நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக ஏற்கனவே கிளப்பப்பட்ட அவதூறுகளுடன் மேலும் சில விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
இது சம்மந்தமாக முன்னர் எழுதப்பட்ட மறுப்பை இங்கு மீண்டும் அப்படியே வெளியிடுகிறேன்..
அஸ்ஸலாமு அலைக்கும்..
மார்க்கம் என்றால் என்ன, இஸ்லாம் என்றால் என்ன என்பது குறித்து கடுகளவு சிந்தனையும் இந்த கூட்டத்தாருக்கு இல்லை என்பது இவர்கள் வாதம் மூலமும் தெளிவாகிறது.
ரசூலின் முடி விஷயத்திற்கு போவதற்கு முன்னால், ஆவேசப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு சில விஷயங்களை சொல்லியுள்ளனர் - அதை நேருக்கு நேராக, ஆதாரங்களுடன் கலந்துரையாட அழைத்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்கிற அளவிற்கு ஓடுவார்கள் என்பதை இங்கேயே பார்க்கலாம்.
தலை திறந்து தொழுவது ஹிந்துக்கள் வேலை என்று சொல்கின்றனர்.
தொழும் போது தலையை கட்டாயம் மறைத்து தான் இருக்க வேண்டும் என்று சொல்வீர்கள் என்றால் இது குறித்து நம்மோடு பேச தயாரா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லியுள்ளார்கள் என்று காட்ட தயாரா?
தலையை மறைப்பது சுன்னத என்பதை நிரூபிக்க தயாரா?
நபி (ஸல்) அவர்கள், தலையை திறந்து வைத்தும் கூட தொழுதுள்ளார்கள் என்பதை நாம் எடுத்துக்காட்டினால் அதை மறுக்க உங்களால் முடியுமா?
எதற்கும் வக்கற்று நின்று விட்டு, இத்தகைய வீராவேசம் மட்டும் எதற்கு?
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று கூறுவது ஹிந்துக்கள் வழிமுறை என்கிறார். அப்படி சொல்பவர்கள், உருவம் குறித்து நாம் சொல்லக்கூடிய ஆதாரங்களை மறுத்து நம்மோடு வாதிக்க தயாரா?
உருவம் குறித்து தனி தலைப்பில் பேச அழைத்தால் முன் வருவாரா அல்லது, ஏற்கனவே மவ்லூத் குறித்து நாம் அடுக்கடுக்காக கேள்விகள் வைத்த உடன் "இதோ பதில் தருவேன், ஆணித்தரமான பதில்கள் விரைவில்", என்றெல்லாம் மிகப்பபெரிய build -up களை கொடுத்து விட்டு கடைசியில் எதையும் தராமல் ஓடியதை போல ஒளித்து ஓடுவாரா?
அது போல, பன்றியின் இறைச்சி ஹராமா அல்லது பன்றியே ஹராமா என்பதை குறித்தும் நாம் சில ஆதாரங்களை தரும் போது மறுத்து பேச தயாரா என்பதை அறிவிக்கட்டும்..
வீர சவடால்கள் எதுவுமே, மறுத்து ஆதாரங்கள் தருகிற வரை தான், ஆதாரங்கள் வந்த பிறகு வீரமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை என்பது தான் இந்த கபுர் வணங்கிகளின் கொள்கை என்பது, இருபத்திஐந்து ஆண்டுகால ஏகத்துவ சரித்திரம் நமக்கு சாட்சி சொல்கிறது!
நபியின் தலை முடி விஷயத்திற்கு வருவோம்..
ஹதீஸ்களுக்குள் செல்வதற்கு முன்னால், ஒரு முடியை காட்டி இது நபியின் முடி என்று சொல்வதாக இருந்தால், இதை வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டுமா இல்லையா?
நபியின் முடியை முதலில் வைத்திருந்தவர் யார், அவருக்கு பின் அதை யார் பாதுகாத்து வந்தார்கள்? நபியின் காலத்திற்கு பிறகு வந்த நான்கு கலிபாக்கள் காலத்தில் இது பற்றிய குறிப்புகள் ஏதும் உண்டா?
நான்கு கலிபாக்கள் காலத்திற்கு பிறகு, இந்த முடியை யாருடைய பொறுப்பில் தந்து விட்டு சென்றார்கள்?
இன்றைய காலத்தில் யார், யாரிடமிருந்து பெற்றுள்ளார்கள்?
இதையெல்லாம் வரலாற்று சான்றுகளுடன் இவர்கள் நிரூபிக்க தயாரா? இயலாது.
ஏதோ, போகிற போக்கில், ஒரு முடியை எடுத்து கொண்டு இது நபியின் முடி என்று சொன்னால் அதை நம்பவும் ஒரு எருமை மாட்டு கூட்டம் உள்ளது என்று எண்ணிக்கொண்டு இத்தகைய புளுகுகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
செத்து போன பிணங்கள் நமது நோய்களை தீர்க்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கும் நம் சமூகத்து மக்களிடையே இத்தகைய வாதங்களை எளிதில் கொண்டு செல்ல முடியும் என்பதை இவர்கள் அறிந்துள்ளார்கள்..
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக ஒரு பொருளை பாதுகாப்பது என்பது சாதாரண காரியமல்ல, அதனுடைய நம்பகதன்மைகளை ஆதாரங்களுடன் நிரூபிக்காதவரை, இதை எவராலும் நம்ப இயலாது.
இன்னும் சொல்லப்போனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பைஅத் செய்த இடம் என்று கூறி, ஒரு மரத்தின் அடியில் நின்று தொழ ஆரம்பித்தனர் நபியின் காலத்திற்கு பின்னுள்ள மக்கள்.
ஆனால், அதே இடத்தை குறித்து பேசும் போது, அது எந்த இடம் என்று எங்களுக்கே தெரியவில்லை என்று சஹாபக்க்களே சொல்வதாக புஹாரியில் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது நமக்கு எதை காட்டுகிறது?
ஒன்றை பாதுகாப்பது என்பது, அதனுடைய காரண காரியங்களுடன் செய்தாலே ஒழிய, அது சஹாபாக்கள் காலத்திலும், அதற்கு அடுத்த தலைமுறையினராலும் கூட சரியாக நினைவில் வைக்க முடியாது! இது மனித இயல்பு !
முடியை பாதுகாக்க சொல்வதாக வருகிற ஹதீஸ் குறித்து பார்ப்பதற்கு முன், ஒரு அடிப்படையான மார்க்க சட்டம் ஒன்றை சகோதரர்கள் அனைவரும் மனதினில் கொள்ள வேண்டும்.
புஹாரியில் பதிவாகியுள்ள, நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக சொல்லப்படும் ஹதீஸில், எந்த ஒரு அறிவிப்பு நபியிடம் இருந்து வந்ததாக நீங்கள் கேட்டாலும், அதை கேட்ட மாத்திரத்தில் உங்கள் மனமே அதை ஏற்றுக்கொள்ள , ஜீரணிக்க மறுக்கும் என்றால் அத்தகைய அறிவிப்புகளை விட்டும் நாம் தூரமானவன், அது பொய் செய்தி என்று நபி (ஸல்) அவர்கள், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு இலக்கணம் சொல்கிறார்கள்.
இது தான் அடிப்படை!
நாம் எதை இஸ்லாம் என்று நம்பிக்கொண்டுள்ளோமோ , எந்த அநாச்சாரங்களில் இருந்தும், பித்அத்களில் இருந்தும், இணை வைப்பு காரியங்களில் இருந்தும் விடுபட்டு இந்த தூய மார்க்கத்தை நாம் பெற்றிருக்கிறோமோ , அத்தகைய மார்க்கத்தின் தூய தன்மைக்கே பங்கம் ஏற்படுகிற விதத்தில் ஒரு மார்க்க அறிவிப்பு , நபியின் பெயரால் சொல்லப்படுமேயானால், உண்மையில் அது நபி சொன்னது இல்லை, மாறாக அது எவனோ ஒரு பொய்யன் கட்டவிழ்த்த செய்தி! என்று நாம் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். இது நபியின் கட்டளை!!
இந்த அடிப்படையில், எந்த மார்க்கத்தை பெறுவதற்காக, சிலை வணக்கத்தையும் மனிதர்களை மகான்களாக போற்றும் இணை வைப்பு காரியங்களையும் விட்டு விட்டு அந்த உத்தம சஹாபாக்கள் வந்தார்களோ, அந்த மார்க்கத்தில் நபியின் தலை முடி பரக்கத் என்று நபியே சொல்வார்களா? அதை சேகரித்து வைத்துக்கொள்ள சொல்வார்களா?
இது பொய் !!
தான் வரும் போது, தமக்காக எழுந்து நிற்பதையே தடை செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
எகூதிகள், தங்களது தலைவரின் கால்களில் விழுவதை போல நாங்களும் உங்கள் கால்களில் விழலாமா என்று கேட்ட போது அதை மறுத்து, கடுமையாக கோபப்பட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்!
மனிதனை மனிதனாகவும், கடவுளை கடவுளாகவும் தரம் பிரித்து பார்க்க கூடிய அறிவை தந்து விட்டு சென்ற நபிகள் நாயகம், தமது தலை முடியை சேகரித்து வைத்துக்கொண்டால் பரக்கத் என்று சொல்வார்களா? என்று சிந்தித்தால், இது வடி கட்டிய பொய் செய்தி என்பது புரியும்.
இன்னும் சொல்லப்போனால், சஹாபாக்களில் சிலர், இது போன்ற காரியத்தில் ஈடுபட்டும் இருந்துள்ளார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. நபியின் எச்சிலில் பரக்கத் உள்ளது என்று எண்ணி, அதை கையால் எடுத்து முகத்தில் தடவிக்கொண்டுள்ளனர் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
ஆனால், இந்த ஆதாரங்களை எல்லாம், இந்த கபுர் வணங்கிகள் எடுத்து காட்டி தங்கள் கொள்கைகளை நியாயப்படுத்த முயல்வார்களே தவிர, இந்த செயல் தவறு என்று நபி (ஸல்) அவர்கள் கண்டித்ததாக வரும் ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள்.
புஹாரியில் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸில், இது போன்று நபியின் எச்சிலை முகத்தில் தடவி, அதை பரக்கத் என்று நபிய சஹாபாக்களை மிகவும் கடிந்து, இதனால் உங்களுக்கு எந்த பரக்கத்தும் கிடையாது, எனது சொல் படியும் நான் கட்டிய வழியின் படியும், உங்கள் அண்டை வீடுகளை பகைத்துக்கொள்ளாமலும், அமானிதங்களை பாதுகாப்பாக திருப்பிக்கொடுத்தும் வந்தால், அது தான் உங்களுக்கு பரக்கத்தை பெற்று தரும் என்று மிக தெளிவாக அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம்!
நபியின் தலைமுடி பரக்கத், அவர்களது வியர்வை பரகத் என்றெல்லாம் புளுகக்கூடியவர்கள், மேலே நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸை கண்டு கொள்ளவே மாட்டார்கள், அவர்கள் சபையில் இதை வைக்கவும் மாட்டார்கள்.
நபியின் தலையிருந்து எடுக்கப்பட்ட (குளிர்ச்சிக்காக) ரத்தத்தை ஒரு சஹாபி குடித்து விடுவார், இந்த சம்பவமும் நம் அனைவரும் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் தான்.
இதை பார்த்த நபி (ஸல்) அவர்கள், இப்படி செய்யாதே என்று கடிந்து கொள்வார்கள் - உன்னால் இந்த மக்களுக்கு கேடு, என்று கோபப்படுவார்கள் என்றெலாம் ஹதீஸில் பார்க்க முடிகிறது.
ஆக, தலைமுடியை பாதுகாத்து வைக்குமாறு நபியே சொன்னார்கள் என்று சொல்வது பல வகைகளில் இந்த மார்க்கத்தின் நெறிகளுக்கும், அடிப்படை கொள்கைகளுக்கும் முரணாக நிற்கிறது.
இதில் வேடிக்கையான உண்மை என்னவென்றால், இன்றைக்கு சிலர், நபியின் முடியை வைத்துள்ளோம் என்று சொல்லி கொண்டு திரிகிறார்களே, அவர்கள் நபியின் முடி என்று காட்டும் முடி கருப்பாக உள்ளது.
ஆனால், சஹாபாக்கள் காலத்தில், நபியின் மரணத்திற்கு பிறகு, உம்மு சலமா (ரலி) போன்றோர் நபியின் முடி என்று சொல்லி சில முடிகளை பாதுகாத்து வைத்ததாகவும் ஹதீஸில் வருகிறது, ஆனால், அந்த முடி சிகப்பாக இருந்தது என்றும் அதே ஹதீஸ் சொல்கிறது!
இப்போது, இவர்கள் சொல்லும் முடி போலியானது என்பதை இதன் மூலமே நிரூபணம் ஆகி விட்டது, ஒன்று.
இரண்டாவது, அந்த ஹதீஸிலேயே இதற்கு மறுப்பும் உள்ளது. ஏனெனில், நபி (ஸல்) அவர்களின் தலை முடியையும் தாடியையும் அணு அணுவாக ஆராய்ந்து அறிவிக்கப்படுகிற ஹதீஸ்கள் ஏராளம் உள்ளன. அவை எல்லாவற்றிலும், நபி(ஸல்) அவர்களின் முடி கருப்பாக இருந்ததாக தான் உள்ளது!
ஒரு அறிவிப்பில், இருபது வெள்ளை முடிகள் இருந்ததாக வருகிறது.
இதனடிப்படையில் பார்த்தால் கூட, நபி (ஸல்) அவர்களுக்கு கருப்பு முடியும், ஒரு ஒரு சில வெள்ளை முடிகளும் தான் இருந்ததே தவிர, சிகப்பு முடிகள் இருக்கவில்லை!!
ஆக, எந்த வகையில் சிந்தித்தாலும், இது போன்ற செய்திகள் மிகவும் போலியானது , முழுக்க முழுக்க வயிற்றுப்பிழைப்புக்காக நடத்தப்படக்கூடிய நாடகம் என்பதில் எள்ளளவும் நாம் சந்தேகம் கொள்ள தேவையில்லை.
எவன் ஒருவன் என் மீது ஒன்றை இட்டுக்கட்டி சொல்கிறானோ, அவன் செல்லும் இடம் நரகம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் பாதுக்காக்க வேண்டும்.
வஸ்ஸலாம்.