சனி, 17 ஆகஸ்ட், 2013

மக்கத்து காஃபிர்கள் - சுன்னத் (?) ஜமாஅத் : ஒரு ஒப்பீடு


""நாங்கள் என்ன அவ்லியாக்களை அழைத்தா பிரார்த்திக்கிறோம்? அவர்கள் எங்களுக்குச் சிபாரிசு செய்வார்கள் என்று தானே கூறுகிறோம்! நாமெல்லாம் பாவிகள்! அதனால் அல்லாஹ்வை நெருங்க முடியாது. அதனால் இவர்கள் மூலம் சீக்கிரம் நெருங்கி விடலாம்"" என்று பரேலவிகள் வாதிடுகின்றனர். 

இது இப்போது இவர்களாக சொல்கிற வாதமல்ல, ஏற்கனவே மக்கத்து முஷ்ரிக்குகள் வைத்த வாதம் தான் !!

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்).
அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)

எதை அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் தங்கள் அடிப்படை கொள்கையாக வைதுக்கொண்டிருந்தார்களோ, அதை நியாயப்படுத்தும் பொருட்டு என்ன தர்க்கங்களை எல்லாம் அவர்கள் செய்து வந்தார்களோ, அதே கொள்கையை, அதே வாதத்தை அச்சுபிசகாமல் பின்பற்றி வருபவர்கள் தான் இன்றைய பரேலவிகள்.

அதே சமயம், இந்த பரேலவிகளின் மனைவிமார்கள் பிரசவம், இன்னும் இது போன்ற கடுமையான நேரங்களில் "யா முஹய்யித்தீன்'' என்று தான் பிரார்த்திக்கின்றனர். ஆனால் மக்கத்து முஷ்ரிக்குகளோ "அல்லாஹ்வே'' என்று அழைத்துத் தான் பிரார்த்தித்தார்கள்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை. (அல்குர்ஆன் 31:32)

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். (அல்குர்ஆன் 29:65)

இந்த வகையில் இன்றைய பரேலவிகளை விட அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் மேலானவர்களே !!

முகநூல் பதிவுகள் : நல்ல வேளை நபி காலத்தில் இவர்கள் இல்லை



இன்றைக்கும் மக்காவில் தெரியும் பிறை மதினாவில் தெரியும், தெரியாமலும் இருக்கும். மதினாவில் தெரியும் பிறை மக்காவில் தெரியும், தெரியாமலும் இருக்கும். 

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் இது தான் நிலைமை. 
அவர்கள் காலத்தில் இது தான் நிலைமை எனும்போது மதினாவில் இருந்த நபி அவர்கள் மக்காவில் நோன்பு துவங்கிய தினமே தமது நோன்பைத் துவங்குவதற்கு வாய்ப்பிருப்பது போலவே மறுநாள் துவங்கியிருக்கவும் வாய்ப்புள்ளது.

நல்ல வேளை, அன்றைக்கு இந்த கணிப்பு கூட்டம் இல்லை, இருந்திருந்தால் லைலத்துல் கதர் இரவு என்பது ஒரு இரவா இரண்டு இரவா என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு, நாங்கள் தான் நேர்வழியில் இருக்கிறோம் என்று மார்தட்டியிருப்பார்கள் !

எது தீவிரவாதம்?




துப்பாக்கி ஏந்தி பிறரை கொலை செய்வது மட்டும் தீவிரவாதம் என்று எண்ணுகின்றனர். 
எதிலுமே நடுநிலை பேணாமல் தீவிர சிந்தனை, தீவிர கொள்கை தீவிர செயல்பாடுகள் என எண்ணங்களை தீவிரமாக கொள்ளுதலும் கூட தீவிரவாதமே !

அந்த வகையில், ஹிந்து மதம், கிருத்துவம் போன்றவற்றை விடவெல்லாம் அதிக நடுநிலை பேணக்கூடிய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.. செயல்களில் அமைதி காட்டும் மார்க்கமான இஸ்லாம், எண்ணங்களின் வாயிலாகவும் நடுநிலையையே போதிக்கிறது. இஸ்லாம் போதிக்கும் சித்தாந்தமானது, ஒருவனை எண்ணத்திலும் செயலிலும் நடுநிலையையும், சமசீர் சிந்தனையையும் வழங்கும் என்பதே உண்மை.

இறைவனை வணங்குவது என்கிற காரியத்திலும் கூட, நின்று வணங்க முடியவில்லை என்றால் அமர்ந்து வணங்கலாம், அதுவும் இயலாதா? படுத்துக்கொண்டே கூட வணங்கலாம். ரமலானில் நோன்பு வைக்க இயலாதா? வேறொரு நாளில் நோற்றுக்கொள்ளலாம், ஹஜ் செல்லவசதி இல்லையா? செல்ல வேண்டாம் என மார்க்க சட்ட திட்டங்கள் எதை எடுத்துக்கொண்டாலும் நடுநிலை !

இதற்கு முரணாக, இறைவனை வணங்குகிறோம் என்கிற பெயரில் தீமிதித்தல், உடம்புகளில் அடித்துக்கொள்ளுதல், அலகுகளால் நாக்கில் குத்திக்கொள்ளுதல் போன்றவற்றை போதிக்கும் மதங்கள் சிந்தனையால் தீவிரவாததையே போதிக்கிறது !!

நான் செய்யும் நன்மை, தீமையான காரியங்களுக்கு நானே பொறுப்பாளி, பிறர் செய்யும் பாவங்களை நான் சுமக்க தேவையில்லை என்கிறது இஸ்லாம். இதுதான், அறிவுக்கும் உகந்தது, இது தான் நடுநிலையான சிந்தனையும் கூட..

இதற்கு முரணாக, பிறர் செய்யும் பாவங்களை நான் சுமக்க வேண்டும் என்றோ, நான் செய்யும் பாவங்களை இன்னொருவர் சுமப்பார் என்பதோ தீவிரவாத சிந்தனையாகும்.

ஒருவர் ஒரு தவறு செய்தால், அவர் செய்த அளவுக்கே அவரை தண்டிக்க வேண்டும். இது தான் நடுநிலை, இது தான் சரியான சிந்தனை, இதை தான் இஸ்லாமும் போதிக்கிறது.

இதற்கு முரணாக, யார் என்ன தவறு செய்தாலும் அவரை மன்னிக்க தான் வேண்டும், ஒரு கன்னத்தில் அடித்தால் கூட மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று கூறுவதும் தீவிரவாத எண்ணமே !

தனி மனிதனுக்கு உணவில்லையெனில் உலகையே அழிப்போம் என்று முழங்கிய பாரதியார் ஒரு தீவிரவாதி தான்.

குடும்ப பிரச்சனைக்காக மதுரையையே எரித்ததாக சொல்லப்படுகிற கண்ணகி ஒரு தீவிரவாதியே, அதை புராணங்களில் எழுதி வைத்து சிறு பிள்ளைகளுக்கு போதித்து வரும் புராண பக்தர்கள் தீவிரவாத சிந்தனையுடையவர்களே !

எந்த மனிதர் மீதும் எந்த கொள்கையையும் திணிக்க கூடாது என்கிறது இஸ்லாம். இஸ்லாத்தை போதிப்பதில் கூட எவர் மீதும் நிர்பந்தமில்லை, விரும்பியவர் ஏற்கலாம் விரும்பாதவர் விட்டு விடலாம். இது தான் அறிவுக்கு பொருத்தமானதும், நடுநிலை சிந்தனையும் ஆகும்.

இதற்கு மாற்றமாக, பொய் சொல்லி மார்க்கத்தை போதிக்கலாம் என்று கூறியும், தந்திரங்களை அற்புதங்களாக காட்டி மக்களின் மூளையை மழுங்க செய்பவர்களும் தீவிரவாதிகளே !

மதசார்பற்ற கல்விகூடங்களிலும் மிஷனரிகளிலும் கூட மறைமுகமாக தங்கள் சித்தாந்தத்தை மக்களிடம், மாணவர்களிடம் திணிப்பவர்கள் கூட தீவிரவாதத்தை தான் மேற்கொள்கின்றனர்.

முத்தாய்ப்பாக, உலகை படைத்தது ஒரேயொரு கடவுள் தான் என்று நம்புவதே நடுநிலை, அது தான் அறிவுக்கும் உகந்தது, அது தான் இஸ்லாம் போதிப்பது.
அதற்கு மாற்றமாக, கடவுளே இல்லை என்று கூறி மூளையை மழுங்க செய்வதும், காண்பதெல்லாம் கடவுள் என கடவுளுக்குரிய இலக்கணங்களை மீறிய சிந்தனை என்பது தீவிரவாதமே !

இது குறித்து இன்ஷா அல்லாஹ் விரிவான ஆக்கம் ஒன்று வெளியாகும்.

புஹாரியில் எல்லாம் சரியா?


புஹாரியில் எந்த ஹதீசும் சரியானவை தான் என்று வாதிடுபவர்கள் புஹாரி இமாமை இறைவனுக்கு இணையாக, தவறுகளுக்கு அப்பார்ப்பட்டவராகவே கருதுகிறார்கள். புஹாரியில் ஒரு செய்தி பதிவாகி விட்டதா? அதை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு விட வேண்டும் என்பவர்கள், மனிதர்கள் தவறிழைக்க கூடியவர்கள் தான் என்கிற இறை கட்டளையை மதிக்காதவர்கள் ஆவார்கள்.

குர் ஆனுக்கு முரணாக, நபி (ஸல்) அவர்களின் தகுதிக்கு தகாததாக ஒரு செய்தி புஹாரி நூலில் பதிவாகி இருந்தால், புஹாரி தவறிழைப்பாரா? என்று கேள்வியெழுப்புவதற்கு இவர்கள் காட்டும் கரிசனத்தில் கடுகளவு கூட, அல்லாஹ்வின் சிஃபத்தையும் நபியின் அந்தஸ்தையும் சிந்திப்பதற்கு காட்டுவது கிடையாது.

இதன் காரணமாக தான், நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக புஹாரி இமாம் செய்தி ஒன்றை பதிந்த போது, நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? அது குர்ஆனுக்கு அழகானதா? அல்லாஹ்வின் வல்லமைக்கு ஏற்றதா? என்றெல்லாம் சிந்திப்பதை விட்டு விட்டு, புஹாரி இமாம் தவறிழைப்பாரா? என்கிற ஒற்றை கேள்வியை மட்டும் கேட்கிறார்கள்.

இப்படி சிந்தனை மழுங்கிய இவர்களுக்காக புஹாரியில் உள்ள முரண்பட்ட அறிவிப்புகள் சில..

புஹாரி பாகம் 7, ஹதீஸ் 787 இல், நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்ததாக செய்தி உள்ளது. இதை அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி பாகம் 5, ஹதீஸ் 190 இல், நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இதை இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

10 ஆண்டுகள் சரியா 13 ஆண்டுகள் சரியா என்கிற விவாதத்திற்கு நான் செல்லவில்லை. இரண்டில் எது சரி என்றாலும் இன்னொன்று தவறு என்று ஆகி விடுகிறதே, இதற்கு என்ன பதில்?
மனிதன் என்கிற முறையில் ஏற்பட்ட பிழை என்று இதை சொல்வார்களா? அல்லது புஹாரி இமாம் பொய் சொன்னார் என்று சொல்வார்களா?

சூனியத்தை பதிந்து விட்டதால் அவர் ஷிர்க் வைத்து விட்டாரா? என்று குட்டிக்கரணம் அடிப்பவர்கள், இதற்கு குட்டிக்கரணம் அடிக்கவில்லை என்றாலும் கூட, புஹாரி இமாம் பொய் சொல்லி விட்டார் என்று சொல்வார்களா?
அல்லது இதற்கு இவர்கள் சொல்லும் நியாயங்கள் சூனியத்தை பற்றிய ஹதீஸ் குறித்து நாம் சொல்வதோடு பொருந்தி போகுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

இன்னும்,

சுலைமான் நபிக்கு 90 மனைவிமார்கள் இருந்ததாக பாகம் 8 ஹதீஸ் 634 இல் பதிவாகியுள்ளது. இதை அபு ஹுரைரா அறிவிக்கிறார்.

அதே சமயம், சுலைமான் நபிக்கு 9 ஹதீஸ் 561 இல் 60 மனைவிமார்கள் இருந்ததாக அதே அபு ஹுரைரா தான் கூறுகிறார்.

இங்கே இந்த முரண்பாடு ஏன் வந்தது? 90 தான் சரி என்றால் 60 என்று சொன்ன அபு ஹுரைரா பொய் சொல்கிறார் என்று இவர்கள் அறிவிப்பு செய்வார்களா? அல்லது முன்னுக்கு பின் முரணாக பேசக்கூடியவர் என்றாவது சொல்வார்களா?
முரண்பட்ட இரு செய்திகளை பதிவு செய்த புஹாரி இமாம் ஒரு குழப்பவாதி என்று இவர்கள் அறிவிப்பார்களா?

அவசர அவசரமாக இதை மறுப்பதற்கு மட்டும் இந்த ஞான சூனியங்கள் முனையுமானால், மறுப்பு சொல்கிற போது அந்த மறுப்பானது தரப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பொருந்த வேண்டும் என்கிற வகையில், இது போன்ற முரண்பாட்டு பட்டியல் இன்னும் நீளும், என்பதை இவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

தரமற்று போன "தக்லீத்" வாதம்




ஒருவர் ஒன்றை சொன்னால், அது அறிவுக்கு முரணாக இருப்பினும், தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்திற்கு மாற்றமாக இருப்பினும், ஒருவர் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வாரானால் அப்போது அந்த நபரை அவர் தக்லீத் செய்கிறார் என்று பொருளாகும். 

