வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஜும்மா உரைக்கு மிம்பர் கட்டாயமா?ஜும்மா  உரையின் போது மிம்பர் கட்டாயமில்லை. 

நபி (ஸல்) அவர்கள் ஜும்மா உரையின் போது ஒரு பேரீச்சம் மரத்தின் மீது சாய்ந்து நின்றபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அன்சாரி பெண்மணி "அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் உங்களுக்கு ஒரு உரை மேடை (மிம்பர்) அமைந்து தரலாமா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் செய்து தாருங்கள்." என்று பதிலளித்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கு அந்த பெண்மணி மிம்பர் ஒன்றை அமைத்துக்கொடுத்தார்.
புஹாரி 3584


மேற்கண்ட ஹதீஸின் மூலம், ஜும்மாவின் போது மிம்பர் என்பது கட்டாயமாக்கப்பட்ட ஒரு காரியமல்ல , அது ஒரு கூடுதல் வசதிக்காக செய்து கொண்டது தான் என்பதை அறியலாம்.

மேலும், இன்று நாம் எதை மிம்பர் என்று விளங்கி வைத்துள்ளோமோ, எதை பயன்படுத்துகிறோமோ, அது போன்ற மிம்பரை நபி அவர்கள் பயன்படுத்தவில்லை. நபி அவர்கள் தொழுகை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு செயல் முறை பயிற்சி கொடுத்தது மிம்பரில் நின்று தொழுது காட்டி தான். இதற்கு வேறு ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

இன்று நாம் பயன்படுத்தும் மிம்பரில் ஒரு மனிதரால் நிற்க மட்டும் தான் இடமிருக்குமே தவிர நின்று தொழுவதற்கு இடமிருக்காது.
ஆக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிம்பர் என்பது ஒரு பெரிய மேடையாக இருந்தது. அதில் நின்று தொழுகை நடத்தும் அளவிற்கு அது பெரியதாக இருந்தது என்பதை அறியலாம். 
உயரமான இடத்தில நின்றால் மக்களுக்கு எளிதாக இருக்கும் என்கிற கூடுதல் வசதிக்காக தான் மிம்பரை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்த துவங்கினார்கள், அதற்கு முன் மிம்பர் இல்லாமல் தான் உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் தான் ஜும்மா உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதால் இயன்ற வரை நாமும் அதையே கடைப்பிடிப்போம் ஆனால் மிம்பர் வசதி இல்லை என்றல் அது தவறு என்று கருதி விட தேவையில்லை. மிம்பர் இல்லாத இடங்களில் வெறும் தரையில் நின்று கூட ஜும்மா  உரை நிகழ்த்தலாம் !!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக