வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஒத்திக்கு வீடு எடுக்கலாமா?


கேள்வி ; ஒத்திக்கு வீடு பிடிக்கக் கூடாது என்பதற்குக் குர்ஆனிலும் ஹதீஸிலும் ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றார்களே? இதற்குப் பதில் என்ன?

P.Zainul Abideen:
பதில் :
ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இவர் தன்னிடம் இருக்கும் வீட்டை ஒருவரிடம் அடைமானமாகக் கொடுத்து, தனக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றார். கடன் வாங்கியவருக்கு வசதி வரும் போது அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டு தனது வீட்டை வாங்கிக் கொள்கிறார். இது அடைமானமாகும். கொடுக்கின்ற பணத்திற்கு ஈடாக ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் பணம் கொடுத்தவர் அந்தப் பொருளை உபயோகப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
அந்தப் பொருளை அவர் உபயோகிக்க ஆரம்பித்து விட்டால் அது வட்டியாகி விடுகின்றது. அதாவது அந்த வீட்டை அவர் உபயோகிப்பதற்காகக் கொடுக்க வேண்டிய வாடகையை, தான் கொடுத்துள்ள பணத்திற்கு வட்டியாக எடுத்துக் கொள்கின்றார். நடைமுறையில் ஒத்தி என்ற பெயரில் வழக்கத்தில் இருப்பது இது தான்.
ஒத்தி என்பது தெளிவான வட்டிதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. உயிருள்ள பிராணிகளை அடகு வைத்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. அதுவும் அந்தப் பிராணியை வளர்ப்பதற்கு ஆகும் பராமரிப்புச் செலவுக்குப் பிரதியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அடகு வைக்கப் பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவர்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப் பட்டிருப்பின் அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­) , நூல் : புகாரி


இந்த ஹதீஸில் அடகு வைக்கப்பட்ட பிராணியை அதற்காகும் செலவுக்குப் பிரதியாக அதைப் பயன்படுத்தலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இது உயிருள்ள பிராணிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் கால்நடைகளைப் பொறுத்தவரை அவற்றை வளர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவிட்டாக வேண்டும். இந்தச் செலவுகளை அடைமானமாகப் பெற்றவர் தனது சொந்தச் செலவி­ருந்து செய்ய முடியாது. எனவே தான் அந்தச் செலவுக்குப் பிரதியாக அந்தப் பிராணிகளைப் பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்கின்றார்கள்.
வீடு, நிலம் போன்றவற்றிற்கு இது போன்ற பராமரிப்புச் செலவுகள் எதுவும் இல்லை என்பதால் அவற்றை அடைமானமாகப் பெற்றால் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது அதற்கான வாடகையை வட்டியாக வாங்குவதற்குச் சமம். மேற்கண்ட ஹதீஸில் பிராணிகளைப் பயன்படுத்தலாம் என்று மேலோட்டமாகச் சொல்லாமல் ‘அதற்காகும் செலவுக்குப் பகரமாக’ என்பதையும் சேர்த்துச் சொல்வதி­ருந்தே வீடு, நிலம் போன்றவற்றை அடைமானம் பெற்றவர் பயன்படுத்தக் கூடாது என்பது தெளிவாகின்றது. அதே சமயம் அந்த வீட்டிற்கான வாடகையை நில உரிமையாளருக்குக் கொடுத்து விட்டு அந்த நிலத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக