புதன், 16 ஜனவரி, 2013

ஆய்விற்கு பிறகு மாற்றப்பட்ட சட்டங்கள்
முழுமையான ஆய்விற்கு பிறகு மாற்றப்பட்ட சட்டங்களில் சில ..1. பெண்கள் கப்ர் ஜியாரத் செய்தல்.

கப்ர் ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்று திர்மிதி 294 ஹதீஸை அடிப்படையாக வைத்து பெண்கள் கப்ர் சியாரத் செய்வது கூடாது என்று இது நாள் வரை விளங்கி வைத்திருந்தோம். ஆனால் இந்த ஹதீஸை  அறிவிப்பவர்களில் ஒருவரான அபு சாலிஹ் என்பவர் பலகீனமானவர் என்று அறியப்பட்டுள்ளது.

மேலும் கப்ர் சியாரதிற்கு செல்லும் போது ஓத வேண்டிய துஆவை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்  என்கிற 
முஸ்லிம் 1774 ஹதீசையும், கப்ர் ஜியாரத் செய்வது மரணத்தை நினைவுப்படுத்தும் என்கிற முஸ்லிம் 1777 ஹதீசையும் வைத்து பார்க்கையில் மரணத்தை நினைவுப்படுத்தும் விதமாக பெண்களும் ஆண்களும் கபூர் ஜியாரத் செய்யலாம் என்று விளங்குகிறது.


2. நோன்பு திறக்கும் போது ஓத வேண்டிய துஆ :

தஹபள்ளமவு என்று துவங்கக்கூடிய துஆவை ஓதுமாறு அபூதாவூத் 2010 இல் பதிவாகியுள்ள ஹதீஸ் பலகீனமானது என்று இப்போது அறியப்பட்டுள்ளது. இதில் வரக்கூடிய மர்வான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். ஆகவே இதை ஓதுவது கூடாது.


3.வெள்ளிக்கிழமை சூரதுல் கஹ்ப் ஓதலாமா?


ஹாகிம் 3392 வில் பதிவாகியுள்ள ஹதீஸில் ஜூம்மா நாளில் கஹ்ப் சூராவை ஓதினால் அடுத்த வாரம் முழுவதும் அவருக்கு பிரகாசம் நீடிக்கும் என்று வரக்கூடிய ஹதீஸை நம்பி இதுநாள் வரை இது சுன்னத்தான காரியமாக நம்பி வந்திருந்தோம். அனால், இந்த செய்தி பலகீனமானது என்று தற்போது அறியப்பட்டுள்ளது.
அதோடு, இந்த ஹதீசின் சனது நபி (ஸல்) அவர்கள் வரை செல்லாமல் சஹாபியுடன் முற்றுப்பெற்று விட்டது என்கிற காரணத்தாலும் இதை ஏற்க முடியாது.

கஹப் சூரா சிறப்புக்குரியது என்பதற்கு வேறு பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன என்றாலும் வெளிக்கிழமை அன்று ஓதினால் சிறப்பு என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.4. தொழுகையில் சப்தமாக ஆமீன் கூறுவது கட்டாயமா?

தொழுகையில் ஆமீன் என்பதை கண்டிப்பாக சப்தமாக ஓத வேண்டும் என்பதற்கு இது நாள் வரையில் பைஹகி 2556 ஹதீஸை ஆதாரமாக கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த ஹதீஸை அறிவிப்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகு வந்தவர் என்பதால் இதற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சம்மந்தமில்லை என்பது தற்போது அறியப்படுகிறது. ஆகவே நபி சம்மந்தப்படாத ஒன்றை சுன்னத் என்றோ கட்டாயம் என்று கருதுவது கூடாது.

இமாம் பாத்திஹா சூராவை ஓதி முடித்தால் ஆமீன் சொல்லுங்கள் என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுலளர்கள், இந்த கட்டளையானது சப்தமிட்டு சொல்வதையும் குறிக்கும்  மெதுவாக சொல்வதையும் குறிக்கும் என்பதால் தொழுகையில் ஆமீன் என்பதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதே சரியான முடிவாகும்.


5. நடு விரலில் மோதிரம் :அணிதல் 

நடு விரலிலும் அதற்கு அடுத்த விரலிலும் மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருந்தார்கள் என்கிற கருத்துப்பட முஸ்லிம் 3910 வில் ஒரு ஹதீஸ் இருப்பதை வைத்து நடு விரலில் மோதிரம் அணிய கூடாது என்கிற நிலைபாட்டை முன்னர் எடுத்திருந்தோம்.

ஆனால், ஹதீஸை கவனமாக படிக்கும் போது , நடு விரலா அடுத்த விரலா என்கிற சந்தேகத்தில் தான் அந்த அறிவிப்பாளர் அந்த ஹதீசை அறிவிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

மற்றுமொரு ஹதீஸில் கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் அணிவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று வருகிறது. அனைத்தையும் வைத்து பார்க்கையில் எந்த விரலில் அணிவது கூடாது என்கிற சட்டம் சந்தேகத்திற்கு உள்ளானதாகவே இருக்கிறது. சந்தேகதிற்குரியத்தை நாம் பின்பற்ற முடியாது என்பதால் எந்த விரலிலும் மோதிரம் அணியலாம் என்கிற முடிவுக்கு தான் வர வேண்டியுள்ளது.

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. நாஷித்!

    முழுமையான‌ ஆய்விற்கு பிறகு சரியான கருத்தை ஏற்பதின் மூலம் முந்திய கருத்து தவறாக இருந்தால் மாற்றிக் கொள்வது வரவேற்கத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

    இந்த தொகுப்பின் தலைப்பினை 'ஆய்விற்கு பிறகு மாற்றப்பட்ட சட்டங்கள்' என்பதற்கு பதிலாக 'ஆய்விற்கு பிறகு மாற்றிக்கொண்ட கருத்துக்கள்' என்றோ, 'ஆய்வுக்கு பின்னுள்ள சரியான கருத்துக்கள்' என்றோ அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. ஏனெனில் முழுமைப் பெறாத ஆய்வுகளினால் கருத்துக்களும், புரிதல்களும் மாறுபடலாம். சட்டங்கள் எப்போதும் மாறாது; நம்மால் மாற்ற‌வும் முடியாது. எனவே 'மாற்றப்பட்ட சட்டங்கள்' என்பதைத் தவிர்ப்பது நல்லது.

    ஜஸாகல்லாஹ் ஹைரா.

    பதிலளிநீக்கு