இது தான் தக்லீதுக்கான அளவுகோலே தவிர, ஒருவரது பேச்சுக்களை, அறிவுரைகளை இன்னொருவர் தமது வாழ்நாளில் மறுத்ததே இல்லை என்பதால் அவர் மற்றவரை தக்லீத் செய்கிறார் என்று கூறுவது அறிவுக்கு பொருந்தாத வாதம். 
அப்படிபார்த்தால் அமெரிக்காவின் பில் கிளிண்டனை கூட ஒருவர் தக்லீத் செய்வதாக கூறலாம், கேட்டால் அவரது கொள்கை எதையாவது நீ மறுத்து பேசியிருக்கிறாயா ? என்று திருப்பி கேட்டு விடலாம். 

அயனாவரத்தில் டீக்கடை வைத்திருக்கும் சுப்ரமணியனை பற்றி இவர் எந்த குறையையுமே சொன்னது கிடையாது ஆகவே இவர் சுப்ரமணியனை தக்லீத் செய்கிறார் என்று ஃபத்வா கொடுத்து விடலாம் ! 

என்னே இவர்களது அறிவு !!

ஒவ்வொரு நபரின் சொல் செயலை எடுத்து வைத்துக்கொண்டு, இது தவறு, அது தவறு என்று என்று ஒருவர் தமது வாழ்நாளை ஒவ்வொரு மனிதனை பற்றியும் மறுப்பு சொல்வதற்காகவே ஒதுக்கினால் மட்டுமே, அவர் யாரையும் தக்லீத் செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும். 

அப்படியும் எங்காவது ஒரு சிலரது கருத்துக்களை இவர் மறுத்து பேச தவறி விட்டார் என்றால், அந்த நபரை தக்லீத் செய்கிறார் என்று சொம்பை தூக்கும் இந்த அறிவிலி கூட்டம்.

தாங்கள் கொண்ட கொள்கைக்கு தங்களிடம் உருப்படியான ஆதாரங்கள் இல்லை, அதற்கு பதிலடியாக நாம் வைக்கும் சான்றுகளை தக்க காரணங்களை கூறி மறுப்பதற்கான திராணியும் இல்லை,
மூளையை கழற்றி காயபோட்டு விட்டு மேற்கண்டவாறு சொம்பு தூக்க மட்டும் இவர்கள் தயார் !

முகநூல் பதிவுகள் - அறிந்தோ அறியாமலோ தவ்ஹீத் ஜமாஅத்தே காரணம்



தமிழக அளவில், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்கின்றவர்கள் கூட பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும், அனைத்து உரிமைகளை பெற்றும் வாழ்வதற்கு, இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தவ்ஹீத் ஜமாஅத் தான் காரணம் என்பது ஒரு ஆச்சர்ய விஷயம்.

மேடையேறி திட்டுகிறார்கள், நாம் மேடை போட்டால் அடிக்க வருகிறார்கள், காவல் துறையில் பொய் கேஸ் பதிவு செய்கிறார்கள், ஆனால் இவர்கள் எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் மூலமே பாதுகாப்பு பெறுகிறார்கள் என்பதே வேடிக்கையான உண்மை !!

சில செய்திகளை சேகரிக்கும் போது மனதில் பட்ட கருத்து இது..!

அல்லாஹ் போதுமானவன் !

இரவு தொழுகை வீட்டில் தொழுவதே சிறந்தது


இரவு தொழுகையை பள்ளிவாசலில் தான் தொழ வேண்டும் என்கிற கட்டாயமில்லை, வீட்டிலும் தொழலாம் என்று புரிவதை விட பள்ளிவாசலில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் அதிக சிறப்புக்குரியது என்று புரிவது தான் சரியான புரிதல்.

பலர் இந்த உண்மையை அறியாத காரணத்தால், வீட்டில் பல வேலைகள் இருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு, அவசர அவசரமாக பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள், கேட்டால் நல்லதோர் ரமலானில் பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்க்க கூடாது என்கிறார்கள்.

இதோ இவர்களுக்கான ஹதீஸ்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள்.
இதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள்.
பின்னர் மக்களிடம் வந்து, 'உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன்.
மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி) நூல்: புகாரி 731

கடமையான தொழுகை மட்டுமே பள்ளிவாசலில் தொழப்பட வேண்டியவை. அது தவிர மற்ற தொழுகைகள் வீடுகளில் தொழுவதே அதிக நன்மைகளை பெற்று தரும்.

இருப்பினும் வீட்டில் தொழலாம் என்று நினைத்து, அது பல்வேறு காரணங்களால் தொழப்படாமல் விடுபட்டு போவதை தவிர்க்க பள்ளிவாசலுக்கு செல்கிறோம் என்றால் அது தவறில்லை.

பலருக்கும் பள்ளிவாசல் சென்றால் தான் தஹஜ்ஜத் தொழுகை முறையாக நிறைவேறுகிறது என்பது உண்மை தான் !