புதன், 5 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 3




05/09/2012

அஸ்ஸலாமு அலைக்கும்..

எதை எளிமையாகவும் சுலபமாகவும் புரிய முடியுமோ அதில் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தி புரிகிறீர்கள். வபாத் என்பதற்கு எனது முந்தைய வாய்ப்பில் நான் என்ன விளக்கத்தை தந்துள்ளேன் என்பதை சரியாக படிக்காமல் பதில் அளித்துள்ளீர்கள் என்பது உங்கள் பதிலை படிக்கும் போது புரிகிறது.
இந்த வபாத் விஷயமாக நான் என்ன சொல்கிறேன், என்ன கேள்வி வைக்கிறேன், அதற்கு எப்படி உங்கள் பதில் பொருத்தமற்று இருக்கிறது என்பதை விளக்குவதற்கு முன்பு, வேறு சில ஆதாரங்களை இங்கு தருவது, இந்த வபாத் விஷயத்தை புரிவதற்கு ஏதுவாக இருக்கும்.

4 :158 வசனத்தில் ஈசா நபி உயர்த்தப்பட்டார்கள் என்று வருகிற இடத்தில, உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்று சொல்வது தவறு, அந்தஸ்து உயர்வு என்று தான் கூற வேண்டும் என்று உங்கள் முதல் வாய்ப்பின் போது சொல்லியிருந்தீர்கள்.

4 :158 வசனத்தில் அல்லாஹ் ஈஸா நபியை உயர்த்தியதாக சொல்கிறான். அந்த வசனத்தை துவக்கம் முதலே தெளிவாக வாசித்தால் இங்கு அந்தஸ்து உயர்வை அது குறிக்கிறதா அல்லது அவரையே உயர்த்துவதை குறிக்குமா என்பது எளிதில் விளங்கும்.

4 :157 வசனத்தை வாசிக்கிற போது அதில் ஈஸா நபியை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் சபிக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டு, தொடர்ச்சியாக அவர்கள் நம்புவது போல ஈஸாவை யாரும் கொலை செய்யவில்லை என்கிறான்.
சிலுவையில் அறையப்படவுமில்லை என்று சொல்கிறான்.
சொல்லி விட்டு, இந்த விஷயத்தில் சந்தேகம் கொள்பவர்கள் அல்லது கருத்து வேறுபாடு கொண்டுள்ளவர்கள் அனைவரும் தவறான வழியிலேயே இருக்கிறார்கள்  என்று சொல்கிறான்.
அத்துடன் நிறுத்தாமல், மீண்டும், ஈஸாவை அவர்கள் கொல்லவில்லை என்று அதே வசனத்தில் சொல்கிறான்.
சொல்லி விட்டு "ஆனால் அல்லாஹ் அவரை உயர்த்தினான்" என்று சொல்கிறான்.
இந்த இடத்தில "ஆனால்" என்பதற்கான அரபிப்பதம் "பல்" -   بَل
அவரை யாரும் கொல்லவில்லை ஆனால் அவரை அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்கிற போது இங்கே அந்தஸ்து உயர்வு எப்படி பொருத்தமாகும்?
அவரை கொன்று விட்டதாக நினைக்கிறார்கள் ஆனால் அவரை யாரும் கொல்லவில்லை என்று சொல்லி விட்டு , கொல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ததாக தான் அல்லாஹ் அடுத்த வசனத்தில் சொல்கிறான்.
அதாவது அவர்கள் அவரை கொல்ல நினைத்தனர் ஆனால் அல்லாஹ் அவரை உயர்த்திக்கொண்டான், அவர்கள் நிச்சயமாக அவரை கொல்லவில்லை !!!

இது தான் அந்த வசனத்தின் கருத்துப்படியும் மிகவும் நெருக்கமான நேரடி பொருளாக உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக மூன்று காரணங்களை நான் இங்கு தருகிறேன்.

முதல் காரணம், அந்த வசனத்தின் வாசகமும் அவரையே உயர்த்துவதாக பொருள் கொள்ளும்படி தான் அமைந்துள்ளது. அந்தஸ்தை உயர்த்தியதாக சொல்ல வேண்டுமானால் அந்தஸ்து, பதவி, தகுதி போன்ற வாசகங்கள் அங்கே வர வேண்டும்.

அப்படி ஏதேனும் வாசகங்களை சொல்லி உயர்த்தினேன் என்று சொன்னால் அந்தஸ்து உயர்வு எனலாம்.
இதற்கு உதாரணமாக 19 :57 வசனத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் இத்ரீஸ் நபியை பற்றி அல்லாஹ் இதே போன்ற வாசகத்தை சொல்கிறான், அவரை உயர்த்தினேன், என்று. 
ஆனால், அங்கே அந்தஸ்து உயர்வு தான் என்று நாம் மொழியாக்கம் செய்கிறோம் - காரணம், அந்தஸ்து, தகுதி என்கிற பொருள் பட வரபாநா மகானன் என்று அல்லாஹ் சொல்லி விட்டான்.
இதன் நேரடி பொருளே உயர்ந்த இடத்திற்கு உயர்த்துதல் என்பது தான்.

இப்படி ஈஸா நபி சம்மந்தமாக வரும் வசனத்தில் உள்ளதா என்று பார்க்கிற போது இல்லை !!!
அந்த வசனத்தில் அல்லாஹ் உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளது. ரபாஹு... என்று மட்டும் தான் உள்ளது.. இடத்திற்கு, அந்தஸ்திற்கு, பதவிக்கு என்கிற துணை எழுத்துக்கள் இந்த வசனத்தில் இல்லை. ஆகவே இத்ரீஸ் நபியை அல்லாஹ் அந்தஸ்தில் உயர்த்தியது போல ஈச நபியை அந்தஸ்தில் உயர்த்தியதாக இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லவில்லை, இரண்டு வசனத்திற்கும் வார்த்தை பயன்பாட்டில் வேறுபாடு இருக்கும் போது இரண்டிற்கும் ஒரே பொருளை தர முடியாது.

இரண்டாவது காரணம், அந்த வசனத்தில் தன்னளவில் அல்லாஹ் உயர்த்தியதாக சொல்கிறான்.  தன்னளவில் உயர்த்துவது அந்தஸ்து உயர்வு என்று சொல்ல முடியாது. அப்படி பொருள் வைத்தால் அல்லாஹ்வின் அந்தஸ்து என்னவோ அந்த அளவிற்கு ஈஸா நபியையும் உயர்த்தினான் என்கிற இணை வைப்பு கருத்து தான் கிடைக்கும். ஆகவே அந்த வகையிலும் இது பொருந்தாது.

மூன்றாவதாக, அந்த வசனத்திற்கு அடுத்தப்படியாக, அல்லாஹ் வல்லமைமிக்கவன்  , மற்றும் ஞானமுடையவன், என்று சொல்கிறான்.

துவக்கம் முதல் முழுவதுமாக படிப்பதாக இருந்தால்..

அவர்கள் ஈஸா நபியை கொன்று விட்டதாக நினைக்கின்றனர்.
அது தவறு, உண்மையில் அவர்கள் அவரை கொல்லவில்லை.
சிலுவையில் அறையவுமில்லை.
அவ்வாறு அவர்கள் தவறாக நம்புகின்றனர். அவர்கள் செய்வது வெறும் யூகம் தான்.
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை.
ஆனால் அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான்.
அல்லாஹ் வல்லமைமிக்கவன்  , மற்றும் ஞானமுடையவன்

இந்த இடத்தில ஈஸா நபியின் அந்தஸ்தை தான் அல்லாஹ் உயர்த்தினான் என்று இருந்தால் அல்லாஹ், தான் வல்லைமைமிக்கவன் என்று தொடர்ந்து சொல்ல தேவையே இல்லை.
ஞானமுடையவன் என்று இந்த இடத்தில சொல்ல வேண்டியதும் இல்லை.

காரணம், ஒருவரது அந்தஸ்தை உயர்த்துவதற்கு அல்லாஹ்வுக்கு ஞானமும் வல்லமையும் தேவையில்லை. அது அறிவுக்கு பொருந்தவும் செய்யாது.

எப்போது அல்லாஹ்வின் வல்லமை பற்றி பேச வேண்டும்?? நடக்க முடியாத ஒரு சம்பவம், நமது கற்பனைக்கே எட்டாத ஒரு சம்பவம் ஒன்று நிகழும் போது அதை நிகழ்த்தியது அனைத்தையும் நடத்தக்கூடிய வல்லமை மிக்க அல்லாஹ் தான் என்று சொல்வது தான் பொருந்தும்.
ஒரு மனிதரை கொலை செய்ய அழைத்து செல்கிறார்கள், இறுதி நிமிடம் வரை சென்று விடுகிறது, கடைசியாக யாருடைய கற்பனைக்கும்  எட்டாத வகையில், யாருமே அறியாத வகையில் அந்த மனிதர் உயர்த்தப்பட்டார் என்பது வல்லமை மிக்க ஒருவனால் மட்டுமே சாத்தியம்.
அறிவில் சிறந்த ஒருவனால் மட்டுமே இது சாத்தியம் !
அப்படிப்பட்ட வல்லமையும் ஞானமும் மிக்கவன் தான் அல்லாஹ் என்று சொல்வது பொருந்துகிறது.

அல்லாமல்,  அவரை நாம் கண்ணியப்படுத்தினோம், அவரது அந்தஸ்தை நாம் உயர்த்தினோம், அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்று சொல்வதில் எந்த அறிவும் இல்லை !

ஆக, உயர்த்தப்பட்டார் என்பது உடலுடன் தான் என்பது எள்ளளவும் சந்தேகமின்றி இங்கு புரிகிறது.


அடுத்து, ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கு இன்னொரு ஆதாரமாக, 5 :75 வசனம் உள்ளது.
அதில் ஈஸா நபியை கடவுளாக நம்புகிற மக்களுக்கு அல்லாஹ் மறுப்பு சொல்கிற போது அவருக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று சொல்கிறான்.

ஒரு மனிதனை கடவுள் என்று ஒரு கூட்டம் நம்புகிற போது, அதற்கு மறுப்பு சொல்வதாக இருந்தால் எப்படி சொல்ல வேண்டும்? அவர் இறந்து விட்டார், இறந்து விட்டவர் எப்படி கடவுளாக முடியும் என்று கேட்க வேண்டும்.
ஆனால் இங்கு அல்லாஹ் அப்படி சொல்லாமல் அவருக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டனர் என்கிறான்.
இதன் பொருள், அவர் இறக்கவில்லை என்பது தான்.

அவரே இறந்து போயிருந்தால் அதையே அல்லாஹ் இங்கு சொல்லியிருக்கலாம், ஆனால் அதை அல்லாஹ் சொல்லாததிலிருந்து அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

ஈஸா நபி உண்மையில் மரணித்திருந்தால் அதை சொல்ல வேண்டிய முக்கியமான இடம் இது தான். இந்த இடத்திலேயே அல்லாஹ் அதை சொல்லாமல் அவருக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொன்னதிலிருந்து என்ன புரிகிறது என்றால் 
  • அவருக்கு முன் வந்த நபிமார்களை போல இவரும் ஒரு நபி தான். 
  • அவருக்கு முன் வந்த நபிமார்கள் எப்படி சாதாரண மனிதர்களோ அதே போல இவரும் ஒரு மனிதர் தான், 
  • அவருக்கு முன் வந்த அந்த மனிதர்கள் எப்படி இறந்து விட்டார்களோ அதே போல இவரும் ஒரு நாள் இறந்து போகக்கூடியவர் தான் என்று அல்லாஹ் சொல்கிறான்.!!
மிக தெளிவாக, அவர் இன்னும் மரணிக்கவில்லை , ஆனால் இனி மரணிப்பார் என்று சொல்கிற வசனம் இது !!


இதற்கு என்ன மறுப்பு சொல்வீர்கள் என்பதெல்லாம் நான் ஏற்கனவே அறிந்தே உள்ளதால் அவற்றை நீங்கள் தரும் போது இதை குறித்து வேறு சில உதாரணங்களுடன் கூடுதலாக விளக்கலாம். 

ஆக மேலே உள்ள இரண்டு ஆதாரங்களையும், ஹதீஸ்களில் ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்பதையும் அடிப்படையாக வைத்து இப்போது வபாத் குறித்த செய்திகளை அலசுவோம்.

மரணம் - வபாத் வேறுபாடுகள் 

ஹதீஸ்களின் மூலம் அல்லாஹ் சொல்வது என்ன? ஈஸா நபி மீண்டும் வருவார்கள் ! இதை வைத்து நாம் இரண்டு நிலை எடுக்கலாம்.

  • ஒன்று - ஈஸா நபி ஏற்கனவே இறந்து விட்டார்கள் ஆனால் அல்லாஹ்வின் ஆற்றலால் மீண்டும் வருவார்கள்.
இப்படியும் புரியலாம்.
  • அல்லது, ஈஸா நபி இறக்கவேயில்லை, மீண்டும் இந்த உலகிற்கு வருவார்கள்.
இப்படியும் புரியலாம்.

இந்த இரண்டில், இயற்கை நியதிப்படி எது பொருத்தமானது?? மீண்டும் ஒருவர் உலகிற்கு வருவார் என்றால் அவர் இறக்காமல் இருந்தால் தான் வர இயலும். இது இயற்க்கை நியதி. இதற்கு மாற்றமாக, அவர் இறந்து விட்டார், அதன் பிறகு வருவார் என்று அல்லாஹ்வோ ரசூலோ சொல்லியிருந்தால் அது தான் விதிவிலக்கே தவிர, பொதுவான நியதியின் படி இறந்து போனவரால் மீண்டும் வர முடியாது!
ஆக, ஹதீஸில் ஈஸா நபி மீண்டும் வருவார் என்று சொன்னால் அல்லாஹ் படைத்துள்ள இயற்கை சட்டப்படி அவர் இதுவரை இறந்திருக்க கூடாது.
சரி, இது ஒரு அடிப்படைக்காக சொல்லப்பட்டது, இதில் சிந்திப்பவர்களுக்கு சான்றும் உள்ளது, அதற்குள் நாம் செல்ல வேண்டாம்.

அடுத்து என்ன? ஹதீஸில் ஈஸா நபி மீண்டும் வருவதாக சொலல்ப்பட்டுள்ளது. இப்போது, ஈஸா நபி முன்னர் இறந்து விட்டார்களா? அல்லது உயிருடன் தான் இருக்கிறார்களா? என்பதை நாம் அறிய வேண்டும்.

இதை அறிவதற்காக குர் ஆனையும் ஹதீசையும் நாம் புரட்டிப்பார்த்தால், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று சொல்கிற எந்த நேரடி ஆதாரமும் இல்லை.
ஆனால் மரணித்து விட்டார்கள் என்று சொல்கிற நீங்கள், இரண்டே இரண்டு ஆதாரத்தை முன் வைக்கிறீர்கள்.

ஒரு ஆதாரம், முஹம்மது நபிக்கு முன்னர் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்.

இதற்கு எனது முந்தைய வாய்ப்பின் போதே பதில் சொல்லி விட்டேன். இந்த வசனத்தின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று புரிய முடியாது,ஹதீஸில் அவர் மீண்டும் வருவார் என்று சொல்லப்பட்டு விட்டது, குர் ஆனுக்கு ஹதீஸில் விதிவிலக்கு உள்ளது, தாமாக செத்தவைகளை உண்ணலாம் என்று ஹதீஸில் விதிவிலக்கு இருப்பதை போல.
மேலும், முஹம்மது நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்வது போலவே, ஈஸா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் எனவும் அல்லாஹ் சொல்லி விட்டான்.

ஆக இந்த வசனம், அந்த வசனத்திற்கு விளக்கம். அந்த வசனத்தில் ஈஸா நபி விதிவிலக்கு என்று சொல்லப்படவில்லை, ஆனால் இந்த வசனம் அதை சொல்லி விடுகிறது ! ஆகவே உங்கள் முதல் சான்று தவறான சான்றாகி விட்டது.

அடுத்து நீங்கள் வைக்கிற ஆதாரம், அல்லாஹ் அவரை கைப்பற்றினான் என்று வரக்கூடிய இறை வசனம்.
இதை வைத்து நீங்கள் வைக்கும் வாதம் என்ன என்றால், ஒரு நபரை கைப்பற்றினேன் என்று அல்லாஹ் சொன்னால் அது மரணத்தை தான் குறிக்கும் என்கிறீர்கள்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். 

கைப்பற்றுதல் அதாவது வபாத் என்கிற சொல் பொதுவான, ஒரு விரிந்த அர்த்தத்தை கொண்ட ஒரு சொல். அந்த வார்த்தையை தனியாக எடுத்து வைத்து பார்த்தால் அதற்கு மரணம் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருள் கொள்ள இடமே கிடையாது.
வபாத் என்றால் கைப்பற்றுதல் - ஆங்கிலத்தில் capture , அல்லது sieze   !!

எப்போது இதற்கு மரணம் என்கிற பொருள் கொள்ளப்படும்? என்றால் 

உங்கள் நிலைப்பாடு              ----->   உயிரோடு தொடர்புப்படுத்தி இந்த வபாத் என்கிற வார்த்தை வர வேண்டும்.

ஒரு உயிரை அல்லா கைப்பற்றுகிறான் என்பதற்கு முதல் பொருளாக மரணம் என்பதை தான் கொடுக்க முடியும் மற்றவை அதற்கான கூடுதல் விளக்கம் 


ஆனால் எனது நிலைப்பாடு  ---->     உயிரோடு தொடர்புப்படுத்தி வர வேண்டும் என்பது மட்டுமல்ல, அது அந்த இடத்திற்கு பொருந்துகிற கருத்தை தரவும் செய்ய வேண்டும்.

இரண்டில் எந்த நிலைப்பாடு சரி? 

என்று சிந்திக்கிற போது எனது நிலைப்பாடு தான் சரி என்பதை உங்கள் வாயேலேயே சொல்லி விட்டீர்கள். 


உயிரோடு தொடர்புப்படுத்தி வபாத் என்று வந்து விட்டால் அதற்கு மரணம் என்கிற ஒரு அர்த்தத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்கிற நீங்கள், 39 :42 வசனத்தில் வருகிற வபாத் என்கிற வார்த்தைக்கு மரணம் என்கிற பொருளை தான் கொடுத்துள்ளீர்களா?
இல்லையே !!

மரணம் என்றால் மரணித்தவரை கபுரில் கொண்டு செல்ல வேண்டுமே? இந்த வசனத்தில் அல்லாஹ் கைப்பற்றியதாக சொல்கிற நபரை கபுரில் கொண்டு செல்ல முடியுமா? என்று கேட்டேன். இதற்கு நீங்கள் தெளிவான பதிலை சொல்லவில்லை.

நான் இவ்வாறு கேட்டதற்கு காரணம், மரணம் என்று நீங்கள் பொதுவாக சொன்னால் கூட, அந்த மரணம் என்பதன் அர்த்தத்தையே கூட பல வகைகளில் தான் பார்க்கிறீர்கள். அனைத்தும் ஒரே மாதிரியான மரணம் என்று நீங்களே நம்பவில்லை, ஒத்துக்கொள்ளவில்லை !!

அதாவது, நிரந்தரமாக உயிர் பிரிந்து, ரத்த ஓட்டம் நின்று, இதயத்துடிப்பு நின்று விடுமே அதையும் மரணம் என்று தான் சொல்கிறீர்கள், 
நிரந்தரமாக உயிர் பிரியாமல், சில மணி நேரம் மட்டும் பிரித்து மீண்டும் திரும்பி விடுகிற, உயிர் இல்லாமல் இருக்கும் அந்த சில மணி நேரங்களில் கூட இதயம் துடித்துக்கொண்டும், ரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிலையையும் கூட மரணம் என்று தான் சொல்கிறீர்கள்.
ஆனால், இரண்டும் ஒரே மாதிரியான மரணமா? என்பது தான் எனது கேள்வி.

இரண்டும் ஒரே மாதரியான மரணம் இல்லை என்கிற போது, கைப்பற்றுதல் என்று வரக்கூடிய வசனங்களில் நான் எந்த மரணத்தை பொருள் செய்ய வேண்டும்? நிரந்தர மரணத்தையா அல்லது தற்காலிக , ரத்தம் ஓட்டமும் இதய துடிப்பும் இயங்குகிற மரணத்தை மாதிரியான சம்பவதையா?

இந்த கேள்விக்கு நேரடி பதிலை தராமல்,

உயிர்கள் கைபற்றபடுகிறது. ஒன்று மரணம் அல்லது தூக்கம். இதை தவிர ஒரு உயிரை கைபற்றபடுகிறது  என்று அல்லா சொல்லும் போது இந்த இரெண்டை தவிர வேறு அர்த்தம் கொள்ள முடியாது. 


என்று பதில் சொல்கிறீர்கள்.

அதாவது, கைப்பற்றுதல் என்பது உயிருடன் தொடர்புப்படுத்தி வந்து விட்டால் அங்கே உயிர் கைப்பற்றப்பட்டு விட்டது என்கிற ஒரு பொருளை தான் தர வேண்டும் என்று. ஆகவே ஈஸா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்று சொல்லும் போது ஈஸா நபியின் உயிரை கைப்பற்றி விட்டான் என்று தான் பொருள் !!!! என்பது உங்கள் வாதம்.

இதற்கு தான் நான் முன்னரே கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி, சரி, கைப்பற்றி விட்டான் என்று வந்து விட்ட காரணத்தினாலேயே உயிரை தான் கைப்பற்றி விட்டான் என்று சொன்னால், 
அப்படி கைப்பற்றப்பட்ட உயிர் என்பது நிரந்தரமான கைப்பற்றுதலா அல்லது தற்காலிகமான கைப்பற்றுதலா?
அப்படி உயிரை கைப்பற்றிய பிறகு அந்த உடலில் ரத்த ஓட்டம் இருக்குமா அல்லது இருக்காதா?
அப்படி உயிரை கைப்பற்றிய பிறகு அந்த உடலில் இதயம் துடிக்குமா துடிக்காதா?
அப்படி உயிரை கைப்பற்றிய பிறகு மூளை செயல்பட்டுக்கொண்டிருக்குமா செயலிழந்து போகுமா?

எப்படிப்பட்ட உயிர் கைப்பற்றல் அது???????? இதற்கு உங்களிடம் பதில் கேட்டால் நீங்கள் சொல்லும் பதில், நிரந்தரமாக உயிர் பிரிவது தான் என்று.

அப்படியானால் 39 :42 வசனத்திற்கு மட்டும் ஏன் அப்படி நிரந்தரமான உயிர் கைப்பற்றல் என்று நீங்கள் பொருள் செய்யவில்லை?

ஈஸா நபி பற்றி வரக்கூடிய வசனத்தில் வபாத் என்று வந்து விட்ட காரணத்தால் அது நிரந்தரமாக உயிரை கைப்பற்றுதல் என்று நீங்கள் பொருள் செய்தது சரி என்றால் 39 :42 வசனத்திற்கும் தூங்கும் நபரின் உயிரை கைப்பற்றுவதாக அல்லாஹ் சொல்வதும் நிரந்தரமான உயிர் கைப்பற்றுதல் என்று தானே சொல்ல வேண்டும்????

அல்லது, 39 :42 வசனத்தில் உயிர் கைப்பற்றுதல் என்று வந்தால் கூட அங்கே நிரந்தரமான உயிர் கைப்பற்றுதல் இல்லை, தற்காலிகமான உயிர் கைப்பற்றுதல் தான் என்று பொருள் செய்வீர்கள் என்றால் ஈஸா நபி தொடர்பாக வாரும் வசனத்திற்கு நான் அப்படி பொருள் செய்ய கூடாதா?

இதற்கு பதிலை நீங்கள் இன்னும் சொல்லவேயில்லை..

நீங்கள் சொன்ன பதில் எல்லாமே, உயிர் என்று வந்து விட்டதே, உயிரை எடுத்தல் என்று வந்து விட்டால் அது மரணம் தானே..
என்கிற பதில் தான். இந்த பதில் மேலே உள்ள எனது கேள்விக்கு பதிலாகுமா? என்பதை சிந்திக்கவும்.

மேலும், 

இரண்டு சம்பவத்தில் தான் உயிர்கள் கைபற்றபடுகிறது. ஒன்று மரணம் அல்லது தூக்கம். இதை தவிர ஒரு உயிரை கைபற்றபடுகிறது  என்று அல்லா சொல்லும் போது இந்த இரெண்டை தவிர வேறு அர்த்தம் கொள்ள முடியாது. 


என்று சொல்லியுள்ளீர்கள்.
இதே வாசகத்தை வேறு வார்த்தைகளில் 

ஒரு உயிர் இந்த உலகத்திலிருந்து  அல்லாவால் கைப்பற்ற பட்டு  விட்டால் அது நிரந்தர மரணமோ அல்லது சிறு மரணமோ என்று தான் பொருள் கொள்ள முடியும். எனவே தான் சிறு மரணம் என்று தூக்கத்திற்கு ஒப்பிட்டு சொல்லபடுகிறது. உயிர் கைபற்றபடுவது தான் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. இதயம் துடிப்பது , கண்கள் அசைவது போன்றவை தூக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.


என்றும் சொல்லியுள்ளீர்கள்.


அதாவது மரணத்தின் போதும் உயிர் பிரிகிறது, தூக்கத்தின் போதும் உயிர் பிரிகிறது,
ஆனால் இவ்வாறு உயிர் பிரிகிற இரண்டு சம்பவங்களுக்கும் வேறுபாடு உள்ளது ! என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

இதயம் துடிப்பது , கண்கள் அசைவது போன்றவை தூக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.


அதாவது, இதயத்துடிப்பு நின்று விட்ட ஒரு நிலையையும் மரணம் என்று சொல்லலாம், இதயம் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிலையையும் மரணம் என்று சொல்லலாம்.

இரண்டுமே வபாத் என்கிற வார்த்தையை கொண்டு தான் சொல்லப்பட்டும் உள்ளது.

இரண்டிலுமே உயிர் தான் தொடர்புப்படுத்தப்படுகிறது.

ஆக, ஒரு உயிரை பற்றி சொன்னாலும் கூட,
வபாத் என்று சொன்னாலும் கூட, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான மரணத்தை அது சொல்வதாக பொருள் செய்ய முடியாது
என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு விட்டீர்கள். இதை தான் வெளிப்படையாக சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில், ஈஸா நபி என்கிற உயிர் பற்றி பேசப்பட்டு வந்தாலும் கூட , வபாத் என்கிற வார்த்தையே வந்தாலும் கூட, சாதாரணமாக நாம் பொருள் செய்கிற மரணத்தை அங்கே கொடுக்க வேண்டிய அவசியமில்லை, மரணத்தில் பல வகை உள்ளது என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

என்ன வகை? இதய துடிப்பு நின்று விடுகிற மரணம் - இதய துடிப்பு நின்று விடாத மரணம். இரண்டு வகை உள்ளது !

இந்த வேறுபாட்டில் என்ன கருத்து ஒளிந்துள்ளது?

தூங்கக்கூடிய ஒருவரது உயிரை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்றால் அங்கே உயிரை மட்டும் கைப்பற்றுகிறான், உயிரின்  எல்லா வேலைகளும் அல்லாஹ் நிறுத்தி விட்டு கைப்பற்றவில்லை! உயிர் இருந்தால் பத்து வேலைகளை அந்த மனிதன் செய்வான் என்றால் தூங்குகிற போது அந்த உயிரை எடுத்து விட்டால் ஐந்து வேலைகளை தான் அவனால் செய்ய முடியும், மீதி ஐந்து வேலைகளை செய்யும் உயிர் அவனிடமில்லை என்று பொருள் !!!
அதுவே தூங்காத நேரத்தில் நிரந்தரமாக உயிரை எடுப்பானே அப்போது, அந்த பத்து வேலையையுமே அவனால் செய்ய இயலாது.

ஆக, பத்து வேலைகளை செய்யும் ஆற்றலை பெற்றுள்ள ஒரு உயிர் பிரியும் போது, அந்த பத்தையும் அவனால் செய்ய இயலாமல் போனால் அதுவும் மரணம் என்று தான் சொல்கிறீர்கள், பத்தில் ஐந்தை அவன் செய்ய இயலும் என்ற போதும் அதையும் மரணம் என்று தான் சொல்கிறீர்கள்.

இதே அளவுகோலை ஈஸா நபி வசனத்திலும் வையுங்களேன்.
ஈஸா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் - அவர்களின் உயிரை கைப்பற்றினான் என்று வைத்தாலும் தவறில்லை, உயிர் இருக்கும் போது அவர்களால் பத்து வேலைகளை செய்ய முடியும் என்றால் அல்லாஹ் கைப்பற்றிய பிறகு அவர்களால் ஐந்து வேலைகளை தான் செய்ய முடியும். அவர்களால் செய்ய முடியாத வேலைகள், இந்த உலகில் வாழ்வது !!!

இப்படி புரிய என்ன கஷ்டம்?? 

இங்கே இன்னொரு கேள்வி சிலருக்கு வரலாம்.
இந்த வசனத்தில் உடலுடன் அல்லாஹ் கைப்பற்றினானா அல்லது உயிரை மட்டும் கைப்பற்றினானா என்று..

இதற்கு அல்லாஹ்வே பதிலும் சொல்லி விடுகிறான்.

ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும் இருக் கிறேன். 

என்று 3 :55 வசனத்தில் அல்லாஹ் சொல்கிற இடத்தில், முதலில் ஈஸா நபியை அல்லாஹ் கைப்பற்றியதாக சொல்லி விட்டு, பின்னர் என்னளவில் உயர்த்துபவனாக இருக்கிறேன் எனவும் சொல்லி விட்டான்.

அதாவது, கைப்பற்றுதல் என்பது ஈஸா நபியின் செயல்பாடுகளை நிர்ணயிக்கும் அவரது உயிரை அல்லாஹ் கைப்பற்றுகிறான், அதாவது முழுமையான மரணமல்ல, மாறாக, ஒரு சில காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கும் விதத்திலான கைப்பற்றுதல்.
பின்னர் அல்லாஹ் அவரை உயர்த்தி விட்டதாகவும் சொல்கிறான், அதாவது உடலோடும் உயர்த்திக்கொண்டான் !!

இதன் தெளிவான விளக்கம் - அல்லாஹ் அவரை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டான் என்பது தான் !

இறைவன் ஒன்றை முழுமையாக அடைந்த பின்னர் அவரது உடலை தன்னளவில் உய்ர்த்தி கொள்வேன் என்று சொல்வது பொருத்தமற்றது. 

என்று உங்கள் முதல் வாய்ப்பின் போது சொன்னீர்களே , அதற்கு இதுவே பதில் !!


சுருக்கமாக,  ஈஸா நபி தொடர்பான இந்த வபாத் பற்றி வரக்கூடிய வசனத்தை புரிய வேண்டிய முறை இதோ..

  • ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.
  • இந்த வசனத்தில் ஈச நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்று வருகிறது.
  • கைப்பற்றினான் என்பதற்கு அரபியில் மரணம் என்று பொருளா என்று சிந்திக்கிறோம், இல்லை, கைப்பற்றினான் என்பது தான் அதன் வேர்ச்சொல்.
  • ஒரு மனிதரை அல்லாஹ் கைப்பற்றினான் என்றால் அங்கே மரணத்தை தவிர வேறு பொருள் உள்ளதா என்று பார்க்கிறோம்.
  • ஆம், தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரின் உயிரை எடுப்பதாக அல்லாஹ் சொல்லும் போதும் இதே போன்று கைப்பற்றினேன் என்று தான் சொல்கிறான். ஆனால் தூங்கி கொண்டிருப்பவர் இறந்து விடவில்லை, ஏதோ ஒரு வகையில் அல்லாஹ் அவரது செயல்பாட்டை முடக்கினான், சிறிது காலத்திற்கு முடக்கினான் என்று தான் புரிவோம்.
  • அது போல இந்த வசனத்தை புரிய முடியுமா? என்றால் முடியும்.
  • ஈஸா நபியின் செயல்பாட்டை அல்லாஹ் ஒரு சில வகைகளில் முடக்கினான், தற்காலிகமாக முடக்கினான், தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டான் என்று புரியலாம்.
  • தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரது உயிர் எப்படி மீண்டும் பூமிக்கு அனுப்பப்படுமோ அப்படி ஈஸா நபியும் மீண்டும் அனுப்படுவார்.
  • இதை தான் அந்த ஹதீஸ்கள் சொல்கின்றன !!  
  • இப்படி புரிய எந்த தடையும் இல்லை. மாறாக, இப்படி புரிவது தான் ஹதீஸ்களை அர்த்தமுள்ளதாக்குகிறது, குர் ஆன் வசனமும் புரிகிறது. அவரது அந்தஸ்தை பற்றி பேசாமல் அவரையே தன்னளவில் உயர்த்தியதாக அல்லாஹ் சொல்வதன் அர்த்தமும் தெளிவடைகிறது !

இது எனது தெளிவான நிலை. இது குறித்து தொடர்ந்து நீங்கள் பேசுவீர்களானால், மேலும் விளக்கங்கள் அளிக்கிறேன்.. 


இறுதியாக, நான் ஏற்கனவே கேட்டிருந்த ஒரு கேள்வியை மீண்டும் நினைவூட்டுகிறேன்..

ஒரு வாதத்திற்கு ஈச நபி மரணித்து விட்டார்கள் என்பது தான் இறை வசனத்தின் கருத்து என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதை ஹதீஸ்களின் மூலம் ஒப்புக்கொள்கிறீர்களா??

இதை நான் எனது இரண்டு வாய்ப்பிலும் கேட்டிருந்தேன், இன்னும் நீங்கள் பதில் அளிக்கவில்லை.


ஈஸா நபி வருகையை குறித்து பேசும் ஹதிஷை குரானுக்கு முரண் என்பதால் ஏற்று கொள்ளவில்லை என்பது தான்  என் கொள்கை .


என்கிற ஒரு பதிலை தந்துள்ளீர்கள். ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்பது எந்த குர் ஆன் வசனத்திற்கு முரண் என்பதை வசன எண்ணுடன் காட்டி விட்டு தான் நீங்கள் இந்த பதிலை சொல்ல வேண்டும்.
எந்த வசனம், ஈஸா நபி மீண்டும் வருவதாக சொல்கிற ஹதீசுக்கு முரணாக இருக்கிறது? என்பதை விளக்குங்கள்.


ஒரு வாதத்திற்கு (ஒரு வாதத்திற்கு மட்டும் தான்  ) நான் ஈஸா நபி நம்மை போல மரணித்து விட்டார் என்றும் சொல்லி அவர் மீண்டும் வருவதையும் ஏற்று கொள்கிறேன் என்று சொன்னால் அதில் ஏதேனும் முரண் உள்ளதா ? முரண் என்றால் எப்படி முரண் என்று சொல்லுங்கள் 


என்று இன்னொரு பதிலை சொல்லியுள்ளீர்கள். இது எனது கேள்விக்கான விடை ஆகாது. அப்படி ஏற்றுக்கொண்டால் அது தவறா? என்று என்னிடம் மறு கேள்வி தான் கேட்கிறீர்கள்.
முதலில் அப்படி ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பதை சொல்லுங்கள். மறு கேள்வியை அதன் பிறகு கேளுங்கள். அது தான் சரியாக இருக்கும்.


ஆக, என் தரப்பில் இதுவரை, ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கும், மீண்டும் வருவார்கள் என்பதற்கும் கீழ்காணும் ஆதாரங்களை தந்துள்ளேன்.

ஈஸா நபிக்கு முன் வந்த எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்கிற வசனம்.
ஈச நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்று வரக்கூடிய வசனம்.
ஈஸா நபியை அல்லாஹ் உயர்த்தினான் என்று வரக்கூடிய வசனம்.
மேலும் ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்களின் நான்கு ஹதீஸ்கள்.

மேலும் பல ஆதாரங்களை அடுத்தடுத்து பார்க்கலாம், இன்ஷா அலாஹ்.

வஸ்ஸலாம்.





செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 3



04/09/2012


அஸ்ஸலாமு அலைக்கும்,

இங்கே கைப்பற்றுதல் என்பது ஒரு உயிரோடு தொடர்பு கொண்டு வரும் போது அதற்க்கு மரணம் என்பது தான் முதல் பொருள். கூடுதல் விளக்கம் தான் மற்றவை. 

இது அடிப்படியிலேயே தவறு என்று சொல்லி விட்டு அதற்கு விளக்கமாக அதை ஒத்து கொண்டு ஒரு கருத்தை சொல்லி உள்ளீர்கள்.

வேறு வேறு வசனங்களில் உயிர் குறித்து சொல்லப்படும் போது அங்கே மரணத்தை தவிர வேறு பொருள் இல்லை என்பது இரு வேறு கருத்துக்கு இடமின்றி புரிவதால் அங்கே கைப்பற்றுதல் என்கிற வபாத் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை தான் சொல்கிறேன். ஒரு உயிரை அல்லா கைப்பற்றுகிறான் என்பதற்கு முதல் பொருளாக மரணம் என்பதை தான் கொடுக்க முடியும் மற்றவை அதற்கான கூடுதல் விளக்கம் என்று. நீங்கள் கூடுதலாக ஒரு புது விளக்கத்தை தருகிறீர்கள். உடலோடு கைப்பற்றுதல் என்று. அதன் உண்மை நிலையை கண்டறிய தான் மற்ற வசனங்களை இங்கே அலசி கொண்டிருக்கிறோம்.

எதிர் பார்த்த படியே சில வசனங்களை மீண்டும் விளக்கி உள்ளீர்கள். தூக்கத்தை குறித்து முன்னரே விளக்கம் அளிக்கப்படிருந்தாலும் மீண்டும் இங்கே தெளிவு படுத்தி விடுவோம்.

உங்கள் வாதப்படி வபாத் என்பது வேறு வகையான மரணம் என்று பொருள் கொண்டால் ஹதிஷும் பொருந்தி போகிறது என்பதாகும். அதாவது உடலோடு இந்த உலகை விட்டு கைபற்றபட்டார் என்பதாகும். 

மரணம் என்பதன் பொருள் என்ன ?
 மரணம் என்பது பெரும் தூக்கம் என்றும் தூக்கம் என்பது சிறு மரணம் என்று தான் குரானின் படி  புரிய முடியும். 
மரணம், தூக்கம் இவை இரெண்டும் ஒரு சம்பவம். தூக்கத்தை குரானும் ஹதிசும் எதற்க்காக மரணத்தோடு ஒப்பிட்டு அதை சிறு மரணம் என்று சொல்கிறது ? தூக்கத்திற்கும் மரணத்திற்கும் என்ன ஒற்றுமை ?
 தூக்கம் என்ற சம்பவத்தின் போதும், மரணம் என்ற சம்பவத்தின் போதும் ஏதோ ஒன்று இரேண்டிர்க்கும் பொதுவாக உள்ளது. இப்படி எந்த ஒன்றும் பொதுவாக இல்லை என்ற போது இரெண்டையும் தொடர்பு படுத்த முடியாது என்பது சிந்திக்கும் போது விளங்காமல் இல்லை.

வபாத் என்பதன் அகராதி பொருள் மரணம் அல்ல, கைப்பற்றுதல் தான் என்பதற்கு குர் ஆனிலேயே ஏராளமான சான்றுகள் உள்ளன.

இதை யார் மறுத்தது. வபாத் என்பதற்கு முழுமையாக எடுத்தல் என்று தான் பொருள். பொருளை முழுமையாக எடுத்தல், லாபத்தை முழுமையாக எடுத்தல் என்று சொல்லும் போது அது எப்படி பொருள் படுகிறதோ அது போல உயிரோடு ஒப்பிடப்பட்டு அல்லாவால் எடுத்து கொள்ளப்படுகிறது என்று சொன்னால் அதற்கு  மரணம் தான் பொருள். சிறு மரணமோ நிரந்தர மரணமோ அது மரணம் தான். அங்கே உயிர் தான் கைப்பற்ற படுகிறது. இது தான் அதன் பொருள் தவிர மற்றவை அல்ல. 

நீங்கள் சொல்லும் வசனம்  மரணம் என்றால் என்ன என்பதாக விளக்கவும் செய்கிறது கூடுதலாக மரணத்தை போலவே  தூக்கத்திலும் உயிர் கைபற்றபடுகிறது என்பதை  கூடுதல் தகவலாக தருகிறது. 

உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.

இங்கு வரக்கூடிய வபாத் என்பதற்கு மரணம் என்கிற பொருளை தர முடியுமா? அப்படி பொருள் செய்தால் உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் மரணிக்க செய்கிறான் 
என்று சொல்ல வேண்டி வரும். இதில் எந்த அர்த்தமும் இல்லை, இது முதல் விஷயம்.

இதை இப்படி அர்த்தம் கொடுப்பது தான் பாமரத்தனம்.
உயிர்கள் எப்போது கைப்பற்ற படுகிறது என்பதை இது  விளக்கி விடுகிறது. ஒன்று மரணத்தின் போது , அது அல்லாத போது தூக்கத்தின் போது என்பது தான் இங்கு சொல்லபடுகிற கருத்து.

வபாத் உயிருடன் தொடர்பு படுத்தி வந்தால் மரணம் மட்டும் இல்லை என்ற உங்கள் கொள்கைக்கு இந்த வசனமே பதில். இரண்டு சம்பவத்தில் தான் உயிர்கள் கைபற்றபடுகிறது. ஒன்று மரணம் அல்லது தூக்கம். இதை தவிர ஒரு உயிரை கைபற்றபடுகிறது  என்று அல்லா சொல்லும் போது இந்த இரெண்டை தவிர வேறு அர்த்தம் கொள்ள முடியாது. 
ஒரு உயிர் இந்த உலகத்திலிருந்து  அல்லாவால் கைப்பற்ற பட்டு  விட்டால் அது நிரந்தர மரணமோ அல்லது சிறு மரணமோ என்று தான் பொருள் கொள்ள முடியும். எனவே தான் சிறு மரணம் என்று தூக்கத்திற்கு ஒப்பிட்டு சொல்லபடுகிறது. உயிர் கைபற்றபடுவது தான் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. இதயம் துடிப்பது , கண்கள் அசைவது போன்றவை தூக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.

மெஹ்ராஜ் பயணம் ஒரு சிறு மரணத்தின் அதாவது தூக்கத்தின் போது நிகழ்ந்தது. உயிர் தான் அழைத்து செல்லபடுகிறது, உடல் அல்ல. 
குகை வாசிகள் பல நூறு ஆண்டுகாலம் மரணித்து இருந்தார்கள், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்படுகிறார்கள். அதாவது அவர்களுக்கு அப்போது நிரந்தர மரணம் கொடுக்கப்படவில்லை என்று தான் எடுத்து கொள்ள முடிகிறது. 

ஒன்று தூக்கத்தில் உயிர் கைப்பற்றப்படும், ஆனால் உடல் இங்கே தான் பாதுகாப்போடு இருக்கும்.
மற்றொன்று மரணத்தின் போது கைப்பற்றப்படும், அதில் உடல் மண்ணுக்கு சென்று விடுகிறது.

உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.
இந்த இரண்டு சம்பவத்தால் மட்டுமே ஒரு உயிர் கைபற்றபடுகிறது என்பது இங்கே தெளிவாகவே சொல்லபடுகிறது.
ஈஸா நபி இந்த இரேண்டில் ஏதோ ஒன்றில் தான் கைப்பற்ற பட்டிருக்க வேண்டும். அது தூக்கமா அல்லது மரணமா ?

இன்னும் முழுமையாக அந்த வசனத்தை படித்து பாருங்கள் தெளிவாகவே புரியும்.
அல்லா உயிர்களை மரணிக்கும் போதும் , மரணிக்காதவற்றை  அதன் நித்திரையிலும் கைப்பற்றி, பின்னர் எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை நிறுத்தி கொண்டு மற்றவைகளை ஒரு குறிப்பிட்ட தவணை வரையிலும் அனுப்பி விடுகிறான். - சிந்திக்கிற மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சிகள்  உள்ளன.

அல்லாவின் விதி படி ஒரு உயிர் ஒன்று அதன்  தூக்கத்தில் அல்லது அதன் நிரந்தர மரணத்தில் கைபற்றடுகிறது.
இப்போது ஈஸா நபி கைபற்றபட்டது தூகத்திலா ? அல்லது மரணத்திலா ? தூக்கம் என்றால் உடல் இருக்க வேண்டும். மரணம் என்றால் உயிர் பிரிந்திருக்க வேண்டும், உடல் புதைக்க பட்டிருக்க வேண்டும் . மீண்டும் வந்தால் கூட அது  resurrection தான். 
ஈஸா நபி குழப்பங்களுக்கு அனைத்தும் அல்லா  மறுமையில் தீர்பளிப்பான் என்றே சொல்கிறான்.
3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

ஈஸாவே உன் செல்வத்தை கைப்பற்றுவேன் என்று வந்திருந்து , இங்கே கைப்பற்றுதல் என்று வருகிறது ஆகவே இதற்கு மரணம் என்று பொருள் தர சொல்லவில்லை.
ஈஸா வே உம்மை கைப்பற்றுவேன். என்று வரும் போது அது மரணம் தான் என்றே அடித்து சொல்கிறோம்.

எனவே கைப்பற்றுதல் என்பதற்கு மரணம் என்பது அகாராதி பொருள் இல்லை என்பதை மறுப்பதை விட , அல்லாஹ்வால் ஓர் உயிர் கைபற்றபடுகிறது என்றால் அதற்கு அகராதியின் படி மரணம் தான் பொருள் என்பதை தெளிவு படுத்தவே சொல்லபடுகிறது.

இன்னும் அழுத்தமாக சிந்தித்தோமானால் , மரணம் என்பது இந்த உலகத்திற்கும் , மறுமைக்கும் உள்ள இடை பட்ட ஒரு காலம். ஒருவருடைய  உடலும் உயிரும் இந்த உலகத்திற்கு எந்த நிலையிலும் தொடர்பின்றி இருக்கும். 

ஆகவே அவரை அல்லாஹ் கைப்பற்றினான் என்பது உடலுடனேயே கைப்பற்றி விட்டான் ,இதுவும் ஒரு வகையில் மரணம் என்றே கூட வைப்போம், தப்பில்லை. ஆனால், நானும் நீங்களும் ஒரு நாள் மரணிப்போமே, அப்படிப்பட்ட மரணமல்ல !!

இது  தான் மறுக்க படுகிறது.  மரணம் என்பது உயிர் பிரிவது என்பது மட்டும் தான் என்று புரிய வேண்டும். இதை தவிர வேறு மரணம் இல்லை. 

ஈஸா நபி மரணிக்கவில்லை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் ? 
குர்ஆனில் எங்கேனும் ஈஸா நபி மரணிக்கவில்லை என்று நேரடியாக வருகிறதா ? மாற்றமாக எல்லா நபி மார்களும் காலம் சென்று விட்டதாக வருகிறது. நபிமார்கள் யாரும் நிரந்தரமாக இருக்கவில்லை என்று இறந்த காலத்தில்  சொல்கிறதே தவிர யாரும் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் என்று வரும் காலத்தில் சொல்லப்படவில்லை.

ஹதிஷிலாவது அவர் மரணிக்கவில்லை என்று நேரடியாக சொல்லப்பட்டுள்ளதா ?
ஹதிஷில் அவர் மரணிக்க வில்லை என்று எங்குமே சொல்லப்படவில்லை மாறாக அவர் மீண்டும் அனுப்பபடுவார்  என்று மட்டுமே சொல்லபடுகிறது. ஈஸா நபி  மரணிக்கவில்லை என்று சொல்லி பின்னர் அவரது வருகை குறித்து ஹதீஸ் சொல்லி இருக்குமானால் உங்களை போன்று அந்த நம்பிக்கையை வைத்து ஏதேனும் மொழி பெயர்த்து பார்க்கலாம். ஆனால் அவர் வருகையை மட்டுமே தான் சொல்லபடுகிறது.

இவற்றை வைத்து கொண்டு நீங்களாகவே தான் அவர் மரணிக்கவில்லை என்று அர்த்தம் தருகிறீர்கள்.உடலோடு உயர்த்தப்பட்டார் என்று பொருள் கொள்கிறீர்கள். ஹதிசிர்க்கு முரணின்றி சிந்திக்கிறோம் என்று சொல்லி கொண்டு குர்ஆனில் நபிமார்கள் மரணத்தை குறித்து பேசும் வசனத்தையும், உயிர்கள் கைபற்றபடுவதை  குறித்து குரான் சொல்லும் விதத்தையும் முரணாக்கி, இது விதி விலக்கு என்று சொல்கிறீர்கள்.

ஒரு வாதத்திற்கு (ஒரு வாதத்திற்கு மட்டும் தான்  ) நான் ஈஸா நபி நம்மை போல மரணித்து விட்டார் என்றும் சொல்லி அவர் மீண்டும் வருவதையும் ஏற்று கொள்கிறேன் என்று சொன்னால் அதில் ஏதேனும் முரண் உள்ளதா ? முரண் என்றால் எப்படி முரண் என்று சொல்லுங்கள் உங்கள் நம்பிக்கைக்கும் அதுவே பதிலாக அமைய கூடும். 

இதற்கு தெளிவாக பதில் சொல்லாமல், அப்படி வைத்தாலும் பரவாயில்லை, ஆனால் உடலுடன் உயர்த்தப்பட்டார் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்று மேம்போக்காக பதில் சொல்கிறீர்கள்.

மேம்போக்காக பதில் சொல்வதாக சொல்கிறீர்கள். ஈஸா நபி மரணித்து விட்டார் என்று நம்பிக்கை வருமானால்  வருகையை  குறித்து பேசும் ஹதீஸ் வேறு மாதிரி அலசப்படும் என்பதற்காகவே சொல்கிறேனே தவிர  ஈஸா நபி வருகையை குறித்து பேசும் ஹதிஷை குரானுக்கு முரண் என்பதால் ஏற்று கொள்ளவில்லை என்பது தான்  என் கொள்கை .
 
வசலாம் .

திங்கள், 3 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 2



03/09/2012

அஸ்ஸலாமு அலைக்கும்..


ஒரு வாதத்திற்கு என்று நீங்கள் சொல்வது போல்,
ஈஸா நபி மரணித்து விட்டார் என்று எடுத்து கொண்டு பார்த்தாலும் அல்லா நாடினால் ஈஸா நபி மீண்டும் வருவார் என்று நம்பிக்கை கொண்டால் கூட பரவாஇல்லை என்று சொல்லலாம். 

அது பரவாயில்லையா? என்று நான் கேட்கவில்லை.

ஹதீஸ்கள் பலவற்றில், ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது  . ஆனால், உங்கள் கொள்கையோ ஈசா நபி இறந்து விட்டார்கள் , மீண்டும் வரவே மாட்டார்கள் என்பதாகும். 
குர் ஆனில் ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான், ஆகவே அதற்கு முரணாக இருக்கிற ஹதீஸ்களை ஏற்க முடியாது என்று வாதம் வைத்தீர்கள்.

இதற்கு தான் நான் கேட்டேன், குர் ஆனில் ஈசா நபியின் மரணத்தை பற்றி விலாவாரியாகவே பார்த்து விடலாம், அதற்கு முன், ஒரு வாதத்திற்கு, ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்வதாகவே வைப்போம், அதை நம்ப வேண்டும் என்பதால் ஏன் நான் ஹதீஸை மறுக்க வேண்டும்???? குர் ஆனில், உங்கள் கருத்துப்படி ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று உள்ளது, ஹதீஸில் ஈசா நபி கியாமத் நாளுக்கு சமீபமாக வருவார்கள் என்று உள்ளது. இரண்டையும் சேர்த்தே கூட நம்பலாமே.. மீண்டும் வருவார்கள் என்று வருகிற ஹதீஸ், ஈசா நபி மரணித்து விட்டதாக நீங்கள் புரிகிற இறை வசனத்திற்கு ஒன்றும் முரணில்லையே????
மரணித்து விட்டார்கள் தான், ஆனால் மீண்டும் வருவார்கள் - இப்படி புரியலாமே??

என்பது தான் முதல் வாய்ப்பில் நான் எழுப்பிய கேள்வி.

இதற்கு தெளிவாக பதில் சொல்லாமல், அப்படி வைத்தாலும் பரவாயில்லை, ஆனால் உடலுடன் உயர்த்தப்பட்டார் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்று மேம்போக்காக பதில் சொல்கிறீர்கள்.

குர் ஆனில் ஈசா நபியின் மரணத்தை பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதெல்லாம் விலாவாரியாகவே இன்ஷா அல்லாஹ் அலசுவோம், எதுவும் மிஞ்சமின்றி தெளிவாகவே வாதிக்கலாம், பிரச்சனையில்லை, ஆனால் இப்போது எனது கேள்வி இதுவல்ல.

எனது கேள்வி, இப்போது உங்கள் கொள்கை என்ன? ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று குர் ஆன் சொல்வதையும் நம்பி, மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ் சொல்வதை நம்புகிறீர்களா இல்லையா? 
நம்பவில்லை என்றால் ஏன் நம்பவில்லை?? இதற்கு தெளிவாக விளக்கம் அளியுங்கள்.


வபாத் - விளக்கம் என்ன?

அடுத்து, வபாத் என்று பொதுவாக வந்தால் நேரடி அர்த்தத்தை கொடுக்கலாம், ஆனால் உயிருடன் தொடர்புப்படுத்தி வந்தால் மரணம் என்கிற பொருளை மட்டும் தான் கொடுக்க முடியும் என்று வாதம் வைத்தீர்கள்.


இங்கே கைப்பற்றுதல் என்பது ஒரு உயிரோடு தொடர்பு கொண்டு வரும் போது அதற்க்கு மரணம் என்பது தான் முதல் பொருள். கூடுதல் விளக்கம் தான் மற்றவை. 


இது அடிப்படையிலேயே தவறு.

இதை சொல்வீர்கள் என்று ஏற்கனவே நான் அறிந்ததால் தான் மவுத் என்பதை சுட்டிக்காட்டினேன். மவுத் என்று அல்லாஹ்வும் ரசூலும் பல இடங்களில் சொல்லியுள்ளனர், (4 :15 ) மரணத்தை குறிக்கும் இடங்களில் அவை, மரணத்தை தவிர வேறு எந்த அர்த்தத்திற்கும் பொருந்தாது. அப்படிப்பட்ட்ட இடங்களில் மவுத் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், வபாத் என்பதையும் அல்லாஹ் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளான்.
வபாத் என்பது ஒரு பொதுவான சொல். மவுத் என்பதன் அகராதி பொருள் மரணம் என்கிற போதும் வபாத் என்பதன் அகராதி பொருள் மரணம் அல்ல ! கைப்பற்றுதல் ஆகும்.

வேறு வேறு வசனங்களில் உயிர் குறித்து சொல்லப்படும் போது அங்கே மரணத்தை தவிர வேறு பொருள் இல்லை என்பது இரு வேறு கருத்துக்கு இடமின்றி புரிவதால் அங்கே கைப்பற்றுதல் என்கிற வபாத் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈசா நபியை பொறுத்தவரை அவர்கள் இறக்கவில்லை. இறக்கவில்லை என்கிற போதும் வபாத் என்று தான் அல்லாஹ் சொல்கிறான். இப்போது பாமரத்தனமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், மற்ற வசனங்களில் எப்படி வபாத் என்பதற்கு மரணம் என்று பொருள் செய்தோமோ அதே பொருளை முதலில் செய்வோம். ஈசா நபி மரணித்தார்கள் என்று வருகிறது.
ஹதீஸை பார்க்கிறோம், மீண்டும் வருவார்கள் என்று உள்ளது.
அப்படியானால் இங்கே சிறிய குழப்பம் வருகிறது, எல்லாரையும் போல மரணித்தார் என்று அல்லாஹ் சொல்கிறான், ஆனால் ஹதீஸில் மீண்டும் வருவார் என்று உள்ளதே, இதை எப்படி புரிவது என்று சிந்திக்கிறோம்.
அந்த வசனத்தில் வருகிற வபாத் என்பதற்கான நேரடி பொருள் என்ன என்று பார்க்கிறோம். முழுமையாக கைப்பற்றுதல் என்று உள்ளது.
இதற்கு மரணம் என்று மட்டும் தான் பொருள் கொடுக்க முடியுமா? என்றால் இல்லை. வெறுமனே அல்லாஹ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டான் என்கிற பொதுவான அர்த்தத்தையும் கொடுக்கலாம். இந்த அர்த்தத்தை வைத்தால் ஹதீஸ் புரிகிறதா? என்றால் புரிகிறது.
இப்போது இந்த அர்த்தத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். இது தான் சிந்தித்து புரிய வேண்டிய முறை.


வபாத் என்பதன் அகராதி பொருள் மரணம் அல்ல, கைப்பற்றுதல் தான் என்பதற்கு குர் ஆனிலேயே ஏராளமான சான்றுகள் உள்ளன.. உதாரணத்திற்கு 2 :281 , 3 :161 , 16 :111 போன்ற வசனங்களை சொல்லலாம்.

இந்த வசனங்களில் வபாத் என்கிற சொல்லுக்கு கைப்பற்றுதல் என்கிற பொருளை மட்டும் தான் கொடுக்க வேண்டும். மரணம் என்பது பொருந்தாது.
இதை நான் சுட்டிக்காட்டுவதற்கு காரணம், வபாத் என்கிற வார்த்தையின் அர்த்தம் மரணம் அல்ல என்பதை புரிய வைக்கத்தான். 

மரணத்தை தவிர வேறு கருத்தே இல்லை என்கிற நிலை இருந்தால் மட்டும் தான் அதற்கு மரணம் என்று பொருள் செய்ய வேண்டும்.

ஈசா நபி பற்றி வருகிற வசனத்தில் மரணத்தை தவிர வேறு அர்த்தத்தை கொடுக்கவே முடியாது என்கிற நிலை இல்லை. 
ஏன் இல்லை என்றால், ஹதீஸில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று உள்ளது. ஆகவே இந்த வசனத்திற்கு, வெறுமனே கைப்பற்றினான் என்று மட்டும் பொருள் செய்து நிறுத்திக்கொள்வோம்.

இதற்கு பதில் சொல்லும் போது, 


எங்கெல்லாம் தபாவா என்ற சொல் ஒரு உயிரினத்தோடு சொல்லப்பட்டிருக்கிறதோ  அங்கெல்
லாம் மரணத்தை தவிர வேறு அர்த்தம் கிடையாது  

என்று மறுப்பு சொல்கிறீர்கள். இந்த மறுப்பு சரியா? என்றால் அதுவும் தவறு !!!


எங்கெல்லாம் வபாத் என்கிற சொல், ஒரு உயிருடன் தொடர்புப்படுத்தி வருகிறதோ அங்கெல்லாம் மரணத்தை தவிர வேறு அர்த்தம் இல்லை என்று சொல்கிறீர்கள்.
இதற்கு மறுப்பாக, 39 :42 வசனத்தை தருகிறேன்.

உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.

இங்கு வரக்கூடிய வபாத் என்பதற்கு மரணம் என்கிற பொருளை தர முடியுமா? அப்படி பொருள் செய்தால் உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் மரணிக்க செய்கிறான் 

என்று சொல்ல வேண்டி வரும். இதில் எந்த அர்த்தமும் இல்லை, இது முதல் விஷயம்.

அப்படி இல்லை என்றாலும், இங்குள்ள கைப்பற்றுதல் என்பது மரணத்தை பற்றி தானே பேசுகிறது என்று நீங்கள் இதற்கு மறுப்பு சொல்வீர்கள். 
அந்த மறுப்பும் எடுபடாது.. 
ஏன் என்றால், இங்கு அல்லாஹ் சொல்லக்கூடிய வபாத் என்பதும், வேறு வேறு வசனங்களில் அல்லாஹ் சொல்லும் வபாத் என்பதும் ஒரே அர்த்தத்திலான மரணமா? இல்லை என்று நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

புரியவில்லை என்றால் இன்னும் கவனமாக படியுங்கள்..

உதாரணமாக, 16 :32 வசனத்தை எடுத்துக்கொள்வோம்.

அதில், நல்லவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது ஸலாம் சொல்வார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இந்த இடத்தில் "கைப்பற்றுதல்" என்பதன் பொருள் - மரணம் தான். மாற்றுக்கருத்தே இல்லை !!

இதில் உயிருடன் தொடர்புப்படுத்தி வருகிறது, ஆகவே இங்கு மரணம் என்று சொல்கிறோம் என்று நீங்கள் வாதம் வைக்கிறீர்கள்.

சரி, 39 :42 வசனமும் இதே போல உயிரை தொடர்புப்படுத்தி வருவதால் இங்குள்ள "கைப்பற்றுதல்" என்பதும் மரணத்தை தான் குறிக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட , இரண்டும் ஒரே அர்த்தத்தில் சொல்லப்பட்ட மரணமா?  இல்லை !!! இது தான் இங்கு கவனிக்க வேண்டியது !!

16 :32 வசனத்தில் உண்மையாகவே நாம் மரணிப்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், 39 :42 வசனத்தில் உள்ள கைப்பற்றுதல் என்பது தூக்கத்தை குறிக்கிறது. தூக்கமும் ""ஒரு வகையான"" மரணம் தான் என்பதாலும், தூக்கத்தின் போது உடல் இருக்க, உயிர் மட்டும் அல்லாஹ்விடம் சென்று விட்டு திரும்புகிறது என்பதாலும் இந்த வசனத்தில் வரக்கூடிய கைப்பற்றுதல் என்பதற்கு மரணம் என்று தப்சீர் செய்கிறீர்கள்.

ஆனால், தூங்கிக்கொண்டிருப்பவர் உண்மையில் மற்ற மற்ற மரணித்தவர்களை போல மரணித்தவர்களா? தூங்கிக்கொண்டிருப்பவர்களை கொண்டு போய் அடக்கம் செய்து விடுவோமா? தூங்கி கொண்டிருப்பவர் முன்னால் நின்று அவருக்காக ஜனாஸா தொழுகை தொழுவோமா? இல்லை.
இல்லை என்று நீங்களும் தான் சொல்வீர்கள்.
அப்படியானால் இதற்கு என்ன வேறுபாடு?

16 :32 வசனம், நிஜமாக ஒரு மனிதன் இந்த உலகை விட்டு முழுமையாக பிரிந்து செல்வானே, அவரை கபுரில் கொண்டு போய் வைப்போமே, அந்த மரணத்தை பற்றி சொல்கிறது.
இந்த வசனத்தின் படி, அந்த மனிதரின் இருதயம் நின்று விடும். அதை மரணம் என்று இந்த வசனம் சொல்கிறது.

ஆனால், 39 :42 வசனம், அப்படிப்பட்ட மரணத்தை சொல்லவில்லை - இந்த வசனத்தில் சொல்லப்பட்ட மரணம் என்பது கபுர் அடக்கம் செய்யப்பட வேண்டிய மரணமல்ல. 
இந்த வசனத்தின் படி அந்த மனிதரின் இருதயம் இயங்கிக்கொண்டு தான் இருக்கும். அதையும் மரணம் என்று சொல்கிறோம்.


ஆக, 
இரண்டு வசனத்திலும் வபாத் என்று வருகிறது.
இரண்டு வசனங்களுமே உயிரை பற்றி தான் பேசுகிறது.

ஆகவே உங்கள் கருத்துப்படி இரண்டு வசனங்களுக்கும் மரணம் என்று பொருள் தான் செய்ய வேண்டும் என்கிற போதிலும் ஒரு வசனத்தின் பொருள் படி மண்ணோடு மண்ணாக சென்று விட்ட மரணம், இன்னொரு வசனப்படி இருதயம் இயங்கிக்கொண்டிருக்கிற மரணம்.
முதல் வசனத்தின் படி, அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்கிற பொருளிலான மரணம், இன்னொரு வசனத்தின் படி ஜனாஸா தொழுகை தொழ முடியாதபடி வேறு விதத்திலான மரணம்.

ஆக, உயிர் பற்றி வந்து விட்டாலேயே அது மரணத்தை தான் குறிக்கும் என்று நீங்கள் சொல்வது ஒரு போலி வாதம். 

உயிர் பற்றி வந்து விட்டால் அது உண்மையான மரணத்தையும் குறிக்கும், மரணத்தை போன்ற ஒரு சம்பவத்தையும் குறிக்கும்!!!

இதையே ஈசா நபி விஷயமாகவும் பொருத்துங்கள் .

உங்கள் வாதப்படி, ஈசா நபி பற்றி வருகிற வசனமும் உயிரை பற்றி தான் பேசுகிறது? அங்கும் வபாத் என்கிற வார்த்தை வருகிறது?
 சரி, அங்கும் மரணம் என்றே பொருள் செய்வோம், ஆனால் எப்படிப்பட்ட மரணம்? ஜனாஸா தொழுகை தொழுவோமே, அப்படிப்பட்ட மரணமா அல்லது, தூங்குகிற ஒருவரை மரணித்தார் என்று சொல்கிறோமே அப்படிப்பட்ட மரணமா?

இரண்டில் எதையும் நான் பொருத்தலாம் தானே?

இப்போது நான் ஈன்ன செய்கிறேன்? ஹதீஸில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதால், இந்த வசனத்தில் உள்ள "மரணம்" என்பது ஜனாஸா தொழுகை தொழுவோமே அப்படிப்பட்ட மரணமாக இருக்க முடியாது, வேறு வகையான மரணமாக இருக்கலாம் என்று சிந்தித்து, அல்லாஹ் அவரை முழுமையாக கைப்பற்றினான், என்பதை உடலுடன் எடுத்து விட்டான் என்று பொருள் செய்கிறேன். ஏனெனில், உடலுடன் மீண்டும் அவர் இந்த பூமிக்கு வருவதாக ஹதீஸ் சொல்கிறது.
ஆகவே அவரை அல்லாஹ் கைப்பற்றினான் என்பது உடலுடனேயே கைப்பற்றி விட்டான் ,இதுவும் ஒரு வகையில் மரணம் என்றே கூட வைப்போம், தப்பில்லை. ஆனால், நானும் நீங்களும் ஒரு நாள் மரணிப்போமே, அப்படிப்பட்ட மரணமல்ல !!
அப்படிப்பட்ட மரணத்தை மட்டும் தான் வபாத் என்கிற வார்த்தை குறிக்கும் என்றில்லை, வேறு விதங்களிலான மரணத்தையும் குறிக்கும்.

சுருக்கமாக,  

16 :32 வசனத்திலும் வபாத் என்கிற சொல் உள்ளது.
39 :42  வசனத்திலும் வபாத் என்கிற சொல் உள்ளது.
ஈசா நபி பற்றி வரக்கூடிய, நாம் பேசிக்கொண்டிருக்க கூடிய 5 :107  வசனத்திலும் வபாத் என்கிற சொல் உள்ளது.

16 :32 வசனமும் உயிரை பற்றி தான் பேசுகிறது 
39 :42 வசனமும் உயிரை பற்றி தான் பேசுகிறது 
ஈசா நபி பற்றி வரக்கூடிய 5 :107  வசனமும் உயிரை பற்றி தான் பேசுகிறது 



எங்கெல்லாம் தபாவா என்ற சொல் ஒரு உயிரினத்தோடு சொல்லப்பட்டிருக்கிறதோ  அங்கெல்
லாம் மரணத்தை தவிர வேறு அர்த்தம் கிடையாது  
என்கிற உங்கள் வாதம் உண்மை என்றால் என்ன செய்ய வேண்டும்? எல்லா வசனங்களுக்கும் ஒரே மாதிரியான மரணத்தை சொல்ல வேண்டும். 16 :32 வசனத்தில் எப்படிப்பட்ட மரணத்தை பற்றி அல்லாஹ் சொல்கிறானோ, அதே போன்ற மரணத்தை தான் 39 :42 வசனத்திலும் அல்லாஹ் சொல்கிறான் என்று நீங்கள் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி சொல்லாமல், ஆந்த வசனம் உண்மையான மரணத்தை பற்றி சொல்கிறது, இந்த வசனம், மரணத்தை மாதிரி வேறொரு சம்பவத்தை சொல்கிறது என்று பிரித்துக்கூறி, வபாத் என்று வரக்கூடிய, அதுவும் உயிரை பற்றியே வரக்கூடிய இரண்டு வசனங்களுக்கு இரண்டு வெவ்வேறு விதமான "மரணத்தை" சொல்கிறீர்கள்.

இப்படி பொருள் செய்ய உங்களுக்கு அனுமதி இருக்கிறது என்றால், 5 :107 வசனத்திற்கு நான் வேறு விதமான ஒரு மரணத்தை பற்றி சொல்கிறேன். அதாவது, உடலுடன் உயர்த்தப்பட்ட ஒரு வகையான மரணம் என்கிறேன், 
இதை ஏன் குறை சொல்கிறீர்கள்?
இப்படி நான் சொல்லும் போது மட்டும் , அதெப்படி? இங்கே வபாத் என்று வந்து விட்டது, இங்கே உயிர் சம்மந்தமாக வந்து விட்டது, ஆகவே சாதாரணமாக நீங்களும் நானும் மரணிப்பது போன்ற மரணம் தான் இது என்று ஏன் வாதம் வைக்கிறீர்கள்?
இப்படி வாதம் வைக்கிற தார்மீக உரிமையை நீங்கள் ஏற்கனவே இழந்து விட்டீர்களே?????

இப்படி கேள்வி கேட்பவர் என்ன செய்ய வேண்டும்? இதோ பாருங்கள், வபாத் என்று வருகிற எல்லா இடங்களிலும், அதுவும் குறிப்பாக உயிரோடு தொடர்புப்படுத்தி வரக்கூடிய எல்லா இடங்களிலும் நான் ஒரே மாதிரியான மரணம் என்கிற அர்த்தத்தை தந்துள்ளேன் என்று காட்ட வேண்டும்.
நீங்களே ஒரு வசனத்திற்கு ஜனாஸா தொழுகை தொழுது கபுரடக்கம் செய்ய வேண்டிய மரணம் என்று பொருள் செய்வீர்களாம், அதுவே இன்னொரு வசனத்திற்கு, கபுர் அடக்கம் எல்லாம் செய்யப்படக்கூடிய மரணமல்ல, இதில் இருதயம் இயங்கும், இரத்த ஓட்டம் இருக்கும், சிறிது நேரம் கழித்து சிரித்து பேசுவார், அப்படிபட்ட வித்தியாசமான மரணம் என்று பொருள் செய்வீர்களாம்,
ஆனால், நான் ஈசா நபி பற்றி வரக்கூடிய வசனத்திற்கு, அது உடலுடன் கைப்பற்றப்பட்ட வேறு வகையான மரணம் , சாதாரணமான மரணமல்ல, என்று சொன்னால் மட்டும் தவறு என்பீர்களோ??? என்ன நியாயம் இது???

என்பதை உங்கள் சிந்தனைக்கும் இதை படிக்கும் மற்றவர்கள் சிந்தனைக்கும் விடுகிறேன்..

ஒரு வாதத்திற்கு, இந்த வசனத்தின் படி ஈசா நபி சாதாரண மக்களை போல இறந்து விட்டார்கள் என்று வைத்துக்கொண்டாலும் ஹதீஸில் உள்ளதன் படி அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதையும் நீங்கள் நம்புகிறீர்களா? என்கிற எனது கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

குர்ஆனில் நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டதாகவும், அவர்கள் நிரந்தரமான்வர்கலாக இருக்கவில்லை என்றும், உணவருந்தாதவர்கலாக இருக்கவில்லை என்றும் சொல்கிறது. எங்கும் ஈஸா நபி விதிவிலக்காக சொல்லப்படவில்லை. மாறாக விதி விளக்காக எடுத்து கொள்ளபடுகிறார் .


என்கிறீர்கள்.


நபிமார்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று குர் ஆன் கூறுவது உண்மை தான். ஈசா நபியை பற்றி அங்கே விதிவிலக்கு சொல்லப்படவில்லை என்றாலும், ஈசா நபிக்கு இதில் விதிவிலக்கு உண்டு என்று நம்பலாம்.. ஏன் நம்பலாம் என்றால் ஹதீஸில் இந்த விதிவிலக்கு சொலப்பட்டு விட்டது.

உதாரணமாக, தாமாக செத்தவை அனைத்தும் ஹராம் என்று குர் ஆன் சொல்கிறது.
இதை அடிப்படையாக வைத்துப்பார்த்தால் தாமாக செத்தவை நிலத்தில் இருந்தாலும் நீரில் இருந்தாலும் ஹராம் என்று தான் பொருளாகிறது.
நீரில் உள்ளவை குறித்து இங்கே விதிவிலக்கு உள்ளதா? என்றால் இல்லை தான். ஆனாலும் நாம் நீரில் தாமாக செத்த மீன்களை இன்று உண்ணத்தானே செய்கிறோம்? எந்த அடிப்படையில் என்றால் ஹதீஸில் கடல் பிராணிகளில் தாமாக செத்தவையும் ஹலால் என்று சொல்லப்பட்டு விட்டதால்!
ஆக, குர் ஆனில் ஒன்றுக்கு விதிவிலக்கு சொல்லாமல் பொதுவாக சொன்னாலும் கூட, ஹதீஸில் விதிவிலக்கு சொல்லப்படலாம், இரண்டையும் இணைத்து தான் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்கு இந்த உதாரணம் சான்றாக உள்ளது.

இந்த அடிப்படையில், எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று குர் ஆன் சொல்வதோடு, ஈசா நபி இன்னும் இறக்கவில்லை, மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ் சொல்வதையும் சேர்த்தே புரிந்தால் விதிவிலக்கு எளிதில் புரியும்.


ஈசா நபியை தன்னளவில் அல்லாஹ் உயர்திகொண்டான் என்று வரக்கூடிய வசனத்தை பற்றியும், மேலும் வேதக்காரர்கள் அவரது மரணத்திற்கு முன் நம்பிக்கை கொள்வதாக வரக்கூடிய வசனத்தை பற்றியும், இன்னும் ஏராளமான வசனங்களை பற்றியும் அடுத்தடுத்த வாய்ப்புகளில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்..

வஸ்ஸலாம்.

-- 

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 2



03/09/2012




அஸ்ஸலாமு அலைக்கும்,

முன்னரே அலசப்பட்ட விவாதத்தில் சில வசனங்களின் அர்த்தத்தை  திருத்தி கொண்டீர்கள், எனில் அதுவரை அதற்கு கொடுத்த அர்த்தம் தவறானது என்பதாக தங்களுக்கே தெரிந்தது. இப்போது மீண்டும் இந்த வாய்ப்புகளில் அலசுவது இப்போது நீங்கள் கொடுக்கும் அர்த்தம்  சரியானதா என்பதை பார்ப்பதற்கு தான்.

ஹதிஷில் ஈஸா நபி வருவார் என்பதாக இருப்பதை யாரும் மறுக்கவில்லை மாறாக அது குரானோடு முரண் படுகிறது என்பதற்காகவே அது மறுக்க படுகிறது என்பதை மீண்டும் கூறி கொள்கிறேன். 

வபாத் - முழுமையாக எடுத்தல்.
இது அகராதியின் மொழி பெயர்ப்பு தான். ஒரு வார்த்தை தனித்து வரும் போது ஒரு பொருளும் , அது வாக்கியத்தில் சேரும் போது அதற்குள் வேறு ஒரு பொருள் மறைந்திருப்பதும் மொழிகளில் சகஜமானது.

மௌத் என்றால் மரணம். இப்படி மரணம் என்று இருக்க , வபாத் என்ற சொல் குரானில் எங்கெல்ல்லாம் பயன் படுத்த பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது அது சொல்ல வருகன்ற பொருள் குறித்து நாம் விளங்கி கொள்ள முடியும். அது போலவே ஒரு வார்த்தையின் நேரடி அர்த்தம் எதுவாயினும் அது எந்த வாக்கியத்தோடு சேர்கிறதோ , அதற்கு எது முதன்மை அர்த்தம் என்பதையும் சேர்த்தே  பார்க்க வேண்டும்.

இங்கே கைப்பற்றுதல் என்பது ஒரு உயிரோடு தொடர்பு கொண்டு வரும் போது அதற்க்கு மரணம் என்பது தான் முதல் பொருள். கூடுதல் விளக்கம் தான் மற்றவை. எனவே 
ஈஸாவே உம்மை கைப்பற்றுவேன் என்று வரும் தொடரில் , உம்மை கைப்பற்றுவேன் என்பதும் மரணத்தை தான் குறிக்கும். கூடுதல் விளக்கம் அளிக்கும் போது தான் அவர் உடலோடு கைபற்றபட்டார் என்றெல்லாம் சொல்ல முடியும்.

வபாத் என்பதற்கு மரணம் என்கிற அர்த்தம் எந்த அகராதியிலும் கிடையாது. - நாசித் 
வபாத் என்பதற்கு அகராதியில் மரணம் என்ற பொருள் கொள்ள முடியாது என்பது போலவே "இறைவா என்னை முஸ்லிமாக கைபற்று" , " உயிர்களை இறைவன் கைப்பற்றி கொண்டான் "  என்ற வாய்க்கியங்களுக்கு மரணம் என்பதை தவிர வேறு அர்த்தம் கொள்ள முடியாது.

"காலம்" என்பதன் அகராதி பொருள் என்ன ? " காலம் சென்றார்" என்ற என்பதன் பொருள் என்ன ? காலம் சென்றார் என்று சொல்லும் போது அதற்கு மரணம் தான் முதல் பொருள், மற்றவை கூடுதல் விளக்கங்கள்.

மௌத் என்ற சொல்லுக்கு மரணம் என்பது பொருள் என்றாலும் வபாத் என்று ஏன் சொல்லபட வேண்டும் என்பதாக தோன்றும். எல்லா மொழியிலும் நாம் சொல்ல வருகின்ற வாக்கியத்திக்கு ஏற்றவாறு வார்த்தையை பயன் படுத்துவதுண்டு. அதை கருத்தில் கொண்டு சிந்தித்து பார்த்தாலே போதும் இது எளிமையாகவே விளங்கும்,

மரணம் என்பது ஒரு சம்பவம்.  அந்த சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது "மரணம் வரும் வேளை" , "மரணம் நெருங்கும் போது", "மரணம் வரும் வரை" என்று சொல்வதுண்டு. குரானிலும் அப்படி தான் அனைத்து இடங்களிலும் மரணம் குறித்து வருகிறது.

உயிர் கைப்பற்ற படுவதாவது மரணம் என்ற சம்பவத்தின் போது நடப்பது.  இந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்க பட வேண்டிய இடத்தில் மரணத்திற்கு பதிலாக சில சமயம் உயிர் கைபற்றபடுவதை குறித்து சொல்லபடுவதுண்டு.

தவபா என்ற சொல் குர்ஆனில் வருகின்ற அனைத்து இடங்களிலும் பார்த்து விட்டு அதற்கு "முழுமையாக கைப்பற்றுதல்" என்று அர்த்தம் தான் உண்டு எனவே மரணம் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்று சொல்வதே தவறு. 
எங்கெல்லாம் தபாவா என்ற சொல் ஒரு உயிரினத்தோடு சொல்லப்பட்டிருக்கிறதோ  அங்கெல்லாம் மரணத்தை தவிர வேறு அர்த்தம் கிடையாது  என்பது தான் உண்மையே.
நாம் உமை கைப்பற்றி கொண்டாலும் என்று 13 :40 இல் வருகின்ற போன்ற வசனங்கள் உதாரணம்.

எனவே ஹதிஷிர்க்கு ஏற்றவாறு ஈஸா நபி தொடர்புடைய வசனங்களில் அவரை உடலோடு உயர்த்தினான் என்று கூடுதல் விளக்கம் தரப்படுகிறது என்பது தான் உண்மை.

இல்லையேல் 3 வது சூராவில்,
"ஈஸாவே நான் உம்மை கைப்பற்றுவேன்.(உடலோடு உயர்த்தி கொள்வேன்)". என்று மட்டும் சொல்வதே கூடுமான இடத்தில் "பின்னர் என்னளவில் உன்னை உயர்த்துவேன்" என்று சொல்வது தேவையற்றதாகிவிடும். 
"ஈஸாவை எடுத்து பின்னர் உயர்த்துதல்" என்று பொருள் தரும்படி ஆகிவிடும்.

குர்ஆனில் நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டதாகவும், அவர்கள் நிரந்தரமான்வர்கலாக இருக்கவில்லை என்றும், உணவருந்தாதவர்கலாக இருக்கவில்லை என்றும் சொல்கிறது. எங்கும் ஈஸா நபி விதிவிலக்காக சொல்லப்படவில்லை. மாறாக விதி விளக்காக எடுத்து கொள்ளபடுகிறார் .

ஒரு வாதத்திற்கு என்று நீங்கள் சொல்வது போல்,
ஈஸா நபி மரணித்து விட்டார் என்று எடுத்து கொண்டு பார்த்தாலும் அல்லா நாடினால் ஈஸா நபி மீண்டும் வருவார் என்று நம்பிக்கை கொண்டால் கூட பரவாஇல்லை என்று சொல்லலாம். அவர் உடலோடு தூக்கப்பட்டு பின்னர் அந்த உடலோடு மீண்டும் வருவார் என்று சொல்வது குர்ஆனில் எங்கும் இல்லாத ஒன்று. 

அது போலவே மீண்டும் வருவார் என்பதற்கு நீங்கள் கூறும்  4 :159 வசனத்தை மொழி பெயர்த்தால், இஸ்ரவேலர்கள் அனைவரும் ஈஸா நபியை பார்த்து நம்பிக்கை கொள்வார்கள் அதற்கு ஈஸா நபி சாட்சியாக இருப்பார்கள் என்பது கூட இறுதி நாளின் அடையாளங்களை கண்டு ஏற்று கொள்வபவர்களின் நம்பிக்கை பலனளிக்காது என்று நீங்கள் சுட்டி காட்டிய  ஹதிஷிர்க்கு முரணாகிறது.

ஈஸா நபி வருவது குறித்து வருகின்ற ஹதீஸ்களை குறித்து நான் எனது வாய்ப்புகளில் அறிவிப்பாளர்  தொடரை குறித்து சில லாஜிக் கேள்விகளை மட்டும் முன்  வைக்கிறேன். அறிவிப்பாளர்கள் குறித்து, நான் கேள்விப்பட்ட  விமர்சனம் என்பதால் அதை குறித்து பெரிய சர்ச்சை செய்ய எனக்கு விருப்பமில்லை, இவற்றை வெறும் கேள்விகளாக எடுத்து கொண்டு அதற்கான உங்கள் பதில்களை தந்தால் போதுமானது. படிப்பவர்கள் அவரவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். 

வசலாம் 

சனி, 1 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 1




01/09/2012



அஸ்ஸலாமு அலைக்கும்.

பத்து வாய்ப்புகள் கொண்ட இந்த விவாத தொடரில் இது எனது முதல் வாய்ப்பு.


ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு நீங்கள் என்னென்ன ஆதாரங்களை எல்லாம் வைக்கிறீர்களோ, அவற்றை என்ன பாணியில் எல்லாம் வைக்கிறீர்களோ, அவை அனைத்திற்கும் முந்தைய விவாதத்திலேயே எள்ளளவு சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீங்கள் இப்போது வைத்திருக்கும்  "அல்லாஹ் கைப்பற்றினான்" என்று வருகிற வசனமானாலும், "அவரை அல்லாஹ் உயர்த்தினான்" என்று வருகிற வசனமானாலும், இன்னும் நீங்கள் வைக்க இருக்கிற வேறு வசனங்கள் ஆனாலும் அவற்றை விலாவாரியாக, அனைத்து கோணங்களிலும் சிந்தித்து முன்னரே தக்க பதில் தரப்பட்டு தான் உள்ளது. 
எனினும் மீண்டும் விவாதிக்க இங்கு வாய்ப்பு கிடைத்திருப்பதால் ஒவ்வொரு ஆதாரத்தையும் இங்கு மீண்டும் தெளிவாகவே அலசி விடலாம்.
நீண்ட விவாத தொடர் என்பதால் ஒவ்வொன்றாகவே எடுத்துக்கொள்வோம். என் தரப்பில் ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்கு நான் ஆதாரம் தருவதோடு, ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு நீங்கள் தரும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக மறுத்தும் வருவேன், இன்ஷா அல்லாஹ். நான் என் தரப்பில் ஆதாரத்தை தரும் போது அதற்கு மறுப்பு தெரிவியுங்கள்,அது தான் படிப்பவர்களுக்கும் எளிதில் புரியும். நீங்களாக முந்திக்கொண்டு நான் தரும் ஆதாரங்களை இப்போதே எடுத்து வைத்து பதில் சொல்ல வேண்டாம். 
எந்த ஆதாரத்தை எப்போது தர வேண்டும் என்பதை நான் அறிவேன் !

முதலில், ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கு ஹதீஸில் தெளிவாகவே ஆதாரம் உள்ளது. 

உங்கள் இமாம் உங்களுடன் இருக்கிற போது ஈஸா நபி வருவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் புஹாரி 3449

ஈஸா நபி இறங்கும் போது, அப்போதைய முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், எங்களுக்கு தொழுகை நடத்துங்கள்", என்று கேட்பார். அதற்கு ஈஸா நபி , "உங்களை சார்ந்தவர் தான் உங்களுக்கு இமாமாக இருக்க முடியும், அது தான் அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு செய்திருக்கும் கண்ணியம் என்று பதில் சொல்வார்கள்.
முஸ்லிம் 225

ஈஸா நபி வரும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும், போயும் கள்ளம் கபடமும் ஒழியும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 221

மேலும், இறுதி நாட்களில் ஈஸா நபி ஹஜ் செய்வார்கள் என்பன போன்ற ஹதீஸ்களும் (முஸ்லிம் 2403) உள்ளன.


குர் ஆனுடன் ஹதீசும் மார்க்கம் தான் எனும் போது, ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளை இயன்றவரை நம்புவதற்கு தான் முயற்சி செய்ய வேண்டும். நேரடியான முறையில் குர் ஆனுடன் மோதினாலேயே தவிர ஹதீஸ்களை மறுக்க கூடாது.

ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை எனவும், மீண்டும் வருவார்கள் எனவும் ஹதீஸ்கள் சொல்வது குர் ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுகிறதா என்றால் இல்லவே இல்லை !
இதை நீங்கள் திறந்த மனதுடன் முதலில் சிந்திக்குமாறு கேட்கிறேன்.

மோதுதல் எப்போது வரும்?
  • ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று குர் ஆனில் ஏதேனும் வசனம் நேரடியாக இருந்தால் மோதல் எனலாம்.
  • ஈஸா நபி மீண்டும் வர மாட்டார்கள் என்று ஏதேனும் வசனம் நேரடியாக சொல்லப்பட்டால், மீண்டும் வருவதாக ஹதீஸ் சொல்வது மோதல் எனலாம்.
ஆனால் குர் ஆனில் இவ்வாறு நேரடியாக எதுவுமே சொல்லப்படவில்லை.

ஈஸா நபியை அல்லாஹ் கைப்பற்றினான் என்று வருகிற ஒரு வசனத்தை வைத்து ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்கிறீர்கள்.

மரணத்தை குறிக்க வபாத் என்கிற வார்த்தை இருப்பது போல மவுத் என்கிற வார்த்தையும் இருக்க தான் செய்கிறது.
மவுத் என்கிற வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்கிற ஒரு அர்த்தத்தை தான் எடுக்க முடியும். ஏனெனில், மவுத் என்பதன் அகராதி அர்த்தமே மரணம் தான் !

ஆனால் மவுத் என்கிற வார்த்தையை அல்லாஹ் பயான்படுதாமல் வபாத் என்கிற வார்த்தையை தான் அல்லாஹ் இங்கு பயன்படுத்துகிறான்.
வபாத் என்பதற்கு மரணம் என்கிற அர்த்தம் எந்த அகராதியிலும் கிடையாது. 
வபாத் என்பதற்கு முழுமையாக எடுத்தல் என்கிற ஒரு பொருள் தான் உண்டு. 

ஒரு மனிதனை முழுமையாக எடுத்தல் என்று சொல்வது, அதுவும் அல்லாஹ் எடுத்தான் என்று சொல்லும்  போது அது மரணத்தை தான் குறிக்கும் என்பதால் வபாத் என்று வருகிற பல இடங்களில் மரணம் என்று நாம் தப்சீர் செய்கிறோம். ஆனால் வார்த்தையின் பொருளே "மரணம்" அல்ல!

இது பல இடங்களுக்கு பொருந்தலாம் என்றாலும் ஈஸா நபி விஷயமாக பொருந்தாது. காரணம் ஹதீஸின் மூலமாக ஈஸா நபி மரணிக்கவில்லை என்று அல்லாஹ் சொல்லி விட்டான். 

ஹதீஸில் ஈஸா நபி மரணிக்கவில்லை என்று சொல்லி விட்ட பிறகு, ஈஸா நபியை முழுமையாக எடுத்துக்கொண்டான் என்று வரும் வசனத்தை எப்படி புரிய வேண்டும்? அல்லாஹ் முழுமையாக எடுத்துக்கொண்டான் என்று, அதன் நேரடி அர்த்தத்தோடு மட்டும் புரிய வேண்டும், மரணிக்க செய்து விட்டான் என்று கூடுதல் பொருளை கொடுக்க கூடாது. ஏனெனில், ஈஸா நபி மரணிக்கவில்லை என்று ஹதீஸ் உள்ளது.

இந்த இடத்தில், ஹதீசுக்கு ஏற்றவாறு குர்ஆனை வளைக்கலாமா என்கிற சந்தேகம் சிலருக்கு வரலாம். ஆனால் இந்த சந்தேகமும்  தேவையற்றது. இங்கே இறை வசனத்தின் அர்த்தத்தை நாம் மாற்றவேயில்லை, இருக்கிற அர்த்தத்துடன் அப்படியே நிறுத்திக்கொண்டு கூடுதல் விளக்கத்தை தரவில்லை. அவ்வளவு தான்.!! ஆக, குர்ஆனின் அர்த்தத்தை வளைப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை.

ஆக, வபாத் என்பதற்கு அதிகமான இடங்களில் மரணம் என்று பொருள் செய்தாலும் கூட , அதன் நேரடி அர்த்தம் மரணம் இல்லை என்பதாலும், நேரடி அர்த்தமான "முழுமையாக பெறுதல்" என்கிற அர்த்தத்தை தாண்டி வேறு அர்த்தத்தை வைத்தால் ஹதீஸ்களை மறுக்க வேண்டி வரும் என்பதாலும், அந்த வார்த்தைக்கு எது நேரடி அர்த்தமோ அதோடு நிறுத்துகிறோம்.
இப்போது அந்த வசனமும் புரிகிறது, ஹதீஸ்களும் அர்த்தமுள்ளதாகிறது !!

அல்லாஹ் ஈஸா நபியை முழுமையாக கைப்பற்றினான். நேரடியாக புரியலாம், ஏதேனும் முறையில் கைப்பற்றியிருப்பான். உயிரை எடுத்து விட்டானா இல்லையா என்பதை இந்த வசனம் சொல்லவில்லை. முழுமையாக எடுத்தான், அவ்வளவு தான்.

உயிர் பற்றி சிந்திக்கும் போது, ஹதீஸ்களின் வாயிலாக "ஈஸா நபி மீண்டும் வருவார்கள்" என்கிற செய்தி கிடைக்கிறது. 

அதை வைத்து, ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை, ஆனால் அல்லாஹ் தமது ஆற்றலால் அவர்களை கைபற்றி இருக்கிறான், மேலும், இறுதி நாளின் போது மீண்டும் வருவார்கள் எனவும் புரிய முடிகிறது.

ஒரு வாதத்திற்கு, வபாத் என்று வந்து விட்டாலேயே அது மரணம் என்கிற பொருளை தான் கொடுக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால் கூட (இங்கு அப்படி சொல்லவே முடியாது என்பது வேறு விஷயம்) , ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று பொருள் செய்து விட்டு, ஹதீஸில் மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டதையும் சேர்த்தே நம்பலாம். அப்போதும், ஈஸா நபி மீண்டும் வருவார்கள் என்கிற கருத்து நிற்கும். மரணித்தவர் கூட அல்லாஹ் நாடினால் மீண்டும் வரலாம். ஈஸா நபியை அல்லாஹ் மரணிக்க செய்தான், எனினும் இறுதி நாளின் போது மீண்டும் வருவார்கள்!!! இப்படி கூட புரியலாம் !

இது ஒரு வாதத்திற்கு சொல்லப்பட்டது. ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பது மட்டும் தான் எனது கொள்கை, மீண்டும் வருவாரா? என்றால் வருவார் தான் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் மேலே "ஒரு வாதத்திற்கு" என்று நான் சொன்ன்னவற்றை கருத்தில் கொள்ள வேண்டாம். எனினும், மீண்டும் வரவே மாட்டார்கள் என்கிற கொள்கையுடையவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இது சொல்லப்பட்டது.

எனினும் அந்த வசனம் மரணத்தை சொல்லவில்லை, அந்த வார்த்தைக்கு மரணம் என்கிற பொருள் அறவேயில்லை, மேலும், ஹதீசுக்கு பங்கமில்லாத வகையில் நேரடி அர்த்தத்தை மட்டுமே அந்த வசனத்திற்கு கொடுத்து, ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார்கள், உடலுடன் பூமியை விட்டு மாற்றப்பட்டார்கள்  , அவ்வளவு தான், இப்படி புரியவும் அந்த வசனம் இடம் தருகிறது என்பது மேலே தெளிவாக விளக்கப்பட்டது.

இன்னும் 
  • வபாத் என்பதற்கு நேரடி பொருள் கைப்பற்றுதல் தான் என்பதற்கு வேறு ஆதாரம் உள்ளனவா என்பதையும்  .
  • குர் ஆனில் பொதுப்படையாக சொல்லப்பட்டதிலிருந்து ஹதீஸில் விலக்கு அளிக்கப்படும் போது அதை எப்படி புரிய வேண்டும் என்பதை பற்றியும்,
  • தொடர்ந்து ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கு குர் ஆன் தரும் வேறு வேறு ஆதாரங்களை பற்றியும் அடுத்தடுத்த வாய்ப்புகளில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 1





31/08/2012


அஸ்ஸலாமு அலைக்கும்,

ஈஸா நபி உயிருடன் உள்ளாரா என்ற தலைப்பில் எனக்கும் சகோ நாசித் க்கும் இடையே நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக மேலும் 10 வாய்புகள் கொண்ட இந்த விவாதம் அமைகிறது. 
 
பல முறை தெரியபடுத்தி இருந்தாலும்,மீண்டும் ஒவ்வொரு முறையும் இந்த விவாதம் ஆரம்பிக்கும் பொழுது நான் காதியானி அல்ல என்பதை உரக்க சொல்லியே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. 

ஹதிஷை குறித்த எனது நிலை, அது குரானோடு முரண்படாமல் இருக்க வேண்டும் என்பது தான் என்றாலும் ஈஸா நபி வருகையை குறித்து குரான் பேச வில்லை என்று கொள்கையை கொண்டுள்ளதால் , இன்னும் சொல்ல போனால் அவரது மரணம் குறித்து பேசப்பட்டுள்ளது என்றும் கொள்கை கொண்டுள்ளதால், 
ஈஸா நபி குறித்த ஹதிஷ்களை அது குரானோடு முரண் என்ற நிலை கொண்டு ஏற்கவில்லை. 
ஆனால் ஹதிஷின் விளக்கங்கள் குறித்து எனது பதிவில் கேள்விகள் வைக்கவும் செய்கிறேன்.

தலைப்புக்குள் முதல் கட்டமாக,

4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

இந்த வசனத்தில் "உயர்த்தி கொண்டான் என்பது உடலோடு உயர்த்தி கொண்டான் என்றும் அர்த்தம்  கொள்ள படுகிறது. மொழியின் படி அது தவறில்லை என்றாலும், இதில் சொல்லப்படும் உயர்த்துதல் என்பது அவரது கண்ணியத்தை  தான் இருக்க முடியும் என்று குர்ஆனில் இருந்து விளங்க முடியும்.

இது குறித்து மேலும் 3 வது சூராவில் 55 வது வசனத்தில் பேசப்படுகிறது.

5:117. “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன்  இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);

இந்த வசனங்களில் வரும் கைபற்றபடுதல் என்பது உடலோடு கைப்பற்ற படுவதை, உயர்த்தி கொள்வதை  குறிக்கிறது என்று கூறினீர்கள் என்றால் ,

3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

இங்கே இரண்டு விதமாக வார்த்தைகள் வந்துள்ள வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது. மரணத்திற்கு பிறகு ஒருவரின் நிலையை உயர்த்துவது  என்று பொருள் கொள்வது தான் பொருந்தி போகிறது. ஈஸா நபியை சில்வையில் அறைந்து அவரை ஒரு பொய்யர் என்றும் சபிக்கப்பட்டவர் என்றும் நிலைநாட்ட நினைத்த யூதர்களிடம் இருந்து அவரை காப்பாற்றி 
கண்ணியம் அளிப்பது குறித்து பேசப்படுகிறது.
நிராகரித்து கொண்டிருப்போரிடமிருந்து உம்மை தூய்மை படுத்துவேன். என்ற வாசகம் அது நமக்கு அதை இன்னும் உறுதி படுத்துகிறது.

கைப்பற்றுதல் - ஒன்றை முழுமையாக அடைவது 
இறைவன் ஒன்றை முழுமையாக அடைந்த பின்னர் அவரது உடலை தன்னளவில் உய்ர்த்தி கொள்வேன் என்று சொல்வது பொருத்தமற்றது. கைப்பற்றுதல் என்பதே முழுமையாக ஒன்றையோ அல்லது ஒருவரையோ தன்னிடம் சரணடைய செய்தல், சொந்தமாக்கி கொள்ளுதல்  என்று தான் பொருள் தரும்.

வேதக்காரர்கள் என்பவர்கள் யார் என்பதில் பல வேறு கருத்துக்கள் நம் சமுதாயத்தில் உள்ளது. இதில் உங்களின் கொள்கை என்னவெனில், யாருக்கு வேதம் கொடுக்கப்பட்டதோ அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தான் வேதக்காரர்கள் என்று குரான் சொல்கிறது என்பதாகும்.
அதாவது இஸ்ரவேலர்கள் மட்டுமே வேதக்காரர்கள். எனவே உங்களது கொள்கை படி  4 :159 வது வசனம் சொல்லும் கருத்தானது,
வேதக்காரர்கள்( இஸ்ரவேலர்கள் ) ஒவ்வொருவரும் அவரது( ஈஸா ) மரணத்திற்கு முன்னர் அவரை (ஈஸாவை ) நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. மறுமையில் அவர்களுக்கு அவர் சாட்சியாய் இருப்பார்.
ஈஸா நபி வரும் காலத்தில் அவரை நபி என்று நம்பிக்கை கொல்லாத ஒரு இஸ்ரவேலரும் இருப்பதில்லை என்பது இதன் கருத்து. அப்படி நம்பிக்கை கொள்ளும் இஸ்ரவேலருக்கு ஈஸா நபி சாட்சியாக இருப்பார் என்பது உங்கள் கருத்து.

முன்னரே சொன்னது போல் இறுதி அடையாளங்களில் முக்கிய அடையாளங்களை பார்த்து பின்னர் நம்பிக்கை கொள்ளும் கூட்டத்திற்கு அந்த நம்பிக்கை ஏற்று கொள்ளபடாது என்று ஹதித் உள்ளதை சுட்டி காட்டிய நீங்கள் அதற்கு மாற்றமாக இப்போது அவர்களுக்கு நல்லதொரு சாட்சியாக ஈஸா வே இருப்பார் என்று சொல்வது ஒன்று அந்த ஹதிஷை ஆதரமற்றதாக ஆக்குகிறது அல்லது உங்களது மொழி பெயர்ப்பின் தவறை அது சொல்கிறது என்பது நிரூபணம். உங்களது பதிலிற்கு பின்னர் தான் அதை குறித்து பேச முடியும் என்பதால் முதல் வாய்ப்பை சுருக்கமாகவே முடிக்கிறேன்.

வேதக்காரர்கள்( இஸ்ரவேலர்கள் ) ஒவ்வொருவரும் அவரது( ஈஸா ) மரணத்திற்கு முன்னர் அவரை (ஈஸாவை ) நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. மறுமையில் அவர்களுக்கு அவர் சாட்சியாய் இருப்பார்.
4 :159 வது வசனத்தில் ,ஈஸா நபியின் மரணத்திற்கு முன்னர் என்று மொழி பெயர்த்து அவரது வருகையின் போது என்று அதற்கு பொருள் கொண்டால்,
அவரை பார்த்து நம்பிக்கை கொள்ளும் இஸ்ராயிலின் சந்ததிகளுக்கு எப்படி அந்த சாட்சி சாதகமான சாட்சியாக இருக்க முடியும் ?

எனவே ,
வேதக்காரர்கள் ஒவ்வொருவரும் தமது மரணத்திற்கு முன்னர் அதனை( அவரது சிலுவை மரணத்தை )  நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. மறுமையில் அவர்களுக்கு அவர் எதிர் சாட்சியாய் இருப்பார். 
என்பது தான் பொருந்த கூடியதாக இருக்கிறது.

வசலாம்.