வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (L)


அடையாளமா அறிவா?

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 12)
------------------------------------------------------------

ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று நான் கூறியிருந்ததை மறுப்பதற்காக, குர் ஆன் தான் அடையாளம் என்கின்றனர் இந்த காதியானிகள்.

அதை நியாயப்படுதுவதற்க்காக முதல் கட்டமாக அது நபியிடம் சொல்ல சொல்லும் வசனமல்ல, அல்லாஹ்வே பேசுகிற வாசகம் என்கிறீர்கள்.

அது தவறு ! அல்லாஹ்வே பேசுவதாக இருந்தால் தன்னை பின்பற்றுமாறு அல்லாஹ் சொல்ல மாட்டான். நபியை தான் பின்பற்றுமாறு சொல்வான்.

அல்லாஹ்வை பின்பற்ற வேண்டும் என்றால் அல்லாஹ் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்று பொருள் செய்ய வேண்டும் என்கிற வாதமும் தவறு.

அது அல்லாஹ்வின் நடையே அல்ல. குர் ஆன் முழுவதும் நீங்கள் தேடிப்பார்த்தால் அப்படிப்பட்ட நடையில் அல்லாஹ் பேசுவதில்லை.

நீங்கள் இந்த குறிப்பிட்ட வசனத்தை நியாயப்படுதுவதற்க்காக இதை சொல்கிறீர்களே தவிர குர் ஆனின் பொதுவான நடையை குறித்து சிந்திக்கவில்லை.
மேலும், மறுமை நாளை பற்றி இந்த குர் ஆனில் உள்ளது என்று தான் பொருள் செய்ய வேண்டும் எனவும் சொல்கிறீர்கள். அதுவும் தவறு.அவர் அல்லது அது அந்த நாளின் அத்தாட்சி என்பது தான் அந்த வசனத்தின் நேரடி பொருள்.

இதில் அந்த செய்தி உள்ளது என்கிற அர்த்தமும் கொடுக்கலாம் என்றாலும் அந்த இடத்தில் இது பொருந்தாத அர்த்தம் - காரணம், இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று தொடர்ந்து அல்லாஹ் சொல்கிறான்.

இதில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது, இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்பது பொருந்தாத வார்த்தை அமைப்பு. கியாமத் நாளை பற்றியோ வேறு எதை பற்றியோ குர் ஆனில் உள்ளது என்றால் அதில் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. காபிரும் குர் ஆனில் அது உள்ளது என்று நம்பதான் செய்கிறான்.

இந்த செய்தி இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது, யாரும் இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று பேசுவது தான் பொருளற்ற ஒன்று.

நீங்களோ, இதை கவனிக்காமல், ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம், அதில் சந்தேகம் கொள்ளாதீர்கள், என்னை பின்பற்றுங்கள் என்று சொல்வது பொருளற்றது என்று பேசுகிறீர்கள். இது மிகவும் பொருத்தமான ஒன்று தான்.
ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்றால் அவர் மீண்டும் வருவார் என்கிற கருத்து இதில் ஒளிந்துள்ளது. அவர் மீண்டும் வருவார் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்பது பொருத்தமானது தான். இந்த விஷயத்தில் என்னை பின்பற்றுங்கள் என்பதும் பொருத்தமான ஒன்று தான். அதே சமயம், என்னை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொன்னான் என்று சொல்வது தான் பொருத்தமற்றது.
குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது, இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று சொல்வது தான் பொருளற்றது.

மேலும் இதை நியாயப்படுதுவதற்க்காக,

குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது, எனவே இந்த குர் ஆனை சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று புரிய வேண்டுமாம். அப்படி புரிய வேணடுமானால் அப்படி வாசகம் இருக்க வேண்டும்.
வார்த்தை அமைப்பின் படி அவர் அல்லது அது கியாமத் நாளின் அடையாளம், இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று தான் உள்ளது.
மேலும், குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பது குர் ஆனில் சந்தேகம் கொள்ள தடையான ஒன்றல்ல.
குர் ஆனில் அது பற்றி சொல்லப்பட்டுள்ளது, ஆகவே மொத்த குர் ஆனிலும் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்றால், ஏதோ கியாமத் நாளை பற்றி பேசுவது என்பது, குர் ஆனை பற்றி எந்த சந்தேகத்தையும் செய்வதை விட்டும் தடுக்கிறது என்பது போல கருத்தாகிறது , இதன் காரணமாகவும் நீங்கள் சொல்வது பொருளற்றது !

மேலும், இது நேர்வழி என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் அது குர் ஆனை தான் குறிக்கும் என்று ஒரு வாதத்தையும் முன்னர் வைத்திருந்தீர்கள். அதுவும் தவறு தான்.
ஏனெனில், அந்த வசனத்தில் இது நேர்வழி என்று அல்லாஹ் சொல்வது போலவே 43 :64 வசனத்திலும் அல்லாஹ் சொல்கிறான்.

அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி'

இதில் குர் ஆனை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை , அவனை வணங்குங்கள் என்று தான் உள்ளது. அதை சொல்லி விட்டு இது தான் நேர்வழி என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் அவனை வணங்வது நேர்வழி என்று தான் பொருள். ஆகவே நேர்வழி என்று சொன்னால் அங்கே குர் ஆன் தான் வரும் என்று வாதம் வைக்க முடியாது என்பதற்காக சொல்கிறேன்.

இன்னும் சொல்கிறேன் .. 43 :61 வசனம் நபியிடம் சொல்ல சொல்லி அல்லாஹ் சொல்லவில்லை, மாறாக அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான், என்று நீங்கள் சொன்ன வாதத்தையும் மேலே நான் காட்டிய 43 :64 வசனம் மறுக்கிறது.

அது கியாத் நாளின் அடையாளம், என்னை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொன்னான் என்றால், அதை சொல்லி விட்டு அல்லாஹ்வே என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான் என்று இந்த வசனத்தில் அல்லாஹ்வே சொல்வானா?
இதில் பொருளிருக்கிறதா?
இதை யார் தான் சொல்லியிருப்பார் ? நபி தான் சொல்ல முடியும். 43 :61 வசனத்தில் "குல்" என்பது இல்லை என்பதால் அதை நபி சொல்லவில்லை, அல்லாஹ்வே நேரடியாக சொல்வதாக புரிய வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், 43 :64 வசனத்திலும் கூட குல் என்பது இல்லை தான். ஆகவே இதையும் அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான் என்று தான் புரிவீர்களா?
இதன் அடிப்படையில் சிந்தித்தாலும் நீங்கள் வைக்கும் வாதம் தவறு என்று ஆகி விடுகிறது.

ஆக, மேலே நான் எடுத்து வைத்துள்ள வாதங்களை ஒவ்வொன்றாக சிந்தித்தாலேயே, அந்த வசனம் குர் ஆனை சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை என்பதையும், ஈசா நபியை பற்றி சொல்வது தான் பொருத்தமாகவும் பொருளுள்ளதாகவும் இருக்கிறது என்பதையும் யாரும் அறிந்து கொள்வார்கள்.

மேலும், இன்னொரு வாதத்தையும் இவர்கள் முன்வைக்கின்றனர்.

அந்த வசனத்தில் இல்ம் என்கிற வார்த்தை தான் இருக்கிறது. இல்ம் என்றால் அறிவு என்று தான் பொருள், அடையாளம் அல்லது அத்தாட்சி என்று பொருள் செய்ய முடியாது. குர் ஆனில், இல்ம் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்ட்ட‌ இடங்களில் எல்லாம் அறிவு என்று தான் மொழியாக்கம் செய்திருக்கிறோம், அடையாளம் என்று பொருள் செய்யும் எந்த இடத்திலும் இல்ம் என்கிற சொல் இல்லை, அடையாளம் என்பதை குறிக்க அல்லாஹ் குர் ஆன் முழுவதிலும் ஆயத் என்கிற சொல்லை தான் பயன்படுத்துகிறான். எனவே இந்த வசனத்திலும் குர் ஆனில் கியாமத் நாளைப் பற்றிய இல்ம் அதாவது அறிவு இருக்கிறது என்று தான் பொருள் செய்ய வேண்டும்..

என்றொரு வாதத்தை முன்வைக்கின்றனர்.

இதுவும் தவறான வாதமே. மொழியாக்கத்தை மட்டும் வாசித்து வாதம் புரிவதால் தான் இந்த நிலைமையும் ஏற்படுகிறது.

இல்ம் என்று அல்லாஹ் பயன்படுத்துவது அறிவு என்பதற்கு மட்டுமல்ல. அடையாளம் என்பதற்கும் இல்ம் என்கிற குர் ஆனில் பயன்படுத்தட்ட்டு தான் இருக்கிறது.

உங்களில் தியாகம் புரிந்தோரை அல்லாஹ் அடையாளம் காட்டாமலும், பொறுமையாளர்களை அடையாளம் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாம் என்று நினைக்கிறீர்களா? (3:142)

இங்கே அல்லாஹ் அடையாளம் காட்டாமலும்.. என்று சொல்வதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை இல்ம் தான்.

உங்களில் தியாகம் செய்தோரை யும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம். (47:31)

இதிலும் அடையாளம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் பயன்படுத்தட்டிருக்கும் சொல் இல்ம்.

உங்களுக்கு (போரில்) ஒரு காயம் ஏற்பட்டால் அந்தக் கூட்டத்திற்கும் அது போன்ற காயம் ஏற்பட்டிருக்கிறது. காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம். நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அடையாளம் காட்டவும், உங்களில் உயிர் தியாகிகளை ஏற்படுத்தவுமே (இவ்வாறு துன்பத்தைத் தருகிறான்). அநீதி இழைத் தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (3:140)

இங்கேயும் அடையாளம் என்று நாம் மொழியாக்கம் செய்திருக்கும் இடத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் சொல் இல்ம்.

இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நாளில் உங்களுக்கு ஏற்பட்டது, அல்லாஹ்வின் விருப்பப்படியே நிகழ்ந்தது. நம்பிக்கை கொண்டோரை அடையாளம் காட்டவும், நயவஞ்சகர்களை அடையாளம் காட்டவுமே (இது நிகழ்ந்தது.) ' (3:166)

இங்கேயும் அடையாளம் என்று நாம் மொழியாக்கம் செய்திருக்கும் இடத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் சொல் இல்ம்.

நம்பிக்கை கொண்டோரே! 'தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுப வருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (5:94)

இதிலும் அடையாளம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் பயன்படுத்தட்டிருக்கும் சொல் இல்ம்.

எனவே, அடையாளம் என்று நாம் மொழியாக்கம் செய்ய வேண்டுமானால் அங்கே ஆயத் என்கிற சொல் மட்டும் தான் இருக்க வேண்டும், இல்ம் என்கிற சொல் இருக்கக்கூடாது என்கிற வாதம் தவறு.

இல்ம் என்பதற்கு அறிவது, அடையாளப்படுத்துவது என பல அர்த்தங்கள் உண்டு.
எனவே, இதன் காரணமாகவும் குர் ஆன் தான் அடையாளம் என்று வாதம் வைக்க முடியாது.

தவிர, நான் ஏற்கனவே சொன்னது போல், குர் ஆனில் கியாமத் நாளை பற்றிய அறிவு இருக்கிறது என்பது தான் சரியான மொழியாக்கம் என்றால், தொடர்ந்து, இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் சொல்ல மாட்டான்.

ஏனெனில், குர் ஆனில் கியாமத் நாள் பற்றிய செய்தி இருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம் தான். காஃபிர்களும், குர் ஆனில் அப்படி செய்தி இருக்கிறது என்பதை மறுக்கவில்லை.

எனவே, குர் ஆனில் கியாமத் நாளை பற்றி உள்ளது, இதில் சந்தேகம் கொள்ளாதே.. என்று அல்லாஹ் சொல்வதாக சொல்வது அர்த்தமற்றதாக ஆகி விடுகிறது.

அந்த வசனத் தொடரை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

'எங்கள் கடவுள்கள் சிறந்தவர் களா? அல்லது அவரா?' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம்.

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப் படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர் வழி'

ஷைத்தான் உங்களைத் தடுத்து விட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது 'ஞானத்தை உங் களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!' எனக் கூறினார்.

என்று போகிறது அந்த வசன தொடர். இதில் அல்லாஹ் மலக்குகளை பற்றி எதற்கு சொல்கிறான்? ஈசா நபியை நபி என்று நம்பாமல் கடவுளாக ஆக்கியவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்க்குரியவர்கள், அல்லாஹ் ஈஸாவை இஸ்ராயீல் மக்களுக்கு முன்னுதாரணமாக ஆக்கினான். அவர் நபியை தவிர வேறில்லை. அப்படி நம்பாமல் அவரை கடவுளாக ஆக்கிய கூட்டத்தாரை அல்லாஹ் நினைத்தால் அழித்து விட்டு மலக்குகளை கொண்டு வந்திருப்பான் ! அவர் கியாமத் நாளின் அடையாளம். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். இதிலிருந்து ஷைத்தான் உங்களை தடுத்து விட வேண்டாம், ஈசா தெளிவான சான்றுகளை கொண்டு வந்தார் !!!

அடுத்தடுத்த வசனங்களில், ஈசா நபியை கடவுளாக நம்பியவர்கள் மறுமை நாளில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சேர்த்தே அல்லாஹ் சொல்லும் போது, ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்வது பொருந்தி போகிறது.

ஈஸா நபி தான் கியாமத் நாளின் அடையாளம் என்பது எள்ளளவுக்கும் சந்தேகமின்றி நிரூபமணாகிறது.

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கான அடுத்தடுத்த சான்றுகள் தொடரும்.. இன்ஷா அல்லாஹ்

வட்டி வாங்குபவனின் அன்பளிப்பு


அவன் வட்டிக்கு பணம் வாங்குபவன் என்றால் அது அவனது பிரச்சினை. 
அதற்காக அவனிடமிருந்து நோன்பு கஞ்சிக்கு பணம் வாங்கக்கூடாது என்று சொல்வதில் அர்த்தமில்லை.

ஒருவருக்கு இனாமாக வந்த இறைச்சி நபி (சல்) அவர்களிடம் கொடுக்கப்பட்ட போது அதை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தான் தர்மமாக பெறுவது ஹராம் என்றாலும் இந்த பொருள் தமக்கு அன்பளிப்பு தான் என்றும், முதலில் வைத்திருந்தவருக்கு தான் அது தர்மம் என்றும் விளக்கமளிக்கிறார்கள். இது புஹாரியில் பதிவாகியிருக்கும் ஹதீஸ்.

வட்டியே தொழிலாக செய்து வந்து யூதரின் வீட்டில் நபியவர்கள் உணவு உண்டிருக்கிறார்கள்.

ஒருவரிடமிருந்து அன்பளிப்பு பெறுவதற்கு அவர் அதை எப்படி பெற்றார் என்று பார்க்க தேவையில்லை.
நாம் அதை ஹலாலான முறையில் பெறுகிறோமா என்பது மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள் 2:134

இதை மறுப்பதாக இருந்தால் வாழ்க்கையில் இவர்களால் செயல்படவே இயலாது என்று தான் சொல்ல முடியும்.

கடையில் சென்று பொருட்கள் வாங்குவதில் துவங்கி, ஹோட்டலில் சென்று உண்பதிலிருந்து, அரசின் சார்பில் அளிக்கப்படும் பல்வேறு உதவிகளை பெறுவது வரை அனைத்திலுமே வட்டி கலந்து தான் உள்ளது.

ஏன், சகாத், ஃபித்ரா போன்றவற்றை கூட நல்லவர், கெட்டவர் என்று தரம்பிருத்தே வசூல் செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வர வேண்டும்.

இவற்றில் எந்த அர்த்தமும் இல்லை, இஸ்லாம் அப்படி சொல்லவுமில்லை !

அதென்ன ரமலான் சிறப்புத் தொழுகை?


மற்ற நாட்களில் தொழும் இரவுத் தொழுகை வேறு, ரமலானில் தொழப்படும் இரவுத் தொழுகை வேறு என்று பலர் கருதுகின்றனர்.

ரமலான் சிறப்பு தொழுகை என்று இதற்கு பெயர் வேறு சூட்டிக் கொள்கின்றனர்.

அப்படியொரு பிரத்தியேக தொழுகை மார்க்கத்தில் இல்லை.

எல்லா காலங்களிலும் எது இரவுத் தொழுகையோ அது தான் ரமலானிலும்.

மற்ற காலங்களில் செய்வதை விடவும் கணக்கிலடங்கா அளவிற்கு ரமலானில் செய்யப்படும் அமல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்குகிற காரணத்தால் ரமலானில் இரவுத் தொழுகைக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ரமலான் மாதத்தின் இரவையே பகலாக ஆக்கும் அளவிற்கு நபியவர்கள் தொழுகையில் ஈடுபடுவார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களை பார்க்கிறோம்.

ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நபி (சல்) அவர்கள் பதினோரு ரக்காஅத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா அம்மா அறிவிக்கும் ஹதீஸும் கூட, ரமலானுக்கென்று விசேஷ தொழுகை எதையும் நபி (சல்) அவர்கள் தொழவில்லை என்பதை காட்டுகிறது.

ரமலானுக்கென்று எந்த விசேஷ தொழுகையும் இல்லை, அதே சமயம், எல்லா காலங்களிலும் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகை ரமலானில் விசேஷ முக்கியத்துவத்துடன் தொழப்பட வேண்டும். வேறுபாடு இது தான் !

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (K)


கியாமத் நாளின் அடையாளம்

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 11)
------------------------------------------------------------

ஈஸா நபி உடலோடு உயர்த்தப்பட்டார் என்று அல்லாஹ் தெளிவான வாசகங்கள் துணையுடன் சொல்வதை ஏற்கனவே பார்த்தோம்.
உடலோடு உயர்த்தப்பட்ட ஈஸா நபி மரணிப்பதற்கு முன் இவ்வுலகில் மீண்டும் வருவார்கள் என்று ஏராளமான ஹதீஸ்கள் வாயிலாக நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இது குறித்து குர் ஆனில் ஏதும் தகவல்கள் இருக்கின்றனவா என்று பார்க்கையில், இரண்டு இடங்களில் அல்லாஹ், ஈஸா நபியின் மீள்வருகை பற்றி சொல்வதை பார்க்க முடிகிறது.

முதல் வசனம், ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று அல்லாஹ் சொல்கிற 43:61 வசனம்.

இந்த வசனத்தின்படி, கியாமத் நாளுக்கு சமீபமாக, அந்த நாளை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஈஸா நபி இவ்வுலகில் வருவார் என்று பொருளாகிறது.

இந்த வசனத்தில் ஈஸா நபி என்கிற வாசகம் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்தும் இந்த அஹமதியா மதத்தவர்கள், இங்கே சொல்லப்படுவது ஈஸா நபியை அல்ல, குர் ஆனை தான் அல்லாஹ் இங்கே சொல்கிறான், குர் ஆன் தான் அடையாளம் என்பதாக ஒரு வாதத்தை வைப்பர்.

அதற்கு என்ன காரணம்? என்று கேட்டால், அந்த அத்தியாயம் குர் ஆனைப்பற்றி பேசுவதாக தான் துவங்குகிறது, என்கின்றனர்.

ஒரு அத்தியாயம், ஒரு விஷயத்தை பற்றி சொல்லி துவங்குகிறது என்பதால் அந்த அத்தியாயத்தின் 61 ஆம் வசனம் அந்த விஷயத்தை தான் குறிக்கும் என்று புரிவது சரியான புரிதல் அல்ல.

அந்த அத்தியாயம் குர் ஆனை பற்றி சொல்ல துவங்குவது இடையில் உள்ள வசனம் என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்காது, மாறாக, அந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்கள் என்ன விஷயத்தை சொல்லி வந்ததோ அதை தான் இந்த வசனமும் சொல்கிறது என்று முடிவு செய்வது தான் அறிவுபூர்வமானது.
அந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில் ஈசா நபியை பற்றி அல்லாஹ் சொல்லிக்கொண்டே வருகிற தொடர் அது.

மரியமின் மகனை அவர்கள் பரிகாசம் செய்தார்கள், அவர் அல்லாஹ்வின் தூதராவார். அதை அவர்கள் மறுக்கிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுக்கு பதில் மலக்குகளை கொண்டு வந்திருப்பான். ------------ கியாமத் நாளின் அடியாளம். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னையே பின்பற்றுங்கள், இது தான் நேர்வழி.
ஷைத்தான் இது விஷயமாக உங்களை வழி கெடுக்க வேண்டாம்.

இப்படி சொன்னால் கோடிட்ட இடத்தில் குர் ஆன் என்று எப்படி வரும்???

குர் ஆன் என்று இங்கே பொருத்துவது எந்த வகையிலும் தொடர்பற்ற ஒன்றாகும் என்பது, அந்த வசனத்தின் முன்னிலிருந்தே வாசித்தால் புரியும்.

இன்னும் சொல்லப்போனால், இந்த வசனத்தில் கியாமத் நாள் பற்றி அல்லாஹ் பேசி விட்டு அத்துடன் நிறுத்தவில்லை..
தொடர்ந்து, அல்லாஹ்வையே வணங்குங்கள் என்று ஈசா சொன்னார், அது தான் நேர்வழி என்றார். ஈசா நபியை பற்றி முஹம்மது நபி என்ன சொன்னார்களோ அதே போல ஈசா நபியும் சொன்னார்கள்.

மேலும், ஈசா நபியை பற்றியே பேசிக்கொண்டு அடுத்ததாக, கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்லி, கியாமத் நாளை பற்றியும் சொல்லி விட்டு, தொடர்ந்து அவர்களுக்கு (ஈசா நபியை மறுத்தவர்களுக்கு ) கியாமத் நாளின் போது கடும் தண்டனை இருக்கிறது என்று 43 :65 வசனத்தில் சொல்கிறான்.
கியாமத் நாள் திடீரென வரும் என்று அடுத்த வசனத்தில் சொல்கிறான் !!

ஆக, சம்மந்தப்பட்ட வசனத்திற்கு முன்னும் பின்னும் ஈசா நபி பற்றியே பேசி வருகிறது என்பதும், அந்த வசனத்தில் கியாமத் நாளின் அடையாளம் என்றும் அதற்கு பிறகுள்ள வசனங்களிலும் ஈசா நபியை மறுத்த கூட்டத்தார் கியாமத் நாளில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருப்பதும், ஈசா நபி தான் கியாமத் நாளின் அடையாளம் என்பதை தெளிவாக்குகிறது !

ஈஸா நபி மறுமை நாளின் அத்தாட்சியாவார். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். என்று சொல்லி விட்டு எனவே என்னை பினபற்றுங்கள் என்று யாரும் சொல்வார்களா ?

என்று சிலர் எதிர் கேள்வியெழுப்பலாம்.

அப்படியும் சொல்லலாம். ஈசா நபி அந்த நாளின் அடையாளம், இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
இந்த விஷயத்தில் நான் சொல்வதையே பின்பற்றுங்கள் - இது தான் அதன் அர்த்தம்.
என்னை பின்பற்றுங்கள் என்று சொன்னால், அதை சொல்வதற்கு முன் எதை பற்றி அந்த மனிதர் சொன்னாரோ அதில் என்னை பின்பற்றுங்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இது சாதாரண மொழியறிவு.

அவன் தான் திருடன், இதில் சந்தேகமில்லை. என்னை பின்பற்று.

இப்படி சொன்னால் என்ன பொருள்? அவன் தான் திருடன் என்று நான் சொல்கிற இந்த விஷயத்தில் என்னை பின்பற்று என்று தான் பொருள்.
இப்படி சொல்வதில் எந்த பொருள் சேதமும் இல்லை.

சஹாபாக்களை நாம் பின்பற்ற மாட்டோம் என்றாலும், அவர்களை பின்பற்றுவோருக்காக கீழ்காணும் ஆதாரத்தையும் தருகிறோம்.

ஈஸா நபி இறக்கவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அவர் இந்த வசனத்தை தான் மேற்கோள் காட்டினார்.

இந்த செய்தி அவரது தஃப்சீர் நூலான இப்னு சரி பாகம் 4 , பக்கம் 14 இல் இது பதிவாகியுள்ளது. இது கூடுதல் தகவலுக்காக..

சரி, இந்த வசனம் அல்லாஹ்வே நேரடியாக சொல்கிற வசனம் தான், நபியிடம் சொல்ல சொல்லும் வசனமல்ல என்றொரு வாதம் வைக்கப்படலாம்.

ஆனால், அதுவும் தவறு.

அந்த வசனத்தில், என்னை பின்பற்று என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வை யாரும் பின்பற்ற முடியாது. அல்லாஹ்வை நம்ப தான் முடியும். அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அல்லாஹ்வின் தூதரையும் தான் பின்பற்ற முடியும்.

ஆகவே, இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை பின்பற்றுவதாக சொல்லவில்லை, என்னை பின்பற்று - என்று நபியே நீ சொல் என்பது தான் அந்த வசனத்தின் அர்த்தம். நபியை தான் பின்பற்ற முடியும். !
குல் என்று சொல்லாமல் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் பேசுகிறான். ஆனால் அவைகளில் பல இடங்களில் அல்லாஹ் அதை சொல்லியிருக்க முடியாது, நபியிடம் சொல்ல சொல்லியிருப்பது தான் அங்கே பொருந்தும் என்று முடிவு செய்கிறோம்.
நான் அல்லாஹ்வை வணங்குகிறேன் என்று கூட வசனங்கள் உண்டு , அதில் குல் என்று அல்லாஹ் சொல்லவில்லை என்றாலும் அங்கே நபியிடம் சொல்ல சொல்வதாக தான் பொருளாகும்.

அந்த வசனத்தில் என்னை பின்பற்று என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் இங்கே அல்லாஹ்வே நேரடியாக சொல்வதாக புரியாமல் நபியை சொல்ல சொல்கிறான் என்று தான் புரிய வேண்டும். நபி, தன்னை பின்பற்றுங்கள் என்று சொல்கிறார்கள். அவர் கியாமத் நாளின் அடையாளம் என்று சொன்னது மட்டும் நபியின் வார்த்தை அல்ல. அவர் மனிதர் தான், அவர் தூதர் தான், அவர் இன்னும் மரணிக்கவில்லை போன்ற எல்லா விஷயங்களிலும் நபியையே பின்பற்ற வேண்டும் என்பது அந்த வசனத்தின் கருத்து.

ஒரு வாதத்திற்கு, இந்த வசனத்தில் அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான் என்று வைத்துக்கொண்டால் கூட அதனால் உங்கள் கருத்து சரி என்றோ எனது கருத்து தவறு என்றோ ஆகி விடாது.

வாதம் என்ன என்றால், அந்த வசனத்திற்கு முன்பு பல வசனங்களாக ஈசா நபியை பற்றியும் அவரை அந்த மக்கள் புறக்கணித்தது பற்றியும் பேசி விட்டு, நான் நாடினால் இந்த கூட்டத்தாருக்கு மாற்றமாக மலக்குகளை கொண்டு வந்திருப்பேன் என்று சொல்லி விட்டு அடுத்து சொல்வதாக இருந்தால் அது கியாமத் நாளின் அடையாளம் என்பது பொருந்தாது, அவர் கியாமத் நாளின் அடையாளம் என்பது தான் பொருந்தும்.

இதை உறுதி செய்யும் விதமாக, இதற்கு பிறகு வரக்கூடிய வசனங்களிலும் கூட ஈசா நபியை புறக்கணித்த மக்கள் கியாமத் நாளுக்கு அஞ்ச வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிரான தீர்ப்பு மறுமையில் உண்டு எனவும் அல்லாஹ் சொல்கிறான்.

அடுத்து, அந்த வசனங்களின் இடையில் மலக்குமார்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்.
இதன் மூலம் குர் ஆன் தான் மறுமை நாளின் அடையாளம் என்று தான் அந்த வசனம் சொல்கிறது என்று புரிவதாகவும் சிலர் வாதம் வைக்கக்கூடும்.

மலக்குமார்களை பற்றி பேசுவதே இது ஈசா நபியை தான் சொல்கிறது என்பதற்கான ஆதாரம் தான் என்கிறேன் நான் ! எது எனக்கு ஆதாரமோ, அதையே எனக்கு எதிராக எழுப்புவது தான் அறியாமை !

அந்த வசனம் எதை சொல்கிறது என்பதற்கு ஆழமான ஆராய்ச்சி ஒன்றும் அவசியமில்லை, மூன்று வசனங்கள் முன்பிலிருந்து தொடராக வாசித்தாலேயே புரிந்து விடும்.

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

'எங்கள் கடவுள்கள் சிறந்தவர் களா? அல்லது அவரா?' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம்.

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப் படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர் வழி'

ஷைத்தான் உங்களைத் தடுத்து விட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது 'ஞானத்தை உங் களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!' எனக் கூறினார்.

என்று போகிறது அந்த வசன தொடர்.

இதில் அல்லாஹ் மலக்குகளை பற்றி எதற்கு சொல்கிறான்? ஈசா நபியை நபி என்று நம்பாமல் கடவுளாக ஆக்கியவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்க்குரியவர்கள், அல்லாஹ் ஈஸாவை இஸ்ராயீல் மக்களுக்கு முன்னுதாரணமாக ஆக்கினான். அவர் நபியை தவிர வேறில்லை. அப்படி நம்பாமல் அவரை கடவுளாக ஆக்கிய கூட்டத்தாரை அல்லாஹ் நினைத்தால் அழித்து விட்டு மலக்குகளை கொண்டு வந்திருப்பான் ! அவர் கியாமத் நாளின் அடையாளம். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். இதிலிருந்து ஷைத்தான் உங்களை தடுத்து விட வேண்டாம், ஈசா தெளிவான சான்றுகளை கொண்டு வந்தார் !!!

வசனங்களை நபி (ஸல்) அவர்கள் எப்படி வரிசைப்படுத்தி நமக்கு தந்தார்களோ அதே வரிசையிலேயே நான் மேலே விளக்கியுள்ளேன். இதை படிக்கும் போது இடையில் குர் ஆன் கியாமத் நாள் என்று சொல்வது தான் பொருத்தமற்றது.

அடுத்தடுத்த வசனங்களில், ஈசா நபியை கடவுளாக நம்பியவர்கள் மறுமை நாளில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சேர்த்தே அல்லாஹ் சொல்லும் போது, ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்வது பொருந்தி போகிறது.

இவர்களிடம் மிஞ்சியிருப்பது இரண்டு வாதங்கள் தான்.

அந்த வசனத்தில், என்னை பின்பற்றுங்கள் இது தான் நேர்வழி.. என்று சொல்லப்பட்ட்டுள்ளதே, குர் ஆன் என்று அங்கே பொருள் செய்தால் தானே நேர்வழி என்பதும் பொருந்தும்? அல்லாமல், ஈஸா நபியையா நேர்வழி என்று சொல்ல முடியும்?
என்பது ஒரு வாதம்.

அடுத்து, அந்த வசனத்தில், கியாமத் நாளின் அடையாளங்களை கொண்டுள்ளது என்று தான் அர்த்தம் வைக்க வேண்டும், அல்லாமல், கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று சொல்லக்கூடாது என்பது இவர்களது இன்னொரு வாதம்.

அதாவது, அத்தாட்சி என்று அந்த வசனத்தில் இல்லை, இல்ம், அதாவது அறிவு என்று தான் அந்த வசனம் சொல்கிறது. எனவே குர் ஆனில் கியாமத் நாளுக்கான அறிவு (இல்ம்) இருக்கிறது) என்று மொழியாக்கம் செய்வது தான் உகந்தது.. என்பது இவர்கள் எழுப்பும் மற்றோர் வாதம்.

தங்கள் கொள்கையை நிலைனாட்ட இவர்கள் கைவசம் எஞ்சியிருக்கும் இந்த இரு வாதங்களுக்குரிய பதில்களை அடுத்தடுத்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.

தொடரும்..

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (J)


கைபற்றுதல், உயர்த்துதல்

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 10)
--------------------------------------------------------------

ஈஸா நபியை அல்லாஹ் உடலோடு உயர்த்தினான் என்று நாம் பொருள் செய்கிற போது, "உடல்" என்கிற வார்த்தை எங்கே இருக்கிறது என்று காதியானிகள் கேள்வியெழுப்புகின்றனர்.

இந்த கேள்வியே அறியாமையின் வெளிப்பாடாய் அமைந்த கேள்வி தான்.

தகுதி, அந்தஸ்து, புகழ் போன்ற குணங்களில் உயர்த்தினேன் என்று சொல்லாமல், வெறுமனே உயர்த்தினேன் என்று மட்டும் சொன்னால் உடலோடு உயர்த்தினேன் என்று தான் பொருள். உடல் என்கிற வார்த்தை அங்கே வரவில்லையென்றாலும் அது தான் பொருள்.

ரமேஷை நல்ல வேலையில் உயர்த்தினேன் என்று சொன்னால் ரமேஷுக்கு நல்ல வேலை வாங்கிக் கொடுத்து அவரது தகுதியை உயர்த்தினேன் என்று பொருள்.

அதுவே ரமேஷை உயர்த்தினேன் என்று மட்டும் சொன்னால் ரமேஷையே தூக்கினேன் என்று தான் பொருள்.
ரமேஷையே தூக்கும் போது ரமேஷின் உடல் தான் தூக்கப்படுகிறது, இதை தனியாக சொல்லத் தேவையில்லை.

அப்படியானால், 3;55 வசனத்தில், ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும்.. என்று அல்லாஹ் சொல்கிறானே, இதற்கு என்ன அர்த்தம்? என்று அடுத்த கேள்வியை கேட்கின்றனர்.

இதில் வரக்கூடிய முதவ்ஃபீக்க மற்றும் ராஃபாஇக ஆகிய இரு சொல்லுக்கும் இருவேறு அர்த்தம் தான். ஒரே அர்த்தம் என்று வராது.
நாம் ஏற்கனவே சொன்னது போல், தவஃப்ஃபீக என்பது ஒரு பரந்து விரிந்த சொல். தனது கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதை குறிக்கும் சொல் தான் தவஃபீக அல்லது வஃபாத்.
கொலை செய்ய கூட்டத்தாரிடமிருந்து அல்லாஹ் ஈஸா நபியை இந்த இரு வழிகளிலும் காப்பாற்றினான்.
ஈஸாவை அல்லாஹ் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டான், அவரை உடலுடனும் எடுத்துக் கொண்டான். இது தான் அந்த வாசகத்திற்கும், வார்த்தை பொருள்படியும் நெருக்கமான அர்த்தம்.
வ‌ஃபாத்திற்கு இங்கே மரணம் என்று பொருள் வைப்பது தான் அர்த்தமற்றதாக ஆகும்.
கைபற்றுதலும், உயர்த்துதலும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையப்படுத்தி அல்லாஹ் சொல்வது.
இங்கே மரணம் என்று பொருள் செய்தால், ஈசா நபியை அல்லாஹ் மரணிக்க செய்து, அவரை அந்தஸ்த்தில் உயர்த்துவான் என்று சொல்வதில் எந்த பொருளும் இல்லை.

கைப்பற்றினான் என்றால் அவரது ஆற்றல்களை அல்லாஹ் தமது கட்டுபாட்டில் எடுத்துக்கொண்டான், எப்படி தூங்குகிற ஒருவரது செயல்பாடுகளை அல்லாஹ் தமது கட்டுக்குள் எடுதுக்கொள்கிறானோ அதே போல. சாதாரணமான மரணத்திற்கும் கைப்பற்றுதல் என்கிற வாசகம் வந்தாலும், தூக்கத்தில் செயல்பாடுகள் முடக்கப்படுவதற்கும் அதே கைப்பற்றுதல் என்கிற வாசகம் தான் வருகிறது. அந்த அடிப்படையில் ஈசா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்றால் மரணம் என்கிற ஒரு பொருளை தான் கொடுக்க வேண்டும் என்றில்லை, அவரது செயல்பாடுகளை அல்லாஹ் முடுக்கினான், தமது கையில் எடுத்துக்கொண்டான் (taken control ) என்று புரியலாம்.
அதே சமயம், உயர்த்தினான் என்றால் அவரை உடலுடனேயே உயர்த்துவதை தான் குறிக்கும்.
ஆக இரண்டிற்கும் ஒரே பொருளை நான் செய்யவில்லை.

இத்ரீஸ் நபியை உயர்ந்த தகுதிக்கு உயர்த்தினான் என்பதில் உயர்ந்த தகுதிக்கு உடலோடு உயர்த்தினான் என்று ஏன் புரியக் கூடாது என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.
அந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் வார்த்தை وَرَفَعْنَاهُ مَكَانًا
மகானன் என்பதற்கு இடம், தகுதி, அந்தஸ்து என பல அர்த்தங்கள் அகராதிப்படியே இருக்கின்றன.
இடம் என்கிற ஒரு பொருளை மட்டும் கொள்வதாக இருந்தால் இடத்திற்கு உடலோடு உயர்த்தினான் என்று பொருள் கொள்ள முடியாதா என்று கேட்கலாம். ஆனால், அந்த வசனத்தின் இலக்கணப்படி அப்படி பொருள் கொள்ள முடியாது.

உயர்ந்த இடத்தைக் கொண்டு உயர்த்தினான் என்பது தான் அந்த வசனத்தின் பொருள்.

இடத்தைக் கொண்டு உடலோடு உயர்த்தினான் என்று வராது. அது அந்தஸ்த்தை அல்லது தகுதியை குறிப்பதாக இருந்தால் மட்டும் தான் அதனோடு சேர்த்து உயர்த்துவதாக ஆகும். ஆக இதை வைத்து ஈஸா நபி உடலோடு உயர்த்தியதை மறுக்க முடியாது.
ஈஸா நபியை இடத்திற்கு உயர்த்தியதாக அல்லாஹ் சொல்லவில்லை.

அவரை ஒரு இடத்திற்கு உயர்த்தினான் என்று ஒரு வசனத்திலும், அவரை உயர்த்தினான் என்று இன்னொரு வசனத்திலும் சொல்லப்பட்டால் இரண்டுக்கும் ஒரே பொருளை தான் செய்வேன் என்கிற வாதம் ஏற்கத்தக்க வாதமே அல்ல.
அப்படியானால் அந்த வசனத்திற்கு கூடுதலாக இடம் என்கிற வார்த்தையை அல்லாஹ் அவசியமில்லாமல் சொன்னானா?
இடம் என்கிற சொல் இல்லாமலேயே அதே கருத்தை சொல்ல முடியும் என்றால் இடம் என்று கூடுதலாக அல்லாஹ் சொல்லவேண்டியதில்லை.

அப்படியானால் இடம் என்பதற்கு இங்கே என்ன அர்த்தம்? உயரமான இடம் என்று பொருள் கொண்டால் நாம் சிந்தனையை செலுத்தவில்லை என்று ஆகும். அவரை சிறப்பித்து கூறும் வசனத்தில் ஒரு சிறந்த இடத்திற்கு உயர்த்தினான் என்றால் அந்தஸ்து, தகுதி என்கிற பொருள் தான் கொள்ள முடியும். இடத்தை இடம் என்றே வைத்துக்கொண்டாலும் அதுவும் இதே கருத்தை தான் தரும்.

இடத்திற்கு உயர்த்தினான் என்று சொல்லும் போது, முதலில் இடம் என்றால் நிஜமான ஒரு பகுதியை சொல்கிறதா அல்லது தகுதியை சொல்கிறதா என்பதை தான் சிந்திக்க வேண்டும்.
உயர்த்துதலோடு துணை சொற்கள் ஏதும் இல்லாதவரை, உயர்த்துதல் என்றால் உடலோடு உயர்த்துதல் தான்.
இடம் என்பது உண்மையில் ஒரு பகுதி என்று முடிவானால் பகுதிக்கு உடலோடு உயர்த்தினான் என்று பொருள் வையுங்கள்,
இடம் என்பது தகுதி என்று முடிவானால், உடலோடு இல்லை என்று பொருள் வையுங்கள்.

ஆனால், இடம் என்றோ அந்தஸ்து என்றோ எதையுமே சொல்லவில்லை என்றால் அப்போது அந்தஸ்து என்று ஏன் பொருள் செய்ய வேண்டும் ? என்பது தான் எனது கேள்வி.

இடம் என்பதற்கு தகுதி, அந்தஸ்து, நிலை என்கிற பல அர்த்தங்கள் இருக்கிறது என்பதாலும், இத்ரீஸ் நபி பற்றிய வசனத்தில் இந்த அர்த்தங்கள் தான் அதற்கு பொருந்தும் என்பதாலும் தகுதியில் உயர்த்தினான் என்று கூடுதல் விளக்கத்தை இத்ரீஸ் நபி வசனத்திற்கு தரலாம்.
அப்படி கூடுதல் விளக்கம் தர ஈசா நபி பற்றிய வசனத்தில் என்ன வாசகம் இருக்கிறது என்பது தான் பல வாய்ப்புகளில் நான் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி.
மீண்டும், இத்ரீஸ் நபி பற்றிய வசனத்தில் இடம் என்று வந்து விட்டதல்லவா? என்று வாதம் செய்வது எனது கேள்விக்கு எப்படி பதில் ஆகும்?

இத்ரீஸ் நபி வசனத்தில் இடம் என்கிற கூடுதல் வார்த்தை உள்ளது. அதை நேரடியாக பொருள் செய்யுங்கள், அல்லது அதற்கு அகராதியில் இருக்கும் பல அர்த்தங்களில் ஒன்றை எடுத்து அதற்கு பொருத்துங்கள், பிரச்சனையில்லை.

அந்த வசனத்தில் அப்படி செய்கிறோம் என்பதால் எந்த கூடுதல் வார்த்தையும் இல்லாமல் வருகிற வசனத்திற்கும் அதையே செய்வேன் என்று சொல்வது எந்த அறிவுக்கும் பொருந்தாது.

இந்த இடம், ஈசா நபியின் சிறப்பை பற்றி பேசுகிற வசனமல்ல. அவர் யூதர்களின் சதியில் இருந்து காப்பாற்றப்பட்டதை சொல்லும் வசனமாகும்.
அப்படி சொல்கிற தொடரில், அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்றால் அவர்கள் கொலை சதியில் சிக்க விடாமல் அல்லாஹ் ஈசா நபியை காப்பாற்றியதை தான் இப்படி சொல்ல முடியும்.
அந்த வசனத்தை தொடராக படித்தால் அது புரியும்.

அவர்கள் அவரை கொன்று விட்டதாக நினைக்கிறார்கள்.
ஆனால் அவரை அவர்கள் கொலை செய்யவில்லை.
அவர்கள் தவறான நம்பிக்கையிலேயே இருக்கிறார்கள்.
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை.
மாறாக, அவரை அல்லாஹ் உயர்த்தினான்.

என்று சொன்னால், இங்கு அவர்களது கொலை சதியில் இருந்து எதை செய்தால் அவர் காப்பாற்றப்படுவாரோ அதை செய்ததாக அல்லாஹ் சொல்கிறான் என்று புரிவது தான் பொருத்தமாக உள்ளது.

உயர்த்தினான் என்று வருகிற வசனத்தில், அந்தஸ்து உயர்வு என்று வேறு வேறு இடங்களில் நாம் வைக்கும் மொழியாக்கத்தை போல இங்கு வைப்பதற்கு ஏதுவாக எந்த துணை சொல்லும் இல்லை.
இத்ரீஸ் நபி பற்றி சொல்வது போல, உயர்ந்த ஈடதிற்கு உயர்த்தினான் என்று கூட இல்லை.
வெறுமனே உயர்த்தினான் என்று தான் உள்ளது.

மேலும், 44:19 வசனத்திலும் இதே போன்று அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.

என்று வருகிறதே, இதில் உயர்த்திக் கொள்ளாதீர்கள் என்றால் உடலோடு உயர்த்திக் கொள்ளாதீர்கள் என்று தான் பொருள் செய்வீர்களா?

என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள்.

அரபு மூலத்தை வாசிக்காமல், மொழியாக்கத்தை மட்டும் படிப்பதால் ஏற்படும் விளைவு தான் இது.
அங்கே உயர்த்தினான் என்பதற்கான அரபு மூல சொல்லான "ரஃபாஅ" என்று இல்லை.

ஈஸா நபி பற்றியோ, இத்ரீஸ் நபி பற்றியோ அல்லாஹ் சொல்லும் போது பயன்படுத்தும் வார்த்தை ரஃபா.. இதற்கு உயர்த்துதல் என்கிற பொருள் தான் இருக்கிறது. எனவே தான் அது உடலுடன் கூடிய உயர்த்துதலா அல்லது அந்தஸ்து உயர்வா என்று விவாதிக்கிறோம்.
ஆனால் இவர்கள் சுட்டிக்காட்டும் 44:19 வசனத்தில் ரஃபா என்கிற சொல்லே கிடையாது. ஆகவே இங்கே உடலுடன் உயர்த்துதல் என்கிற பேச்சுகே இடமில்லை.
இது நேரடியாகவே குணாதிசியங்களைக் கொண்டு மேலோங்குதல், பெருமை, ஆணவம் என்கிற பொருள் தானாகவே அமைந்து விட்ட வசனமிது.

மேலும், வெறுமனே உயர்த்தினான் என்று சொல்லப்பட்டால் உயர்த்தினான் என்று நேரடியாக தான் புரிய வேண்டும் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் தொழுகையின் போது தக்பீர் சொல்லி கைகளை உயர்த்துவது பற்றி வரக்கூடிய ஹதீஸ்.

தொழுகையை துவக்கும் போது தக்பீர் சொல்லி கைகளை உயர்த்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிற இடத்தில் இதே "ரபா" என்கிற வார்த்தையை தான் பயன்படுதியுள்ளார்கள். இங்கே கைகளின் அந்தஸ்தை உயர்த்துதல் என்று புரிய வேண்டுமா அல்லது கைகளையே மேலே தூக்க வேண்டும் என்று புரிவோமா? கைகளை மேலே உயர்த்துதல் என்று தான் புரிவோம். இங்கே ரபா என்பதுடன் சேர்த்து அந்தஸ்தில் உயர்த்துதல் என்று இல்லை.
ஆக, வெறுமனே உயர்த்துதல் என்று சொல்லப்பட்டால் அதையே உயர்த்துதல் என்று தான் பொருள், அந்தஸ்து, பதவி போன்றவற்றில் உயர்த்துவதாக சொல்ல நினைத்தால் அப்படி கூடுதல் வாசகங்கள் இடம்பெற வேண்டும்.

ஈசா நபி பற்றிய இந்த வசனத்தில் அத்தகைய கூடுதல் வாசகங்கள் இல்லை. தன்னளவில் என்று சொல்வதில் கூட, ஒரு வாதத்திற்கு உங்கள் கருத்தை ஒப்புக்கொண்டாலும், தன்னை பொறுத்தவரை மேலே உயர்த்தினான் என்று தான் பொருளாகுமே தவிர அந்தஸ்தில் உயர்த்தியதாக பொருள் செய்ய இயலாது என்பதை கடுகளவும் சந்தேகமின்றி மீண்டும் தெளிவாகவே பதிவு செய்கிறேன்.

ஆக, மீண்டும் அழுத்தமாக நான் பதிய நினைக்கும் கருத்தானது,

உயர்த்தினான் என்று பொதுவாக சொன்னால் எதை குறித்து சொல்லப்படுகிறதோ அதையே உயர்த்துவது தான்.
அந்த பொருளின் அந்தஸ்தை உயர்த்துதல் என்று பொருள் கொள்வதாக இருந்தால் அதற்கு துணை சொற்கள் வர வேண்டும். அந்தஸ்தை உயர்த்தினான், தகுதியை உயர்த்தினான், இடத்தை உயர்ர்தினான் என்று ஏதேனும் துணை ஆதாரங்கள் வந்தால் தான் அதனோடு பொருத்த முடியும். வெறுமனே உயர்த்தினான் என்று வந்தால் அதற்கு அந்தஸ்து உயர்வு என்று சொல்வது தான் தவறு.
இன்னும் சொல்லப்போனால், இதை வெறுமனே நாம் யூகிக்கவும் தேவையில்லை.

குர் ஆனிலும் ஹதீஸிலும் கூட, பல இடங்களில் உயர்த்துதல் பற்றிய கருத்து வருகிறது.
ஒரு பொருளையோ ஒரு நபரையோ பற்றி பேசி, அவரது அல்லது அதன் அந்தஸ்தை உயர்த்துவதாக அல்லாஹ் சொல்ல நினைத்தால் அந்தஸ்து, போன்ற பொருள் பட துணை சொற்களை இணைத்தே தான் சொல்கிறான்.

இதற்கு இத்ரீஸ் நபியை பற்றி அல்லாஹ் சொன்னது உதாரணம்.

அதே போன்று, எதை பற்றி அல்லாஹ் சொல்கிறானோ, அதை அப்படியே உயர்த்தி விடுவதை சொல்ல நினைத்தால் எந்த துணை சொற்களும் இன்றி வெறுமனே உயர்த்தினான் என்று மட்டும் சொல்வான்.

இதற்கு, தொழுகையில் கைகளை உயர்த்துவதை பற்றி வரக்கூடிய ஹதீஸ் ஒரு உதாரணம்.

மேலும், வானங்களை அல்லாஹ் தூண்களின்றி உயர்த்தினான் என்று வரக்கூடிய இறை வசனமும் வானத்தை மேலே உயர்த்தியதை தான் சொல்கிறதே தவிர, அல்லாஹ் வானத்தின் தகுதியை உயர்த்தினான் என்று நாம் சொல்வதில்லை.ஏன் சொல்வதில்லை என்றால் அங்கே வெறுமனே உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளது, தகுதி, அந்தஸ்து போன்ற அடை மொழி எதுவும் அங்கே இல்லை.!!

அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்லி விட்டு, அல்லாஹ் வல்லமைமிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்று சொல்வதிலிருந்து, அல்லாஹ் ஈசா நபியின் தகுதியை உயர்த்தினான் என்று சொல்வது பொருந்தாத ஒன்று என்று விளக்கியிருந்தேன். ஏனெனில், தகுதியை உயர்த்துவதற்கு அல்லாஹ்வின் வல்லமை, ஞானம் தேவையில்லை. அது அல்லாஹ் செய்த கிருபை.
ஈசா நபிக்கு அல்லாஹ் கிருபை செய்துள்ளான்.
அடுத்த வீட்டு இப்ராஹிமை நான் நேசிக்கிறேன், ஆகவே நான் வல்லமைமிக்கவன், நான் அறிவாளி என்று சொல்வது பொருந்தாது. காரணம், ஒருவரை நேசிப்பதற்கு வல்லமையோ அறிவோ தேவையில்லை. அதே போன்று, ஈசா நபியின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்வாக கருதுவதற்கு அவனுக்கு வல்லமையோ ஞானமோ தேவையே இல்லை. ஆனால் இங்கு அதை அல்லாஹ் சொல்லியதிலிருந்து இங்கு ஈசா நபியின் அந்தஸ்தை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை, மாறாக அவரையே உயர்த்தி விட்டதை, அந்த கொலையில் இருந்து அதன் மூலம் அவரை காப்பாற்றியதை தான் சொல்கிறான் என்பது தெளிவாக புரிகிறது.

சில வசனங்களை எடுத்துக் காட்டி, இங்கே அல்லாஹ் தனது வல்லமை, ஞானத்தை குறித்து சொல்வது மட்டும் பொருந்துகிறதா? என்று சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி னோம். 244 தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (14:4)

நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.(8:10)
அது போல் பெண்களின் விவாகரத்து உரிமையை பேசும் 2:228 வசனம், திருட்டுக்கு கை வெட்டு என்று கூறும் 5:38 வசனம் ,

இவை அனைத்திலுமே அல்லாஹ்வின் வல்லமையைப் பேசுவது கச்சிதமாக பொருந்துகிறது.
பெண்க்களுக்கான, சட்டம்,தொழுகை சட்டம், குற்றவியல் சட்டம் போன்றவற்றை சொல்லி அல்லாஹ்வின் ஞானத்தையும் வல்லமையும் சொல்வது என்பது, இது போன்ற சட்டங்கள் இயற்றுவது தான் நன்மை என்பதை ஞானமிக்க அல்லாஹ் அறிவான் என்பது பொருள்.

இதை மீறினால் அல்லாஹ் உங்களை தண்டிக்க வல்லமைபெற்றவன் என்று பொருள்.

இதுவெல்லாம் பொருந்தக்கூடிய இடங்கள் தான். அதனால் தான் அல்லாஹ் வேறு சில வசனங்களில், இந்த வல்லமையும் ஞானமும் எதற்காக அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டுகிறான் என்பதைக் கூட விளக்குகிறான்.

தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின் நீங்கள் தடம் புரண்டால் 'அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!(2:209)

அதாவது, அல்லாஹ்விடமிருந்து வந்த நேர்வழியை விட்டும் நீங்கள் தடம்புரண்டால் அல்லாஹ் உங்களை தண்டிக்ககூடியவன், அவன் ஞானமுடையவன் என்று இப்போது தான் சொல்ல வேண்டும்.

அல்லாஹ்வின் ஆற்றல், வல்லமை எங்கே செயலாக்கமாகிறதோ அங்கே தான் அல்லாஹ் அதை சொல்வான்.

அவரது அந்தஸ்த்தை உயர்த்தினேன் என்பதில் வல்லமை செயலாக்கம் பெறவில்லை. இது தான் எமது வாதம்.

உயர்த்தினான் என்று பொதுவாக சொன்னாலும் உடலுடன் உயர்த்தினான் என்று தான் பொருள், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் எது வரை உடலுடன் உயர்த்தினான்? என்று ஒரு கேள்வி எழும்புகிறது.

அல்லாஹ் அவரை உடலுடன் உயர்த்தினான், எது வரை அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் வருவது வரை - இது அந்த கருத்தை முழுமையாக்குகிறது.
தன்னளவில் என்று அல்லாஹ் சொல்வது, தன்னிடம் என்கிற பொருளை தரும்.

வேறொரு வசனத்தில், அவரை அல்லாஹ் கைப்பற்றுபவனாகவும் , தன்னளவில் அவரை உயர்த்துபவனாகவும் இருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லும் இடத்திலும், தன்னை பொறுத்தவரை என்று பொருள் செய்தால் வார்த்தை அமைப்பே பொருளற்றதாகிறது. ஒவ்வொரு இடத்திலும், தன்னை பொறுத்தவரை அவர் சிறந்தவர் என்ற சொல்லிக்கொண்டே வர மாட்டான். அவரை கைப்பற்றக்கூடியவனாகவும் தன்னை பொறுத்தவரை அந்தஸ்தில் உயர்த்துபவராகவும்... என்கிற சொல்லமைப்பிற்கு பொருளில்லை.

இதை உறுதி செய்யும் விதமாக நான் வேறொரு வசனத்தை தருகிறேன் - 25 :46 வசனத்தில் சூரியனையும் அதன் ஓட்டங்களையும் தன்னளவில் அல்லாஹ் கைப்பற்றி விடுவதாக சொல்கிறான். ஈசா நபி பற்றி வரக்கூடிய வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தும் அதே "இலைஹி " என்கிற வார்த்தையை தான் இங்கும் பயன்படுத்துகிறான் .

ஈசா நபி பற்றிய வசனத்தில் தன்னளவில் என்றால் தன்னை பொறுத்தவரை என்ற பொருள் செய்தது போல இங்கும் தன்னை பொறுத்தவரை என்று தான் பொருள் செய்வீர்களா? அல்லது தன் கட்டுப்பாட்டில் என்று பொருள் செய்வீர்களா?

ஆக, எந்த வகையில் ஆய்வு செய்யும் போதும், ஈஸா நபியை உடலுடன் தான் அல்லாஹ் உயர்த்தினான் என்பது தெளிவாகிறது.

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கான அடுத்த சான்றுகள் இன்ஷா அல்லாஹ் தொடரும்

அம்மா மருந்தகம்


நாட்டில் நடைபெறும் பெரும் பெரும் ஊழல்களில் மருத்துவத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் சொல்லி மாளாதவை.

செத்துப் போய் விட்ட பிணத்தை வைத்துக்கொண்டு உயிருக்கு போராடுவதாய் நாடகமாடி வேதனையின் உச்சத்தில் இருக்கும் அந்த குடும்பத்தாரிடமிருந்து ஈவு இரக்கமின்றி பணம் பறிப்பது ஒரு பக்கமென்றால்,

போலியாக மருந்துகள் தயாரித்து மக்கள் உயிருக்கே உலை வைப்பது இன்னொரு பக்கம்..

முறையாக கற்று தேர்வு பெறாமல் போலி ஆவணங்கள் மூலம் டாக்டர் தொழில் செய்யும் போலிகள் ஒரு பக்கமென்றால்.

பணத்துக்காக, அவசியமேயில்லாமல் அறுவை சிகிட்சை செய்தல், இரத்தம் திருடுதல், கிட்னி திருடுதல் என கொள்ளையர்களின் கூடாரமாக மாறி நிற்கும் மருத்துவமனைகள் மறு பக்கம்..

எந்த துறையில் ஊழலும் முறைகேடுகளும் நடைபெறற்றால் கூட பொறுத்துக்கொள்ளும் மனம், உயிர் காக்கும் மருத்துவத் துறையிலேயே அது நடைபெற்றால் நிச்சயம் பொறுக்காது.

அந்த பாவம் அவர்களை சும்மாவும் விடாது.

மக்களின் அடிப்படை தேவையான மருந்துத் துறையை இன்று அரசே கையில் எடுத்திருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய திட்டம்.

வணிக நோக்கில் செயல்படக்கூடிய வியாபாரமாக இல்லாமல்
நிஜமாகவே இது குறைந்த விலையில் உயிர் காக்கும் திட்டமாக சமூகத்தில் அடையாளம் காணப்படுமேயானால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை !

நடைமுறை சாத்தியமற்ற உலகப்பிறை


மாலை ஆறரை மணிக்கு சவுதியில் தென்படும் பிறை தகவலை மொத்த உலகமும் ஏற்க வேண்டும் என்றால்,

அதே நேரத்தில் இந்தியாவில் அது இரவு 9 மணியாக‌ ஆக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் நடு இரவு 1.30ஆக இருக்கும்.
ரஷியாவில் நடு இரவு 3.30 ஆக இருக்கும்.

உலகில் எங்கு பிறை தோன்றினாலும் அந்த தகவல் ஒட்டு மொத்த உலகையும் கட்டுப்படுத்தும் என்கிற கோட்பாடு தான் சரியென்றால், சவுதியில் உதிக்கும் பிறையை சவுதி மக்கள் மாலை 6.30 மணிக்கே தெரிந்து கொள்வர் ;

இந்தியர்கள் தங்கள் பகுதியில் பிறை தென்படுகிறதா என்று பார்த்து, எங்கும் தென்படவில்லையென்றாலும் கூட, 9 மணி வரை காத்திருந்து சவுதி தகவலை பெற வேண்டும்.

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் தங்கள் பகுதியில் மாலை பிறை தென்படவில்லையென்றாலும், அதனால் மாதம் துவங்கவில்லை என்று முடிவு செய்து தூங்க செல்ல முடியாது, மாறாக இரவு 1.30 மணி வரை தூங்காமல் விழித்திருந்து சவுதி தகவலை பெற வேண்டும்.

ரஷிய மக்களும் அதே போன்று தங்கள் பகுதியில் மாலை பிறை தென்படவில்லையென்றாலும், அதனால் மாதம் துவங்கவில்லை என்று முடிவு செய்து தூங்க செல்ல முடியாது,
மாறாக இரவு 3.30 மணி வரை தூங்காமல் விழித்திருந்து சவுதி தகவலை பெற வேண்டும்.

நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

சவுதி வாழ் மக்களுக்கு மாதம் பிறத்த தகவல் எளிதில் கிடைத்திருக்கிறது, அதே சமயம், நாட்டின் பிற பகுதி மக்களுக்கு, ஒரு நாள் தூக்கத்தை தொலைத்தால் தான் கிடைக்கிறது.

மார்க்க சட்டம் இப்படி நபருக்கு நபர் வேறுபடுமா?

இந்த சிரமம் ஏதோ ஒரு குறிப்பிட்ட வருடம் மட்டும் நடக்கக்கூடியது அல்லவே?

ஒரு பிறை தான் ஒட்டு மொத்த உலகையும் கட்டுப்படுத்தும் என்கிற சித்தாந்தத்தை பின்பற்றும் நாடுகள் அனைத்திலும், எல்லா மாதமும், எல்லா வருடமும் இந்த சிரமம் இருந்து கொண்டே இருக்கும் !

சவுதியில் பிறந்ததால் அவன் செய்த பாக்கியம் என்ன? ரஷியாவில் பிறந்ததால் அவன் செய்த பாவமென்ன?

மார்க்க சட்டம் இப்படித்தான் கேலிக்கூத்தாக இருக்குமா?

என்பதை சிந்திக்கையிலேயே, உலகமெங்கும் ஒரே பிறை தகவல் தான் என்கிற கொள்கையானது, அறிவுக்கும் நடைமுறை வாழ்விற்கும் உகந்த கொள்கையேயல்ல என்பதை எளிதில் விளங்கலாம், குர் ஆன் ஹதீஸ் சான்றுகள் கூட அவசியமில்லை