கட்டி வித்தை என்று மட்டும் நம்புவது தான் குர் ஆனுக்கு உகந்தது என்றும் நாம் சொல்கிற போது, இதற்கு மறுப்பு சொல்பவர்கள் கீழ்காணும் வாதத்தை வைக்கிறார்கள்.

நாங்கள் இதை அற்புதம் என்றோ அற்புதம் இல்லை என்றோ சொல்ல வரவில்லை இதை ஒரு ஷைத்தானின் செயல் என்று மட்டும் தான் சொல்கிறோம் ஷைத்தான் நமக்குள் வந்து என்ன வேண்டுமானாலும் செய்வான், இது தான் சூனியம், என்கிறார்கள்.

இவர்கள் நமக்கு மறுப்பு சொல்வதாக நினைத்து நமது கருத்துக்கு ஆதரவு தான் தெரிவிக்கிறார்கள் என்பது இங்கு வேடிக்கையாகி விட்ட உண்மை !!!

ஷைத்தான் நமக்குள் ஊடுருவுவான் என்பதை எல்லா முஸ்லிம்களும் ஒப்புக்கொள்வார்கள். ஏனெனில், ஷைத்தான் நமது ரத்த நாளங்களில் கூட இருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதே சமயம், நமக்குள் ஊடுருவி விட்ட ஷைத்தானால் நம்மை என்ன செய்து விட முடியும்? என்பதை புரிவதில் தான் பலர் கோட்டை விடுகின்றனர்.

அல்லாஹ் தனது திருமறையில் ஷைத்தானின் தன்மைகளாக சொல்லும் எல்லா வசனங்களிலும் அவன் மனிதர்களின் உள்ளங்களில் தவறான எண்ணங்களை விதைப்பான் என்று தான் சொல்கிறான்.

:பார்க்க 6:43, 16:63, 4:120, 4:119, 5:91.. இன்னும் பல..

மேற்கண்ட எல்லா வசனங்களிலும், ஷைத்தானின் சக்தியானது, நமது உள்ளங்களை வழி கெடுக்கும் ஆற்றல் உள்ளதாக தான் சொல்லப்படுகிறது.

முஸ்லிம் 5421 இல் வரக்கூடிய ஒரு ஹதீஸில், ஷைத்தான் எல்லாரிடமும் உள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லும் போது, ரசூளுல்லாஹ்வே, உங்களிடமுமா? என்று சஹாபாக்கள் கேட்பார்கள் அதற்கு பதில் சொன்ன நபி (ஸல்) அவர்கள், ஆம் என்னிடம் இருக்கிறான் ஆனால் அவனுக்கு எதிராக அல்லாஹ் எனக்கு அருள் செய்து விட்டான் ஆகவ அவன் எனக்கு நல்லதையே கூறுவான் என்று பதில் அளித்தார்கள் என்று வருகிறது.
நபிக்கு எதிராக நல்லதையே கூறுவான் என்று சொல்லும் போது மற்றவர்களுக்கு தீயதை சொல்வான் என்பது இதன் அர்த்தம்.

தீய காரியங்களை உள்ளங்களில் ஏவுவது தான் அவனது பணியே தவிர, உடற்கூறுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதோ, கை கால்களை முடமாக்குவதோ, பைத்தியமாக்குவதோ அவனால் இயலாத காரியம்.

ஆகவே சூனியம் என்றால் ஷைத்தான் செய்யக்கூடிய அற்புத செயல் என்று சொல்லப்படும் வாதமும் இங்கே அடிபட்டு போகிறது.
கணவன் மனைவி இடையே கோள் மூட்டுகிற வேலையை மனித ஷைத்தான்கள் செய்ததாக நாம் சொல்கிறோமே அந்த வாதத்திற்கு ஒத்ததாகவே இவர்கள் கூறும் இந்த கருத்து உள்ளது.

கணவன் மனைவியை ஷைத்தான் உள்ளங்களில் தீய எண்ணங்களை இட்டு அதன் மூலம் சூனியம் செய்தான் என்று இவர்கள் சொல்வார்கள் என்றால் அதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.
இங்கிருந்து கொண்டு அமெரிக்காவில் உள்ள எனது நண்பனின் கையை ஷைத்தானின் துணை கொண்டு உடைத்தேன் என்று இவர்கள் கூறுவார்கள் என்றால் அதை ஒப்புக்கொள்ள முடியாது !!!

இது தான் வேறுபாடு !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக