வியாழன், 18 ஏப்ரல், 2013

நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?என்னை கனவில் கண்டவர் என்னையே காண்கிறார், சைத்தான் என் வடிவில் தோன்ற முடியாது என்ற கருத்துடைய ஹதீஸ் உள்ளது. இதை வைத்து கொண்டு பலர் இது போல் நான் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன் என்று சொல்லி வருகின்றனர். 


திர்மிதியில் வரும் ஹதீஸை ஆதாரமாக கொள்ளும் அதே நேரம், அந்த ஹதீசுக்கு விளக்கமாக வரும் இன்னொரு ஹதீசையும் சிந்திக்க வேண்டும்,

""என்னை யார் கனவில் காண்கிறாரோ, அவர் விழித்த பிறகும் என்னை காண்பார். !""

இதுவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ். 

இந்த ஹதீஸ், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு யாரும் அவர்களை கனவில் காண முடியாது என்பதை தெளிவாக கூறுகிறது. நபி (ஸல்) அவர்களை நேரில் கண்ட சஹாபாக்கள் என்றாலும் நபி உயிருடன் இருந்தவரை தான் அவர்களாலும் நபியை கனவில் கண்டிருக்க முடியும்.


இன்னும் சொல்லப்போனால், ஒருவர் தன் தாயை கனவில் கண்டு விட்டு அதை மறு நாள் தன் தாயிடமோ  வேறு ஒருவரிடமோ தெரியப்படுத்தினால் அதில் அர்த்தம் உள்ளது. தன் தாயின் தோற்றத்தை அவர் அறிவார். அண்ணல் நபி(ஸல்) அவர்களை இன்றைய உலகில் யாரும் கண்டதில்லை எனவே அவர் கண்டது நபி(ஸல்) அவர்கள் என்று அவரது இதயம் சாட்சி சொல்லுமே தவிர அவரது புத்தி அதை மெய் காண முடியாது. 

அதே சமயம் யாரும் இது வரை கனவுகளை பற்றிய உண்மை முடிச்சுகளை துல்லியமாக அவிழ்கவில்லை.  எனவே ஒருவர் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன் என்று சொன்னாலும் அது மறுமையில் தான் வெளிச்சமாகுமே தவிர உலகில்  அதனை உறுதி செய்யவே முடியாது.  கனவு கண்டவர் வேண்டுமானால் அதனை ஒரு பெருமையாக நினைத்து கொள்ளலாம். மற்றபடி அவர் கனவில் வந்தது நபி(ஸல்) அவர்கள் தான் என்றும் தனக்கு விசேச சக்தி உள்ளதாகவும் நினைத்தால் அது மனவியாதி தான். 

விழித்த பிறகும் யார் நபியை நேரில் காண்பாரோ, அவர் தான் நபியை கனவில் கண்டதாக சொன்னால் மட்டும் தான் நாம் நம்பலாம். மற்ற அனைவருமே ஒன்று பொய் சொல்கிறார்கள் அல்லது தவறாக புரிகிறார்கள். இது தான் மார்க்கத்தின் நிலை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக