வியாழன், 18 அக்டோபர், 2012

மார்க்கத்தில் ஹலால் - ஹராம்

மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ ஹராம் என்று சொல்வதானால் அதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  • மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள்
  • உலகம் சம்மந்தப்பட்ட விஷயங்கள்.

மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நாம் செய்ய நினைத்தால் மார்க்கத்தில் ஆதாரம் இருக்கிறதா, அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்று மட்டும் தான் பார்க்க வேண்டும், மார்க்கத்தில் தடை இருக்கிறதா என்று பார்க்க கூடாது. இது இஸ்லாமிய பாடத்தில் அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.

உதாரணமாக, ரமளானில் நோன்பு வைக்க வேண்டும் என்று ஒருவர் சொன்னால் அவரிடம், இதற்கு குர் ஆன் ஹதீஸில் எங்கே அனுமதி உள்ளது என்று கேட்க வேண்டும். அனுமதி இருந்தால் செய்ய வேண்டும், அனுமதி இல்லை என்றால் செய்ய கூடாது. அதே போன்று ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதன் ஏழாம் பிறை அன்று நான்கு ரக்கத்துகள் கூடுதலாக தொழ வேண்டும் என்று ஒருவன் சொன்னால் அவரிடம், இதை அனுமதிக்கும் சட்டம் ஏதேனும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க வேண்டும். இதற்கு தடை எதுவும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க கூடாது. காரணம், ரஜப் மாதம் ஏழாம் நாள் தொழ கூடாது என்று எந்த ஹதீசும் இருக்காது ! தொழ வேண்டும் என்றால் தொழுங்கள் என்று இருக்கும். தொழ கூடாது என்றால் எதுவுமே சொல்லப்பட்டிருக்காது. எதுவுமே சொல்லப்படவில்லை என்றால் அதை மார்க்கம் என்கிற பெயரில் செய்ய கூடாது என்பது பொருள்.
மார்க்க விஷயங்களை மேலே உள்ளது போல புரியாமல் நேர் முரணாக புரிவதால்  இன்று நம் சமூகத்தில் பல பித்அத்கள் புகுந்துள்ளன. மார்க்கம் என்கிற பெயரில் எதையாவது செய்ய வேண்டியது, கேட்டால்  இப்படி செய்யக்கூடாது என்று இஸ்லாம் தடுத்துள்ளதா என்று கேட்க வேண்டியது. இது தான் குழப்பங்களுக்கு முதல் காரணம் !


அதே போல, உலக விஷயங்களை பொறுத்தவரை அப்படியே மாற்றி சிந்திக்க வேண்டும்.
அதாவது, ஒன்று கூடுமா கூடாதா என்பதை தீர்மானிக்க குர் ஆன் ஹதீஸில் அனுமதி இருக்கிறதா என்று தேடாமல், இதற்கு தடை இருக்கிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும்

உதாரணமாக விமானத்தில் பயணம் செய்யலாமா, மார்க்க அடிப்படையில் விளக்கவும், என்று ஒருவர் கேள்வி கேட்டால், விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று அனுமதியளிக்கிற வகையில் குர் ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ இருக்கும் என்று தேடிக்கொண்டிருக்க கூடாது, 
மாறாக, விமானத்தில் பயணம் செய்வது ஹராம் என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று மட்டும் தேட வேண்டும். எங்குமே ஹராம் என்று சொல்லப்படவில்லை என்றால் விமானத்தில் பறக்கலாம், தவறில்லை என்று பதில் சொல்ல வேண்டும்.

இது தான் மார்க்கத்தின் ஹராம் ஹலால்களை அளக்கும் முறை !

இது படிப்பதற்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும் இதை கூட சரியாக புரியாத பல சகோதரர்கள் இருக்கின்றனர். பித் அத்கள் களையப்பட வேண்டுமானால் இந்த அடிப்படையை மனதில் உறுதியாக்கி கொள்ள வேண்டும் !!
அல்லாஹ் அருள் செய்யட்டும் !!!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக