புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (F)


மிர்சா சாஹிபின் அசாத்திய துணிச்சல்

Mirza Sahib subject (Part 6)
-----------------------------------------------------------------

மிர்சா சாஹிபின் அபத்தங்கள் என நான் குறிப்பிட்டுக் காட்டியிருந்தவைகளில் மற்றுமொரு அபத்தம், மசீஹ் வரும் போது வானத்திலிருந்து ஒரு சத்தம் வருமென்றும் அது நபி என்கிற முறையில் தமக்கு கேட்கும் எனவும் நான் தான் அந்த மசீஹ் என்றும் இந்த மிர்சா சாஹிப் கதையளந்துள்ளார்.

இத்தோடு நிறுத்தினால் கூட பரவாயில்லை, இப்படி சத்தம் கேட்கும் என்கிற விஷயம் புஹாரியில் பதியப்பட்டு இருக்கிறது என்று வேறு சொல்லியுள்ளார்.

இந்த காலத்தில் தான், ஹதீஸில் இருக்கிறது, குர் ஆனில் இருக்கிறது என்று சொன்னால் எங்கே ஆதாரம் என்று ஆதாரம் கேட்கும் அளவிற்கு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது..
100 வருடங்களுக்கு முன் இது போன்ற விழிப்புணர்வொன்றும் மக்களிடையே இல்லை.

அதிலும், புஹாரி என்றால் அதை தேடி சரி பார்த்து கொள்ளும் வசதிகளும் அந்த காலத்தில் இல்லை.

ஆகவே குர் ஆனில் உள்ளது, புஹாரியில் உள்ளது என்று சொல்லி விட்டால் எவரும் ஆதாரமும் கேட்க மாட்டார், தேடிப்பார்க்கவும் மாட்டார் என்கிற தைரியத்தில் வாயில் வந்ததையெல்லாம் விட்டடிப்பவர் இந்த சாஹிப்.

(மசீஹ் வரும் காலத்தில் பிளேக் நோய் ஏற்படும் என்று குர் ஆனில் இருக்கிறது என்று இந்த அண்டப்புளுகர் விட்டடித்த புருடா கூட இந்த அடிப்படையில் தான் .. இது அடுத்தடுத்த தொடர்களில் விளக்கப்படும்)

இப்படி மசீஹ் வரும் காலத்தில் வானத்திலிருந்து சத்தம் வரும் என்று புஹாரில் எந்த ஹதீஸ் இருக்கிறது என்று கேட்டதற்கு, அவர் தவறாக சொல்லியிருக்கிறார் என்று ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.

அதாவது, பல செய்திகளையும் தத்துவங்களையும் சொல்கிற போது இது போன்ற தவறு ஏற்படுவது சகஜம் தானே என்கிற ரீதியில் பதில் சொல்லியுள்ளீர்கள்.

மனிதன் என்கிற முறையில் தவறுகள் ஏற்படத்தான் செய்யும், அதை நாம் மறுக்கவில்லை.
நபியென்றாலும் அவர்களும் மனிதர்கள் தான் என்கிற முறையில் அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், இங்கே நீங்கள் கவனிக்க தவறிய விஷயம் என்னவென்றால், இங்கே மனிதன் என்கிற முறையில் தவறு நடந்திருக்குமேயானால், சாதாரண மனிதர்களை தான் அல்லாஹ் அதே தவறில் நீடிக்க செய்வான்.
நபி என்றால், அவர் செய்த தவறை வஹீ மூலம் திருத்தி விடுவான்.

இது தான் நபிமார்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையேயிருக்கும் வேறுபாடு.

மற்ற மனிதர்கள் செய்யும் தவறு சமுதாயத்தை பாதிக்காது ; காரணம், அவர்களை பிறர் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் சொல்வதும் செய்வதும் மார்க்கமாக கருதப்படாது.

அதுவே, நபி என்றால், அவர் சொல்வதும் செய்வதும் மார்க்கம். அவரை பின்பற்றும் மக்கள் இருப்பார்கள், இருக்க வேண்டும்.

ஆகவே அவர் புறத்தில் எந்த தவறும் நிகழாது, அல்லது நிகழ்ந்த தவறு சரி செய்யப்படும்.

நூஹ் நபி முஷ்ரிக்கான தனது மகனுக்காக துஆ செய்தார்கள். அது தவறான செயல்.
அதை அல்லாஹ் கண்டித்து வஹி இறக்கினான்.
இப்ராஹிம் நபி தனது முஷ்ரிக்கான தந்தைக்காக பாவ மன்னிப்பு தேடிய போது அல்லாஹ் கண்டித்தான்.

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தேனை தனக்கு ஹராமாக்கிக் கொண்டார்கள்.
அதை அல்லாஹ் திருத்தினான்.
பார்வை தெரியாத சஹாபி ஒருவரிடம் கடுகடுத்தார்கள், அதை அல்லாஹ் கண்டித்தான்.

நபிமார்களும் மனிதர்கள் தான் என்பதை நிரூபிக்கும் பொருட்டும் தன்னை தவிர தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எவருமே கிடையாது என்பதை பதிய வைக்கும் பொருட்டும் நபிமார்களிடமும் பிழைகளை ஏற்பட செய்வான் அல்லாஹ்.

ஆனால், அவற்றை அப்போதே திருத்தியும் விடுவான். திருத்தினால் தான், அவர்களும் மனிதர்கள் தான் என்கிற உண்மை மக்களிடம் செல்வதோடு, திருத்தப்பட்ட சரியான செய்தியும் அவர்களை சென்றடையும்.

இது தான் அல்லாஹ்வின் வழக்கம்.

ஆனால், இங்கே மிர்சா சாஹிப் ஒரு தகவலை, அதாவது முன்னறிவிப்பை செய்கிறார்.

அது, புஹாரியிலேயே இருப்பதாக, அல்லாஹ்வின் வஹி செய்திகள் அடங்கிய ஒரு நூலை மேற்கோளும் காட்டுகிறார் என்றால் அந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும்.
அப்போது தான் அவர் நபி என்பதில் அர்த்தமிருக்கும்.

நபி என்று சொல்லிக் கொள்பவர் ஒன்றை அறிவிக்கிறார், இந்த நூலில் இருப்பதாகவும் சொல்கிறார், தேடிப்பார்க்கின்ற போது அந்த நூலில் அந்த செய்தி இல்லையென்றால், அவர் நபி என்பதற்கான தகுதியை இழக்கிறார் என்றாகும்.

அல்லது, சில காலம் கழித்தாவது, நான் புஹாரியில் இருப்பதாக தவறாக சொல்லி விட்டேன், அது அந்த நூலில் இல்லை முஸ்லிமில் தான் இருக்கிறது, அல்லது இப்னுமாஜாவில் தான் இருக்கிறது..
என்று தனது முந்தைய கூற்றினை அவரே சரி செய்திருக்க வேண்டும்.

செய்தாரா? அவர் நபியென்றால் இந்த தவறான அறிவிப்பை அல்லாஹ் சரி செய்யாமல், இருப்பானா?

மாட்டான் ! இதிலிருந்தே, அவர் நபியில்லை என்று தெரிகிறது !!

சரி, இப்னுமாஜா என்பதற்கு பதிலாக புஹாரி என்று வாய் தவறி சொல்லி விட்டார் என்றாவது இதை எடுத்துக் கொள்ளலாமா?

என்று பார்த்தால் அப்படியும் எடுத்துக் கொள்ள முடியாது என்பதற்கு மிர்சா சாஹிப் எழுதியுள்ள வாசகமே சான்றாக இருக்கிறது.

மசீஹ் வரும் போது வானத்திலிருந்து சத்தம் வரும், இப்படி புஹாரியில் இருக்கிறது என்று சொல்லி விட்டு அத்தோடு இவர் நிறுத்தவில்லை.

தான் சொன்னது சரி தான் என்பதை நிறுவுவதற்காக, புஹாரி நூலை வர்ணனை செய்கிறார்.

புஹாரி என்றால் எப்படிப்பட்ட நூல் தெரியுமா? குர் ஆனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நூலாக்கும் அது..

என்று மக்கள் தான் சொன்னதை நம்ப வேண்டும் என்பதற்காக புஹாரியின் நம்பகத்தன்மையையும் சேர்த்தே விளக்கி தான் அந்த செய்தியை சொல்கிறார் என்றால், இது வாய் தவறி வந்ததா?
இது அறியாமல் ஏற்பட்ட பிழையா?

நிச்சயம் இல்லை.

குர் ஆனில் இருப்பதாக சொல்லி விட்டால், அல்லது புஹாரியில் இருப்பதாக சொல்லி விட்டால் மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள், தேடிப் பார்த்து தனது வண்டவாளத்தை கண்டு கொள்ள மாட்டார்கள் என்கிற அசாத்திய துணிச்சல் இந்த பொய்யருக்கு.

அடுத்ததாக,

ஒருவர் மீது கொண்ட கோபத்தில் அவருக்கு 1000 முறை சாபமிட்ட மிர்சா சாஹிபின் செய்தியை விளக்கியிருந்தேன்.

1000 முறை சாபமிடுவது நோக்கமென்றால், 1000 முறை உன்னை சபிக்கிறேன் என்று கூறினாலே போதுமானது.
ஆனால், இந்த அறிவுச்சுடர் என்ன செய்கிறார் தெரியுமா?

ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து அதில் பக்கம் பக்கமாக..

1 சாபம் (லஃனத்)
2 சாபம்
3 சாபம்
4 சாபம்.... என்று ஆயிரம் வரை எழுதி தள்ளி தனது அற்புதமான அறிவாற்றலை வெளிககாட்டி மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார்.

இப்படி ஒரு சராசரி மனிதர் செய்வாரா? என்று நான் கேட்டதற்கு, மேற்படி புஹாரி ஹதீஸ் போல், இதுவும் தவறாக செய்து விட்டார் என்று ஒப்புக் கொண்டு செல்வதை விட்டு விட்டு,

இதற்கு கட்டுகிறீர்கள் பல உலக மகா சப்பை கட்டுகளை..
அதை படித்து சிரிக்கவா அழவா என்று நமக்கு தெரியவில்லை..!

விரிவாக அடுத்த பாகத்தில் காணலாம் இன்ஷா அல்லாஹ்..

வண்டவாளங்கள் இன்னும் தொடரும்.

திருக்குர்ஆன் பற்றிய சில செய்திகள்


அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் பற்றிய சில செய்திகள்..

மொத்த வசன எண்ணிக்கையை அல்லாஹ்வோ ரசூலோ தீர்மானித்தார்கள் என்பது தவறு.

அல்லாஹ் அருளிய அனைத்து வசனங்களும் தொகுக்கப்பட்டது, ஆனால் எந்த இடத்தில் நிறுத்தல் குறுயிட்டு வசனங்களை பிரிக்க வேண்டும் என்று மார்க்கம் நமக்கு எந்த கட்டளையும் இடவில்லை.

அதே சமயம், ஒவ்வொரு அத்தியாயத்திலும் அருளப்பட்ட வசனங்களை வரிசைப்படுத்தி தந்தது நபி (சல்) அவர்கள் தான்.

வசனங்களை வரிசைப்படுத்தி தான் தந்தார்களே தவிர எந்த சொல் வரை ஒரு வசனம், எந்த சொல் முதல் அடுத்த வசனம் .. என்பதை அவர்கள் சொல்லவில்லை.

அது போன்று, ஒவ்வொரு அத்தியாயங்களிலும் என்னன்ன வசனங்கள் எல்லாம் உள்ளன என்பதை நபியவர்கள் சொன்னார்கள்,
ஆனால் எது முதல் அத்தியாயம், எது அடுத்த அத்தியாயம் என அத்தியாயங்களை வரிசைப்படுத்தும் வேலையை அவர்கள் செய்யவில்லை.

ஒரு சில அத்தியாயங்களுக்கு அவர்கள் பெயர் சூட்டினாலும் பெருவாரியான அத்தியாயங்களின் பெயர்கள் நபி (சல்) சூட்டிய பெயர் இல்லை.

அத்தியாயங்களின் எண்ணிக்கை 114 என்று நபியவர்கள் சொல்லியிருந்தாலும் முழு குர் ஆனையும் 30 ஜுசூக்களாக பிரிக்குமாறு அவர்கள் சொல்லவில்லை.

எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை தான் அவர்கள் சொன்னார்களே தவிர, ஒவ்வொரு எழுத்திற்கும் இன்று பயன்படுத்தப்படும் சபர், சேர் எழுத்து முறையை அவர்கள் சொல்லவில்லை !

மக்காவில் இறங்கிய வசனம் என்பதை குறிக்க மக்கி என்றும் மதீனாவில் இறங்கியதை குறிக்க மதனி என்றும் இடும் வழக்கம் நபி கட்டளையிட்ட வழக்கமல்ல ..
சில அத்தியாயங்கள் எங்கே இறங்கியது என்பதற்கு சான்று இருந்தாலும் வேறு சில அத்தியாயங்களுக்கு தெளிவான சான்று கிடையாது.

ஓசை, அதாவது உச்சரிப்பு தான் குர் ஆனே தவிர எழுத்து குர் ஆன் அல்ல !
எழுத்தில் பிழை இருந்தாலும் உச்சரிப்பு அதனை சரி செய்து விடும் !!

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (E)


மிர்சா சாஹிபின் புளுகு மூட்டை

Mirza Sahib Subject (Part 5)
-----------------------------------------------------------------------------------

ஈஸா நபியின் கப்ர் பாலஸ்தீனில் இருக்கிறது என்றும் காஷ்மீரில் இருக்கிறது என்றும் முரண்பட்டு பேசியது பற்றி நான் கேட்டதற்கு, அற்புதமான (?) பதிலொன்றை சொல்லியுள்ளீர்கள்.

///ஈஸா நபிக்கு 2 கபர் உள்ளது என்று எழுதி உள்ளது சரியே////

ஆஹா.. நல்ல பதில் ! எப்படி இரண்டு கப்ர்? உடலின் பாகங்கள் தனி தனி இடங்களில் அடக்கம் செய்யப்பட்டதால் இரண்டு கப்ர் ஆனதா?

அல்லது, ஈசா நபி இரண்டு மனிதராக பிரிந்து ஒருவர் அங்கே, இன்னொருவர் இங்கே என அடக்கம் ஆனார்களா?

எப்படி இரண்டு கப்ர்? சொல்லும் பதிலில் கொஞ்சமாவது அர்த்தம் வேண்டாமா?

இந்த இரண்டு கப்ர் சமாளிப்புக்கு ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளீர்கள்.

///////இறந்துவிட்டார் என எண்ணி, பலஸ்த்தீனத்தில் ஒரு கபரில் வைக்கபட்டது.
கவனிக்க வேண்டியது என்னவென்றால், அக்காலத்து வழக்கப்படி மண்ணில் அடக்கம் செய்வது கிடையாது, மாறாக கபர் என்பது ஒரு அறை போன்று இருக்கும், அதில் body ஐ வைத்து மேல் பகுதியை பெரிய கற்களால் மூடிவிடுவார்கள்.
இன்றும் கிறிஸ்தவ மக்கள் அந்த கல்லறையில் ஈஸா நபி அடங்கப்பட்டிருக்கிறார் என்று எண்ணி, தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அல்லாஹு ஈஸா நபியை காப்பாற்றினான். பிறகு அங்கிருந்து ஈஸா நபி வெளியேறினார்கள். கடைசியாக காஷ்மீர் வந்து அங்கு இயற்கை மரணம் அடைந்தார்கள்.///////

அதாவது கொள்கையை நிரூபிக்க எந்த வித கதை, கப்சாவையும் அளந்து விடுவேன் என்கிறீர்கள்.

அக்கால மக்கள் மண்ணில் புதைக்க மாட்ட்டார்கள் என்கிறீர்கள்.
இதற்கு என்ன ஆதாரம்?
அறை போன்ற ஒன்றில் தான் அடக்கம் செய்வது வழக்கம் என்கிறீர்கள். இதற்கு என்ன ஆதாரம்?
சரி, ஈஸா நபியை அதே போன்ற அறையில் அடக்கம் செய்தார்கள் என்கிறீர்கள், அதற்கு என்ன ஆதாரம்?
அல்லாஹ் அவரை அங்கிருந்து காப்பாற்றினான் என்கிறீர்கள்.
அந்த அறை போன்ற கப்ரிலிருந்து தான் அல்லாஹ் அவர்களை காப்பாற்றினான் என்பதற்கு என்ன ஆதாரம்?

பிறகு காஷ்மீர் வந்து இயற்கை மரணம் அடைந்தார்கள் என்கிறீர்கள். அவர் காஷ்மீர் வந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?
அங்கே தான் மரணித்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

எந்த ஆதாரமுமே இல்லாமல் சினிமாக்கதை கேட்பதற்கு காதுகளில் யாருக்கும் பூ சுற்றி வைக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, மிர்சா சாஹிப் இந்த ஈஸா நபியின் கப்ர் விஷயமாக என்ன சொல்லியுள்ளார் என்பதையும் பார்த்து விடுவோம்.

ஈஸா நபி மரணித்து விட்டார் என்று மிர்சா சாஹிப் சொல்லிக் கொண்டு திரிந்த போது இந்த கப்ர் விஷயத்தை அவர் சொல்லவில்லை.

ஆனால், ஈஸா நபி மரணிக்கவில்லை என்பது முஸ்லிம் சமுதாயத்தின் நம்பிக்கையாக இருக்கும் போது, ஈஸா நபி மரணிக்கவில்லை, அவர் உயிருடன் இருக்கிறார், வானத்திலிருந்து வருவார் என்பது தான் மிர்சா சாஹிபின் ஆரம்ப பிரச்சாரமாகவும் இருக்கும் போது,

திடீரென ஈஸா நபி இறந்து விட்டார் என்று அவர் சொன்ன போது அது குறித்து மக்கள் கேள்வியெழுப்ப துவங்கினர்.

இதை மறுத்து, தனது அறிவிப்புக்கு முட்டு கொடுக்கும் விதமாக தான் இந்த கபர் விஷயத்தை கையில் எடுத்தார் இந்த சாஹிப்.

இது பற்றி அவர் சொல்கிற போது,

""ஈஸா நபி இறந்து விட்டார், இதில் அல்லாஹ் செய்திருக்கும் மிகப்பெரிய கிருபை என்ன தெரியுமா? ஈஸா நபியின் கப்ர் ஷாம் நாட்டில் கலேலியா எனும் ஊரில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிக தெளிவுக்காக செய்யது மவ்லானா (இவரது சீடராக இருக்கக்கூடும் !) ஷாம் நாட்டிலிருந்து எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்..""

என்று, ஈஸா நபி தொடர்பான தனது கூற்றினை நிரூபிக்க மிர்சா சாஹிப் கொண்டு வந்த ஆதாரம் தான் ஈஸா நபியின் கப்ர் ஜெருசலத்தில் இருக்கிறது என்பது.

அதற்கு தான் தனது சீடரின் கடிதத்தையும் எடுத்துக்காட்டி எழுதியிருந்தார்.

ஈசா நபி காயங்களுடன் இருந்த போது கப்ர் போன்ற அறையில் வைக்கப்பட்டார், உண்மையில் அவர் அடக்கமெல்லாம் செய்யப்படவில்லை என்று இப்போது நீங்கள் சப்பை கட்டு கட்டுகிறீர்களே, அப்படியெல்லாம் உங்கள் மிர்சா சாஹிப் சொல்லவில்லை.

ஜெருசலத்தில் (பாலஸ்தீனத்தில்) இருப்பது ஈஸா நபியின் கப்ர் தான் என்று தெளிவாக தான் சொல்கிறார். ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற கூற்றுக்கு ஆதாரமாகவும் இதை தான் காட்டுகிறார்.

ஈஸா நபி இறந்து விட்டார் என்பதற்கு ஆதாரமாக கப்ரை மேற்கோள் காட்டுகிறார் என்றால், காயங்களுடன் வைக்கப்பட்ட இடத்தையா மேற்கோள் காட்டுவார்?
சரி, நீங்கள் அவிழ்த்து விட்ட கதைக்கே வருவோம்..

அந்த யூதர்களுக்கு, காயத்துடன் இருந்த ஈஸா மரணிக்கவில்லை என்று தெரியாது என்று வைப்போம். அவர் இறந்து விட்டார் என்று கருதி அங்கே அடக்கம் செய்து விட்டார்கள் என்றே வைப்போம்..
உண்மையில் அவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டது காஷ்மீரில் தான் என்றே வைப்போம்..

இதை பற்றி ஒரு நபி சொல்லும் போது எப்படி சொல்ல வேண்டும்?

ஈஸா நபி இறந்ததற்கு ஆதாரம் கேட்கிறீர்கள், இதோ ஆதாரம் என்று கூறி காஷ்மீரில் அவர் கப்ர் இருக்கிறது என்று மட்டுமல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
பாலஸ்தீனத்தில் அவர் அடக்கம் செய்யப்படது அவர் இறந்த பிறகு அல்ல, காயங்களுடன் இருக்கும் போதாக்கும் என்பது அந்த யூதர்களுக்கு தெரியாவிட்டாலும் ஒரு நபி என்கிற முறையில் இவருக்கு தெரியாமல் இருக்குமா?
அது தெரியாமல், தனது கொள்கையை நிரூபிக்க, இது தான் ஈசா நபியின் கப்ர் என்று அந்த இடத்தை காட்டுகிற அளவுக்கு மடையராக அல்லாஹ் ஒரு நபியை ஆக்குவானா?

இதிலிருந்தும் விளங்குகிறது, அவர் மடையராக தான் அல்லாஹ் ஆக்கியிருக்கிறான், காரணம் அவர் நபியல்ல , அவர் ஒரு பொய்யர் !

சரி, அந்த மவ்லானா என்கிற சீடர் எழுதிய கடிதத்திலாவது, கப்ர் என்றால் கப்ர் இல்லை, கப்ர் போன்ற அறை, அங்கே காயங்களுடன் தான் அவர் வைக்கப்பட்டார் என்றெல்லாம் ஏதும் குறிப்புகள் இருக்கிறதா?
என்று பார்த்தால் இல்லை.

இந்த செய்தியை சொல்லி விட்டு தனது சீடரின் கடிதத்தையும் மேற்கோள் காட்டும் மிர்சா சாஹிப், நூருல் ஹக் பக்கம் 296, 297 இல் அந்த கடிதத்திலுள்ள செய்திகளையும் காட்டுகிறார்.

அதில், """ஈஸா நபியை பற்றி கேட்டிருக்கிறீர்கள்.
நிச்ச்சயமாக அவர் பெத்லஹெமில் பிறந்தார்.
பின் பெத்லஹெமுக்கும் ஜெருசலத்திற்கும் இடைப்பட்ட, 3 மைல் கல் அளவிற்கு தொலைவிலுள்ள பல்ததுல் குதுஸ் எனும் பகுதியில் அவரது கப்ர் உள்ளது."""

என்று அந்த சீடர் எழுதிய கடிதத்தை மிர்சா சாஹிப் தனது நூலில் மேற்கோளும் காட்டுகிறார் என்றால்,...

உங்கள் சமாளிப்புகளையெல்லாம் உங்களிடனேயே வைத்துக் கொள்ளுங்கள்,
மிர்சா சாஹிப் சார்பாக, அவரே கொடுக்காத விளக்கத்தை நீங்கள் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படி தனது கொள்கையை நிலைனாட்ட வேண்டி ஜெருசலத்தில் கப்ர் இருப்பதாக சொன்ன இந்த மிர்சா சாஹிப், பின்னொரு நாளில் சொன்னது தான் ஈஸா நபியின் கப்ர் காஷ்மீரில் இருக்கிறது என்பதும்.

இதை தனது கிஷ்தி நூஹ் பக்கம் 24 இல் எழுதி தனக்கு தானே முரண்பட்டார்.

நான் பொய்யன் தான் என்று அவரே நிரூபித்து விட்டு போயிருக்கும் போது, நீங்கள் என்ன சமாளிப்பு நடத்தினாலும் அவை எடுபடாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

புளுகுமூட்டை இன்னும் அவிழும், இன்ஷா அல்லாஹ் !

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (D)


அல்லாஹ்வுக்கு இணை வைத்த மிர்சா சாஹிப் நபியா?
Mirza Sahib Subject (Part 4)
-----------------------------------------------------------------------------------------------

ஈஸா நபி வருவார் என்று சொல்வது ஷிர்க் என்று ஒரு இடத்திலும், அவர் நிச்சயம் வருவார் என்று இன்னொரு இடத்திலும் முரண்பட்டு மிர்சா சாஹிப் பேசியதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதற்கு பதில் சொல்கிற நீங்கள்,

ஈசா வருவார் என்று சொல்வது ஷிர்க் என்று தான் அவர் சொன்னார், பிறகு மீண்டும் வருவார் என்பது ஈசாவை சொல்லவில்லை, மசீஹ் என்று தான் சொன்னார், அந்த மசீஹ் என்று அவர் சொல்வது தன்னை தான்.
மிர்சா சாஹிப் தான் மீண்டும் வருவார், ஆகவே இது முரணில்லை என்கிறீர்கள்.

அப்படியா? சரி, அப்படியானால், மிர்சா சாஹிபின் ஈஸா நபி குறித்த நிலைபாட்டினை இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

இந்த மிர்சா சாஹிப் தான் கொண்டிருந்த நம்பிக்கை குறித்து அவரது நூலான ஹகீகத்துல் வஹி பக்கம் 153 இல் கீழ்கண்ட கருத்தை சொல்லியிருக்கிறார்.

அதாவது, முதலில் ஈஸா வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன், அது தான் எனது கொள்கை.
என்னைப் பார்த்து அல்லாஹ் பலமுறை ஈஸாவே ஈஸாவே என்று அழைத்த போதும் நான் இதே கொள்கையில் தான் இருந்தேன்.
இதே கொள்கையில் இருந்த பிறகு, மழை போல் அல்லாஹ்விடமிருந்து வஹி வர துவங்கியது,
பிறகு தான் தெரிந்து கொண்டேன், அல்லாஹ் இவ்வளவு காலமும் ஈஸாவே ஈஸாவே என்று என்னை தான் அழைத்திருக்கிறான்..

ஆகவே அன்றிலிருந்து தான் புரிந்து கொண்டேன், ஈஸா இறந்து விட்டார் என்று.

இது தான் மிர்சா சாஹிபின் கொள்கை என்று நான் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார்.

இதற்கு என்ன சமாளிப்பு செய்யப்போகிறீர்கள்? சமாளிப்பதற்கும் ஒரு அளவில்லையா?

மசீஹ் என்றால் ஈஸா இல்லை, என்று நீங்கள் இப்போது சொல்லும் சமாளிப்பு தவறு என்று உங்கள் மிர்சா சாஹிபே நிரூபித்திருக்கிறார். தன்னை ஈஸா என்று தான் அல்லாஹ் அழைத்தான் என்று.

ம‌ர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். (3:45)

மசீஹ் என்று அல்லாஹ் ஈஸா நபியை தான் சொல்கிறான் என்று அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான்.

இங்கே மசீஹ் இறங்கி வருவார் என்று மிர்சா எழுதியிருப்பது ஈசாவை குறிக்கவில்லை, மிர்சா சாஹிபை தான் குறிக்கிறது என்று ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்வதாக இருந்தால், ஈஸா வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று அவர் சொல்வதாக சொன்னேனே, அந்த இடத்தில் கூட அவர் பயன்படுத்தியிருக்கும் சொல் மசீஹ் தான் !

அது தான் வேடிக்கை.

மசீஹ் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று சொல்வது ஷிர்க், முஹம்மது நபி இறந்து விட்டார்கள், மசீஹ் மட்டும் வானிலிருந்து இறங்கி வருவாரா?

என்று கேட்டு விட்டு தான், பிறகு, மசீஹ் வருவார் என்றும் எல்லா ஞானங்களுடனும் இறங்குவார் என்றும் சொல்கிறார்.

அனைத்துமே ஆயினே கமாலாத்தே இஸ்லாம் எனும் நூலில் பக்கம் 44 இலும், அதே நூல் பக்கம் 409 இலும் காணலாம்.

ஆக, இறங்கி வருவார் என்று அவர் சொல்கிற இடத்தில் வரக்கூடிய மசீஹ் எனும் சொல் ஈஸாவை குறிக்காதாம்,
இறங்கி வருவார் என்று நம்புவது ஷிர்க் என்று சொல்கிற இடத்தில் மசீஹ் என்று அவர் சொல்லி விட்டால் அது மட்டும் ஈஸாவை குறிக்கிமோ?

ஏன், அந்த இடத்திலும் மிர்சா என்று பொருள் செய்ய வேண்டியது தானே? மிர்சா வருவார் என்று நம்புவது ஷிர்க். இப்படி பொருள் செய்யுங்களேன்.

சரி, அனைத்தையும் விட முத்தாய்ப்பாக, நான் ஈஸா வருவார் என்று தான் இத்தனை காலமும் நம்பிக் கொண்டிருந்தேன், அவர் வானத்தில் இருக்கிறார் என்று தான் நான் சொன்னேன் என்று,

ஆயினே கமாலாத்தே நூலில் மசீஹ் வருவார், எல்லா ஞானங்களுடனும் வருவார் என்று தான் எழுதியதற்கு தானே விளக்கமும் கொடுத்து, இப்போது நீங்கள் முட்டுக் கொடுப்பது போல் மசீஹ் என்றால் மிர்சா இல்லை, ஈஸாவை தான் சொன்னேன் என்று அவரே விளக்கவுரையும் சொல்லியிருக்கிறார்.

அதை ஹகீகத்துல் வஹி 153 இல் பார்க்கலாம்.

அவரது எழுத்துக்கு அவரே விளக்கம் சொல்லி விட்ட பிறகு, அவர் சொல்லாத விளக்கத்தை நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். அந்த பக்கத்தில் எந்த அளவிற்கு அவர் தெளிவாக எழுதுகிறார் என்றால்,

எனக்கு வஹி வருகிறது, ஈஸாவே ஈஸாவே என்று..

ஆனால், மற்ற முஸ்லிம்களிடம் என்ன அகீதா (கொள்கை) இருந்ததோ அதே கொள்கையான ஈஸா வருவார் என்கிற கொள்கையை தான் நானும் கொண்டிருந்தேன், ஈசா உயிருடன் இருக்கிறார் என்று தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆகவே என்னைப் பார்த்து ஈஸாவே என்று அல்லாஹ் அழைத்த போதெல்லாம் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்துக் கொண்டேன்.
அதனால் தான் பராஹின அஹமதியா எனும் நூலில் ஈஸா வானத்தில் இருக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன்..

என்று அப்பட்டமாக சொல்கிறார். (உருது மூலத்துடன் வார்த்தைக்கு வார்த்தை இருக்கிறது)

தொடர்ந்து,

... மழையைப் போல மீண்டும் மீண்டும் வஹி வரும் போது தான் நான் புரிந்து கொண்டேன், ஈஸா என்று தன்னை தான் அல்லாஹ் அழைக்கிறான், ஈஸா என்றால் ஈஸா என்று நேரடியாக புரியக் கூடாது, தன்னைப் பார்த்து உவமையாக தான் சொல்கிறான் என்று..

சரி, இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

இப்படி அப்பட்டமாக உளறித்தள்ளியிருக்கும் ஒரு மனிதர் உங்கள் பார்வையில் நபியா?

அல்லாஹ்விடமிருந்து வஹீ வருகிறது என்றால், அந்த வஹியை பெற்று அதை மக்களுக்கு அவர் விளக்க வேண்டும் என்பதற்காக வருகிறது.
ஆனால், இங்கே அல்லாஹ் பல முறை தன்னைப் பார்த்து ஈஸா ஈஸா என்று சொன்னானாம், ஆனாலும் அந்த உவமையை புரியாமல் ஈஸா உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்தாராம்..

என்றால், வஹி என்று அல்லாஹ் அனுப்பியும் அதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒரு நபி இருப்பாரா?

வஹியின் மூலம் அல்லாஹ் சொல்ல வரும் செய்தி, அதை பெறக்கூடிய நபிக்கே புரியாமல் இருக்குமா?

அதை விளக்க அல்லாஹ்வுக்கே தெரியவில்லையா? இது அப்பட்டமான அபத்தமில்லையா?

சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்,

வஹி வரும் காலத்திலும் கூட, அதாவது தான் நபியாக ஆன பிறகும் கூட ஈஸா உயிருடன் இருக்கிறார் என்று தான் உங்கள் மிர்சா சாஹிப் நம்பிக் கொண்டிருந்தார் என்று அவரே வெட்கமில்லாமல் எழுதி விட்ட பிறகு, என்னை பார்த்து நீங்கள் எழுப்பும் கேள்வியை இப்போது மிர்சா சாஹிபை நோக்கி நான் எழுப்புகிறேன்.

என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது அல்லாஹ் மட்டும் தானே, ஒரு மனிதர் உண்ணாமல் பருகாமல் பல்லாயிரம் ஆண்டுகள் உயிருடன் இருக்கிறார் என்று நம்புவது பச்சை ஷிர்க் இல்லையா?
அதை ஏன் இந்த மிர்சா சாஹிப் செய்தார்?
நபியாக இருந்து கொண்டே ஏன் செய்தார்?

அவருக்கு அல்லாஹ் விளக்குவதற்கு முன்பு தான் குர் ஆனும் ஹதீஸும் அவரிடம் இருக்கதானே செய்தது? அதை படித்து சிந்தித்து, அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடாது, எந்த மனிதராலும் 2000 வருடங்கள் உயிருடன் இருக்க முடியாது என்று புரிந்து ஏகத்துவ கொள்கையை நிலை நாட்ட வேண்டியது தானே?

அந்த துப்பும் வக்கும் ஏன் இந்த மிர்சா சாஹிபுக்கு இல்லாமல் போனது?
உங்கள் பார்வையில் நான் ஷிர்க் வைப்பது போல் அவர் ஏன் ஷிர்க் வைத்தார்?

ஷிர்க் வைத்த ஒருவரை நீங்கள் ஏன் நபி என்கிறீர்கள்?

ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்பது தான் எல்லாரையும் போல எனது அகீதாவாகவும் இருந்தது, எனது முந்தைய நூலிலும் அப்படி தான் எழுதி வந்தேன் என்று அப்பட்டமாக சொல்லும் இவர் பச்சை முஷ்ரிக் இல்லாமல் வேறு என்ன?

பின் திருத்திக் கொண்டார் என்றாலும், குர் ஆனும் ஹதீஸும் கைகளில் இருந்த காலத்திலேயே உங்கள் பார்வையில் எது சத்தியமோ, அதை விளங்கிக் கொள்ள துப்பு கெட்ட ஒருவர் நபியா?

உங்கள் கருத்திப்படி குர் ஆனில் தான் ஈஸா நபி இறந்து விட்டார் என்று தெள்ளத் தெளிவாக இருக்கிறதே? அதை கூட விளங்காமல், ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார், அது தான் எனது அகீதா என்று மடமையாக புரியக்கூடிய மிர்சா சாஹிப் நபியா?

குர் ஆனில் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்பதை கூட புரிய முடியாத ஒருவர் நபியா?

உங்கள் கருத்திப்படி குர் ஆனில் இருந்து ஈஸா நபி இறக்கவில்லை என்று எங்களால் நிரூபிக்கவே முடியாதே, அது கூட தெரியாமல், ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார், அது தான் எனது அகீதா ஷிர்க்கில் மிதந்த ஒருவர் நபியா??

என்கிற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

ஈஸா நபி உயிருடன் இருப்பதாக நம்புவது ஷிர்க் என்று சொல்கிற அடிப்படை தகுதி கூட மிர்சா சாஹிப் எனும் பொய்யரை நபியாக நம்பும் கூட்டத்திற்கு இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

வண்டவாளங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ் !
 

பகவத் கீதையை வேதமாக கருதுபவர்கள்


அவசியம் ஏற்பட்டால் இஸ்லாமிய அரசாங்கத்தின் மீது போர் செய்வது கடமை என்பதாக வரக்கூடிய குர்ஆன் வசனங்களை, அது தீவிரவாதத்தை தூண்டுவதாக விமர்சனம் செய்பவர்கள், வசனங்களின் முன் பின் செய்திகளையும் படித்து விட்டு தான் விமர்சனங்களில் இறங்க வேண்டும்.

குர் ஆன் என்பது ஆட்சியையும் போரையும், எதிரிகளை கொல்வதையும் சொல்வதற்காக மட்டும் வந்த வேதமல்ல.

குர் ஆன், குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது, தொழில் செய்வதை பேசுகிறது, வியாபார நெறிகளை போதிக்கிறது, திருமணம், விவாகரத்து, கொடுக்கல் வாங்கல், குழந்தை வளர்ப்பு, சொத்துக்களை பராமரித்தல், பாகப்பிரிவினை, அண்டை வீட்டாருக்கு பணிவிடை செய்வது, உற்றார், உறவினர்களை கவனிப்பது..,
ஏன், மலஜலம் கழித்து சுத்தம் செய்வது முதல், மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது வரை

என ஒரு மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரையுள்ள, அனைத்து உலக காரியங்களையும் சட்ட திட்டமாக வகுத்து தரும் சட்ட நூல் தான் குர் ஆன்.

அத்தோடு நிறுத்தாமல், கடவுள் என்றால் யார், அவனை வணங்குவது எப்படி, இந்த உலகம் படைக்கப்பட்டது, அழிக்கப்படுவது, அழித்த பின் நிகழப்போவது என மறு உலகம் சார்ந்தவைகளையும் பேசுகிற ஆன்மீக நூல் தான் குர் ஆன்.

அத்தோடு, அண்டசராசரங்களின் தோற்றம் முதற்கொண்டு, சூரிய சந்திரனின் சுழற்சி முறை, காலக்கணக்குகள், ஆழ் கடல் அதிசயங்கள், விலங்குகள், பறவைகளில் ஒளிந்துள்ள விஞ்ஞான அற்புதங்கள் என அதிசயங்களையும் பேரற்புதங்களையும் பேசுகிற அற்புத நூல் குர் ஆன்.

இதில் ஆட்சியை நாம் கைபற்றும் போது, நமக்கெதிராக போர் செய்ய வரும் இஸ்லாத்தின் எதிரிகளை போரில் வெட்டி வீழ்த்துவது பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படி, பாகிஸ்தான் கார்கிலில் படையெடுத்து வந்த போது, இந்திய ராணுவம் அவர்களை வெட்டி வீழ்த்தியதோ, அது போல..

ஆட்சியை வைத்திருப்பவர்களின் கடமை அது. மனிதனின் அனைத்து பரிணாமங்களையும் பேசுகிற ஒரு வேத நூலானது இதையும் பேசித் தான் ஆக வேண்டும்.

ஆனால், இதை விமர்சனம் செய்யும் ஹிந்து சகோதரர்கள் வேதமாக கருதும் பகவத் கீதை எப்படி பட்டது தெரியுமா?

மஹாபாரத கதையின் ஒரு பாகம் தான் பகவத கீதை.

அதென்ன மஹாபாரத கதை?

பாண்டவ சகோதரர்களுக்கும் அவர்களது ஒன்று விட்ட சகோதரர்களான‌ கொளரவர்களுக்கும் இடையே நடைபெற்ற குருக்க்ஷேத்திர போர் தான் மஹாபாரத கதை.

இந்த போருக்கான காரணம் கூட, சகோதரர்களுக்கிடையேயான குடும்ப பிரச்சனை தான்.

பாண்டவ சகோதரர்களுக்கு வில் வித்தைகளும் போர் தந்திரங்களையும் கற்றுக் கொடுத்த குருனாதர்கள் பீஷ்மர், துரோணர் போன்றவராவர்.

தர்மத்திற்காக போர் செய்து, தங்கள் ஒன்று விட்ட சகோதரர்களான கொளரவர்களை அழிப்பதற்கு முடிவு செய்து போர்களத்தில் அணி திரண்ட பாண்டவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
.
அது என்ன அதிர்ச்சி? தங்கள் குருனாதர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களை எதிரி அணியில் அவர்கள் கண்டனர் !!

அதர்மத்திற்கு எதிராக போருக்கு தயாரான பாண்டவர்கள், தங்களது குருநாதர்களுக்கு எதிராய் போர் செய்வதா? என்று அச்சமுற்றனர்.
தங்கள் குரு நாதர்கள் அதர்மத்திற்கு ஆதரவாய் தான் நிற்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் கூட, குரு நாதர்களை கொலை செய்ய மனம் ஒத்துக்கொள்ளாத காரண‌த்தால் நீட்டிய வில்லை கீழே இடுகிறான் அர்ஜுனன்.

அந்த சந்தர்ப்பத்தில், அர்ஜுனனின் மைத்துன‌னான கண்ணன், அர்ஜுனனுக்கு அறிவுரை கூறுகிறான்.
அதில், போர் என்று வந்து விட்டால் நபர்களை பார்க்கக்கூடாது என்றும், தர்மமா அதர்மமா என்று தான் பார்க்க வேண்டும் எனவும், குரு நாதர்களாக இருந்தாலும் போர் செய்து அவர்களை அழிப்பது தான் சரி எனவும் அறிவுரை கூற, போருக்கு தயாராகிறான் அர்ஜுனன்.

போர் செய்ய வேண்டும்,
எதிரிகளை கொன்று குவிக்க வேண்டும்,
குருவாக இருந்தாலும் தயவு தாட்சணியம் பார்க்கக் கூடாது, அவர்களையும் வெட்டி வீழ்த்த வேண்டும்

என்று கண்ணன் கூறிய உபதேசங்களை உள்ளடக்கியது தான் பகவத் கீதை !!

பகவத் கீதையை வேதமாக கருதுபவர்கள் எப்படி குர் ஆனில் எதிரிகளை வெட்டுங்கள் என்று சொல்லப்பட்டதை விமர்சனம் செய்கிறார்கள் என்று நமக்கு புரியவில்லை !!

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (C)


மிர்சா சாஹிப் சுய சிந்தனையுள்ள‌ மனிதர் தானா?

Mirza Sahib subject (Part 3)
-----------------------------------------------------------------------------

மிர்சா சாஹிபின் வண்டவாளங்களுக்குள் நுழைவதற்கு முன், மேலும் சில வாதங்களை எழுப்பியிருக்கிறீர்கள். அவற்றை வரிசையாக பார்க்கலாம்.

//அபுஜாகிலுக்கு நபியின் தகுதி தென்பட்டதா? என்ற என் கேள்விக்கு உன் பதில் என்ன?//

என்று கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள்.

அதாவது, மிர்சாவிடம் நபிக்கான தகுதி தென்படுகிறதா? என்கிற எனது கேள்விக்கு எதிர் கேள்வியாம் இது..

அப்படி எண்ணிக்கொண்டு இதை கேட்கிறீர்கள். ஆனால், இப்படியுமா ஒருவர் வாதம் புரிவார் என்று படிப்பவர்கள் சிரிப்பதற்க்கே தவிர வேறு எதற்குமே இது போன்ற உங்கள் கேள்விகளும் வாதங்களும் பயன்படவில்லை என்பதை நீங்காள் புரிந்து கொள்வது உங்களுக்கு நல்லது.

அபு ஜஹல் தன்னை நபியென்று வாதிடவில்லை. வாதிட்டால் அவனிடமும் நபிக்கான தகுதி தென்படவில்லை என்பதை நிரூபிப்போம். இப்போது தன்னை நபியென வாதிடும் மிர்சா சாஹிபை பற்றி மட்டும் பார்ப்போம்.

///தினம் தோறும் அரசியலை பற்றி கட்டுரை எழுதியும், பேசியும் வரும் உனக்கு மிர்சா சாகிபின் தகுதியை பற்றி பேச என்ன தகுதி உள்ளது?//

என்று அடுத்ததாக கேட்டுள்ளீர்கள்.

தினம் தோறும் அரசியல் பேசினால் மிர்சா சாஹிபின் வண்டவாளங்கள் மறந்து விடுமா?
மிர்சா சாஹிபின் வண்டவாளங்களை பற்றி சொன்னால் அதற்கு மட்டும் பதில் சொன்னால் போதுமே.. எதற்கு இது போன்ற சம்மந்தமில்லாத எதிர் வாதங்கள்?

///மிர்சா சாஹிப் பற்றிய ஆட்சேபனைகளை எடுத்து வைக்கவேண்டும். நான் அதற்கு பதில் அளிப்பேன். இவ்வாறு இருவரின் விவாதமே, உண்மை எது என வெளிப்படுத்தும். அதை விடுத்து ஆரம்பத்திலேயே தகுதியை பற்றி மனம்போன போக்கில் பேசுவதற்கு, அரசியல் nashid-க்கு எந்த உரிமையும் இல்லை.///

என்று தொடர்ந்து கூறுகிறீர்கள்.

மிர்சா என்பவர் நபியில்லை, அவர் உங்களையும் என்னையும் போன்ற நல்ல மனிதரும் இல்லை, அவர் ஒரு பொய்யர், ஏமாற்றுப் பேர்வழி, பித்தலாட்டக்காரர், அவர் நபியாக இருப்பதற்கு மட்டுமல்ல, சாதாரண மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் என்பது தான் எனது நிலை.

அதனால் தான் உங்களோடு விவாதம் செய்யவும் முன் வந்திருக்கிறேன்.

எனது நிலையே அது தான் எனும் போது விவாதம் துவங்கும் முன்பே நான் அப்படி சொல்லத் தான் வேண்டும்.

ஏன் நான் கூட இப்படி கேட்கலாமே?

மிர்சா சாஹிப் நபி என்பதற்குரிய ஆதாரங்களை நீங்கள் எடுத்து வைக்கவேண்டும். நான் அதற்கு பதில் அளிப்பேன். இவ்வாறு இருவரின் விவாதமே, உண்மை எது என வெளிப்படுத்தும். அதை விடுத்து ஆரம்பத்திலேயே அவர் நபி தான் அவர் நபி தான் எனறு சொல்லும் எந்த உரிமையும் உங்களுக்கு இல்லை.

இப்படி நானும் சொல்லலாம் தானே?

நான் மிர்சாவின் கீழ்தரமான தகுதியை ஆரம்பத்திலேயே பேசக்கூடாது என்றால், அவர் மேன்மைமிக்கவர் என்று நீங்களும் பேசக்கூடாது என்று நானும் தான் சொல்வேன்.

பிறகு என்ன தான் விவாதம் செய்வது??

ஆகவே இது போன்ற அர்த்தமற்ற அறிவுரைகளை தவிர்க்கவும். அவர் நபி என்று நீங்கள் சொல்லலாம் என்றால் அவர் பொய்யர் என்று நானும் சொல்லலாம்.
உங்கள் நம்பிக்கை அது, எனது நம்பிக்கை இது !
அவரவர் நம்பிக்கையை நியாயப்ப‌டுத்தி தான் விவாதமே செய்கிறோம் !

///200 நாடுகளில் உள்ள 20 கோடி மக்கள் மிர்சா சாகிபை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே மிர்சா சாகிபின் தகுதி முழு உலகிலும் நிரூபணம் ஆகிக்கொண்டே வருகிறது. ///

என்கிறிர்கள்.

சாய்பாபாவை கூட தான் லட்சக்கணக்கான மக்கள் வணங்கினார்கள்,
வீடியோ புகழ் நித்தியானந்தாவுக்கு இந்தியா முழுவதும் சீடர்கள் இருக்கிறார்கள்.
நமது ஊரில் பீடி இழுத்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு பீடி மஸ்தான் அவ்லியா தர்கா என்கிற பெயரில் தர்காவையே கட்டி பல நூறு பேர் தினம் தரிசனமும் கூட செய்கிறார்கள்.
பொட்டல்புதூரில் யானையை அடக்கம் செய்து அதை வழிபட தினமும் மிக நீண்ட வரிசை நிற்கிறது.

இதுவெல்லாம் அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை நேரானது என்பதற்கு அளவுகோல் ஆகி விடும் என்று எந்த மூடரும் எண்ண மாட்டார்.

ஆகவே, 200 நாடுகள் அல்ல, ஒட்டு மொத்த உலகமும் அஹமதியா மதத்தை தழுவினாலும் சத்தியம் அங்கே இருக்கிறதா? என்று மட்டுமே அறிவுள்ளவர் சிந்திப்பர். இது போன்ற வாதங்களும் எடுபடாது என்பதை நினைவூட்டுகிறேன்.

////தமிழகத்தில் மட்டும் தவ்ஹீது பேசும் நீங்கள், ரோட்டில் போகிற ஒருவரை நபி என நம்பவேண்டுமா என கேட்பதில் ஆச்சரியம் இல்லை தான்.////

தமிழ் மட்டும் தெரிந்தால் தமிழகத்தில் தான் தவ்ஹீத் பேச முடியும். எதை செய்ய இயலுமோ அதை செய்தால் போதும்.
ஆனால், தமிழ் மட்டும் பேசி, தமிழகத்தில் தவ்ஹீத் ஏற்படுத்திய புரட்சி சூராவளியில் தூக்கி வீசப்பட்டதன் கதி, நீங்களும் உங்கள் மதமும் நாட்டின் தெருக்கோடியில்..

நீங்களும் தமிழ் பேசக்கூடியவர்கள் தான் என்பதையும், உங்களால் தமிழகத்தில் சாதிக்க முடிந்தது என்ன? என்பதையும் சிந்தித்தால் இது போன்ற அபத்தங்களை வாதமாக வைக்க மாட்டீர்கள் !

///// எதன் அடிப்படையில் நீங்கள் அரசியலை பின் பற்றி செல்கிறீர்கள்? அரசியல் என்பது பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மார்க்கம். சிறந்த அரசியல் தலைவர்கள் கூட அரசியலை அசிங்கமாகத்தான் பார்த்தார்கள்.////

என்கிறீர்கள்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? அரசியல் என்பது ஹராம் என்கிறீர்களா?
ஜனனாயகம் என்பது தவறு என்று சொல்லி திரியும் கூட்டத்தின் கொள்கை தான் உங்களுடையதுமா? என்றால் அதை வெளிப்படையாக சொல்லுங்கள்,
அது போன்ற மடமை வேறு இல்லை என்பதை தனி தலைப்பிட்டு விளக்குகிறேன்.

///ஈஸா நபி உயிரோடு இருக்கிறார்கள் என்ற கொள்கையும், நபிக்கு பின் நபி இல்லை என்ற கொள்கையும் உன் முப்பாட்டன்மார்களுடைய ( யூத, கிறிஸ்தவர்கள் ) கொள்கை அல்லாமல் வேறு என்ன?/////

என்று கேட்கிறீர்கள். அதாவது, இதை கேட்கிறோமே, படிப்பவர்கள் நம்மை கேலி செய்து சிரிப்பார்களே, நமது சிந்தனையை பற்றி தவறாக அல்லவா எடை போடுவார்கள் என்று சிந்திக்காமலே வாதம் செய்து வருகிறீர்கள் என்பது எனக்கு கவலையை தருகிறது.

ஈஸா நபி இறக்கவில்லை என்று நான் நம்புகிறேன், எனது பாட்டன், முப்பாட்டனும் அதை தான் நம்பினார்கள். ஆகவே நான் எனது பாட்டன், முப்பாட்டனை பின்பற்றுகிறேன் என்கிறீர்கள்.

ஏன்? அல்லாஹ்வை தொழ வேண்டும் என்று நீங்களும் தான் நம்புகிறீர்கள். அதையே தான் உங்கள் பாட்டன், முப்பாட்டனும் நம்பினார்கள். நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் உங்கள் பாட்டன் முப்பாட்டனை பின்பற்றுகிறீர்கள்??

இப்படி நான் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்??

எதை பேசினாலும் சிந்தித்து பேசுங்கள் என்று மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அர்த்தமேயில்லாத இது போன்ற வாதங்களை வைத்தால், உங்கள் மதத்தை சார்ந்த சிந்தனை சொரூபிகள் வேண்டுமானால் உங்களை ஆஹா ஓஹோ என புகழலாம்,
மற்றவர்களிடம் அவை எடுபடாமல் போய் விடும்..
இதை மீண்டும் அன்புடன் எனது சிறு அறிவுரையாக உங்களுக்கு சொல்கிறேன்.

///ஆனால் குரானில் கூறும் science ஐ கொண்டே அஹ்மதிகள் புதிய வானம் படைக்க இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியாது. (கிண்டல் பண்ணுவதாக இருந்தால் பண்ணிக்கோ)///

என்று அடுத்து பேசுகிறீர்கள். கிண்டல் பண்ணுவதாக இருந்தால் பண்ணிக்கோ என்று சொல்லி விட்ட பிறகு மனம் இடம் தரவில்லை, ஆகவே, நோ கமன்ட்ஸ் !

மர்யம் தான் மிர்சா, மிர்சா தான் மர்யம், மசீஹ் தான் மிர்சா, ஈசா தான் மிர்சா, மிர்சா தான் ஈசா, ஈசப்னு மர்யம் என்றால் மிர்சாவுக்குள் மிர்சா..
மிர்சா கர்ப்பமுற்றார், மிர்சா கருத்தரித்தார், மர்யம் தான் அந்த மிர்சா, மிர்சா பெற்றது ஈசா..

என்றெல்லாம் புல்லரிக்கும் அளப்பெரிய தத்துவங்களை பொழியும் அஹம்திய்யா மதம், புது வானமென்ன, புது சூரியன், புது சந்திரன், புது நட்சத்திரம் என எல்லாவற்றையும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தான்.. யாரால் மறுக்க முடியும் !

/////நீங்கள் குரானில் நிறைய கப்சாகளை வைக்கவில்லையா? நிறைய முரண்பாடுகள் வைக்க வில்லையா?/////

கப்சாக்கள் வைத்தது யார் என்கிற பட்டியலை தந்த போது தானே அதை விட்டும் விரண்டோடி, 13 மசாலாக்களில் ஏழுக்கு மட்டும் பதில் என்கிற பெயரில் சமாளித்து விட்டு மீதியை கண்டுகொள்ளவே செய்யாமல் நழுவியிருக்கிறீர்கள்??

மிர்சா சாஹிப் விட்டடித்த கப்சாக்களை தான் வண்டி வண்டியாக பார்க்க இருக்கிறோமே.. பொறுங்கள்.. நீங்கள் எங்களை சொல்கிறீர்களா??

////ஏராளமான முறைகளில் சரி பார்த்து, உண்மையாளர் தான் என உளமாற நம்பி உள்ளீர்கள் என்றால், உங்களுக்கு இடையே ஒருவருக்கொருவர், காஃபிர், பொய்யன் என்றெல்லாம் ஏன் கூறுகிறீர்கள். இதற்கு நீங்கள் ஒருவருக்கொருவர் “கொஞ்சுகிறீர்கள்” என்று அர்த்தம் கொடுக்கவா?///

என்று அடுத்த வாதமொன்றை வைத்திருக்கிறீர்கள்.

ஏராளமான முறையில் சரி பார்த்து உண்மையாளர் என்று நம்பித் தான் நபி (சல்) அவர்களை ஏற்கிறோம், ஆமாம், அதனால் என்ன?
அதனால் இன்னொருவரை பார்த்து நீ பொய்யன் என்று சொல்லக் கூடாதா?

எனது பார்வையில் நான் சரியான கொள்கையில் இருக்கிறேன், நீங்கள் பொய்யான கொள்கையில் இருக்கிறீர்கள். உங்கள் பார்வையில் நீங்கள் சரியான கொள்கையில் இருக்கிறீர்கள், நான் பொய்யான கொள்கையில் இருக்கிறேன்..

இருவருமே அவரவர் நிலையை ஆய்வு செய்து சிந்தித்து தான் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பின் ஏன் ஒருவரையொருவர் பழித்துக் கொள்கிறோம்??

உங்கள் கேள்வியை உங்களிடமே கேட்கிறேன்.

ஆக, இதுவும் அர்த்தமுள்ள வாதமில்லை !

////நீ எழுதிஉள்ளாய் : “எந்த காஃபிர் வந்து கேட்டாலும், இவர் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை எந்த முஸ்லிமாலும் நிரூபிக்க முடியும்.”
பதில்: எப்படி? ஒரு கூட்டம் கூறுகிறது, தொழும்போது கையை நெஞ்சில் கட்டினால் தான் அல்லாகுவின் தூதரை ஏற்றுக்கொள்வேன் என்று.
மற்றொரு கூட்டமோ கையை வயிற்றின் மேல் கட்டினால் தான் அல்லாகுவின் தூதரை ஏற்றுக்கொள்வேன் என்று.////

என்று அடுத்து கூறியிருக்கிறீர்கள்.

அதாவது, இயல்பாய் நல்ல சிந்தனையுள்ள ஒருவர் கூட அஹமதிய்யா எனும் புது மதத்தை தழுவிவிட்டால் சிந்தனை தடுமாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்று வரிக்கு வரி நிரூபிக்கிறீர்கள்.

மிர்சா சாஹிபை பின்பற்ற துவங்கும் எவராக இருந்தாலும் வாதம் என்கிற முறையில் இப்படி தான் அர்த்தமேயில்லாமல் பேசிக் கொண்டிருப்போம் என்றும் நிரூபிக்கிறீர்கள்.

எந்த காஃபிர் வந்து கேட்டாலும் முஹம்மது என்பவர் நபி தான் என்று எங்களால் நிரூபிக்க முடியும் என்பதற்கும், நெஞ்சில் கை கட்டுவதா வயிற்றில் கை கட்டுவதா என்று கருத்து வேறுபாடு கொள்வதற்கும் என்ன சம்மந்தம்??

நீங்கள் இதுவரை பேசிய எந்த ஒன்றாவது உருப்படியான கருத்தை கொண்டதாக, மக்கள் சிந்திக்கும் படியான வாதமாக இருந்ததா என்று நெஞ்சில் கை வைத்து சுய பரிசோதனை செய்யுங்கள்.

மிர்சா மிர்சா என்று அந்த போதையிலேயே இருந்தால் அல்லாஹ் இப்படி தான் சிந்தனையை கூர்மையாக செலுத்துவதை விட்டும் தடுப்பான் !

////வரக்கூடிய நபி, ஈசாவை பல காரணங்களால் ஒத்து இருப்பார் என்பதற்கே ‘இப்னு மர்யம்’ என்று, வரக்கூடிய நபியை பற்றி நபி ஸல் அவர்கள் முனறிவிப்பு செய்துள்ளார்கள்.////

என்கிறீர்கள்.

இதுவும் நான் ஏற்கனவே சொன்னது போன்றது தான்.

நானே ஈஸா, நானே மர்யம், நானே அல்லாஹ், நானே ஆதம், நானே நீ, நீயே நான், அவனே நான், நானே அவன்..
என்று மருத்துவத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களை எல்லாம் நபியாக்கினால் இது தான் பிரச்சனை.

மர்யமின் மகன் ஈசா வருவார் என்று அல்லாஹ் சொல்கிறான்.

மர்யமின் மகன் ஈசாவை போன்றவர் வருவார் என்று நாம் அர்த்தம் செய்ய வேண்டுமாம்.

ஏன் செய்ய வேண்டும்? நமக்கென கிறுக்கா பிடித்திருக்கிறது இப்படி அர்த்தமற்ற பொருளை செய்வதற்கு?

அப்படியானால் எல்லாற்றையைம் இப்படியே புரியலாமே..

ஹஜ்ஜுக்கு மக்கா செல்லுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

மக்கா போன்ற இன்னொரு இடம் செல்லுங்கள் என்று நாம் புரிவோம். புரிந்து விட்டு இனி அனைவரும் ஐரோப்பா கண்டத்திற்கு ஹஜ் செல்லுங்கள்.

பள்ளிவாசலுக்கு சென்று தொழுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
பள்ளிவாசல் என்றால் பள்ளிவாசல் போன்ற.. என்று புரியலாம்.. அவ்வாறு புரிந்து எல்லாரும் இனி வீட்டிலேயே தொழுங்கள்.

இப்படியே புரிந்து அழிந்து நாசமாகி விடலாம்..

இந்த நானே மிர்சா, நானே மர்யம், நானே கர்ப்பமானேன், நானே ஈசாவை பெற்றேன், பின் நானே ஈஸாவானேன் என்கிற மிர்சா சாஹிபின் உளரல்களையெல்லாம் அவரது வண்டவாளங்களுக்குரிய பதிலை சொல்லும் போது விளக்கமாகவே பார்ப்போம்.

////100 வருடங்கள் முன்பு வரையிலும் ஈஸா உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை முஸ்லிம்களின் ரத்தத்தில் கூட ஊறிப்போயிருந்தது.///

என்கிறீர்கள். இதை முறியடிக்க தான் மிர்சா வந்தார் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா? ஈசா இறக்கவில்லை, மீண்டும் வருவார் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன் என்று இந்த மிர்சா சாஹிபே சொல்லியிருக்கிறார்.

அது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. அதைக் குறித்து அடுத்தடுத்த தொடர்களில் பார்க்க இருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.

///இப்போது நீ புரிந்திருப்பாய் என நினைக்கிறேன்.
அதாவது நபி வாதம் செய்வதற்கு முன்னர் எப்படி வாழ்ந்தார் என்பதை ஒரு அளவுகோலாக பார்க்கவேண்டும் என்று குராணிலிருந்து புரிய முடிகிறது.///

என்று அடுத்ததாக கூறியிருக்கிறீர்கள். இது மட்டும் அளவுகோல் இல்லை என்று முந்தைய தொடரின் போதே நிரூபித்திருக்கிறேன்.

நபியென்று சொல்வதற்கு முன்பாக எப்படி நல்லவராக இருக்க வேண்டுமோ, அதன் பிறகும் இருக்க வேண்டும்.

நபியென்று தன்னை பிரகடனப்படுத்திய பிறகு அவர் கொண்டு வரும் தூது செய்தியில் பொய்களும் முரண்பாடுகளும் இருக்ககூடாது !

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராள மான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (4:82)

இதுவும் தான் அளவுகோல்.

////உலக கரியங்களுக்காக வாழ்நாளின் பெரும்பகுதி பொய் பேசாத ஒருவர், இறைவன் விஷயத்தில் பொய் பேச தேவை என்ன?///

என்று இறுதியாக கேட்டிருக்கிறீர்கள்.

உலக விஷயங்களுக்காக பொய் பேசி பயனில்லை என்றாகும் போது, இறைவன் விஷயத்தில் பொய் பேசி உலகாதாயம் பெறலாம் என்கிற சபலம் மனிதர்களில் சிலருக்கு ஏற்படத்தான் செய்யும்.

உலக காரியங்களில் நல்லவனாக வாழ்ந்தாலும் பேரும் புகழும் கிடைக்காது.. தன்னை நபியென மக்கள் நம்பி விட்டால் புகழ் கிடைக்கும்.
பணம் சம்பாதிக்கலாம்..
மனிதனுக்கு பல ஆசைகள் இருக்கா தான் செய்யும். ஆக, இப்படியெலலம் கேள்வி எழுப்பி உங்கள் சித்தாந்தத்தை நியாயப்படுத்தி விட முடியாது.

தவிர், மிர்சா சாஹிபின் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் திறந்த புத்தகமாக அனைவரும் காணும் வகையில் இல்லை, இருந்தால் தானெ தெரியும், அதிலும் என்னவெல்லாம் திருகுதாளங்கள் இருந்தன என்று சொல்ல..

நித்தியானத்தா தன்னை துறவியாக பிரகடனப்படுத்திய பிறகு தான் அவரை பற்றி உலகிற்கு தெரியும்.
நான் என் சிறு வயதில் நல்லவனாக தானே வாழ்ந்தேன், பின் இப்போது கடவுள் விஷயத்தில் மட்டும் பொய் சொல்வேனா? என்று அப்பாவித்தனமாக நித்தியானந்தா கேள்வி கேட்டால், உங்கள் கூற்றுப்படி, ஆமாம் சரி தானே.. எப்படி பொய் சொல்ல முடியும்? ஆகவே இந்த வீடியோ மேட்டரெல்லாம் பொய் தான் என்று சொல்லி விட வேண்டும் போல..

ஏனெனில், எல்லாருக்கும் என்ன நித்தியானதாவின் சிறு வயது வரலாறு தெரிந்திருக்குமா என்ன?

ஆக, ஆசையில் பல வகை இருக்கும். ஒருவருக்கு பணத்தாசை, இன்னொருவருக்கு புகழாசை, பெண்ணாசை, மண்ணாசை போல, தன்னை நபியென புகழப்படும் ஆசை இந்த மனிதருக்கு.

ஒரு படி மேலே போய், தன்னை அல்லாஹ் என்றே சொல்கிற மிகவும் ஆபத்தான ஆசை கூட இவருக்கு உண்டு..

அனைத்தையும் அடுத்தடுத்த தொடர்களில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ் !

தொடரும்..

குர் ஆனை மெய்படுத்தும் விஞ்ஞானம்


கடல் மட்டம் உயர்ந்து வருவதன் மூலம் நிலப்பரப்புக்கே ஆபத்து எனவும் இதனால் பல நிலப்பரப்புகள் அழிந்தே கூட போகும் எனவும் உலகம் தற்போது கவலை கொள்கிறது !

இதைப்பற்றி ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள ஆக்கம் நம் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் இதைப்பற்றி குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னரே கூறி விட்டது !

பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன். (13:41)

ஹிந்து பத்திரிகையின் தற்போதைய ஆக்கமும் இந்த இறை வசனத்திற்கு சகோ. பிஜெ தரும் விளக்கமும் பொருந்திப்போவதையும் கீழே காணலாம் !

http://tamil.thehindu.com/general/environment/கடல்-மட்டம்-உயர்ந்தால்-தமிழகம்-என்ன-ஆகும்/article6076475.ece

பிஜெ விளக்கம் :

http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/243_orangali_kurayum_boomi/