திங்கள், 2 டிசம்பர், 2013

ரங்கனாத் மிஸ்ரா அறிக்கையின் பரிந்துரைகள்


ரங்கனாத் மிஸ்ரா அறிக்கையின் பரிந்துரைகளில் முக்கியமான‌ சில..


எல்லா வகையிலும் பிந்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனம் 16(4) விதி அனுமதிக்கிறது.

எனவே நாடு முழுவதும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் நூற்றுக்கு பத்து என்கிற விகிதத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வேலை வாய்ப்பு மட்டுமின்றி சுய தொழில் துவங்க‌ கடன் கொடுப்பதிலும் முஸ்லிம்களுக்கு 10% தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மாண‌வர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்த போதும் அவர்களுக்கு வாய்ப்பளிப்பது போல் முஸ்லிம்களுக்கும் மதிப்பெண்ணை தளர்த்த வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் இஸ்லாமிய பல்கலைகழகம் அமைக்க வேண்டும்.

கல்வியில் பிந்தங்கியிருக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும்.

நவோதயா போன்ற இலவச தரமான கல்வி முறை திட்டத்தை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் திறக்க வேண்டும்.

சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவச வீடு கட்டித் தர வேண்டும்.


பொருளாதாரத்தில் பிந்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு சமையல் கேஸ் இணைப்பை மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.

சஹாபாக்களை பின்பற்றுவோருக்கு இந்த ஆதாரம்


மக்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள் அல்லது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பொய்யர்கள் என்று மக்கள் எண்ணி விடுவார்கள்
என்று அலி (ரலி) அவர்கள் கூறியதாக புஹாரி 127 இல் பதிவாகியுள்ளது (ஹதீஸின் கருத்து)
அது போல்,

அறிவுக்கு எட்டாத விஷயங்களை சொல்வது குழப்பம் விளைவிப்பதாகும் என்கிற கருத்துப்பட அப்துல்லாஹ் பின் மசூத் (ரலி) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி முஸ்லிம் 12 இல் பதிவாகியுள்ளது.

அறிவுக்கும் வாழ்க்கை நடைமுறைக்கும் ஒத்து வராத செய்திகள் தவறானவை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி அஹமதில் பதிவாகியுள்ளது.

அது தான் நாம் ஏற்க வேண்டிய ஆதாரம். 


மேலே குறிப்பிட்ட சஹாபாக்களின் கூற்று, கூடுதல் விளக்கத்திற்காகவும், சஹாபாக்கள் சொன்னால் தான் கேட்போம் என்று சொல்பவர்களுக்காகவும் தரப்பட்ட சான்று !

சவ்வா என்பதற்கு என்ன அர்த்தம்?


சவ்வா" என்பதற்கான நேரடி அர்த்தம் சீர்ப்படுத்துவது..

தாழ்ந்திருப்பதை சீர்ப்படுத்துவது என்றால் உயர்த்துவது. உயர்ந்திருப்பதை சீர்படுத்துவது என்றால் கீழே இறக்குவது..

கிழிந்திருக்கும் துணியை சீர்ப்படுத்துவது என்றால் தைப்பது. உடைந்ததை சீர்ப்படுத்துவது என்றால் ஒட்ட வைப்பது..

ஆக, சவ்வா என்பது இடத்தை பொறுத்து வேறுபடும் பொருளாகும். தண்ணீர் மாதிரி. வீற்றுகின்ற பாத்திரத்திற்கு ஏற்ப தண்ணீர் வடிவம் பெறுகிறதில்லையா? அது மாதிரியான ஒரு சொல் சவ்வா !

இப்போ ஒரு இடத்தில் கட்டிடம் கட்ட போகிறோம், திட்டு திட்டாக மதில் சுவர்கள் உள்ளன.. இந்த இடத்தை "சவ்வா" செய் (சீர் செய்) என்று நான் அரபியில் சொன்னால் அதன் பொருள் என்ன?

அந்த மதில் சுவருக்கு பெயின்ட் அடித்து, ஊதுபத்தி பற்றி வைக்க வேண்டும் என்பது பொருளா அல்லது அவற்றை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என்பது பொருளா?

கப்ர்ககளை இடித்து தரைமட்டமாக தான் ஆக்க வேண்டும் !!

களியக்காவிளை விவாதத்தில் கிளிப்பிள்ளைக்கும் புரியும் வண்ணம் சகோ. பிஜே பேசியது தான் மேலே உள்ளவை !

2006 இல் கேட்டது, இன்று வரை மனதில் நிற்கிறது !அல்ஹம்துலில்லாஹ் !! 


சகோ. பிஜெவுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும் !!

நட்சத்திரத்தை உண்மை என நம்புதல்


நட்சத்திரத்தை நம்புதல் இணை வைப்பு என்று சொன்னால் வானத்தில் நட்சத்திரங்கள் இருக்கிறது என்று நம்புவதை அது குறிக்காது.

அது போல், சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் சூனியம் என்கிற ஒன்று உண்டு என்று நம்புவதை குறிக்காது.

நட்சத்திரத்தை நம்புதல் இணை வைப்பு என்று சொன்னால் நட்சத்திரத்திற்கு (மழை பெய்விப்பது போன்ற) நன்மை தீமைகளை செய்ய முடியும் என்று நம்புவதை தான் குறிக்கும்.
அப்படி நம்புவது இணை வைப்பு !

அது போல், சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் சூனியத்தின் மூலம் கெடுதல்கள் உண்டாக்க முடியும் என்று நம்புவதை தான் குறிக்கும்.
அப்படி நம்புவது இணை வைப்பு !

அத்துடன், முஃமினும் பிஸிஹ்ர் என்பதற்கு சூனியத்தை உண்மை என்று நம்புவது என்பது தான் சரியான அர்த்தம். பலரும் இந்த பொருளை கொடுத்துள்ளார்கள்.
இந்த சலஃபி கும்பல் யாருக்காக சொம்பு தூக்குகிறார்களோ அந்த இஸ்மாயிலும் இந்த அர்த்தத்தை கொடுத்து தான் இருக்கிறார் என்கிற வண்டவாளம் சமீபத்தில் ரயிலேறியது !

ஒரு வாதத்திற்கு "உண்மை என்று" என்கிற வார்த்தை இல்லையென்று சொன்னாலும் நாம் கூறும் பொருள் மாறாது.

சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் சூனியத்தை உண்மையென்று நம்புவது ஷிர்க் என்று தான் அர்த்தம் !!

நட்சத்திரத்தை நம்புவது ஷிர்க் என்றால் நட்சத்திரங்களினால் செய்யப்படும் வித்தையை உண்மை என்று நம்புவது ஷிர்க் !

இதே போன்ற வாசகங்ம் அடங்கிய வார்த்தை பிரயோகம் குர் ஆனிலும் உள்ளது

வேதம் எனும் நற்பேறு வழங்கப் பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (4:51)

சிலைகளை அவர்கள் நம்புகின்றனர் என்றால் சிலைகளும் நன்மை, தீமை செய்யும் என்று நம்புகின்றனர் என்று அர்த்தம், அதாவது சிலைகளை உண்மையென நம்புகின்றனர் என்கிற பொருள் இதிலேயே ஒளிந்துள்ளது..

சகோ. அப்பாஸ் அலி இதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறார்.

சிந்திக்கும் திறன் கொண்ட எந்த பாமரனுக்கும் இது விளங்கும் !

பால்குடி உறவும் மடமையும்


தாய் - பிள்ளை உறவு ஏற்பட

தாயின் மார்பில் வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்க வேண்டும்
அதுவும் வயிறார (பசி தீரும் அளவு) குடிக்க வேண்டும்
அது கூட இரண்டு வயது வரை தான் இருக்க வேண்டும்,

என்றெல்லாம் பல நிபந்தனைகளை அல்லாஹ் இட்டுள்ள போது

20 வயதை கடந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் பால் குடித்து மகனாக போகிறேன் என்று சொன்னால் அதை விடவும் ஒரு ஆபாசம், வக்கிரம் இருக்க முடியாது. இப்படியாக எந்த செய்தி இருந்தாலும் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் !

வாய் வைத்து குடிக்கவில்லை, கறந்து தான் குடிப்பார் என்று சொல்லும்படியான எந்த வார்த்தையும் அந்த செய்தியில் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கறந்து குடிப்பதினால் தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, கறந்து குடித்து பிள்ளை ஆகிக் கொள்வார் என்கிற கூற்று இங்கு பொருளற்றதாகிறது.

இது ஒரு புறமிருக்க, இன்று Nipple feeder போன்ற உபகரணங்கள் மூலம் குழந்தைக்கு தாய், பால் ஊட்டுகிறாளே, அப்படியானால் அது தாய் - பிள்ளை இல்லை என்று சொல்வீர்களா ? என்கிற மடமை கேள்வியொன்று தற்போது பரப்பப்படுகிறது.

கறந்து குடித்தால் தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்று நாம் சொல்வதே பிறப்பால் தாய் பிள்ளை உறவை அடையாதவர்களை பற்றி தான்.

பிறப்பால் தாய் பிள்ளை உறவை அடைந்தவர்கள், கறந்து குடித்தாலும் வாய் வைத்து குடித்தாலும் தாய் - பிள்ளை தான்.

அதே சமயம், பிறப்பால் தாய் பிள்ளை உறவை அடையாதவர்களுக்குரிய சட்டமானது, வாய் வைத்து குடித்தால் தாய் - பிள்ளை உறவை அடைவார்கள் (2 வருடம், பசி தீர குடித்தல் ஆகிய விதியையும் சேர்த்து )
கறந்து குடித்தால் அந்த உறவை அடைய மாட்டார்கள் !

இந்த சாதரண வேறுபாடு குறித்த ஞானமில்லாததால் தான் மடமைகள் உருவாகின்றன !

பாரத் ரத்னா


சச்சின் ஒரு சாதனையாளர் என்பதிலோ கிரிக்கெட்டில் உலகில் ஜாம்பவான் என்பதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

தமது திறமையான ஆட்டத்தின் மூலம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார், ரசிக்க வைத்தார்.

இதையெல்லாம் அங்கீகரிக்கும் நாம், அவர் இந்த 24 வருட காலமும் நாட்டிற்கே சேவை செய்தார் என்று புகழப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

கிரிக்கெட் விளையாடுவது மக்களை ரசிக்க வைப்பதற்கும், 
அதை வைத்து பல்வேறு நிறுவனங்களும் கோடிகள் பார்ப்பதற்கும், 
அதன் பிரதிபலனாய் சம்மந்தப்பட்டவர் நீச்சல் குளத்துடன் அரண்மனை கட்டுவதற்கும் தானே தவிர இதில் நாட்டிற்கான சேவை என்று எதுவுமில்லை.

நாட்டு கௌரவத்தை காத்தார், சேவை செய்தார் போன்ற புகழ்மாலைகளெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள் தானே தவிர, intellectuals எனப்படும் நுண்ணறிவாளர்கள் சபையில் இதற்கு அங்கீகாரம் கிட்டாது.

அதே சமயம், சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கலாமா? என்றால் அதில் நமக்கெந்த ஆட்சேபனையும் இல்லை.

சினிமாவில் கூத்தடித்து அந்த பணத்தை கொண்டு அரசியல் நடத்திய எம்ஜிஆருக்கு கொடுக்கலாம் என்றால்,

இசை, நாட்டியம் என மக்களின் மூளையை மழுங்கச் செய்த, நாட்டு முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத ரவிஷங்கருக்கும் லதா மங்கேஷ்கருக்கும் பிஸ்மில்லாஹ் கானுக்கும் கொடுக்கலாம் என்றால்,

அத்துறைகளை விடவும் சற்றே மேம்பட்ட துறையொன்றில் ஜொலித்த சச்சினுக்கு கொடுப்பதில் நமக்கு எதிர்கருத்தேதுமில்லை.

என்ன ஒன்று, இனி முதல்

""பாரத் ரத்னா விருது என்பது நாட்டுக்கு சேவை புரிந்தவர்களுக்காக வழங்கப்படுவது""

என்கிற அடிக்குறிப்பை மாற்றி விடுங்கள் .. என்பது மட்டுமே நமது கோரிக்கை !!


பெற்றோர்களின் கவனத்திற்கு..


சற்று முன்பு இந்த உரையாடல் எனது காதால் கேட்டது..

எனது அறையில் வசிப்பவர் தமது மகளுடன் ஃபோனில் உரையாடுகிறார்.

(மலையாளி தான், நான் தமிழில் மொழியாக்கம் செய்து தந்துள்ளேன்)

சோஷியலில் எவ்வளவு மார்க் ?

70 ஆ? போன டெஸ்டில் எவ்வளவு?

...

65 அப்போ எடுத்தது குறைவுனு தானே டியூஷன் வெச்சது? இப்போ டியூஷன் வெச்சு என்ன பிரயோஜனம்? வெறும் 5 மார்க் கூட எடுக்க தானா?

மறுமுனை : .......

மேத்ஸ் எவ்வளவு?

64

ஊர்ல யார் கேட்டாலும் ரோஷினிக்கு கணக்கு நல்லா வரும் நல்லா வரும்னு சொல்லிட்டிருக்கா உன் அம்மா.

கணக்கு படிக்கணும்னு சொல்லி தானே கம்பியூட்டரெல்லாம் வாங்கினெ? இப்போ என்ன? கம்பியூட்டர எல்லாம் ஆஃப் பண்ணி போடு , எதுக்கு அது?

மறுமுனை : ........

பயாலஜி எவ்வளவு?

78

ப்ளஸ் டூவிலே இப்படி மார்க் எடுத்தா மானேஜ்மென்ட் கோட்டாவில தான் சீட் கெடைக்கும். நான் ஒண்ணும் காசு தர மாட்டேன்.. பாத்துக்கோ..

உன் வாழ்க்கை லட்சியம் தான் என்ன?

ஏதும் ஐடியா இருக்கா இல்லையா?

(லைனில் ஏதோ தடங்கல் ஏற்பட, தொடர்பு துண்டிக்கப்படுகிறது..)

நான் அவரிடம் கேட்டேன், உங்க மகள் எந்த வகுப்பு படிக்கிறா??

எட்டாம் வகுப்பு !, என்றார் அவர் !!

சுப்ஹானல்லாஹ் !!!

இப்போ அவளுக்கு நாளை காலைல என்ன சாப்பாடு அம்மா வெச்சு தருவா, அவளுக்கு பிடிச்ச சிக்கன் கிடைக்குமா அல்லது, பிடிக்காத இட்லி தானா?

இன்னைக்கி க்ளாஸ்ல அவகூட சண்ட போட்ட அவ ஃஃப்ரெண்ட் நாளைக்கு பச்சம் பிடிப்பாளா மாட்டாளா?

இதெல்லாம் தான் சேட்டா அவளோட இப்பொதைய லட்சியம், நீங்க என்ன சார் எட்டாம் கிளாஸ் பிள்ளைய இப்பவே விண்வெளிக்கு அனுப்பறீங்க??

என்று கேட்க, முகம் சுளித்தார் நம்ம சேட்டன்.

பிள்ளையை விட்டு பிரிந்திருப்பதோ வெகு தொலைவில்.. குழந்தைக்கு, தான் பேசுவது தமது தந்தையுடன், என்கிற எண்ணம் தான் வர வேண்டுமே தவிர, பள்ளிக் கூட ஆசிரியருடன் அல்லது அவள் தினமும் பார்க்கும் கண்டிப்பான் டியூஷன் வாத்தியாருடன் பேசும் எண்ணம் வரக்கூடாது.
அதற்கு அவள் பேசாமல் ஸ்கூலிலேயே தங்கிக் கொள்ளலாமே? எதற்கு அம்மா, எதற்கு அப்பா??

படிப்பு, படிப்பு, மார்க், ரேன்க், பரீட்சை, ப்ளஸ் டூ, எதிர்காலம் லொட்டு லொசுக்கு என பிஞ்சுகளின் உள்ளங்களை ஏன் பாரமாக்குகிறீர்கள்??

நாளை விடிந்தால் பள்ளிக்கூடம் செல்ல அவள் மனம் விரும்ப வேண்டும்.
மாலை ஆனால் வீடு தேடி ஓடி வர அவள் ஆசை கொள்ள வேண்டும்.

வாழ்க்கை மிகவும் சுருக்கமானது.. பிள்ளைகளின் உலகம் ஆனந்தமானது, கவலைகளற்றது !
தங்கள் உலகத்தில் அவர்கள் முதலில் வாழட்டும், பிறகு படிக்கலாம் !

பெற்றோர்களே சிந்தியுங்கள் !!